No icon

 பொதுக்காலம் 24ஆம் ஞாயிறு அருள்முனைவர் ஆ. ஆரோக்கியராஜ், OFM, CAP.

                                                                                                                                                                           பொதுக்காலம் 24ஆம் ஞாயிறு

                                                                                                                                                                      (எச 50:4-9, யாக் 2:14-18, மாற் 8:27-35)

                                                                                                                                                        அருள்முனைவர் ஆ. ஆரோக்கியராஜ், OFM, CAP.

தன்னை அறிதல்

தன்னைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்வதே சிறப்பான அறிவு என்பர் பெரியோர். உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம், உயர்ந்தாலும், தாழ்ந்தாலும், தலைவணங்காமல் நீ வாழலாம் என்கின்றது தமிழ் திரைப்படப் பாடல். கடவுள் திறமையின்றி யாரையும் படைத்து வைக்கவில்லை. ஒவ்வொருவருக்கும் இயற்கையாகவே கடவுள் பரிசளித்துள்ள கொடைகளை ஆக்கபூர்வமான முறையில் பயன்படுத்தினால், ஒவ்வொருவரும் ஒரு காந்தியாக, அன்னை தெரசாவாக, சேக்ஷ்பியராக, இசைப்புயலாக, கவியரசராக, தாமஸ் ஆல்வா எடிசனாக, மிக்கேல் ஆஞ்சலோவாக உருவாக்கம் பெறலாம். வாழ்நாள்களும் வாய்ப்புகளும் அனைவருக்கும் சமமாகவே தரப்பட்டுள்ளன. தம்மைப் பற்றி முழுமையாக அறிய முன்வராமையால் அல்லது விரும்பாமையால் பலரின் திறமைகள் மக்கி மரணித்துப் போகின்றன. ஒவ்வொருவருக்குள்ளும் கடவுள் புதையலைப் புதைத்து வைத்துள்ளார். அதைத் தோண்டி கண்டு பிடிப்போர் அனைவரும் பாக்கியவான்கள். இயேசுதம் பணியைத் துவங்கிய மூன்று ஆண்டுகளுக்குள் பாலஸ்தீனம் முழுவதும் பயணம் செய்து இறையரசு விதைகளை நட்டு கடவுளரசை நிலைநாட்டி விட்டார். தனது போதனைப் பயணங்களைத் துவக்கிய இருபது ஆண்டுகளுக்குள் புனித பவுல் உரோமைய பேரரசு முழுவதும் திருஅவைகளை நிறுவிவிட்டார். உயர்ந்து நிற்கும் கோபுரங்கள் அனைத்தும் ஒவ்வொரு செங்கலாகவைத்து உருவாக்கப் பட்டவையே. மூன்று ஆண்டுகள் இரவு பகல் பாராது மக்கள் பணியாற்றியபின் கடவுள் தமக்குத் தந்த பணியைச் சரிவர நிறைவேற்றுகின்றோமா? மற்றவர்கள் அதைப் பற்றி என்ன பேசுகின்றனர் என்று இயேசு அறிந்து கொள்ளவிரும்பி பேதுருவிடம் வினவுகின்றார். பேதுருவின் சொந்தப் பதில் சிறப்புப் பொருள் வாய்ந்தது.

இயேசு என்ற மெசியா

பல ஆண்டுகளாக இஸ்ரயேல் மக்கள் அரசியல் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை தரும் அரசியல் மெசியாவுக்காகவும் கோவிலைக் கொள்கையற்றவர்களின் கையிலிருந்து விடுவிக்கும் குருத்துவ மெசியாவுக்காகவும் தவம் கிடந்தனர். அவர்களின் கனவுகள் அனைத்தும் இயேசுவில் நடந்தேருகின்றன. இயேசுவின் செயல்பாடுகள் மூன்று ஆண்டுகள் அவருடன் வாழ்ந்த பேதுருவுக்கும் மற்றவர்களுக்கும் அவரைவிட உண்மைக் கடவுள் வேறில்லை என்ற உண்மையை உணரவைத்தன. அவரில் வெளிப்பட்ட மாபெரும் மதிப்பீடுகளின் அடிப்படையில் இயேசு கட்டாயம் கடவுளாகத் தான் இருக்க முடியும் என்று மக்களும் மற்ற திருத்தூதர்களும் பேசிக் கொண்டதைப் பேதுரு அறிக்கையிடுகின்றார்.

1. இயேசு சாத்தானைப் பேசவோ செயல்படவோ அனுமதிக்கவில்லை. சாத்தானின் சக்திகள் எந்த நிலையிலும் மனித மனங்களைப் பந்தாட அனுமதிக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். சாத்தானின் குணங்களை மனித இதயங்களில் அடைத்து அடைகாப்பது தவறு என்று அறிக்கையிட்டார்.

