No icon

மலாவி நாட்டு மருத்துவமனைக்கு திருத்தந்தை உதவி

உலகெங்கும் மக்களின் உயிர் வாழ்வுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள கொரோனா கொள்ளைநோய் கோவிட்-19 உருவாக்கியுள்ள அவசரகாலச் சூழலில், துன்புறும் வறிய நாடுகளிலுள்ள மக்களுக்கு, தொடர்ந்து உதவி வருகின்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,
தற்போது மலாவி நாட்டு மருத்துவமனை ஒன்றிற்கு, மருத்துவக் கருவி ஒன்றை வழங்கியுள்ளார் என்று, ஆகஸ்ட் 22, சனிக்கிழமை யன்று வத்திக்கான் செய்தித்துறை கூறியுள்ளது.


தென்கிழக்கு ஆப்ரிக்க நாடாகிய மலாவியின், லில்லோங்வே  நகரில், அசிசி நகர், புனித பிரான்சிஸ் மறைப்பணியாளர் அருள்சகோதரிகள் நடத்தும் லிக்குனி  மருத்துவமனைக்கு, உயிர்காக்கும் சுவாசக் கருவி ஒன்றை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நன்கொடையாக வழங்கியுள்ளார்.


மலாவி மற்றும், சாம்பியா நாடுகளின் திருப்பீட தூதர், பேராயர் ஜியான்பிரான்கோ கல்லோன் அவர்கள், இந்த சுவாசக்கருவியை, திருத்தந்தையின் பெயரில் வழங்கியுள்ளார்.


திருத்தந்தை வழங்கியுள்ள, உயிர் காக்கும் சுவாசக்கருவி குறித்து, மலாவி ஆயர் பேரவையின் வலைகட்டுரைப் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ள,  லில்லோங்வே  பேராயர் தார்சியுஸ் ஸியாயே அவர்கள், உலகெங்கும் மக்களின் உயிர்வாழ்வுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள இந்த கொள்ளைநோய் குறித்து, திருத்தந்தை உண்மையிலேயே கவலைகொண்டுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.


இந்நோயி னால் பாதிக்கப் பட்டுள்ள வறிய நாடுகள் மற்றும், மக்களுக்கு உதவு வதோடு, அவர்களுக் காக திருத்தந்தை செபித்து வருகின் றார் என்றும், மலாவி நாட்டிற்காகவும் திருத்தந்தை செபிக்குமாறு தான் கேட்டிருப்பதாகவும், பேராயர்  ஸியாயே அவர்கள் கூறியுள்ளார்.
மேலும், லிக்குனி  மறைத்தள மருத்துவமனை இயக்குனர் அருள்சகோதரி ஆக்னஸ் லுங்கூ  திருத்தந்தைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


உலகில் மிக வறிய நாடுகளில் ஒன்றான மலாவியில், இதுவரை 4,988 பேர் கொரோனா கொள்ளைநோயால் தாக்கப் பட்டுள்ளனர், இவர்களில் 2,576 பேர் குணமடைந்துள்ளனர் மற்றும், 156 பேர் இறந்துள்ளனர். லிக்குனி  மறைத்தளம் என்ற பெயரில் இயங்கும், இந்த மருத்துவமனையில், ஒவ்வோர் ஆண்டும், 45,000த்திற்கும் அதிகமான நோயாளிகளுக்கும், அதோடு, குறைந்த ஊதியத்தில் வாழ்கின்ற, சாலையோர விற்பனையாளர்கள், விவசாயிகள் போன்றோருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகின்றது.  தலைநகர் லில்லோங்வேலிருந்து ஒன்பது கிலோ மீட்டர் தூரத்திலுள்ள இந்த மருத்துவமனை 231 படுக்கைகள் கொண்டது.

Comment