No icon

13.11.2022 - ஞாயிறு - வாழ்வின் மறுபக்கம்

ஆண்டின் பொதுக்காலம் 33ஆம் ஞாயிறு மலா 4:1-2, 2 தெச 3:7-12, லூக் 21:5-19

சில ஆண்டுகளுக்கு முன் கவிதை ஒன்றை வாசித்தேன். கவிதையின் தலைப்புமற்றும்அதை ஒரு டைரியில் குறிப்பும் எடுத்தேன். அந்த வரிகள் இவை:

நாம் அனேகமாய்ப்

பார்ப்பதில்லை - பார்த்ததில்லை

ஒரு சருகு இலையின் பின்புறத்தை

ஒரு மரப்பாச்சியின் பின்புறத்தை

ஒரு மலையின் பின்புறத்தை

ஒரு சூரியனின் பின்புறத்தை

மற்றும்

நம்முடையதை

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவும், அவருடைய சீடர்களும் பள்ளத்தாக்கின் அந்தப் பக்கத்திலிருந்து எருசலேம் ஆலயத்தைப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களையும், அவர்களோடு சேர்ந்து கோவிலையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்களில் ஒருவர் சத்தமாகச் சொல்கிறார்: “என்னே கோவிலின் அழகு! என்னே கவின்மிகு கற்கள்! என்னே அழகு!” இயேசுவின் காதுகளில் இவ்வார்த்தைகள் விழ, அவர் உடனே திரும்பிப் பார்த்து, “இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும். அப்போது கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும்என்கிறார்.

இது எப்படி இருக்கு தெரியுமா?

நம்ம வீட்டுல உள்ள ஒருத்தருக்கு குழந்தை பிறந்திருக்கு. அந்தக் குழந்தையைப் பார்க்க குடும்பத்தாரோடு நாம் செல்கிறோம். குழந்தையின் சிரிப்பு, நிறம், அழகு, மென்மை, முக அமைப்பு ஆகியவற்றை வியந்து பார்த்துக்கொண்டிருக்கும் நேரம், நம்மோடு கூட்டத்தில் வந்திருந்த ஒருவர், ‘இந்தக் குழந்தை ஒருநாள் இறந்துபோகும்!’ என்று சொன்னால் நமக்கு எப்படி இருக்கும்? அந்த மனிதரை எதிர்மறையாளர் என்றும், கோணல்புத்திக்காரர் என்றும் சாடுவதோடு, அவருடைய இருப்பை நாம் உடனே தவிர்க்க முயற்சிப்போம். ஆனால், கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் அவர் சொன்னதில் தவறில்லையே. பிறக்கின்ற எல்லாக் குழந்தைகளும் ஒருநாள் இறக்கத்தானே வேண்டும்!

இந்தக் கோவில் இடிபடும்!’ என்ற இயேசுவின் வார்த்தைகள், ‘இந்தக் குழந்தை இறந்து போகும்என்று அந்த நபர் சொன்னபோது ஏற்பட்ட அதிர்வையே இயேசுவின் சமகாலத்தவர் நடுவே ஏற்படுத்தியிருக்கும்.

நம்மிடம் ஒரு நாணயம் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அந்த நாணயத்தைக் கஷ்டப்பட்டு இரண்டாக உடைத்துவிடுகிறோம். அந்த நாணயத்தை எடுத்துக்கொண்டு கடைக்குச் செல்கின்றோம். நாணயத்தின் இரண்டு பக்கங்களையும் அருகருகே வைத்து பண்டமாற்றம் செய்ய முயல்கின்றோம். கடைக்காரர் நாணயத்தைச் செல்லாக்காசு என்கிறார். நாணயம் இரண்டு பக்கங்களாகப் பிரிக்கப்பட்டாலும் செல்கின்ற நாணயம்/ தங்க நாணயத்தைத் தவிர வேறு நாணயங்கள் இல்லை.

நாணயங்களின் மறுபக்கம் ஒருபக்கத்தோடு ஒட்டியிருந்தால்தான் நாணயத்திற்கு மதிப்பு.

இன்றைய இறைவாக்கு வழிபாடு வாழ்வின் மறுபக்கத்தை நாம் கண்டுணர அழைக்கின்றது.

இவர்கள் பேசுவதைக் கேட்க நமக்கு நெருடலாக இருக்கும். ஏனெனில், வாழ்வின் மறுபக்கத்தைப் பார்ப்பதும் நெருடலாகவே இருக்கும். ஆகையால்தான், பல நேரங்களில் நாம் வாழ்வின் மறுபக்கத்தைப் பார்ப்பதைத் தவிர்க்கின்றோம் அல்லது தள்ளி வைக்கின்றோம்.

திருவழிபாட்டு ஆண்டின் ஏறக்குறைய இறுதிப்பகுதிக்கு வந்துவிட்டோம். இன்றைய வாசகங்கள் வாழ்வின் முடிவைப் பற்றிப் பேசுகின்றன. வாழ்விற்கு முடிவு கிடையாது. மறுபக்கம்தான் உண்டு.

வாழ்வின் மறுபக்கத்தை எப்படிக் காண்பது?