2. பலதார மணம் அனுமதிக்கப்பட்ட அக்காலத்தில் ஒரு மனிதனால் பலரை முழுமையாக அன்பு செய்ய இயலாது என்பதை நன்குணர்ந்து ஒருவனுக்கு ஒருத்திமட்டுமே என்பதை சமுதாய சட்டமாக அரங்கேற்றம் செய்கின்றார் (மாற் 10:6-10). ஒரு பெண்ணை தவறான கண்ணோட்டத்தோடு பார்ப்பதே விபச்சாரம் என்று முழக்கமிட்டார் (மத் 5:28). அன்றைய சமுதாயத்தில் நடந்த விவாகரத்தே தவறு என்று வாதம் செய்கின்றார் (மத் 5:32).

3. உடல் ஊனமுற்றோர் தாம் பெற்றோர் செய்த பாவத்தின் விளைவாக அவ்வாறு பிறந்துள்ளனர் என்று பலர் பட்டிமன்றம் நடத்திய வேளையில் அவர்கள் ஒவ்வொருவரையும் குணமாக்கி முழுமையாக்குகின்றார். அவர்கள் கோவிலுக்குள் நுழையக்கூடாது என்று யூத பாரம்பரியம் கல்லில் செதுக்கி கோவிலுக்கு முன் ஊன்றிவைத்திருந்தபோது அவர்களைக் கோவிலுக்குள் வரவழைத்து அனைவரையும் குணமாக்கி வெளியே அனுப்புகின்றார் (மத் 21:14).

4. மற்றவர்களைத் தமக்குச் சமமானவர்களாக மதியாது அவர்களை முட்டாளே என்று திட்டுபவன் எரிநரகத்திற்கு உள்ளாவான் என்று கண்டனம் செய்கின்றார். கோபம் கொள்வது கொலைக்கு வழியமைக்கும் என்பதால் கோபம் கொள்வதே கூடாது என்று கூறுகின்றார் (மத் 5:22).

5. சிலர் கண்ணுக்குக்கண் என்றும் பல்லுக்குப்பல் என்றும் - பழிக்குப்பழி - வாங்குவதைப் பழைய ஏற்பாட்டின் சுருக்கமாக (தவறாக) அறிக்கையிட்ட போது, எதிரிகளை அன்பு செய்யுங்கள், உங்களைத் துன்புறுத்துவோருக்காகச் செபியுங்கள் என்று புதியவரையறை எழுதி (மத் 5:38-42), அதையே தமது வாழ்விலும் செய்து காட்டுகின்றார் (லூக் 23:34).

6. கடவுள் ஆசீர்பெற மக்கள் தம்மைத் தேடி வர வேண்டும் என்று பலர் கருதிய நாள்களில் நாடோடி போதகராக மக்களைத் தேடி அலைகின்றார். தாம் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தாலும் ஏழைகளுக்குப் பணியாற்ற ஏழ்மையைத் தம் வாழ்க்கை முறையாக்கிக் கொண்டார்.

7. ஆட்சி செய்ய வேண்டும், அடக்கியாள வேண்டும் என்று கொஞ்சமும் நினையாது சிலுவையில் தம்மையே முழுமையான பலி பொருளாகக் கையளித்து சிலுவை இறையியலை (தம்மையே தியாகம் செய்பவனே உண்மைத் தலைவன்) உலகின் சாசனமாக்கிவிட்டார்.

8. அவர் வாழ்ந்த யூத சமுதாயம் சிலரைப் பாவிகள் என்ற முத்திரைகுத்தி சமுதாய வாழ்விலிருந்து ஒதுக்கிவைத்த வேளையில் அவர்களோடு பந்தியமர்வதன் மூலம் ஒரு உண்மையான உறவை ஏற்படுத்தி தம் நண்பர்களாக்கிக் கொண்டார்.

9. தாம் பசித்திருக்கும், துன்புறும், கைது செய்யப்படும், நொறுக்கப்படும், சிலுவையில் அறையப்படும் வேளைகளில் தமக்கென்று ஒரு புதுமைகூட செய்யாத இயேசு, மக்கள் பசித்திருக்கும் வேளையில் அப்பங்களைப் பலுகிப் பெருகச் செய்கின்றார். அவர்களின் துன்பத்திலிருந்து விடுவிக்கின்றார். மற்றவர்களுக்காகச் சேவையாற்றுவதில் மகிழ்வுருகின்றார். அதையே தம் வாழ்வுக் கடமையாக எண்ணுகின்றார்.

