குடந்தை ஞானி
ஆயர் மூலக்கல் வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு - வத்திக்கான் ஏற்பு?
- Author குடந்தை ஞானி --
- Wednesday, 22 Jun, 2022
ஜலந்தரின் ஆயர் பிராங்கோ மூலக்கல் குறித்த இந்திய நீதிமன்றத்தின் தீர்ப்பை வத்திக்கான் ஏற்றுக் கொண்டதாக ஜூன் 11 ஆம் தேதி, இந்தியா மற்றும் நேபாளத்திற்கான திருத்தந்தையின் திருத்தூதுவர் லியோபோல்டோ ஜிரெல்லி கூறியுள்ளார். ஜலந்தருக்கு இரண்டு நாள் மேய்ப்பு பணி காரணமாக பயணம் மேற்கொண்டிருந்த திருத்தந்தையின் திருத்தூதுவர், ஜூன் 11 ஆம் தேதி அன்று ஜலந்தர் மறைமாவட்டத்தின் அருள்பணியாளர்களைச் சந்தித்தார்.
"ஆயர் மூலக்கல் ஒரு இந்தியக் குடிமகன், எனவே இந்நாட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு வத்திக்கான் அதன்படி செல்கிறது. நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி ஆயர் பிராங்கோ மூலக்கல் நிரபராதி மற்றும் இது தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டிருப்பவர். இருப்பினும் இவரது எதிர்காலப் பணியானது, என் கைகளில் இல்லை, அதை வத்திக்கானே முடிவு செய்யும். அதுவரை நாம் பொறுமையாக காத்திருப்போம்," என்று திருத்தூதுவர் அருள்பணியாளர்களிடம் கூறினார். ஆயர் பிராங்கோ மூலக்கல் 2018, செப்டம்பர் 21 ஆம் தேதி, அருள்சகோதரி ஒருவர் அளித்த பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டார். அதற்கு முன்பே 2018, செப்டம்பர் 20 ஆம் தேதி, வழக்கு முடியும் வரை தனது ஆயர் கடமைகளில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டுமென்று வத்திக்கானுக்கு அவர் அளித்த வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர் இந்த ஆண்டு 2022, ஜனவரி 14 ஆம் தேதி, தென்னிந்தியாவின் கேரளா நீதிமன்றம், அருள்சகோதரி அளித்த பாலியல் பலாத்கார வழக்கில் ஆயர் மூலக்கல் நிரபராதி என்று தீர்ப்பளித்து விடுவித்தது.
Comment