No icon

பொதுக்காலம் 23ஆம் ஞாயிறு

மறையுரை: 05.09.2021

பொதுக்காலம் 23ஆம் ஞாயிறு

(எசா 35:4-7, யாக் 2:1-5, மாற் 7:31-37)

அருள்முனைவர் ஆ. ஆரோக்கியராஜ், OFM, CAP.

இயேசு - நடமாடும் கடவுள்அனைவரையும் முழுமையாக்கும் இயேசு

இயேசுவின் சொல்லும் செயலும் செயல்வடிவங்களும் அவரை மாபெரும் கடவுளாக உயர்த்திக் காட்டின. அவர் தம் கண்ணில் கண்ட அனைவரையும் முழுமையாக்கத் துடித்தார். சமுதாயம் எவ்வளவு இழிவாகக் கருதினாலும் அவர்களின் ஒவ்வொரு உணர்வுகளையும் மதித்தார். மாறுபட்ட உடல்நிலையோடு அல்லது மனநிலையோடு வாழ்பவர்களும் கடவுளின் கண்ணின் மணிகளே. இயேசு நிகழ்த்திய பல குணப்படுத்துதல்களின் சில உதாரணங்களே நற்செய்திகளில் இடம்பெறுகின்றன. இன்றைய நற்செய்தியில் காணக்கிடக்கும் குணப்படுத்துதலில் இருக்கும் சில அம்சங்கள் மிகச்சிறப்பு வாய்ந்தவை.

1. இந்தக் குணப்படுத்துதல் பத்து நகரங்கள் என்று பொருள் கொண்ட தெக்காபோலிஸ் என்ற இடத்தில்; நடக்கின்றது. அது பிற இனத்தார் வாழ்ந்த பூமி (உருவகமாக இயேசு பிற இனத்தார் வாழ்ந்த அத்தனை இடங்களுக்கும் சென்றார் என்று பத்து நகரங்களைப் பொருள் கொள்ளலாம்). யூதர்கள் பிற இனத்தாரை இரண்டாம்தரக் குடிமக்களாகக் கருதினர். அவர்கள் மூச்சுவிடும் காற்று தங்கள் மீது பட்டால் தாங்கள் தீட்டுப்பட்டுவிடுவோம் என்ற நினைப்பில் அவர்கள் வாழ்ந்த பூமி வழியாகப் பயணிக்கமாட்டார். அங்கு செல்லும் பயணம் நீண்டதாக இருந்தாலும், தம் இனத்தாருக்கு அது பிடிக்காது என்று தெரிந்தும் இயேசு அவர்களைச் சந்திக்கின்றார். அங்கும் பல புதுமைகளை நிகழ்த்துகின்றார். மாற்கு நற்செய்தியில் மட்டும் 40 முறைக்கும் மேல் இயேசு பிற இனத்தார் பூமி வழியாகப் பயணித்தார் என்று வாசிக்கின்றோம். மனிதர்கள் உருவாக்கிக்கொள்ளும் சாதி இன பேதங்கள் கடவுளின் சொல் அகராதியில் காணப்படுவதில்லை. கடவுளின் அன்பு அலைகளுக்கு மனித எல்லைக்கோடுகள் கட்டுப்பாடு விதிப்பதில்லை. விண்ணக விதிப்பட்டியலில் அனைவரும் ஒரு தாய்ப் பிள்ளைகளே. நீ வேறு நான் வேறு என்பவை மனிதர்களின் மலட்டுச் சிந்தனைகள். எந்த இனமும் தாம் கொணர்ந்த மீட்பின் நிறைவை அடைந்துவிடாமல் போகக்கூடாது என்பதே இயேசுவின் நோக்கம். நாகரிமோ, வளர்ச்சியோ நுழையாத, வாழ்வுத் தென்றலே வீசாத கடையெல்லைகளில் வாழ்வோரும், கடவுளின் மக்களே சிலருக்குக் கடவுள் தந்த சிறப்புக் கொடைகள். அவை தேவைப்படும் அனைவரையும் சென்றடைய வேண்டும். அடிப்படை வாழ்வுண்மைகளைத் தெரியாத மக்களுக்குப் பணியாற்றுவதே வளர்ச்சியின் உச்சத்தை அடைந்தவர்களின் கடமையாகும். இதையே திருத்தந்தை பிரான்சிஸ் - எல்லையோரங்களில் வாழும் யாராலும் கண்டுகொள்ளாத மக்களைத் தேடிச் செல்லுங்கள் என்று திருப்பணியாளர்களுக்கு அறிவுரையாகத் தருகின்றார். அதையே அவரும் பின்பற்றுகின்றார்.

