No icon

கண்டங்களுக்கு இடையே புலம்பெயரும் அருள்பணியாளர்கள்

ஆப்ரிக்கா மற்றும் ஆசியாவிலிருந்து, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஓசியானியாவுக்கு மறைப்பணியாற்றுவதற்குச் செல்லும் அருள்பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து
வருகின்றது என்று, திருஅவையின் புள்ளிவிவர அலுவலகம் அறிவித்துள்ளது.
1978 ஆம் ஆண்டு முதல், 2017 ஆம் ஆண்டு வரை, கண்டங்களுக்கு இடையே புலம்பெயர்ந்த அருள்பணியாளர்கள் குறித்த ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ள அந்த அலுவலகம், ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஓசியானியாவிலிருந்து புலம்பெயரும் அருள்பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்து, ஆப்ரிக்கா மற்றும் ஆசியாவிலிருந்து புலம்பெயரும் அருள்பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது என்று தெரிவித்துள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் புலம்பெயரும் அருள்பணியாளர்களின் எண்ணிக்கை, ஐரோப்பாவில் 56.9 விழுக்காடும், அமெரிக்காவில் 55.8 விழுக்காடும், ஓசியானியாவில் 55.3 விழுக்காடும் குறைந்துள்ளவேளை, ஆப்ரிக்காவில் 366.2 விழுக்காடும், ஆசியாவில் 99 விழுக்காடும் அதிகரித்துள்ளது என்று, அந்த அலுவலகம் கூறியுள்ளது.
துறவு சபைகளைச் சார்ந்த அருள்பணியாளர்கள் குறித்த விவரங்கள் சரிவரத் தெரியாததால், மறைமாவட்ட அருள்பணியாளர்கள் பற்றிய விவரங்களையே வெளியிட்டுள்ள தாகவும், திருஅவையின் புள்ளிவிவர அலுவலகம் தெரிவித்துள்ளது. புலம்பெயரும் மறைமாவட்ட அருள்பணியாளர்களில், பாதிப்பேரை ஐரோப்பா கண்டமும், 36 விழுக்காட்டினரை அமெரிக்கக் கண்டமும் வரவேற்கின்றன எனவும் சொல்லப்பட்டுள்ளது. ஆப்ரிக்கா மற்றும் ஆசியாவிலிருந்து புலம்பெயர்ந்து, அமெரிக்கா மற்றும், ஐரோப்பாவிலுள்ள மறைமாவட்டங்களுடன் இணைவதால், அமெரிக்கா மற்றும், ஐரோப்பாவில் அருள்பணியாளர்கள் பற்றாக்குறை அகற்றப்படுகின்றது.

Comment