ஒரே நாடு - ஒரே தேர்தல்
- Author குடந்தை ஞானி --
- Wednesday, 17 Jul, 2019
இரண்டாம் முறையாக மத்தியில் பதவியேற்றுள்ள மோடி தலைமையிலான பாஜக அரசு நாட்டின் இறையாண்மைiயும் கூட்டாட்சித் தத்துவத்தையும் ஜனநாயகத்தையும் சீர்குலைப்பதில் முன்னைவிட தற்போது மிக வேகமாக, அசுர பலத்தோடு செயல்படுகிறது என்பதற்கு மற்றும் ஓர் உதாரணம்தான் இந்த ’ஒரே நாடு ஒரே தேர்தல்’. ஜூன் மாதம் 19 ஆம் நாள் அவசர அவசரமாகக் கூட்டப்பட்ட அனைத்துக்கட்சிக் கூட்டத்தை காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது கருப்பொருளாக விவாதிக்கப்பட்டுள்ளது. உரோம் பற்றி எரிந்தபோது பிடில் வாசித்த நீரோவைப்போல இந்தியா முழுவதும் வறட்சி, பீகாரில்
மூளைக்காய்ச்சலால் பிஞ்சுக் குழந்தைகள் செத்து மடிகிறபோது மோடி ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பதைப் பற்றி சிந்திக்கிறார்; பேசுகிறார்; விவாதிக்கிறார்.
இங்கே இந்தச் சிந்தனைக்கு ஆதரவாக முன்மொழியப்படுகின்ற காரணங்கள் அனைத்துமே நகைப்புக்குரியவையாக உள்ளன. ஒரே நாடு என்பது எதிர்காலம் என்றால் இன்று, இப்போது நாடு ஒன்றாக இல்லை என்பதை அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். வேற்றுமையில் ஒற்றுமை நிறைந்ததாக இந்தியா தலைநிமிர்ந்து நிற்கிறது. பாரதம்... வந்தே மாதரம். ஜெய் ஸ்ரிராம்.. என்பதுதான் அவர்கள் மனவல்ய செபங்களாக உள்ளன. சில ஆயிரம் கோடிகளில் நன்கொடைகளைப் பெறும் பாரதிய ஜனதா கட்சி, வங்கிப் பத்திரங்கள் வழியாக பெயரை மறைத்து நன்கொடை பெறும் பாரதிய ஜனதா கட்சி, தேர்தல் செலவைப் பற்றி மழையில் நனையும் ஆட்டிற்காக அழும் ஓநாயைப் போல ஒப்பாரி வைக்கிறது.
பிரதமர் எப்போதும் தேர்தல் பற்றிய சிந்தனையிலேயே இருக்கிறார் என்று, இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் நிலைப்பாட்டிற்கு நொண்டிச் சாக்கு கற்பிக்கிறார்கள். ’மாட்டுக்கு உதட்டுல புண்ணு இருந்தால், மடியில் பால் இறங்காது’ என்பது இவர்களின் தேசிய கல்விக் கொள்கையாக இருக்கிறது. எல்லா வசதிகளும் நிறைந்த கேத்ரிநாத் குகையில் வீடியோ கேமராக்களுக்கு முன்பு ஆழ்நிலை தியானம் செய்தபோது இது அவருக்கு உதித்த ஞானமாக இருக்கலாம். சட்டப் பேரவைத் தேர்தலுக்கு வரிந்து கட்டிக்கொண்டு யார் இவரைத் தேர்தல் பிரச்சாரம் செய்ய சொன்னது? ஹெலிகாப்டரிலும் விமானங்களிலும் தான் நாட்டின் பிரதமர் என்பதையும் மறந்து, பறந்து பறந்து பிரச்சாரக் கூட்டங்களில் யார் அவரைப் பேசச் சொன்னது? நாட்டின் மிகச் சிறிய மாநிலமாக இருந்தாலும் சரி.. மிகப்பெரிய மாநிலமாக இருந்தாலும் சரி.. பிரதமர் ஏன் பிரச்சாரம் செய்ய வேண்டும்? இனி நகராட்சி, மாநகராட்சித் தேர்தல்களில் கூட பிரதமர் பிரச்சாரம் செய்தால் என்ன செய்வது? ஒரே நாடு ஒரே தேர்தல் என்றால் இனி உலக நாடுகளுக்குப் பட்டியல்போட்டு சுற்றுலா செல்வதற்கு வேண்டுமானால் அது பயன்படுமே ஓழிய .. இதுவே தீர்வாகாது.