2. நற்செய்தியில் இயேசு அந்த செவிட்டு ஊமையனைத் தனியாக அழைத்துச்செல்கின்றார். இதன் மூலம் அவனிடம் - நீ எனக்கு முக்கியம். நீ தனிருப்பானவன், நீ கூட்டத்தில் ஒருவனல்ல, தன்னகத்தே முழுமையானவன், உன் உணர்வுகள் எனக்குத் தெரியும், நீயும்; கடவுளின் கண்மணி, என்னால் உருவாக்கம் பெற்றவன் என்று சிறப்பிடம் தருகின்றார். கடவுளுக்கு ஒவ்வொரு நபரும் முக்கியமானவர்கள். யாரும் எந்த வகையிலும் துன்புறக்கூடாது, அவர்களைப் படைத்த நோக்கத்தில் முழுமை எய்தி வாழ வேண்டும் என்று கடவுள் விரும்புகின்றார். கடவுள் தனிப்பட்டவர்களின் துன்பத்தைத் தன் துன்பமாகவே கருதுகின்றார். எகிப்தில் தம் மக்கள் படும் துன்பத்தைக் கண்டு அவர்களைக் காப்பாற்ற விழைகின்றார் (விப 3:7). பாபிலோனில் வாடும் தம் மக்களுக்கு உடனடியாகவும் நிரந்தரமாகவும் ஆறுதல் கூற விழைகின்றார் (எசா 40:1). கூட்டத்தில் 1000 பேர் இருந்தாலும் பாவக்கறை படிந்த சக்கேயுவைத் தேடி அவர் கண்கள் செல்கின்றன. 99 ஆடுகளை வனாந்தரத்தில் விட்டுவிட்டு தவறிய ஒரு ஆட்டை மட்டும் தேடி அலைகின்றார். தனிப்பட்ட ஒவ்வொருவரும் அவருக்கு முக்கியம். மாசற்ற மக்கள் பணத்தை அனுதினமும் கொள்ளையடித்துப் பாவத்தின் பங்காளியாக வாழ்ந்த மத்தேயுவைத் தம் திருத்தூதராக்குகின்றார். தாம் கைது செய்யப்படும் வேளையில் கூட தனிப்பட்ட யாருக்கும் தீங்கிழைக்க விரும்பவில்லை. இயேசு நல்லவர்கள் நன்மைத்தனத்தில் வேரூன்ற ஆசிக்கின்றார். பாவிகளையும் பத்திரமாக மீட்கும் வழியைத் தெரிந்துள்ளார்.