10. பெண்கள் இரண்டாம் தரக் குடிமக்கள் என்று கருதிய சமுதாயத்தில் சிலரைத் தம் நண்பர்களாக்கி, சிலரை சீடத்திகளாக்கி (லூக் 8:1தொ), சிலரை இறைவாக்கினர்களாக்கி (லூக் 2:36), பலரைப் பக்திமான்களாக்கி மகிழ்கின்றார். தீட்டு என்று கருதப்பட்ட பெண்கள் பரிசேயர்கள் முன்னரே குணமாக்கி (மாற் 5:25தொ), தீட்டு என்பது மனித சிந்தனையில் உள்ளதே தவிர கடவுளின் படைப்பில் இல்லை என்று அறிக்கையிடுகின்றார்.

11. அவரைத் தேடிவந்த அனைவரும் எல்லாம் பெற்று, எல்லாவகையான அடிமைத்தனத்திலிருந்தும் வாழ வேண்டும் என்று முழு மனித விடுதலைக்காக இயேசு பாடுபட்டார். எல்லா ஆண்டும் யூபிலி ஆண்டாக இருக்க வேண்டும். அடிமைத்தனம் என்றசொல் அறவே கேட்கக்கூடாது என்பது அவரின் கொள்கை (லூக் 4:18-19).

12. எல்லாவகையான நோய்களையும் ஒரே ஒருவார்த்தையால் குணப்படுத்திய வல்லமையை மக்கள் இதுவரை கண்டதில்லை. குணப்படுத்தியமைக்குப் பிரதிபலனாக நம்பிக்கையைத் தவிர வேறு எதையும் மக்களிடமிருந்து அவர் எதிர்பார்க்கவில்லை.

13. கடலுக்கே எல்லையை நிர்ணயம் செய்த கடவுளின் வல்லமையால் கடலை அதட்டி அடங்காத புயலை ஒரு நொடிப்பொழுதில் அடக்குகின்றார்.

14. சுயநலம் என்பது கொஞ்சமும் அவரிடம் இல்லை. சுயவிளம்பரம் அவர் தேடவில்லை.

துன்புறும் மெசியா

மெசியா சர்வசக்தி படைத்த அரசனாகவும், வெற்றி வீரனாகவும் இருப்பார் என்ற கருத்தியல் அடிப்படையிலே பலர் வாழ்ந்தனர் (எச 9:7, 11:1, எரே 22:4, 23:5,30:9). இந்த அடிப்படையான சிந்தனையையே பேதுருவும் கொண்டிருந்தார். இயேசு அரசனாக அமரும் வேளையில் அவரது அருகில் அமர்ந்து அரசின் பொறுப்புக்களைக் கண்காணிக்கலாம் என்ற கனவில் அவர் வாழ்ந்திருக்க வேண்டும். எனவே தான் சிலுவைச் சாவு உமக்கு நிகழாது என்று கூறுகின்றார். உண்மையான சீடன் சிலுவையைத் தூக்கிக் கொண்டு பின்னால் வரவேண்டும். இயேசுவுக்கு முன்னால் சென்று அவருக்கு வழி காட்ட வேண்டும் என்று நினைக்கக்கூடாது என்று அவருக்கு அறிவுறுத்துகின்றார். தாம் தோல்வியடைந்து, தம்மை சிலுவையில் சின்னாபின்னமாக்கி மற்றவர்களுக்கு மீட்பளிக்கும் கடவுள் இயேசு தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு எவரிடமும் இல்லை என்று போதித்து அதையே வாழ்வாக்குகின்றார். ஒவ்வொருவரும் தம் உயிரைக் காத்துக்கொள்ளவே விரும்புவர். அதையும் 33 வயதிலேயே கொடுக்க முன்வருவது தியாகத்தின் உச்சமாகும். எனவே, அவரை மீட்பர் என்று பேதுரு அறிக்கையிடுகின்றார்.

