No icon

Easter Sermin

பாஸ்கா திருவிழிப்பு - திருத்தந்தையின் மறையுரை

ஏப்ரல் 11, புனித சனிக்கிழமை உரோம் நேரம் இரவு 9 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு பெருங்கோவிலில், மக்களின் பங்கேற்பு இல்லாத பாஸ்கா திருவிழிப்பு திருவழிபாட்டை முன்னின்று நடத்தினார்.

அவ்வேளையில், திருத்தந்தை வழங்கிய மறையுரையின் தமிழாக்கம் இதோ:

புனிதச் சனிக்கிழமையின் பெரும் நிசப்தம்

"ஓய்வுநாளுக்குப்பின்" (மத். 28:1), பெண்கள் கல்லறையைப் பார்க்கச் சென்றார்கள். இந்த புனிதமான திருவிழிப்பு வழிபாட்டின் நற்செய்தி இவ்வாறு ஆரம்பமாகிறது: ஒய்வுநாளுடன் ஆரம்பமாகிறது. பொதுவாக, உயிர்ப்புப் பெருவிழாவுக்கு முந்தைய முப்பெரும் நாள் கொண்டாட்டங்களில், இந்த ஓய்வு நாளை ஒதுக்கிவிடுகிறோம். வெள்ளிக்கிழமை சிலுவை முடிந்ததும், உயிர்ப்பு ஞாயிறின் அல்லேலூயாவுக்காக நாம் ஆவலோடு காத்திருக்கிறோம். இந்த ஆண்டிலோ, புனிதச் சனிக்கிழமையின் பெரும் நிசப்தத்தை நாம் அதிகம் உணர்கிறோம். அன்றைய பெண்களின் நிலையில் நம்மையே நாம் பொருத்திப்பார்க்க முடிகிறது. அப்பெண்களின் கண்முன்னே, பெரும் துயரம், திடீரென நிகழ்ந்தது. அவர்கள் கண்ட மரணம், அவர்கள் உள்ளங்களில் பாரமாக அழுத்தியது. அவர்களும், அவர்களின் போதகர் அடைந்த துயர முடிவை அடைவார்களோ? என்ற வேதனையும், அச்சமும் அவர்களிடம் கலந்திருந்தன. சிதைந்துபோனதை மீண்டும் கட்டியெழுப்ப முடியுமா என்று, எதிர்காலத்தைக் குறித்த அச்சமும் இருந்தது. வேதனை நிறைந்த நினைவு, வெட்டப்பட்ட நம்பிக்கை. அவர்களுக்கும், இன்று நமக்கும், இருள் சூழ்ந்த நேரம்.

பெண்களின் இறைவேண்டல் உதவியது

இந்நிலையில், அப்பெண்கள், செயலற்ற நிலைக்கு தங்களை உட்படுத்திக்கொள்ளவில்லை. துன்பத்திற்கும், பரிதாபத்திற்கும் இடம்கொடுத்து, அவர்கள் தங்களைத் தாங்களே மூடிவைத்துக் கொள்ளவும் இல்லை, எதார்த்தத்தை விட்டு தப்பியோடவும் இல்லை. அவர்கள் (அந்த ஒய்வு நாளில்,) மிக எளிதான, அதே நேரம், மிகச் சிறந்த ஒரு செயலைச் செய்தனர். இயேசுவின் உடல் மீது பூசுவதற்கு, நறுமணப் பொருள்களை அவர்கள் தயார் செய்தனர். அன்புகூர்வதை அவர்கள் நிறுத்தவில்லை; அவர்கள் உள்ளத்தின் இருளில், பரிவின் விளக்கை ஏற்றி வைத்தனர்.

நமது அன்னை மரியா, அவருக்கென அர்ப்பணிக்கப்பட்ட புனித சனிக்கிழமையன்று, இறைவேண்டலிலும், நம்பிக்கையிலும் செலவிட்டார். துன்பத்திற்கு, இறைவன் மீது கொண்ட நம்பிக்கையை பதிலாகத் தந்தார். அந்த ஓய்வுநாள், வரலாற்றை மாற்றியமைக்கும் ஒரு நாளாக விளங்கும் என்பதை, அப்பெண்கள் அறிந்திருக்கவில்லை. பூமியில் புதைக்கப்பட்ட ஒரு விதை முளைத்தெழுவதுபோல், இயேசு, புதிய வாழ்வை மலரச்செய்தார். அந்த மலர் மலர்வதற்கு, பெண்களின் இறைவேண்டல் உதவியது. இப்பெண்களைப்போல், எத்தனை பேர், இந்நாள்களில், தங்கள் கனிவாலும், இறைவேண்டுதலாலும் நம்பிக்கையை விதைத்து வருகின்றனர்!

