No icon

இது வெற்றிகரமான தோல்வி

நடந்து முடிந்த 17வது மக்களவைத் தேர்தலின் முடிவுகள் பாரதிய ஜனதா கட்சித் தலைமையே எதிர்பார்க்காத அளவுக்கு ஆச்சரியத்தையும் காங்கிரஸ் எதிர்பார்க்காத அளவுக்கு அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது. மீண்டும் மோடி..வேண்டும் மோடி என்று களத்தில் இறங்கிய பாஜக, தனது தந்திரமிக்க பேச்சுத்திறமையாலும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்து அடிப்படைவாத அமைப்புக்களின் மந்திரமிக்க நடவடிக்கைகளாலும் வெறுப்பு அரசியலை விதைத்து யாருமே எதிர்பார்க்காத  அளவுக்கு வெற்றியை அறுவடை செய்திருக்கிறார்கள்.  
கரைசேராத கலம் - காங்கிரஸ்
கொள்ளிக்கட்டையைக் கொண்டு தன் தலையைச் சொரிந்த கதையாக, காங்கிரஸ் தேர்தல் களத்தில் தப்புக் கணக்கு போட்டு தன் தலைமைக்குச் சூடு வைத்துள்ளது. வட மாநிலங்களில் பாஜக வேட்பாளர்கள் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது சிறுபான்மை மக்களிடமும் இடதுசாரிச் சிந்தனையுள்ளவர்களிடத்திலும் மாநில
அரசியலில் கோலேச்சுபவர்களிடமும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  பாஜகவுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளை யும் ஒருங்கிணைக்க தேசியவாத காங்கிரஸ்தலைவர் சரத்பவார் எடுத்த முயற்சிக்கு முட்டுக்கட்டைபோட்ட காங்கிரஸ் அதற்கான பலனை இப்போது அனுபவிக்கிறது.  ஒவ்வொரு மாநிலத்திலும் தனித் தனியாக தேர்தல்களைச் சந்தித்து, வெற்றிக்குப் (?) பின்னர் பாஜகவிற்கு எதிரான கூட்டணியை அமைப்போம் என்று சொன்ன காங்கிரஸ், எதிர்கட்சி அந்தஸ்துக்குத் தேவையான 55 தொகுதிகளைக் கூட பெறாமல் வெட்கித் தலைகுனிந்து நிற்கிறது.  2017 ஆம் ஆண்டு இறுதியில், டிசம்பரில் குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு பாடம் கற்பித்த ராகுல் தன் உழைப்பை அதன் பிறகு இரட்டிப்பாக்கவில்லை.  சமீபத்தில் நடந்து முடிந்த மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர் ஆகிய மாநிலங்களில் வெற்றிக்கனியைப் பறித்த காங்கிரஸ் அதனை ருசிப்பதிற்கு முன்பாகவே இம்மக்களவைத் தேர்தல் மூலம் அக்கனி பறிக்கப்பட்டுள்ளது.. அந்தோ.. பரிதாபம்.  
மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியோடும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியோடும் உடன்பாடு எட்டி அரசியல் கணக்குப் போடத் தெரியாத காங்கிரசின் ஆணவம் இத்தேர்தல் மூலம் வேரறுக்கப்பட்டுள்ளது.  மாயாவதியைப் புறக்கணித்ததால் பகுஜன் சமாஜ் கட்சியைவிட காங்கிரஸ் இழந்ததே அதிகம். அரவிந்த கெஜ்ரிவாலின் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியோடு கூட்டணி அமைத்து, பஞ்சாப்பிலும் டெல்லியிலும் ஹரியானாவிலும் கோலேச்ச முடியாத காங்கிரசின் கொட்டம் இத்தேர்தலில் அடக்கப்பட்டுள்ளது.  உடைந்து சிதறிய கண்ணாடித் துண்டுகளாக, கடந்த நாற்பது ஆண்டுகளில் காஷ்மீர்முதல் தமிழகம் வரை பல்வேறு மாநிலக் கட்சிகளாக உடைந்து போன காங்கிரஸ் தலைமை தன் முகத்தை அக்கட்சிகளில் பிரதிபலிக்கத் தவறிவிட்டது. மம்தா பானர்ஜியின் எளிமைக்குள்ளும் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆளுமைக்குள்ளும் காங்கிரஸ் தன் தலைமைத்துவத்தை நிலைநாட்டவில்லை. காஷ்மீர் முதல் பெங்களூரூ வரை ராஜஸ்தான் முதல் அருணாச்சலபிரதேசம் வரை காங்கிரஸ் தன் கூடாரத்தின் கிழிசல்களைச் சரிசெய்யவே இல்லை.  