ஒரே மொழி..ஒரே வரி., ’ஒரே நாடு’.., ஒரே நுழைவுத்தேர்வு.. இப்போது ஒரே தேர்தல்.. என்று நாட்டின் இறையாண்மையையும் பன்முகத்தன்மையையும் அழிப்பதில்தான் பாஜக அரசு குறியாக இருக்கிறது. மோடியின் பிரச்சாரம் எடுபடாத தென்மாநிலங்களைக் குறிவைத்துத்தான், இந்தி பேசாத மாநிலங்களைக் குறிவைத்துத்தான் இவர்கள் இந்தத் தேர்தல் திட்டத்தை முன்வைக்கிறார்கள். பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களை சங்க்பரிவார் ஆளுநர்கள் வைத்து தர்பார் செய்யும் மத்திய அரசு, தங்களுடைய கொள்கைக்கும் தங்களுடைய மேலாதிக்கத்திற்கும் சிம்ம சொப்பனமாக இருக்கும் மாநிலக் கட்சிகளை ஒழிப்பதுதான் இதன் நோக்கமே தவிர வேறு, என்ன உயரிய நோக்கமாக இருக்க முடியும்!.
கடந்த ஆறு ஆண்டுகளாக எதிர்க்கட்சிகளே இல்லாமல் ஆளும் பாஜக.. இனி ஒரே கட்சி.. ஒரே ஆட்சி என்று இறுதியில் அடைவது. அவர்களின் இலக்கு. கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர்கள் கொன்றொழித்த ஜனநாயகத்திற்குக் கொள்ளி வைப்பதற்காகத்தான் இப்போது ஒரே நாடு ஒரே தேர்தல் என்று கொக்கரிக்கிறார்கள். இந்தியாவின் கூட்டாட்சிக்கு முடிவுகட்டுவதுதான் சங்க் பரிவாரங்களின் இலட்சியம். நாட்டில் நிலவும் தட்பவெப்ப நிலைகளைப் பற்றி அவர்களுக்குக் கவலையில்லை; பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள், உணவுப் பழக்க வழக்கங்கள்... என எதைப்பற்றியும் அவர்களுக்கு கவலையில்லை. அத்வானி அன்றே முன்மொழிந்தார்; ஆர்எஸ்எஸ் வழிமொழிந்தது.. எனவே..இன்று நாங்கள் அறிவிக்கிறோம் என்று நிலைப்பாடு எடுக்கிறார்கள். குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையே அதற்கு சாட்சி. ஐந்து ஆண்டுக்குள் மத்தியில் ஆட்சி கலைந்தால் குடியரசுத்தலைவர் ஆட்சி என்பதும் மாநிலத்தில ஆட்சி கவிழ்ந்தால் ஆளுநர் ஆட்சி என்பதும் சர்வாதிகாரம் என்றில்லாமல் வேறென்ன? மத்திய சட்ட ஆணையம் அனைத்திற்கும் கைப்பாவையாகச் செயல்படும்.
எனவே, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அவர்களின் கை மேலாங்கியிருக்கிற இந்த நிலையில் மசோதாவைத் தாக்கல் செய்து, அரசியல் சாசனத்தைத் திருத்தி, ஜனநாயகத்தைப் புதைப்பதற்குள் மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும். அவர்கள் பாரதத்தை நிறுவ ஒரே தேர்தல் என்கிறார்கள். நாம் இந்தியாவைக் காக்க இதனை எதிர்ப்போம். ஜனநாயகமும் கூட்டாட்சித்தத்துவமும் வேற்றுமையில் ஒற்றுமையும் பன்மைத் தன்மையும்தான் நமது வலிமை. தேசிய கீதம் இதனைத்தான் வலியுறுத்துகிறது.
Comment