Reading Books
ஆன்மீகத்தில் வளருங்கள், நூல்களை வாசியுங்கள் -கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ்
கோவிட்-19 பரவல் நெருக்கடி காலத்தின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளவேளை, இந்த சமுதாய ஊரடங்கு காலம், மேலும் நீட்டிக்கப்படும் நிலைக்குத் தயாராக இருங்கள் என்று, மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்கள், அருள்பணியாளர்களிடம் கூறியுள்ளார்.
யூடியூப் காணொளி வழியாக தனது உயர்மறைமாவட்ட அருள்பணியாளர்களிடம் பேசியுள்ள கர்தினால் கிரேசியஸ் அவர்கள், இந்தக் காலத்தின் விதிமுறைகள் தளர்த்தப்பட்டாலும்கூட, ஆலயங்கள் மூடப்பட்டிருக்கும் காலம் நீட்டிக்கப்படும் என்றும், அதற்கு அருள்பணியாளர்கள் தயாராக இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மதம் சார்ந்த கூட்டங்கள் இடம்பெறுவதற்குரிய அனுமதி கிடைப்பதற்கு மேலும் காலஅளவு நீட்டிக்கப்படும் என்று தான் எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ள கர்தினால் கிரேசியஸ் அவர்கள், இந்தக் காலத்தில் நூல்களை அதிகம் வாசியுங்கள், ஆழமான ஆன்மீகத்திலும், அறிவிலும் வளருங்கள், உடல்நலத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள் என்று அருள்பணியாளர்களிடம் கூறியுள்ளார்.
மியான்மார் திருவழிபாடு
மேலும், கோவிட்-19 சார்ந்த விதிமுறைகளால், மியான்மார் நாட்டில், இம்மாதம் 15ம் தேதி வரை, அன்றாடத் திருப்பலிகள், ஞாயிறு திருப்பலிகள், மற்றும், ஏனைய திருவழிபாடுகள் ஆலயங்களில் நடைபெறாது என்றும், விசுவாசிகள் இணையதளம் வழியாக திருப்பலி காணுமாறும், இந்த சமுதாய விலகல் காலத்தில், திருவிவிலியத்தை அதிகம் வாசிக்குமாறும் அந்நாட்டுத் திருஅவைத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Comment