கல்லறைக்கு முன், வாழ்வின் சொற்கள்

விடியற்காலையில், இப்பெண்கள் கல்லறையைப் பார்க்கச் சென்றனர். அங்கு, வானதூதர் அவர்களிடம், "நீங்கள் அஞ்சாதீர்கள்அவர் இங்கே இல்லை; அவர் கூறியபடியே உயிருடன் எழுப்பப்பட்டார்" (மத். 28:5-6) என்று கூறினார். ஒரு கல்லறைக்கு முன் நின்றவண்ணம், அவர்கள், வாழ்வின் சொற்களைக் கேட்கின்றனர். அதன்பின், அவர்கள், அனைத்து நம்பிக்கையின் ஊற்றான இயேசுவைச் சந்திக்கின்றனர். அவரும் அவர்களிடம், "அஞ்சாதீர்கள்!" (10) என்று கூறினார். அச்சத்திற்கு இடம் தராதீர்கள். இதுவே நம்பிக்கையின் செய்தி. இச்செய்தி இன்று நமக்குச் சொல்லப்படுகிறது. இந்த இரவில், கடவுள் இச்செய்தியை நமக்குச் சொல்கிறார்.

நம்பிக்கை கொள்ளும் உரிமை

நம்மிடமிருந்து யாராலும் பறித்துக்கொள்ள இயலாத ஓர் அடிப்படை உரிமையை இன்றிரவு நாம் பெறுகிறோம். நம்பிக்கை கொள்ளும் உரிமை. இறைவனிடமிருந்து வரும் புதிய, வாழும் நம்பிக்கை இது. இது, நம்மை உற்சாகப்படுத்துவதற்காக, தோள்மீது தட்டிக்கொடுத்து சொல்லப்படும் வேற்று வார்த்தை அல்ல. வானிலிருந்து இறங்கிவரும் கொடை இது. கடந்த சில வாரங்களாக, "அனைத்தும் நன்றாக அமையும்" என்ற சொற்களை நாம் அடிக்கடி சொல்லிவருகிறோம். எனினும், நாள்கள் செல்ல, செல்ல, மிக உறுதியாக இருப்பவர்களும் தடுமாற வாய்ப்புள்ளது. இயேசுவின் நம்பிக்கை வேறுபட்டது. அனைத்தையும் இறைவன் நன்மையாக மாற்றக்கூடியவர், ஏனெனில், கல்லறையிலிருந்தும் வாழ்வைக் கொண்டுவர அவரால் மட்டுமே இயலும். அந்த நம்பிக்கையை, இயேசு, நம் உள்ளங்களில் விதைக்கிறார்.

மரணமும், இருளும் இறுதியானவை அல்ல

கல்லறைக்குள் சென்ற எவரும் திரும்பி வந்ததில்லை, ஆனால், இயேசு, கல்லறையிலிருந்து வெளியேறினார், மரணம் இருந்த இடத்திற்கு வாழ்வைக் கொணர்ந்தார். தன் கல்லறையை மூடியிருந்த கல்லை அகற்றிய இயேசு, நம் உள்ளங்களில் உள்ள கற்களை அகற்ற முடியும். எனவே, நாம் நம்பிக்கையை, விரக்தி என்ற கல்லால் மூடிவைக்கவேண்டாம். அவரது ஒளி, கல்லறையின் இருளை அகற்றியது: இன்று, அவர், தன் ஒளியால், நம் வாழ்வின் மிக அடர்த்தியான இருளை அகற்ற விழைகிறார். அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, இன்று நீங்கள் நம்பிக்கையைப் புதைத்து விட்டிருந்தாலும், மனம் தளரவேண்டாம்: இறைவன் மிகப்பெரியவர். மரணமும், இருளும் இறுதியானவை அல்ல. இறைவன் இருக்கையில், எதுவும் தொலைந்துபோவதில்லை!

துணிவை பரிசாகப் பெற்றுக்கொள்ள...

துணிவு கொள்ளுங்கள். நற்செய்திகளில் இயேசு இதை அடிக்கடி கூறியுள்ளார். நற்செய்தியில், ஒரே ஒருமுறை மட்டுமே, தேவையில் இருக்கும் ஒருவரிடம் மற்றவர்கள் இதைக் கூறியுள்ளனர்: "துணிவுடன் எழுந்து வாரும், இயேசு உம்மைக் கூப்பிடுகிறார்" (மாற்கு 10:49) தேவையில் இருக்கும் நம்மை உயர்த்த, உயிர்த்த இறைவன் இருக்கிறார். நமது பயணத்தில் வலுவிழந்து வீழும்போது, ’துணிவு கொள்ளுங்கள்என்று கூறி, இயேசு நம்மைத் தூக்கிவிடுகிறார். நெடுங்கதை ஒன்றில் வரும் தோன் அப்போந்தியோ (Don Abbondio) என்ற கதாப்பாத்திரம் சொல்வதுபோல், "துணிவு என்பது, நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் விடயம் அல்ல" என்று நாமும் சொல்லக்கூடும். உண்மைதான், இதை நாம் நமக்கு நாமே கொடுத்துக்கொள்ள இயலாது, ஆனால், ஒரு பரிசாக நாம் பெற்றுக்கொள்ள முடியும். நாம் செய்யவேண்டியதெல்லாம் இதுதான் - இறைவேண்டலில், நம் உள்ளங்களை மூடியிருக்கும் கல்லை, சிறிதளவு திறந்துவைத்தால், அங்கு இயேசுவின் ஒளி நுழையமுடியும். "இயேசுவே, என் அச்சங்களின் நடுவே என்னிடம் வந்துதுணிவு கொள்என்று சொல்லும்!" என்று அவரிடம் சொல்வோம். உம்மோடு இருந்தால் ஆண்டவரே, நாங்கள் சோதிக்கப்படலாம், ஆனால், அசைவுறமாட்டோம். உம்மோடு இருந்தால், சிலுவை, உயிர்ப்புக்கு இட்டுச்செல்லும்.