தப்புக் கணக்கு
சமீபத்தில் சட்டசபைத் தேர்தலில் வென்ற மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் கூட்டணியில் உள்ள கர்நாடாகவிலும் கோஷ்டிப் பூசலைத் தவிர்த்து ஒற்றுமையாக, தீவிரமாக உழைத்திருந்தால் கூட ஒரு கௌரவமான எண்ணிக்கையில் மூன்று இலக்கத்தைத் தொட்டு பாராளுமன்றத்தை செம்மைப்படுத்தியிருக்கலாம். ஜனநாயகத்தின் காவலனாக, அன்பின் தூதனாக தன்னை நிலைப்படுத்தியிருக்கலாம். தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்ற கதையாக, ஆளாளுக்கு ஒரு தலைமை, கோஷ்டி என்று காங்கிரஸ் ஒரு குப்பைத்தொட்டியாக மணக்கிறது.  162 தொகுதிகளைக் கொண்ட உத்தரபிரதேசம், பீஹார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கடந்த பத்து ஆண்டுகளாகத் தங்களுடைய அமைப்பை பஞ்சாயத்து பஞ்சாயத்தாக வலிமைப்படுத்தியிருந்தால் சத்திஸ்கரைப் போல சம வலிமைமிக்க கட்சியாக காங்கிரஸ் களம் கண்டிருக்கலாம்.  காங்கிரஸ் தன்னை சுய பரிசோதனைக்குள்ளாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.  ஆளாளுக்கு ஒரு கோஷ்டியை வழிநடத்துவதை விட்டுவிட்டு, அறக்கட்டளைக்குச்சொந்தமான சொத்துகளைக் குத்தகைக்கு எடுத்து கும்மாளம் போடுவதை விட்டுவிட்டு, வீதிகளுக்கு வந்து மக்கள் பிரச்சினை
களுக்காகப் போராட வேண்டும். இனி, அழுக்குப் படாத துண்டும், மடிப்புக் கலையாத சட்டையும் ஒரு காங்கிரஸ்காரரின் அடையாளமாக கருதக் கூடாது.  தொலைக்காட்சி விவாதங்களில் கேமராக்களுக்கு முன் மூச்சு முட்ட கத்துவதால் இனி கட்சியை வளர்க்க முடியாது. மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.  வட மாநிலங்களில் மீண்டும் வேரூன்றி தழைக்க வேண்டும். 
