தண்ணீர்.. தண்ணீர்?!
- Author குடந்தை ஞானி --
- Sunday, 23 Jun, 2019
தமிழகத்தின் தலைநகர் சென்னை தண்ணீரின்றித் தவிக்கிறது. சென்னையின் ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள மாடிக் குடியிருப்புகளி லிருந்து மக்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். கால் சென்டர் நிறுவனங்களில் பல.. தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்து வேலை செய்யப் பணித்துள்ளன. புகழ்பெற்ற ஒரு நிறுவனம் தங்கள் பணியாளர்களை ’உங்களின் தேவைக்கு வீட்டிலிருந்தே தண்ணீர் கொண்டு வாருங்கள்’ என்று அறிவுறுத்தியுள்ளது. மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நானூறு அடி ஆழ்குழாய் கிணறு அமைத்தாலும் தண்ணீர் கிடைப்பதில்லை.
சென்னைக்குத் தண்ணீர் வழங்கும் பூண்டி, செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் உள்ளிட்ட நான்கு ஏரிகளும் வறண்டுபோய் கிடக்கின்றன. தண்ணீர் லாரிகளை வைத்து வணிகம் செய்பவர்கள் கொள்ளைலாபம் அடித்துப் பயனடைகின்றனர். நாலாயிரம் ரூபாய் கொடுத்தாலும் முப்பதாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரி தண்ணீர் கிடைப்பதில்லை. மெட்ரோ நீரேற்று நிலையங்களில் மக்கள் கூட்டம் குடத்துடனும் கேனுடனும் அலைமோதுகிறது. கல்குவாரிகளில் தேங்கிக் கிடக்கும் காலாவதியான தண்ணீரை தற்போது விநியோகம் செய்கிறார்கள். ஏறக்குறைய 200 நாள்களைத் தாண்டி சென்னை மண், மழைக்காக காத்துக்கொண்டேயிருக்கிறது.
தண்ணீர்... தண்ணீர்... இதுதான் சென்னை மாநகர வீதிகளிலும் பேருந்து நிலையங்களிலும் டீக்கடை பெஞ்ச்களிலும் பேசு பொருள். சென்னை மட்டுமல்ல.. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் இதுதான் பேசுபொருள். ஊற்றுகளில் தண்ணீர் சுரக்க சுரக்க கரண்டி வைத்து முகண்டு முகண்டு குடத்தில் சேகரிக்கும் பெண்களின் துயரத்தை வார்த்தைகளில் விவரிக்க இயலாது. மனிதனின் அடிப்படைத் தேவையை, தண்ணிர்த் தேவையை நிறைவேற்ற வேண்டிய தமிழகஅரசு மிகவும் மெத்தனமாக இருக்கிறது.
சென்னை மாநகருக்கு ஒரு நாளைக்கு 1100 மில்லின் லிட்டர் குடிநீர் தேவையுள்ளது. ஆனால் அதில் பாதியளவு 550 மில்லியன் லிட்டர் மட்டுமே விநியோகிக்கப்படுகிறது. ஷவர்ல குளிக்காதீங்க.. வெஸ்டர்ன் டாய்லட்டைப் பயன்
படுத்தாதீங்க.. என்று விளம்பரம் செய்கிறதே
ஒழிய.. சென்னை நீராதாரத்தைப் பெருக்குவதற் கான திட்டங்களையும் நீர் நிலைகளைத் தூர்வாரி மழைக்காலத்திற்கு தயாராவதற்கும் அரசிடம் திராணியில்லை. நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி.. மழை நீர் சேகரிப்புத் திட்டத்தைச் செயல்படுத்தாமல் கடந்த இருபது ஆண்டுகளாக வாளாயிருப்பதே சென்னையின் தண்ணீர் பற்றாக்குறைக்கு அடிப்படைக் காரணம்.