3. அவரோடு பேசுவதற்கு இயேசு அடையாள மொழியைப் பயன்படுத்துகின்றார். ஆயிரம் வார்த்தைகள் கூறினாலும் அவனால் அவற்றைப் புரிந்துகொள்ள இயலாது. மானிடர் மொழியை அவன் இதுவரை கேட்டதில்லை. அவனின் பெற்றோர் செய்த பாவத்தால் அவன் இவ்வாறு பிறந்துள்ளான் என்று அந்த சமுதாயம் அவனைச் சொற்களால் வேட்டையாடியிருக்கும். ஊருக்குப் புறம்பே அவன் ஒதுக்கப்பட்டவனாக, இயற்கையாகவே உடன்பிறந்த மனித உணர்வுகள் அனைத்தையும் இழந்து, தம் காலத்தைத் தள்ளியிருப்பான். மனித இரக்கத்தை அவன் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, இயேசு அவனது நாவைத் தொடுகின்றார், காதுகளைத் தொடுகின்றார், கருணையோடு பார்க்கின்றார். இவ்வாறு அவன் புரிந்துகொள்ளும் மொழியைப் பேசி அவனைக் குணப்படுத்த முயல்கின்றார். கரங்களும் குணப்படுத்தும், பார்வைகளும் பரவசம் காட்டும். அன்பு நிறைந்த தொடுதல் வாழ்வில் நம்பிக்கையை விதைக்கின்றது. பேதுருவின் மாமியை இயேசு தொட்டுக் குணப்படுத்துகின்றார். அன்னைத் தெரேசாள் கொல்கொத்தா வீதிகளில் தம் விதியை நொந்து கிடப்போரைத் தொட்டுத் தூக்கும்போது தமக்கு மறுவாழ்வு கிடைத்துவிட்டது போன்ற நிறைவை அடைந்திருக்க வேண்டும். சாவின் நுழைவாயிலில் இருக்கும் நபர்களின் தலையைத் தொடுகின்றார். இதனால் யாரும் உடனே உயிர்பெற்று எழுந்துவிடவில்லை. ஆனால், தன்னையும் அன்பு செய்ய ஆள் இருக்கின்றனர் என்ற நம்பிக்கையோடு அவர்கள் இறந்தனர் என்பது உண்மை. தாய் தொட்டுத் தூக்கும் வேளைகளில் அழும் குழந்தைத் தம் அழுகையை நிறுத்திவிடுகின்றது. கரங்கள் பொருள்களை மட்டுமல்ல; அருள் செல்வத்தையும் அன்புச் செல்வத்தையும் அள்ளிக்கொடுக்கும் வல்லமை பெற்றதாகும். வார்த்தைகளே இல்லாத சைகைகளும் மற்றவர்களின் வாழ்வில் வளம் சேர்க்கும். நற்கருணை மூலம் இயேசு நம்மை ஒவ்வொரு நாளும் தொடுகின்றார். அந்தத் தொடுதல் நம்மை முழுமையானவர்களாக மாற்றட்டும்.

4. இயேசு வானத்தைப் பார்த்துச் செபிக்கின்றார். தம் வாழ்வின் முக்கிய முடிவுகளைச் செபித்த பின்னரே எடுக்கின்றார். நமது வாழ்வுப் போராட்டங்களின்போது யாரைப் பார்க்கின்றோம். நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள உடல் மற்றும் மனவலிமைக் கொண்டு சில வேதனைகளைத் தாங்கிக்கொள்ள முடியும். ஆனால் பெரும் கொடுமைகளைப் பொறுத்துக் கொண்டு வாழ்வில் முன்னேற்றம் அடையும் ஆற்றல் வானத்திலிருந்து மட்டுமே கிடைக்கும். மரத்தை வைத்த கடவுள் தண்ணீர் ஊற்றுவார். நம்மால் சுமக்க முடியாத சிலுவைகளைத் தூக்கிச் சுமக்கும் கடமை அவருக்குண்டு. நம்மை அழ வைத்து இரசிக்கும் கடவுள் அல்ல அவர். கொஞ்சம் கலங்கினாலே அள்ளி அரவணைத்துக் கொள்வார். கடவுளின் தலையீட்டால் பாலைவனம் சோலைவனமாகும். அதுபோல் பாலையாகிப்போன பலரின் வாழ்வு மகிழ்ச்சி சோலையாகும்.சாவின் நுழைவாயிலில் நின்ற பலர் கடவுளிடம் சரணடைந்தமையால் வாழ்வில் புது வாழ்வு பெற்றனர் (எசா 38). எல்லோரும் கைவிடும் நேரத்தில் கடவுளை இருகப் பற்றிக்கொள்வோம். நம்பியோரைக் கைவிடுவது அவரது கலையல்ல; நமது திறத்தைவிட வானம் வலிமை மிக்கது.