இந்துத்துவாவின் வெற்றி 
இந்த மக்களவைத் தேர்தலில் பாஜக வின் வெற்றியை மோடி அலைக்கான வெற்றி என்று அழைப்பதைவிட ஆர்எஸ்எஸ் அமைப்பின் களப்பணிக்கான வெற்றி என்றே அழைக்க வேண்டும். சுப்ரமண்யம் சுவாமி குறிப்பிடுவதைப் போல இது இந்துத்துவாவின் வெற்றி என்றே அழைக்க வேண்டும்.  தேசப்பிதாவைக் கொன்ற கோட்சே ஒரு தேசப்பக்தன் என்று சான்றிதழ் தந்த துறவி பிரக்யா சிங் வெற்றிப்பெறு வதற்கு சாமியார்கள் என்ற போர்வையில் காவிகள் செய்த பிரச்சாரம்தான் காரணம். உத்தரபிரதேசத்தில் வெற்றிக் கூட்டணி என்று சாதி ரீதியாக ஒன்றிணைந்து களமிறங்கிய மாயாவதியும் அகிலேஷ்யாதவும் போதுமான வெற்றிப் பெறாததற்கு மத ரீதியில் ஆர்எஸ்எஸ் களமிறங்கி செய்த உள்ளடி வேலைகள்தான் காரணம்.  காங்கிரசின் கோட்டையான அமேதியில், ராகுல் காந்தியிடம் ஸ்மிருதி இரானி இரண்டாவது முறையாகத் தோற்கக் கூடாது என்று கடந்த ஆறு ஆண்டுகளாக ஆர்எஸ்எஸ் களப்பணியாளர்கள் செய்த பிரித்தாளும் வித்தையே காரணம்.  பிஜூ ஐனதா தளம் கடந்த ஐம்பது ஆண்டுகளாக கோலேச்சிவரும் ஒடிசா மாநிலத்தில் பாஜக எட்டு இடங்களைப் பிடிப்பதற்கு கந்தமால் புகழ் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் செய்த மதரீதியிலான விஷமப் பிரச்சாரமே காரணம்.  ரயிலில் ஆட்களைக் கொண்டு வந்து இறக்கி மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் கூடாரத்தைக் காலி செய்து, மம்தாவின் திரிணாமுல் சேலைக்குள்ளும் முள்ளைக் குத்தி, 42க்கு 17 இடங்களை பாஜக கைப்பற்ற ராமநவமி பெயரில் சித்தாந்த யுத்தம் நடத்தியவர்கள் ஆர்எஸ்எஸ்காரர்கள். பாஜக ஆளும் மாநிலங்களைத்தாண்டி, காங்கிரஸ் ஆளும்
மாநிலங்களிலும் பாஜக கூட்டணி வெற்றிப் பெற்றே ஆக வேண்டும் என்று பாஜக தொண்டர்களைவிட ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கடினமாக உழைத்தனர். ஐயப்பனைக் கொண்டு அரசியல் செய்த கேரளாவிலும் பாஜகவால் கடுமையாக போட்டிப் போட முடிந்தததற்கு கும்மணம் ராஜசேகரனே சாட்சி.  தெலுங்கானாவில் தெலுங்கான ராஷ்டிரிய சமிதியையும் சந்திரசேகர ராவையும் அசைக்கக்கூட முடியாது என்று கடந்த சட்டசபைத்தேர்தல் நிருபித்த நிலையில், அங்கு நான்கு இடங்களை பாஜக கைப்பற்ற ஆர்எஸ்எஸ் வகுத்த வியூகமும் செய்த உள்ளடி வேலையும் தான் காரணம்.  மோடிக்குப் பீரங்கி கவசமாக, பாஜகவுக்கு குண்டு துளைக்காத சட்டையாக இந்த ஆர்எஸ்எஸ் அமைப்பு உள்ளது என்பது வெள்ளிடை மலை. 
