# Basic Salary
அனைவருக்கும் அடிப்படை ஊதியம் அவசியம் - திருத்தந்தை பிரான்சிஸ் கடிதம்
- Author --
- Tuesday, 14 Apr, 2020
கோவிட-19 தொற்று நோய்க்கெதிரான போரில், கண்ணுக்குத் தெரியாத போர் வீரர்களாக பணியாற்றிக் கொண்டிருக்கும் மக்கள் இயக்கத்தினருக்கு தன் ஊக்கத்தை வெளியிட்டு கடிதம் ஒன்றை திருத்தந்தை பிரான்சிஸ் அனுப்பியிருக்கிறார்.
இந்த கொள்ளை நோய்க் காலத்தில் ஒருமைப்பாடு, நம்பிக்கை, மற்றும் சமூக உணர்வுடன் மக்களிடையே பணியாற்றிவரும் தனியார்கள், மக்கள் சேவை மையப் பணியாளர்கள் என, சமூக குழுக்களை நினைவுகூரும் அதேவேளை, சிறு தொழில் புரிவோர், வியாபாரிகள், பொருட்களை மறுசுழற்சி செய்வோர், சிறு விவசாயிகள் என நிரந்தர ஊதியம் இன்றி செயல்படுவோருக்காக குரல் எழுப்புவதாகவும், தன் செய்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.
உலகின் மக்கள் இயக்கத்தினருக்கென எழுதப்பட்டுள்ள இக்கடிதத்தில், உலக மயமாக்கலும், நாடுகளின் பொருளாதார வளர்ச்சியும், இவ்வாறு அடிமட்டத்தில் நிரந்தர வருமானமின்றி வாழும் மக்களுக்கு, எதிர்பார்த்த அளவு உதவவில்லை எனவும், உலக அளவில் இத்தகைய நிரந்தர வருமானமில்லாத மக்களுக்கென ஒரு குறிப்பிட்ட நிரந்தர ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
சந்தை பொருளாதாரத்தின் தீர்வுகள் தங்களை வந்தடையாத நிலையிலும், அரசுகளின் பாதுகாப்பு கிட்டாத நிலையிலும் வாழும் கடைநிலை மக்கள், தங்களுக்கென எதையும் கொண்டிராத நிலையில், அவர்கள் வாழ்வதற்குரிய வழி நிலையை உருவாக்கிக்கொடுக்க வேண்டியது உலக சமுதாயத்தின் கடமையாகிறது எனவும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.
இந்த கொள்ளை நோய் காலத்தில் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்க வேண்டிய சூழலில், வீடற்றோர், அகதிகள், போதைப்பொருட்களுக்கு அடிமையானோர் ஆகியோரிடையே பணியாற்றும் சேவையாளர்கள் குறித்து பெருமிதம் கொள்வதாக தன் கடிதத்தில் உரைக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் ஓர் அடிப்படை ஊதியம் வழங்கப்பட வேண்டும் என, உலக அளவில் நிர்ணயிப்பது, மனிதாபிமானமுடைய, கிறிஸ்தவ அணுகுமுறையாக இருக்கும், மற்றும், அனைத்துத் தொழிலாளர்களின் உரிமைகளை மதிப்பதாகவும் இருக்கும் எனவும் அதில் விண்ணப்பித்துள்ளார்.
Comment