5. இயேசு பெரும் மூச்சுடன் கூடிய - திறக்கப்படு - என்ற ஒரே ஒரு வார்த்தை மட்டும் பேசுகின்றார். உள்ளத்தின் ஆழத்தை தொட்டு நிற்கும் பெருமூச்சு இதுவாகும். மக்களின் வேதனைகளோடு தன்னையும் ஐக்கியமாக்கிக் கொள்கின்றார் இயேசு. கடவுளின் படைப்பு வல்லமையை இதுவரை அவர் முழுமையாக அனுபவிக்காமல் இருந்துள்ளானே, முழுமையாகி நிறைமகிழ்ச்சியுடன் வாழ், நான் உன்னருகில் இருக்கும் வேளையில் எதுவும் உமக்குக் குறைவுபடாது என்ற பெருமூச்சு இதுவாகும்.

6. இயேசு கட்டளையிடுகின்றார். ஞானத்தோடு படைத்தவருக்கு படைப்புப் பொருள்கள் கீழ்ப்படிகின்றன. கடலைப்பார்த்து, கடலே இறையாதே, இலாசர் கல்லறை முன், இலாசரே வெளியே வா என்று கட்டளையிடுகின்றார். இப்போது திறக்கப்படு என்றவுடன் செவி திறந்துவிடுகின்றது. இயேசுவின் வார்த்தைகள் விண்ணக சக்தியின் விளைநிலம். படைப்புப் பொருள்கள் அனைத்தும் படைத்தவருக்குக் கீழ்ப்படியும். புனிதம் மிக்க வாழ்வு நடத்தியமையால் திருத்தூதர்கள் மற்றும் புனிதர்களின் வார்த்தைகளும் மக்களுக்கு வாழ்வு தந்தன. கடவுள் தமது கொடைகளை தமது விருப்பத்தின்படி வாழ்வு நடத்தும் புனித அந்தோனியார் போன்ற சில கடவுள்-மனிதர்களோடு பகிர்ந்து கொள்கின்றார். குற்றமற்ற உள்ளங்களில் கடவுள் குடிகொள்ள விழைகின்றார். அவர் வாழும் இல்லிடமாக நமது இதயத்தை மாற்றும் கடமை நமது கையில்தான் உள்ளது.

பாலையைச் சோலையாக்கும் கடவுள்

இன்றைய முதல் வாசகத்தில் பாலைவனத்தைக் கடவுள் சோலையாக்குவார் என்று கருத்து அழுத்தம் பெறுகின்றது. இந்த சிந்தனை இரண்டாம் எசாயா நூலில் (எசா 40-55) அடிக்கடி வருகின்றது. பாதியைப் பாலைவனமாகக் கொண்ட இஸ்ரயேல் நாட்டில் தண்ணீர் என்பது வாழ்வு மற்றும் மீட்பின் அடையாளமாகும். பாபிலோனில் இருந்து திரும்பி வரும் மக்களுக்கு எந்தக் குறையும் இருக்கக்கூடாது. புல் பூண்டுகள்கூட முளைக்காத வெப்ப நிலத்தில், நீர்த்தடாகம் தோன்றுவதே புதுமையாகும். பாலைவனம் நாணலும் கோரையும் வளரும் அளவு வளமை பெறுகின்றது. பூத்துக் குலுங்கும் லீலியும் மகிழ்ச்சிப் பாடலும் நாட்டை நிரப்புகின்றன. மக்களின் பாவம் கழுவப்பட்டு கடவுள் சாபம் முடிவுருவது (தொநூ 3:17, உரோ 8:22) பாலைவனம் சோலைவனமாகும் என்ற உருவகத்தின் மூலம் விளக்கப்படுகின்றது என்றும் பொருள் கொள்ளலாம். மனிதனின் சுயநலம் வாழும் பூமியை வாழ்வின் ஓசைகேட்காத சுடுகாடாக மாற்றலாம். ஆனால், கடவுள் மீண்டும் அதை வளமையான பூமியாக்கி மக்களுக்கு புதுவாழ்வு தருவார் (எசா 35:2,4). மனித பாவத்தால் இழந்த வளமையை நிலம் மீண்டும் பெற்றுக்கொள்கிறது.