நடுநிலைமைத் தவறிய தேர்தல் ஆணையம்
தேர்தல் தேதி அறிவித்த நாள்முதல் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையும் நடுவுநிலைமையும் கேள்விக்குள்ளாகி யுள்ளது. பாஜக தலை
வர்கள் மீதான நடத்தை
விதிமீறல் புகார்கள் வரும்போது பாரபட்சத் துடன் விசாரித்து, அவர் களுக்குச் சாதகமாவே செயல்பட்டார்கள். யோகி ஆதித்யநாத்க்கு 3 நாள் தடை, மேனகா காந்திக்கு 2 நாள் தடை என்பதெல்லாம் வெறும் கண்துடைப்பு. இந்தத் தேர்தல் அலிக்கும் பஜ்ரங் பாலிக்கும் (அனுமனுக்கும்) நடக்கும் மோதல் என்றார் யோகி ஆதித்யநாத். முஸ்லீம்கள் ஓட்டுப்போடாவிட்டால், அவர்களுக்கு எந்த வேலையும் செய்து தரமாட்டேன் என்றார் மேனகா.  முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருக்கும் வயநாடு, பாகிஸ்தான் போன்றது என்றார் அமித்ஷா.  பெரும்பான்மை இந்துக்கள் சிறுபான்மையாக இருக்கும் வயநாடு தொகுதிக்கு ராகுல் காந்தி அடைக்கலம் தேடி போயிருக்கிறார் என்றார் மோடி. காந்தியைக் கொன்ற கோட்சே ஒரு தேசப்பக்தன் என்றார் பிரக்யா சிங். இதற்கு மாயாவதியும் மம்தாவும் விதிவிலக்கல்ல. மேலும் மேற்கு வங்கத்தில் ஒரு நாள் முன்பாகவே பிரச்சாரத்தை முடித்து வைத்து தன் பாரபட்சத்தைக் காட்டியது. 
வாக்கு இயந்திரங்களின் இடமாற்றத்திற்கும் தவறான பயன்பாட்டிற்கும் போதிய விளக்கத்தைக் கொடுக்கவில்லை. தேர்தல் ஆணையம் முழுக்க முழுக்க பாஜகவின் கைப்பாவை யாகவே செயல்பட்டது என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. அதற்கு தேர்தல்
ஆணையர்களில் ஒருவரான லாவாசவே
சாட்சி. மோடியின் கேதர்நாத் ஆன்மிகப்
பயணத்தை குறும்படமாக எடுத்து இறுதி கட்ட தேர்தல் நடைபெறும் நாளன்று
அனைத்து மீடியாவிலும் ஒளிபரப்பினர்.
தேர்தல் ஆணையம் கண்டுகொள்ள வில்லை. எல்லாவிதத்திலும் தேர்தல் ஆணையம் அதன் நம்பகத் தன்மையை இழந்து நிற்கிறது.
புல்வாமா தாக்குதல்- சௌக்கிதார் அரசியல்
வெற்றி ஏற்புரையில் தேர்தல்
ஆணையத்திற்கு அடுத்து பிரதமர் மோடி
நன்றி தெரிவித்தது இந்திய இராணுவத் திற்கு.. பாதுகாப்புப் படையினருக்கு. காரணம் பாலகோட் தாக்குதலாகக் கூட இருக்கலாம்.  காஷ்மீரின் புல்வாமாவில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது எப்படி? என்பதும் பாகிஸ் தானின் பால்கோட் மீது தீவிரவாதிகள் முகாம்களைப் அழிக்க இந்திய விமானப் படை மேகங்களில் பறந்து ரேடார் கண்களில் படால் நடத்திய சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கும் இன்னும் மர்மமாகவே உள்ளது.  தேர்தலுக்குச் சில வாரங்களுக்கு முன்பு நடந்த அல்லது நடத்தப்பட்ட இந்த சர்ப்பிரைஸ் அட்டாக்கும் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கும் தேர்தல் ஒத்திகையாகவே பார்க்கப்படுகிறது. இவைதான் தேர்தலை திசை மாற்றிவிட்டன.  உடனே தேசபக்தி என்ற முழக்கத்தைக் கையிலெடுத்து சௌக்கிதார் டிவிட்டரில் டிரெண்டானார். 150க்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவ அதிகாரிகள் குடியரசுத்தலைவரிடம் கடிதம் தரும் அளவுக்கு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. தேர்தல் ஆணையம் தடைவிதித்தும் முதல் தலைமுறை வாக்
காளர்கள் தங்கள் ஓட்டுகளை புல்வாமா
தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்த
வீரர்களுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று மோடி பிரச்சாரத்தில் கெஞ்சுகிறார்.  திட்டமிடப்பட்ட தேர்தலுக்கு ஒரு முன்
னோட்டமாகவே இதனைப்
பார்க்க நம்மைத் தூண்டு கிறது. மார்ச் 17 முதல் தனது பெயருக்கு முன்பு சௌக்கிதார் அடைமொழி போட்டுக்கொண்டு, தேர்தல் முடிவுகள் வெளி
யானவுடனே தன் சுட்டு ரையில் நீக்கிய பிரதமர் மோடியே இதற்கு சாட்சி. 
