Hon.Justice Kurien Joseph receives Nam Vazhvu
இந்திய கத்தோலிக்க பத்திரிகையாளர் சங்கத்தில் நம் வாழ்வு வார இதழ்
- Author Fr.Gnani Raj Lazar --
- Friday, 03 Apr, 2020
ந்திய கத்தோலிக்க பத்திரிகையாளர் சங்கத்தின் 25வது தேசிய கருத்தரங்கமும் ஆண்டுப் பொதுக்கூட்டமும் புதுதில்லியில் உள்ள சலேசிய மாநிலத் தலைமையகம் அமைந்துள்ள ஓக்லாவில் பிப்ரவரி மாதம் 29 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழகத்திலிருந்து கிறிஸ்தவர்களின் ஒரே வார இதழான நம் வாழ்வு சார்பாக இதன் ஆசிரியர் குடந்தை ஞானி அவர்கள் தமிழ்நாட்டிலிருந்து ஒரே பிரதிநிதியாக பங்கேற்று பெருமை சேர்த்தார். நம் வாழ்வு வார இதழும் கல்விச் சுரங்கம் என்னும் மாத இதழும் இம்மாநாட்டின் விளம்பரதாரர்களாக விளங்கி இம்மாநாடு சிறக்க துணை நின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இன்றைய பத்திரிகைத்துறையின் சவால்களைப் பற்றி டெல்லியில் உள்ள பல்வேறு துறை நிபுணர்களும் பத்திரிகையாளர்களும் கருத்துரை வழங்கி சிறப்பித்தனர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் H.L.துவா, மூத்த பத்திரிகையாளர் சி.கே.ராஜலட்சுமி, த வயர் பத்திரிகையின் நிறுவனத்தலைவர் திரு. வேணு, என்.டி.டிவியின் ரோகித் வெலிங்டன், அருள்பணி.செட்ரிக் பிரகாஷ் சே.ச ’சிக்னிஸ்’ தேசியத் தலைவர் குச. ஸ்டான்லி கோழிச்சிரா உள்ளிட்டவர்கள் பங்கேற்று கருத்துரை வழங்கினர்.
முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு குரியன் ஜோசப் தலைமை விருந்தினராகப் பங்கேற்று குவஹாத்தி முன்னாள் பேராயர் தாமஸ் மேனம்பரம்பில் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்தார். டெல்லி பேராயர் அனில் கூட்டோ அவர்களும் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார். இந்திய ஆயர் பேரவையின் பிரதிநிதியாக ஆயர் சல்வதோர் லோபா அவர்கள் உடனிருந்து எம்மை ஊக்கப்படுத்தினார். இந்திய கத்தோலிக்க பத்திகையாளர் சங்கத்தின் தலைவர் திரு.இக்னேஷியஸ் கொன்சால்வஸ், துணைத் தலைவர் அருள்பணி.சுனில் தாமோர், செயலர் அருள்பணி.சுரேஷ், பொருளாளர் அருள்திரு.ஜோபி மாத்யு ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்து இம்மாநாட்டிற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். டெல்லியைச் சுற்றி வாழும் 25 மூத்த சிறந்த பத்திரிகையாளர்கள் கௌரவ விருது பெற்று பெருமைப் படுத்தப்பட்டனர். மாண்புமிகு நீதிபதி குரியன் ஜோசப் அவர்களிடம் நம் வாழ்வுப் பற்றி எடுத்துரைக்கப்பட்ட போது, அதன் மாநிலம் தழுவிய பத்திரிகைப் பணியை அவர் பாராட்டி மகிழ்ந்து இன்னும் திருஅவை பயனுற பங்களிக்க ஊக்கப்படுத்தினார். (பார்க்க முன் அட்டைப்படம்)
Comment