திருவழிபாட்டு நாள்காட்டி
உரோமன் திருவழிபாட்டு நாள்காட்டியில் ஆறு புனிதர்களின் நினைவு நாள்
- Author Fr.Gnani Raj Lazar --
- Saturday, 06 Feb, 2021
புனிதர்கள் மார்த்தா, மரியா, இலாசர் திருநாள், நினைவு நாளாக, உரோமன் திருவழிபாட்டு நாள்காட்டியில் இணைக்கப்பட்டுள்ளது என்று, திருவழிபாடு மற்றும், அருளடையாளங்கள் பேராயம், பிப்ரவர் 02 ஆம் தேதி கூறியுள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஒப்புதலின் பேரில், உரோமன் திருவழிபாட்டு நாள்காட்டியில் இணைக்கப்பட்டுள்ள ஆறு புனிதர்கள் பற்றி, இச்செவ்வாயன்று, இரு விதிமுறை ஆணை அறிக்கைகளை வெளியிட்டுள்ள இப்பேராயம், இயேசுவுக்குச் சான்றுபகர்ந்த, மார்த்தா, மரியா, இலாசர் ஆகிய மூவர் பற்றி விரிவாகக் கூறியுள்ளது.
மார்த்தா, மரியா, இலாசர் குடும்பம்
பெத்தானியாவில் வாழ்ந்த, மார்த்தா, மரியா, மற்றும், இலாசர் ஆகியோர் கொண்ட குடும்பத்தில், மார்த்தா, ஆண்டவர் இயேசுவுக்கு மனத்தாராளத்துடன் விருந்தளித்து உபசரித்தவர், மரியா அவர் சொல்வதைக் கவனமுடன் கேட்டுக்கொண்டிருந்தவர், இலாசர் அவரால் உயிர்ப்பிக்கப்பட்டவர் என்று, நற்செய்தியாளர் யோவான் கூறுகிறார்.
உயிர்த்த இயேசு தோன்றிய மகதலா மரியா, மார்த்தாவின் சகோதரி மரியா, இயேசுவால் பாவங்கள் மன்னிக்கப்பட்ட மரியா என, மரியாவின் தனித்துவம் பற்றி இலத்தீன் வழிபாட்டுமுறை திருஅவையில், நிச்சயமற்றதன்மை நிலவியதால், மார்த்தாவின் திருநாள் மட்டும் உரோமன் திருவழிபாட்டு நாள்காட்டியில் ஜூலை 29 ஆம் தேதி என்று இணைக்கப்பட்டது.
ஆயினும், இம்மூவரும், தங்களின் இல்லத்தில் ஆண்டவர் இயேசுவை வரவேற்றது, அவர் கூறியதைக் கவனமுடன் உற்றுக்கேட்டது, அவரே உயிர்ப்பும் வாழ்வும் என்று நம்பியது ஆகியவற்றுக்கு, நற்செய்தி கூறும் முக்கியமான சான்றுகள் என்ற அடிப்படையில், அண்மைக் காலமாக நடைபெற்ற ஆய்வுகளுக்குப்பின், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மூவரின் திருநாளை, ஜூலை 29 ஆம் தேதி சிறப்பிப்பதற்கு இசைவு தெரிவித்துள்ளார்.
புனிதர்கள் மார்த்தா, மரியா, இலாசர் நினைவு நாள், திருப்பலி புத்தகங்கள், அனைத்து திருவழிபாட்டு நாள்காட்டிகள், திருப்புகழ்மாலை திருவழிபாடு ஆகியவற்றில் இணைக்கப்படவேண்டும், இந்த திருநாள் தொடர்பாக, திருவழிபாட்டு நூல்களில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள், திருவழிபாடு மற்றும், அருளடையாளங்கள் பேராயத்தின் அனுமதியைப் பெற்றிருக்கவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
திருஅவையின் மறைவல்லுனர்கள்
திருவழிபாடு மற்றும், அருளடையாளங்கள் பேராயம் வெளியிட்டுள்ள இரண்டாவது அறிக்கையில், திருஅவையின் மூன்று மறைவல்லுனர்கள் திருநாள், விருப்ப நினைவு நாளாகச் சிறப்பிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
பிப்ரவரி 27 ஆம் தேதியன்று சிறப்பிக்கப்படும், ஆழ்நிலைதியான துறவு இல்லத் தலைவரும், திருஅவையின் மறைவல்லுனருமான நரேக் நகரின் புனித கிரகரி, மே 10 ஆம் தேதி சிறப்பிக்கப்படும் அருள்பணியாளரும், திருஅவையின் மறைவல்லுனருமான அவிலாவின் புனித யோவான், செப்டம்பர் 17ம் தேதி சிறப்பிக்கப்படும், கன்னியும், திருஅவையின் மறைவல்லுனருமான புனித பிங்கன் நகரின் புனித ஹில்டகார்டு ஆகிய மூன்று புனிதர்களின் திருநாள்கள், விருப்ப நினைவு நாள்களாகச் சிறப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு விதிமுறை ஆணைகள் அறிக்கைகளில், திருவழிபாடு மற்றும், அருளடையாளங்கள் பேராயத்தின் தலைவர் கர்தினால் இராபர்ட் சாரா அவர்களும், செயலர் பேராயர் ஆர்த்தூர் ரோச் அவர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.
Comment