No icon

தமிழக ஆயர் பேரவை

காவலர்களின்  வரம்பு மீறிய வன்முறையை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

     தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில்> காவலர்களால் சித்திரவதைக்கும் கொலைக்கும் உள்ளான செய்தி நெஞ்சைப் பதற வைக்கிறது. அறுபது வயது தந்தையும் முப்பத்தியொரு வயதான மகனையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று சித்திரவதைக்கு உள்ளாக்கியதோடு, கொலையும் செய்த நிகழ்வு சட்டத்தின் ஆட்சியைக் காக்கும் சனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா என்ற ஐயத்தை எழுப்பியுள்ளது.

  சட்டத்தையும் ஒழுங்கையும் குடிமக்களின் மாண்பையும் (Dignity) காக்கின்ற பொறுப்பேற்றிருக்கும் காவலர்கள்> இந்த அப்பட்டமான கொலையை நிகழ்த்தியிருப்பதன் மூலம் நாகரிகச் சமூகத்தைக் கேவலப்படுத்தியிருக்கிறார்கள்.

     குற்றம் கண்டால் விசாரிக்கவும்> விசாரணை முடிவில் தண்டிக்கவும் வேண்டிய முறைகள் ஏற்கனவே தெளிவாக இருக்க> கைது செய்யப்பட்டவர்களை குற்றவாளிகள் (Criminals)) போல் முத்திரை குத்தி> காவலில் சித்திரவதை (Torture) செய்ததோடு கொலையும் செய்திருப்பது> ஒரு குற்றத்தை அல்லது குற்றவாளியாகக் கருதப்பட்டவரை அணுகும்முறை சட்டத்திற்கும்> நீதிக்கும் புறம்பானதாகும். இரு கொலைகளையும் நடத்திமுடித்த காவலர்களின் இந்த வன்முறையை வன்மையாகக் கண்டிக்கிறோம். காவலர்களின் இம்மனிதம் மறந்த போக்கு> மக்களிடம் எம்மாதிரியான மனநிலையை ஏற்படுத்தியிருக்கும் என்பதனையும்> இதன் பின்விளைவுகளையும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். சட்ட நெறிமுறைகள் அனைத்தையும் துச்சமென மதிக்கும் இக்காவலர்களின் செயல் மக்களுக்கு தரும் செய்தி என்னவென்பதையும் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டுவது கட்டாயமாகிறது.

     தமிழக அரசு இந்த நடவடிக்கையக் குறித்து தன் கருத்தை வெளிப்படுத்தாமை கவலையளிக்கிறது. சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் இக்கொடிய நிகழ்வை கண்டிக்க வேண்டும். காவலர்களின் இந்த அடாவடித்தனம் தொடர் நிகழ்வாக மாறா வகையில் மக்களின் எதிர்வினைகள் அமையவேண்டும். தந்தையையும் மகனையும் ஒரே நேரத்தில் இழந்துவிட்ட குடும்பத்திற்கு அனுதாபம் காட்டுவது மட்டுமே இழப்பை ஈடுசெய்யாது என்பதால்> குடும்பத்தின் முக்கிய தூண்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு அரசு பொருளாதார ரீதியாக உதவிசெய்ய வேண்டும். அவர்களுக்குரிய பாதுகாப்பையும் வழங்க வேண்டும்.

     ஏற்கெனவே கொரோனா தொற்று மக்களிடம் ஏற்படுத்தியிருக்கும் இயலாமை> இல்லாமை> வறுமை எனும் துயர நிலைகளில் சிக்கித் தவிக்கும் மக்களிடம்> நம்பிக்கை தரவேண்டிய காவலர்களின் வரம்பு மீறிய இச்செயல் இனி தொடராது என்ற நம்பிக்கையை பொது மக்களுக்குத் தரவேண்டியது அரசின் கடமையாகும்.

இழக்க வேண்டாத உயிர்களை இழந்து நிற்கும் குடும்பத்திற்கு தமிழக கத்தோலிக்க ஆயர் பேரவை தன் இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்த ஆன்மாக்கள் சாந்தியடைய வேண்டுதலையும் தெரிவிக்கிறது.

                                மேதகு அந்தோணி பாப்புசாமி

                                     தலைவர்> தமிழக ஆயர் பேரவை.

                                25.06.2020

Comment