திருத்தந்தை:
நம்பிக்கையை ஒருபோதும் கைவிடவேண்டாம்
- Author திருத்தந்தை பிரான்சிஸ் --
- Thursday, 07 Jul, 2022
காங்கோ மக்களாட்சி குடியரசு மற்றும் தென் சூடான் ஆகிய இரு ஆப்ரிக்க நாடுகளுக்கு இந்நேரத்தில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ள இயலாமல் இருப்பதற்கு அந்நாடுகளின் மக்களிடம் தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளவேளை, அம்மக்கள் தங்களின் இறைநம்பிக்கையை விட்டுவிடாமல் இருக்குமாறு திருத்தந்தை பிரான்சிஸ் ஊக்கப்படுத்தியுள்ளார்.
ஜூலை 2 ஆம் தேதி, சனிக்கிழமையன்று அந்நாடுகளுக்கான தனது 37வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயண நிகழ்வுகளைத் தொடங்குவதற்குத் திட்டமிட்டிருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதே நாளில் அவ்விரு நாடுகளின் மக்களுக்கு, காணொளிச் செய்தி வழியாக தன் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, முழங்கால் மூட்டில் ஏற்பட்டுள்ள வலி காரணமாக, அவர் தனது 37வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தை தள்ளிவைத்துள்ளார். மிகவும் விரும்பிய மற்றும் நீண்டகாலமாக காத்திருந்த இத்திருத்தூதுப் பயணத்தை கட்டாயமாகத் தள்ளிவைப்பதற்கு, நான் எவ்வளவுதூரம் வருத்தப்பட்டேன் என்பதை ஆண்டவர் அறிவார். ஆயினும், நம்பிக்கையை இழக்காதிருப்போம், மாறாக, கூடிய விரைவில் சந்திப்போம் என்ற நம்பிக்கையை வளர்த்துக்கொள்வோம் எனவும், அக்காணொளிச் செய்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.
நீண்ட காலத் துன்பங்கள்
காங்கோ மக்களாட்சி குடியரசு மற்றும் தென் சூடான் நாடுகளின் மக்களை, குறிப்பாக, அவர்கள் நீண்ட காலம் சகித்துக்கொண்டுள்ள துன்பங்களை, எக்காலத்தையும்விட அண்மை வாரங்களில் அதிகமாக நினைத்தேன் என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, முதலில் காங்கோ மக்களாட்சி குடியரசு பற்றிய தன் எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
காங்கோ மக்களாட்சி குடியரசில், குறிப்பாக ஆயுதமோதல்கள் தொடர்ந்து இடம்பெற்றுவரும் அந்நாட்டின் கிழக்குப் பகுதியில், உரிமை மீறல், வன்முறை மற்றும் பாதுகாப்பின்மை ஆகியவை, பலரின் புறக்கணிப்பு மற்றும் சுய ஆதாயங்களால், எண்ணற்ற மற்றும் கடும் துன்பங்களுக்கு காரணமாகியுள்ளன என்று திருத்தந்தை கவலை தெரிவித்துள்ளார்.
தென் சூடான்
அடுத்து, தென் சூடான் நாடு பற்றிக் கூறியுள்ள திருத்தந்தை, அந்நாட்டில் அமைதிக்கான அழுகுரல் அதிகம் கேட்கிறது எனவும், வன்முறை மற்றும் வறுமை ஆகியவற்றால் மனச்சோர்வடைந்துள்ள பலர், தேசிய ஒப்புரவு நடவடிக்கை வழியாக தெளிவான தீர்வுகளுக்காகக் காத்திருக்கின்றனர் என்று கூறியுள்ளார்.
கான்டர்பரி பேராயர் மற்றும் ஸ்காட்லாந்து திருஅவையின் தலைவர் ஆகிய எனது இரு அன்பு சகோதரர்களுடன் கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பயணம் மேற்கொண்டு, அது வழியாக அமைதிக்கான முயற்சிகளுக்கு உதவ நினைத்தேன் என்றுரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்விரு ஆப்ரிக்க நாடுகளின் மக்களை ஊக்கப்படுத்தியுள்ளார்.
எனதன்பு காங்கோ மற்றும் தென் சூடான் நண்பர்களே, இந்நேரத்தில் எனது அருகாமையைத் தெரிவிப்பதற்கு வார்த்தைகள் போதாது. நான் உங்கள் மீது வைத்திருக்கும் பாச உணர்வுகளை வெளிப்படுத்த விரும்புகிறேன். உங்களிடமிருந்து நம்பிக்கை திருடப்பட்டுவிட அனுமதிக்காதீர்கள். கடவுள், தம்மில் நம்பிக்கை வைத்திருப்பவர்களை ஒருபோதும் ஏமாற்றமாட்டார் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.
இளையோருக்கு புதிய அத்தியாயம்
இவ்விரு நாடுகளின் அரசியல்வாதிகளுக்கு இருக்கின்ற முக்கிய பணியை நினைவுபடுத்தியுள்ள திருத்தந்தை, ஒப்புரவு, மன்னிப்பு, அமைதியான நல்லிணக்கம், வளர்ச்சி ஆகியவற்றின் புதிய பாதைகளைத் திறக்கின்ற அத்தியாயம் பக்கம் உங்கள் எண்ணங்களைத் திருப்புங்கள் என்று கேட்டுகிகொண்டார்.
இதுவே வருங்காலப் பணி என்றும், இளையோரை புதிய வாய்ப்புக்களின் ஒளியால் நிரப்புங்கள் என்றும் அரசியல்வாதிகளிடம் கூறியுள்ள திருத்தந்தை, இளையோர் கனவு காணவேண்டும், அது மெய்ப்படுவதையும், அமைதியின் நாள்களையும் பார்ப்பதற்கு, அவர்கள் தகுதியுள்ளவர்கள் என்றும், அவர்களுக்காக நாம் ஆயுதங்களைக் கைவிடவேண்டும், உடன்பிறந்த உணர்வின் புதிய பக்கங்களை எழுதவேண்டும் என்றும் உரைத்துள்ளார்.
அமைதிக்காக கடவுளின் திட்டம்
இந்நாடுகளின் மக்கள் விண்ணை நோக்கிச் சிந்தும் கண்ணீர் வீணாய்ப் போகாது. ஏனெனில் கடவுள் அவர்களுக்காக அமைதிக்கான திட்டம் வைத்திருக்கிறார். உங்கள் மீதுள்ள பாசம் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது, கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக என, திருத்தந்தை பிரான்சிஸ் தன் காணொளிச் செய்தியை முடித்துள்ளார்.
Comment