REJECT BJP
கட்டாய மதமாற்றம் செய்வதாக பொய்க் குற்றச்சாட்டைச் சுமத்தி பாஜகவினர் குறிவைக்கும் நம் கிறிஸ்தவப் பள்ளி
- Author குடந்தை ஞானி --
- Saturday, 22 Jan, 2022
கும்பகோணம் மறைமாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டியில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக செயல்பட்டு வரும் புகழ்பெற்ற பள்ளிதான் திரு இருதய ஆண்டவர் மேல்நிலைப் பள்ளி. இப்பள்ளியில் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏழை எளிய மாணவிகளும் அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்து பெற்றோர் இழந்த பிள்ளைகளும், உறவினர்களால் கைவிடப்பட்ட மாணவிகளும் தங்கிப் படிப்பதற்கு செயின்ட் மைக்கேல் ஹாஸ்டல் தங்கும் விடுதியும் செயல்பட்டு வருகிறது.
தற்கொலை செய்து கொண்ட மாணவி- உண்மையில் நடந்தது என்ன?
அரியலூர் மாவட்டம், வடுகபாளையம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் முருகானந்தம் என்பவரின் மகள் பிரதிபா (பெயர்மாற்றப்பட்டுள்ளது) எட்டாம் வகுப்பு முதல் இவ்விடுதியில் தங்கி படித்து வருகிறார். இவர் தற்போது பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வரும் நிலையில், கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் தேதி, விடுதியிலேயே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது அவர் தனக்கு வயிற்றுவலி என்று கூறியதால் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் மறுநாள் அவரது தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து முருகானந்தம் மைக்கேல்பட்டி வந்து தன் மகளை அழைத்து சென்றுள்ளார். பின்னர் மாணவி உடல் நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த 15 ஆம் தேதி தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்களிடம் மாணவி தான் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததாகவும், விடுதியில் தன்னை அனைத்து அறைகளையும் தூய்மை செய்ய வேண்டும் என்று வார்டன் கூறியதன் பேரில் ஏற்பட்ட மன உளைச்சலால் பூச்சி மருந்தை குடித்ததாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து டாக்டர்கள் திருக்காட்டுப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் மாணவியிடம் வந்து விசாரித்தனர்.
பள்ளி மாணவி சிகிச்சையில் இருந்தபோது, மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில், ‘மதமாற்றம் செய்ய மாணவியைக் கட்டாயப்படுத்தவில்லை’ என்பது தெளிவாக தெரிகிறது. முதல் முறையாக பெற்றோர்கள் கொடுத்த புகாரிலும், நீதிபதியிடம் அளித்த வாக்குமூலத்திலும், காவல்துறை விசாரணையின் போதும் மதமாற்றம் குறித்து எந்த புகாரும் வரவில்லை. ஆனால் அரியலூர் மாவட்ட பாஜக தலைவர் உள்ளிட்ட ஒரு சிலர் தந்தை முருகானந்தத்தின் மூலம் சிகிச்சையில் உள்ள அவர்தம் மகளைத் தூண்டி, மதமாற்றத்திற்கு விடுதி வார்டன் தூண்டியதாக வீடியோ பதிவு செய்துகொண்டனர்.
இதுகுறித்து தகவல் தெரிவித்த தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், ‘மதமாற்றம் செய்ய மாணவியைக் கட்டாயப்படுத்தவில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. முதல் முறையாக பெற்றோர்கள் கொடுத்த புகாரிலோ, நீதிபதியிடம் அளித்த வாக்குமூலத்திலோ, காவல்துறை விசாரணையின் போதும் மதமாற்றம் என்ற புகார்கள் வரவில்லை. (ஜனவரி 20) நேற்றுதான் இதுபோன்ற தகவல் வெளியாகி உள்ளது. ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும்போது அவரை வீடியோ எடுப்பது, ஒளிபரப்புவது, அவர்கள் பெயர் முகவரி இது தொடர்பாக உள்ளிட்டவை வெளியிடுவது சட்டப்படி குற்றம். இதுதொடர்பாக மருத்துவக் கல்லூரி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று பெற்றோர்கள் புதிதாக ஒரு புகார் கொடுத்துள்ளனர். அது குறித்து விசாரணை செய்து வருகிறோம்’ என்று கூறியுள்ளார்.
அரசியல் செய்யும் மத அடிப்படைவாதிகள்
அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதலே, இந்து மதத்தைச் சேர்ந்த அந்த மாணவியை, கிறிஸ்தவ மதத்துக்கு மாற வற்புறுத்தியதால்தான் அவர் தற்கொலைக்கு முயன்றதாக விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பா.ஜ.க-வினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுவந்தனர். இது தொடர்பாக அந்த மாணவியும், ‘ஹாஸ்டல் வார்டன் கடந்த இரண்டு வருடங்களாகவே என்னை மதம் மாற அழுத்தம் கொடுத்துவந்தார், அதற்கு நான் மறுத்ததால், கொடுமைக்கு ஆளானேன்’ என வீடியோவில் பேசியிருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் ஜனவரி 19 ஆம் தேதி இம்மாணவி உயிரிழந்தார்.