தமிழகத்தைப் பொருத்த வரை வெற்றிகரமான தோல்வி
ஜ ழுடிக்ஷயஉமஆடினi என்று ஆன்லைனில் மட்டுமல்ல.. ஆஃப்லைனிலும் டிரெண்டாக்கி பாஜக தமிழகத்தில் காலுன்றாத வண்ணம் மிகப்பெரிய வெற்றியை மதச்சார்பற்ற கூட்டணிக்கு தமிழகம் கொடுத்திருக்கிறது. திராவிடச் சிந்தனை உள்ளவரை இந்துத்துவ சித்தாந்தம் இங்கே எடுபடாது என்று தங்கள் இடது கை ஆள்காட்டி விரல் மையால் புதிய வரலாறு படைத்திருக்கிறார்கள்.  இந்துத்துவத்தின் திராவிட முகமாக, பார்ப்பனியச் சாயலைத் தாங்கி, துக்ளக்கின் துணையோடு, மடாதிபதிகளின் அரவணைப்பில் டாடி மோடி யின் செல்லப்பிள்ளைகளாக வலம் வரும் அதிமுகவையும் தமிழகம் நிராகரித்திருக்கிறது.  தமிழக ஆயர் பேரவையின் வழிகாட்டுதலில் கிறித்தவ வாழ்வுரிமை இயக்கம் எடுத்த மதச்சார்பற்ற கூட்டணியை ஆதரிப்பது என்ற நிலைப்பாட்டை கிறிஸ்தவச் சிறுபான்மையினர் சிந்தாமல் சிதறாமல் செயல்படுத்தியதை கன்னியாகுமரி முதல் வட சென்னை வரை நம்மால் பார்க்க முடிகிறது.  தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 38 பாரளுமன்றத் தொகுதிகளிலும் மதச்சார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்கள் பெற்றுள்ள வாக்கு வித்தியாசமே சிறுபான்மையினரின் நிலைப்பாட்டிற்குக் கட்டியம் கூறுகிறது.  எல்லா மாநிலங்களிலும் கோலேச்சிய பாஜகவால் தமிழகத்தில் ஒன்றும் செய்ய இயலவில்லை. உன்னால நான் கெட்டேன்.. என்னால நீ கெட்ட என்று ஒருவர் மற்றவரைக் குற்றஞ்சாட்டும் அவல நிலைக்கு அதிமுக கூட்டணிக் கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன.  பாஜகவின் தந்திரத்தால் கட்டமைக்கப்
பட்ட சாதியக் கட்சிகளின் கூட்டமைப்பும் தகர்க்கப்பட்டு சமூக நீதி வென்றுள்ளது. பெரியாரின் மண் என்பது நிருபிக்கப்
பட்டுள்ளது. தூத்துக்குடியின் துப்பாக்கிகள் மௌனிக்கப் பட்டுள்ளன. ஹைட்ரோ கார்பன், மீத்தேன், கெயில் எரிவாயுக்
குழாய் பதிப்பு, நியுட்ரினோ, எட்டுவழிச் சாலை  என அனைத்துக்குமான எதிர்ப்பு வாக்குச்சீட்டு மூலம் ஜனநாயகப் படி தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதை ஆளும் மாநில அரசும் ஆளப்போகும் மத்திய அரசும் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.  தமிழகத்தில் மதச்சார்பின்மையும் ஜனநாயகமும் மகுடம் சூடியுள்ளதால் இது வெற்றி. மத்தியில் மதவாதமும் பாசிசமும் மகுடம் சூடியுள்ளதால் மதச் சிறுபான்மையினராகிய நமக்கு இது ஒரு வெற்றிகரமான தோல்வி. 

Comment