மழை பெய்யும்போது அதனைச் சேகரிக்கவும் பாதுகாக்கவும், அரசும் மக்களும் எவ்விதத்திலும் முயற்சி செய்யாததுதான் இன்று தமிழகத்தின் 33 மாவட்டங்களிலும் வறட்சி ஏற்படக் காரணம். ஆறுகள் கொள்ளையடிக்கப்படுகின்றன ஏரிகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. குளங்கள் குப்பைமேடுகளாக்கப்படுகின்றன. கண்மாய்கள் களவாடப் படுகின்றன. இயற்கையும் வனமும் அழிக்கப்படுகின்றன. தமிழகத்தில் 50 சதவீத மழைநீர் வீணாகக் கடலில் கலந்துவிடுகின்றது. நிலத்தடி நீர்மட்டமும் அதாள பாதாளத்திற்குச் சென்றுவிடுகிறது. நீருக்கும் நிலத்திற்கும் இடையே உள்ள உறவு அறுத்தெறியப்படுகிறது. மழைநீர் நிலத்திற்குள் இறங்குவதில்லை. தார்ச்சாலைகளும் கட்டிடங்களும் சிமென்ட் வீதிகளும் மழைநீரைப் பூமிக்குள் இறங்க அனுமதிப்பதில்லை. அவை வீணாகக் கடலில் கலந்து விடுகின்றன.
தென்ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரத்தைப் போல சென்னை, டெல்லி, பெங்களூரூ உள்ளிட்ட 21 நகரங்கள் 2020 ஆம் ஆண்டு நிலத்தடி நீர் இல்லாமல் பாதிக்கப்படும்; பத்து கோடிபேர் பாதிக்கப்படுவார்கள் என்று நிதி ஆயோக் அறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் ஏறக்குறைய 60 கோடிப்பேர் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் ஆண்டுதோறும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் இல்லாமல் இரண்டு லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இதுதான் இந்தியாவின் நிலை. இந்தியாவின் தலைநகரம் உட்பட அனைத்து மாநகரங்களும் ‘டே ஜீரோ’ நிலைக்குத் தள்ளப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.
தமிழக அரசு இன்றே விழித்துக் கொள்ள வேண்டும். மக்கள் வீதிக்கு வந்து, ’தண்ணீர் தண்ணீர்’ என்று போராடும்போது விழிபிதுங்கி நிற்கக் கூடாது. மக்களும் அரசை மட்டுமே குற்றஞ்சாட்டாமல்.. தங்கள் பொறுப்பை உணர்ந்து தண்ணீரைச் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மழைநீரைச் சேகரிக்க வேண்டும். ஏரி, குளங்களை ஆக்கிரமிப்பதைத் தவிர்க்க வேண்டும். மத்திய அரசின் புதிய அமைச்சகமான ஜல்சக்தித் துறையானது கிராமப்புற மற்றும் நகர்ப்புற நிலத்தடி நீர் மறுசீரமைப்பிற்குக் கவனம் செலுத்த வேண்டும்.
தமிழக அரசும் நீர் மேலாண்மைக்காக நவீனக் கொள்கைகளை நிபுணர்களைக் கொண்டு வகுத்து, அவற்றைச் செயல்படுத்த வேண்டும். கடல்நீரை குடிநீராக்குகிறோம் என்று மேஜிக் வேலைகளைச் செய்து வரிப்பணத்தை வீணாக்குவதைவிட, தென் மேற்குப் பருவ மழை வருவதற்கு முன்பே, ஏரி குளங்களை தூர்வாரி தயார் படுத்தவேண்டும். மணற் கொள்ளையடிப்பதை நிறுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை மக்களின் துணையோடு செயல்படுத்த வேண்டும். நூறுநாள் வேலைத்திட்டத்தில் ஊர்தோறும் ஊருணிகளைச் செப்பனிடவேண்டும். மழைநீர் சேகரிப்புக் குழிகளை அமைக்க வேண்டும்.
நீரின்றி அமையாது உலகு மட்டுமல்ல...
நீரின்றி வாழமுடியாது நாமும்தான்.
Comment