துன்புறும் ஊழியன்

துன்புறும் ஊழியனின் இறைவாக்கு இயேசுவில் நிறைவேறுகின்றது. சோர்ந்திருப்போர்க்கு ஆறுதல் தரும் நோக்கோடு கடவுள் அவருக்குக் கற்பிக்க, அவர் அனைத்தையும் கற்று ஒழுக்க சீலர்ஆகியுள்ளார். கடவுள் கற்றுத் தருவதற்கு ஏற்ப இயேசு பதில் தருவதனால், அவரின் வார்த்தை கூரியவாள் போன்றும் பளபளக்கும் அம்புபோலும் வல்லமையுடன் செயலாற்றுகின்றது. தன் பணி கடினமானது என்பதை இயேசு உணர்ந்தும், மோசே, எரேமியா போன்று மறுத்துரைக்காமல் ஏற்றுக்கொள்கின்றார். அவரது வேதனைகள் அவர் பாவத்தின் சம்பளமல்ல; மாறாக கடவுளின் அழைப்பிற்குக் கீழ்ப்படிந்து, ஏற்றுக்கொண்ட பணியால் வரும் விளைவுகள். வேதனையில்லாதப் பணி அவருக்குத் தரப்படவில்லை என்பது இயேசுவுக்குத் தெரியும். கடவுளின் பணியை நிறைவேற்றுவதில் முழு மூச்சுடன் இருப்பதால் மற்றவர்கள் தன்னைக் கொடுமையாக நடத்த இயேசு அனுமதிக்கிறார். கொடுமைகளைப் பொறுத்துக் கொள்வதும், பொறுமையின் மூலம் கொடுமையாளர்களையும் வெற்றி கொள்வது அவரது பணியின் அங்கமாகும். அவர் முகத்தைக் கற்பாறை போலாக்கி எல்லா அவமானங்களையும் தாங்கும் ஆற்றலைக் கடவுள் அவருக்குத் தருகின்றார். தன் பணியைக் கடவுள் வெற்றியடையச் செய்வார் என்ற நம்பிக்கையில், வருகின்ற வேதனைகளை இயேசு துணிவுடன் தாங்குகின்றார். நீதியின் கடவுள் இந்த நீதிமான் சார்பாக தீர்ப்பு எழுதுவது நிச்சயமாகிவிட்டது. கடவுள் அவருடன் இருக்கின்றார், அவர் மூலம் செயல்படுகின்றார் என்ற உண்மையே, ஊழியன் நீதியானவர் என்பதற்குச் சான்றாகும். மற்றவர்கள் சார்பாக துன்பமேற்கும் இயேசுவின் தியாக வாழ்வு அவரைக் கடவுளின் மகனாகவும் மெசியாவாகவும் உயர்த்திக் காட்டுகின்றது.

செயலாக்கம் பெறும் நம்பிக்கை

பல நேரங்களில் நாம் கேட்பது போல் நம் கண்கள் காண்பதில்லை. அதாவது சிலர் பலவற்றை பேசிக்கொண்டே செல்கின்றனர். ஆனால், எதையும் நிலைகொள்ளச் செய்வதில்லை. வீண்வாதங்களைவிட அவர்களின் நற்செயல்கள் குறைவு. ஒருவர் கடவுளோடு கொண்டுள்ள உறவு அன்றாட அன்புப் பகிர்வுகளில் தம் முகத்தைக் காட்ட வேண்டும். இல்லாவிட்டால் ஒருவன் ஒலிக்கும் வெண்கலமாகவும் ஓசையிடும் தாளமாகவும் கருதப்படுவான். கடவுள் வழிபாட்டை அயலான் அன்பிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. உண்மையான நம்பிக்கை இதயத்தின் செயல்பாடு. அது படிப்பதால் பெற்றுக்கொள்ளும் அறிவு அல்ல; இரவு முழுவதும் மீன்பாடு கிடைக்கவில்லை. ஆனால், இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டதால் அதன் பலன்களை பேதுரு அனுபவிக்கின்றார். பசியோடு வருபவனுக்கு ஆசீர்வாதத்துடன் பொருள்களையும் கொடுத்து அனுப்புவதே உண்மையான நம்பிக்கை என்று யாக்கோபு அறிவுரை தருகின்றார். இயேசு கடவுள் மீது தாம் கொண்டுள்ள நம்பிக்கையை நற்செயல்கள் செய்வதன் மூலம் நிறைவேற்றினார்.

நாமும் தலைவனாகலாம்

இன்று மக்கள் வீடுகட்டாமல் முட்டையிட்டு குஞ்சு பொறிக்க ஆசைப்படுகின்றனர். கருக விரும்பாத பூவினால் கனியொன்றைத் தரமுடியாது. கரைய விரும்பாத உப்பினால் உணவிற்கு சுவைகொடுக்க முடியாது. அழியவிரும்பாத மெழுகினால் உலகிற்கு ஒளியைத் தரமுடியாது. தம்மையே இழக்க விரும்பாத எந்த மனிதனும் இறைவனிடமிருந்து எதையும் பெறமுடியாது. பிறருக்காகத் தம்மையே இழப்பவர்கள் மற்றவர்களில் நிரந்தரமாக உயிர்க்கின்றனர். தியாகக் கடமைகளில் தவறிய தலைவர்களை வருங்காலம் விரைவில் மறந்துவிடும். நாம் பூமியில் வாழும் குறுகிய வாழ்வை, வரலாற்றின் பக்கங்களில் இடம்பெறுமளவு நிரந்தரமாக்குவது நமது வாழ்வுச் செயல்களில் அடங்கியுள்ளது. ஒருவரின் அர்ப்பணம் நிறைந்த வாழ்வே அவரை உலகின் கண்முன்னே தூக்கி நிறுத்தும் ஏணிப்படிகளாகும்.

Comment