No icon

தமிழக ஆயர் பேரவை.

இரமலான் திருநாள் வாழ்த்துகள்

இறைநம்பிக்கை கொண்டோர்களே, உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு கடமை ஆக்கப்பட்டது போல உங்கள்மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம் (திருக்குரான் 2: 183)

அன்புள்ள இசுலாமிய சகோதர சகோதரிகளே!
தமிழக  கத்தோலிக்க ஆயர் பேரவையின் சார்பில் இரமலான் பண்டிகை நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்த ஆண்டு இரமலான் திருநாள் என்பது வரலாற்றிலேயே மறக்க முடியாத ஒரு நாளாக உள்ளது. கொரோனா நோய்த்தொற்று பரவலாலும் அரசின் ஊரடங்கு உத்தரவினாலும் இல்லங்களிலிருந்தே ஒவ்வொரு நாளும் நீங்கள் நோன்பிருந்து தொழுகையை மேற்கொண்டது உங்களது இறைநம்பிக்கையின் வெளிப்பாடு ஆகும். இசுலாமிய நம்பிக்கையின்படி இறைத்தூதர் முகம்மது நபிகள் அவர்களுக்கு முதன்முதலில் திருக்குரானை வெளிப்படுத்திய மாதத்தை நினைவுக்கூரும் விதமாக 30 நாள்கள் நோன்பிருந்து கொண்டாடி மகிழும் திருநாளே இரமலான் பண்டிகை ஆகும்.


இந்த நோன்பு காலத்தில் நீங்கள் அனுபவித்த நற்பண்புகள் தொடரப்பட வேண்டும் என்பதுதானே எமது ஆவல். குறிப்பாக உலகமே பயந்திருந்த சூழலில் துணிச்சலோடு இந்த நோன்பினால் விளைந்த நற்பண்புகளான தன்னடக்கம், வெகுளாமை (பொறாமை), நாவடக்கம், உணவுக்கட்டுப்பாடு, சமூக நலம் பேணுதல் போன்றவற்றை வெளிப்படுத்தியது பாராட்டுக்குரியது.  சிறப்பாக சமூக நலம் பேணும் நோக்கோடு ஏழைகளுக்கும் சாலையோரத்தில் வசித்துக் கொண்டிருக்கும் வறியவர்களுக்கும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும் ஒவ்வொரு நாளும் தாங்கள் தன்னெழுச்சியாக செய்த இரக்கச் செயல்பாடுகள் உங்களின் மென்மையான நோன்பினை வெளிப்படுத்துகிறது.  கொரோனா நோய்த்தொற்று காலத்தில் எழுந்த எதிர்மறை விமர்சனங்களையெல்லாம் பொறுமையோடும் தன்னடக்கத்தோடும் தாங்கள் கையாண்ட விதம் இச்சமூகத்திற்கு சிறந்த ஓர் முன்னுதாரணம்.
இந்த இரமலான் பண்டிகை உங்கள் அனைவருக்கும் நிறைவான இறையாசீரை இறைத்தூதர் முகம்மது நபிகள் வழியாக அருள்வதாக. இந்நாளில் உங்களுக்காக இறைவேண்டல் செய்து வாழ்த்தி மகிழ்கிறேன்.


இப்படிக்கு 
மேதகு பேராயர் அந்தோனி பாப்புசாமி
தலைவர், தமிழக ஆயர் பேரவை.
பேராயர். மதுரை உயர் மறைமாவட்டம்.
24.05.2020
 

Comment