ஆன்மீக பாலையைச் சோலையாக்கும் கடவுள்

குருடர் பார்ப்பதையும், செவிடர் கேட்பதையும் (எசா 35:5-6) என்பதை உருவகமாக பொருள் கொண்டால் (எசா 6:10, 28:7, 29:9-10,18, 30:20-21, 32:3-4) அனைவரும் குறை நீங்கி முழுமை பெறுவதைக் குறிக்கின்றது. அதாவது, கடவுளின் கரம் பட்டவுடன் அனைவரும் முழுமையான ஆன்மீக மாற்றம் அடைவர். கடவுளும் பாலைவனமாக இருக்கின்ற மனித இதயத்தை சோலையாக்கலாம். மற்ற மனிதர்கள் எந்த நிலையில் இருந்தாலும் அவர்களும் கடவுளின் படைப்பு என்ற முறையில் உரிய மதிப்பளிப்பது ஒவ்வொருவரின் கடமையாகும். மற்றவர்களை ஒரு பொருட்டாக கருதாதவர்கள் தமது மனிதத் தன்மையிலிருந்து தம்மையே தாழ்த்திக் கொள்கின்றனர் என்பதே உண்மை. வழிபாட்டுத்தலங்களில் தோற்றத்தின் அடிப்படையில் மதிப்பளிப்பது உண்மை நம்பிக்கையை எள்ளி நகையாடும் செயல் என்று யாக்கோபு இன்றைய இரண்டாம் வாசகத்தில் கூறுகின்றார். கடவுளின் முன் பொன் நகைகளும் பொருள் செல்வமும் ஒரு பொருட்டே அல்ல; கடவுள் விரும்புவது எல்லாம் ஆன்மாவுக்கு அழகு சேர்க்கும் அணிகலன்களே. மற்றவர்களைத் தமக்குச் சமமாக ஏற்றுக்கொள்ளாதவர்களின் இதயம் ஒன்றும் விளைவிக்காத பாலைநிலமே.

ஒவ்வொருவரின் அடிப்படை உரிமையை மதி

இயேசுவைப் போல் செவிட்டு ஊமையனை உடனே குணப்படுத்த நம்மால் இயலாது. ஆனால், ஊனமுற்றோர்க்கு இரக்கம் காட்டலாம். சில பார்வையற்றோருக்கு வழிகாட்ட வேண்டும் என்ற நோக்குடன் பலருக்கு இரு கண்களையும் படைத்துள்ளார். சில ஊனமுற்றோரை நடத்திச் செல்லவே கடவுள் பலருக்கு இரண்டு கால்களையும் கொடுத்துள்ளார். உயர்நிலையில் இருப்போர் தேவையில் இருப்போருக்கு உதவி செய்யாமல் இருப்பது கடவுளுக்கே செய்யும் அநீதியாகும். இன்று எங்கும் போட்டி, எதிலும் போட்டி என்ற நிலை தலை தூக்கி நிற்கின்றது. ஏழைகள் உணவும் உடையும் வேண்டும் என்று கெஞ்சுகின்றனர். பணக்காரர்கள் தங்களின் செல்லப் பிராணிகளுக்கு பந்தி பரிமாறுகின்றனர். சிலர் பசிபோக்க மாத்திரை சாப்பிடுகின்றனர். சிலர் பசியெடுக்க மாத்திரை சாப்பிடுகின்றனர். சிலர் தம்மை உயர்ந்தவன் என்று காட்டிக்கொள்ள பலரைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்துவதைப் பெருமையாக நினைக்கின்றனர். நம்மைவிட தாழ் நிலையில் இருப்போருக்கு உதவி செய்வதில் நாம் கொள்ளும் போட்டி கடவுளுக்கு உகந்தது.

Comment