அதனால், அதையடுத்து, பாஜக-வினரும் மாணவியின் உறவினர்களும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த விவகாரத்தில், ‘அறையைச் சுத்தம் செய்யச் சொல்லியிருக்கிறார்கள். அதனால் மாணவியால் படிக்க முடியாமல் தற்கொலை செய்துகொள்ள முயன்றார்’ என போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் மாணவியின் உறவினர்கள், “மதம் மாறச் சொன்னதால்தான் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக வழக்கு பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் உடலை வாங்குவோம்" என கோஷமிட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அருள்சகோதரி சகாயமேரி
விடுதி வார்டன் அருள்சகோதரி சகாய மேரி அவர்கள் 62 வயது நிரம்பியவர். தாயுள்ளத்தோடு தன்னுடைய சொந்தக் குழந்தை போலவே அந்த மாணவியைக் கவனித்து, வளர்த்துவந்தார். அவருக்கு வேண்டிய அனைத்தையும் செய்து கொடுப்பார். எங்கே போனாலும் கூடவே அழைத்துக்கொண்டு போவார். கடந்த கிறிஸ்மஸ் பண்டிகையின்போதுகூட புது டிரெஸ் எடுத்துக்கொடுத்தார். பீரோ சாவியைக்கூட அந்த மாணவியிடம்தான் கொடுத்துவைத்திருப்பாராம். அந்த அளவுக்கு இருவரும் நல்ல புரிதலுடன் இருந்துவந்தனர்.
அரியலூர் மாவட்டம், வடுகபாளையம் கீழத்தெருவைச் சேர்ந்த இவர் தந்தை முருகானந்தம் 47 வயது நிரம்பியவர். இவரின் முதல் மனைவியும் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் தாயுமான கனிமொழி, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். முதல் மனைவி இறந்த பின்பு, முருகானந்தம் சரண்யா என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டார். இதைத் தொடர்ந்து, முருகானந்தம் தன் மகளை தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டி திரு இருதய மேல்நிலைபள்ளியில் 8-ம் வகுப்பில் சேர்த்துவிட்டார். அவர், பள்ளி வளாகத்திலுள்ள செயின்ட் மைக்கேல் மகளிர் விடுதியில் தங்கிப் படித்து வந்தார். பத்தாம் வகுப்பில் 487 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவியாகவே தேர்ச்சிப் பெற்றுள்ளார்.
உண்மையான காரணம் என்ன?
அப்பா, அம்மா பாசம் கிடைக்கவில்லை என்கிற ஏக்கம் அந்த மாணவிக்கு இருந்து வந்தது. மேலும் சித்தியின் கொடுமை ஒருபுறம். விடுமுறைக்குகூட வீட்டிற்கு செல்ல முடியாத நிலை இருந்து வந்தது. அத்தோடு அவருக்கு வெண் தொழுநோய் கைகளில் இருந்தது. ஆகையால் அவர்தம் சித்தி, அவரை ஏற்றுக்கொள்ள தயங்கினார். பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில் அதற்கு பிறகு, எங்கு செல்வது, எங்கே தங்குவது என்று குழப்பம் இவருக்கு இருந்து வந்தது. ‘பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த பிறகு எங்க போய் தங்குவேன்?’ என்று தன் சக தோழிகளிடம் கேட்டுக்கொண்டே இருப்பாள். இந்தச் சூழலில், விஷம் குடித்திருக்கிறார். அதைக்கூட அவர் யாரிடமும் சொல்லவில்லை. வயிற்றுவலி மற்றும் வாந்தி எடுத்துக்கொண்டே இருந்ததால் பெற்றோரிடம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
அவர்களிடத்திலும் அவர் விஷம் குடித்ததைச் சொல்லவில்லை. உடல்நிலை முடியாமல் போனதைத் தொடர்ந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். டாக்டர்கள்தான் விஷம் குடித்ததைக் கண்டுபிடித்துள்ளனர். ஆனால், ‘வார்டன் அறையைச் சுத்தம் செய்தல் உள்ளிட்ட வேலைகளைச் செய்யச் சொன்னார். அதனால் என்னால் படிக்க முடியவில்லை’ என போலீஸில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையிலேயே வழக்கும் பதிவும் செய்யப்பட்டு, வார்டன் அருள்சகோதரி சகாய மேரியும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். ஆனால், பாஜகவினர் அரசியல் நெருக்கடி தந்து பொய்யான குற்றச்சாட்டுகளைப் பதிவுச் செய்யும்படி தூண்டுகின்றனர். இச்செய்தி அச்சில் ஏறும்வரை அவருக்கு பிணை கிடைக்கவில்லை.
பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட அரசியல் செய்வதற்கு ஏதுவாக, மதமாற்றம் செய்ய முற்பட்டனர் என்று அபாண்டமாக குற்றஞ்சாட்டி, இறந்த மாணவியின் பெற்றோருக்கு ஆசை காட்டி, தூண்டி, மத்திய அரசைக் கொண்டு அச்சுறுத்தி, குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பதற்கான தேசிய ஆணையத்தின் மூலம் நெருக்கடி கொடுக்கின்றனர். வடஇந்திய மாநிலங்களில் மிஷனரி சாரிட்டி குழந்தைகள் காப்பகங்களில் மதமாற்றுவதாக சுமத்திய அதே களங்கத்தை இங்கும் கற்பித்து அரசியல் செய்கின்றனர். உண்மை ஒருபோதும் தோற்காது. நிச்சயம் வெல்லும். சத்தியமேவ ஜெயதே! வாய்மையே வெல்லும்!. -ஆசிரியர்.
Comment