கலிலேயாவுக்குப் போகிறார்

இதுவே, உயிர்ப்புப்பெருவிழாவின் செய்தி, நம்பிக்கையின் செய்தி. இதன் இரண்டாம் பகுதி, அனுப்பப்படுதலை உள்ளடக்கியது. "என் சகோதரர்களிடம் சென்று அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள்" (மத். 28:10) என்று இயேசு கூறுகிறார். "உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார்" என்று வானதூதர் கூறுகிறார். வாழ்விலும், சாவிலும், இயேசு நமக்கு முன் போகிறார். அவர் ஒவ்வொரு நாளும் வாழ்ந்த கலிலேயாவுக்கு நமக்கு முன் போகிறார். நம் ஒவ்வொரு நாள் வாழ்வில் நம்பிக்கையைக் கொணர்வதற்கு அவர் அங்கு செல்கிறார்.

மரணத்தின் நேரத்தில் வாழ்வின் தூதர்களாக...

இங்கு கூடுதலான ஒரு விடயம் உள்ளது. எருசலேமிலிருந்து, கலிலேயா மிகத் தூரத்தில் இருந்தது. புவியியல் அமைப்பினால் மட்டும் அல்ல, புனித நகரை விட்டு கலிலேயா தூரத்தில் இருந்தது. அங்குதான் அனைத்து மதத்தினரும் வாழ்ந்துவந்தனர். "பிற இனத்தவர் வாழும் கலிலேயப் பகுதி"யாக (மத். 4:15) இருந்தது. அந்தப் பகுதிக்கு தன் சீடர்களை அனுப்பி, அங்கிருந்து மீண்டும் ஒருமுறை துவங்கும்படி இயேசு கூறுகிறார். இது நமக்கு என்ன சொல்கிறது? நமது நம்பிக்கையின் செய்தி, புனித இடங்களில் மட்டும் அடைபட்டிராமல், அனைவருக்கும் கொண்டு செல்லப்படவேண்டும். இன்று அனைவருக்கும் நம்பிக்கை தரும் செய்தி தேவை. நம் கரங்களால் தொட்டுணர்ந்த "வாழ்வு அளிக்கும் வாக்கை" (1 யோவான் 1:1) நாம் வழங்கவில்லையெனில், வேறு யார் வழங்கமுடியும்? ஆறுதல் வழங்கி, அடுத்தவர் சுமையைத் தாங்கி உற்சாகம் அளித்து, மரணத்தின் நேரத்தில் வாழ்வின் தூதர்களாக இருக்கும் கிறிஸ்தவர்களாக வாழ்வது எத்துணை அழகு! ஒவ்வொரு கலிலேயாவிலும், மனித குடும்பம் பரவியிருக்கும் ஒவ்வொரு பகுதியிலும், நாம், வாழ்வின் பாடலைக் கொணர்வோமாக! மரணத்தின் ஓலத்தை நாம் மௌனமாக்குவோமாக, இனி போர்கள் வேண்டாம்! போர்க்கருவிகளின் உற்பத்தியையும், வர்த்தகத்தையும் நிறுத்துவோமாக, நமக்குத் தேவை அப்பம், துப்பாக்கிகள் அல்ல. மாசற்ற உயிர்களைக் கொல்லும் கருக்கலைத்தல் முடிவுக்கு வரட்டும். போதுமான அளவு கொண்டவர்களின் உள்ளங்கள், அடிப்படை தேவைகளின்றி நீண்டிருக்கும் வெற்றுக்கரங்களை நிரப்புவதற்க்காக திறக்கட்டும்.

இயேசுவின் காலடிகளைப் பற்றிக்கொண்டு...

அப்பெண்கள், இயேசுவின் "காலடிகளைப பற்றிக்கொண்டனர்" (மத். 28:9). மரணத்தை தன் காலடிகளில் மிதித்து, நம்பிக்கையின் வழியைத் திறந்துவைத்த அந்தக் காலடிகளை, அப்பெண்கள் பற்றிக்கொண்டனர். இன்று, நம்பிக்கையைத் தேடும் திருப்பயணிகளாக, உயிர்த்த இயேசுவே, உம்மை நாங்கள் பற்றிக்கொள்கிறோம். மரணத்தைப் புறந்தள்ளி, எங்கள் இதயங்களை உம்மை நோக்கித் திருப்புகிறோம், ஏனெனில், நீரே வாழ்வாக விளங்குகிறீர்.

Comment