இன்றைய முதல் வாசகம் (காண். மலா 4:1-2) மலாக்கி இறைவாக்கினர் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. எபிரேய விவிலியத்தில் இறைவாக்கினர்கள் நூலை நிறைவு செய்பவர் மலாக்கி. பாபிலோனிய அடிமைத்தனத்திற்குப் பின், புதிய ஆலயம் கட்டப்பட்டதன் பின்புலத்தில், புதிய ஆலயத்தில் நிலவிய சமயச் சடங்குகளைக் கண்டிக்கின்ற மலாக்கி, வரப்போகும் மெசியா பற்றி முன்னுரைக்கின்றார். அந்த நாளைஆண்டவரின் நாள்என அழைக்கின்றார். அந்த நாளில் ஆண்டவர் உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பு அளித்து அமைதியையும் ஒருங்கியக்கத்தையும் மீண்டும் சரி செய்வார்.

இன்றைய முதல் வாசகம் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதியில், கடவுள் ஆணவக்காரரை அழிக்கும் நிகழ்வை எடுத்துரைக்கிறார் மலாக்கி. நெருப்பு என்ற உருவகத்தைக் கையாளும் இறைவாக்கினர், ஆணவக்காரர் அனைவரும் அந்த நெருப்புக்குள் தூக்கி எறியப்படுவர் என்று எச்சரிக்கின்றார். அவர்கள் வேர்களோடும் கிளைகளோடும் எரிக்கப்படுபவர். அதாவது, அவர்களில் ஒன்றும் மிஞ்சாது. உலகத்தின் முகத்திலிருந்து தீமை முற்றிலும் துடைத்து எடுக்கப்படும்.

 இரண்டாவது பகுதியில், கடவுளின் பெயருக்கு அஞ்சி நடப்பவர்கள் பெறும் பரிவைப் பற்றிச் சொல்கிறார் இறைவாக்கினர். ‘நீதியின் கதிரவன் எழுவான். அவனுடைய இறக்கைகளில் - அதாவது கதிர்களில் - நலம் தரும் மருந்து இருக்கும்.’ இவரின் இறைவாக்குப் பகுதி மிகவும் எளிதாக இருக்கிறது. ஒரே நெருப்புதான். அது ஒரு பக்கம் ஆணவக்காரருக்கு அழிவாக இருக்கிறது. மறுபக்கம் நீதிமான்களுக்கு நலம் தரும் மருந்தாகவும், நீதியின் ஆதவனாகவும் இருக்கிறது.

வாழ்வில் எல்லாம் ஒன்றுதான். ஒருபக்கம் அழிவு என்றால், மறுபக்கம் நலம். ஒருபக்கம் தீமை என்றால், மறுபக்கம் நன்மை. இரண்டும் அப்படியே இருக்கும். இரண்டையும் எடுத்துக்கொள்ளும் பக்குவம் நமக்குத் தேவை.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 2 தெச 3:7-12) தெசலோனிக்கருக்கு எழுதப்பட்ட இரண்டாம்  திருமுகத்தின் இறுதி அறிவுரைப் பகுதியாக இருக்கிறது. பவுல் தெசலோனிக்காவில் நற்செய்தி அறிவிக்கின்றார். அவருடைய நற்செய்தி அறிவிப்பில் இயேசுவின் இரண்டாம் வருகை பற்றிப் போதிக்கின்றார். அவர் சென்ற சில மாதங்களில் அங்கே வருகின்ற வேறு சிலர் பவுல் அறிவித்த நற்செய்திக்குப் பிறழ்வான நற்செய்தி ஒன்றை அறிவித்து நம்பிக்கையாளர்களின் மனத்தைக் குழப்புகின்றனர்.

 இவர்கள் இறுதிநாள் விரைவில் வருகிறது என்று அறிவித்ததோடு, ‘இனி யாரும் வேலை செய்யத் தேவையில்லை. இருப்பதை அமர்ந்துகொண்டு உண்போம். அல்லது இருப்பவர்களிடம் வாங்கி உண்போம்என்று சொல்லி எல்லாரையும் ஊக்குவிக்கின்றனர். ஆக, எங்கும் சோம்பல் பெருகுகிறது. ஒருவர் மற்றவரை ஏமாற்றி அல்லது பயமுறுத்தி உண்கின்றனர். ‘எல்லாமே அழிந்துவிடும். இனி எதற்கு வேலை செய்ய வேண்டும்?’ என்று ஓய்ந்திருக்கின்றனர்.

இதை அறிகின்ற பவுல் இவர்களின் இச்செயலைக் கண்டித்துக் கடிதம் எழுதுகின்றார். முதலில், தன்னுடைய எடுத்துக்காட்டான வாழ்வை அவர்களுக்கு எடுத்தியம்புகின்றார்: ‘உங்களிடையே இருந்தபோது நாங்கள் சோம்பித்திரியவில்லை. எவரிடமும் இலவசமாக உணவருந்தவில்லை. மாறாக, உங்களுள் எவருக்கும் சுமையாய் இராதபடி, இராப்பகலாய்ப் பாடுபட்டு உழைத்தோம். எங்களுக்கு வேண்டியதைப் பெற உரிமை இல்லை என்பதால் அல்ல; மாறாக, எங்களைப் போல நடப்பதற்காக உங்களுக்கு முன்மாதிரி காட்டினோம்.’

ஆக, பவுல், தனக்கு உணவை இலவசமாகப் பெற உரிமை இருந்தும் அந்த உரிமையைப் பயன்படுத்தவில்லை என்கிறார். இரண்டாவதாக, ‘உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாதுஎன்று தான் ஏற்கனவே கொடுத்திருந்த கட்டளையை அவர்களுக்கு நினைவூட்டுகிறார். இதன் வழியாக மற்றவர்களின் உழைப்பு சுரண்டப்படுவதையும், மற்றவர்கள் ஏமாற்றப்படுவதையும் தடுக்கின்றார் பவுல். ஆண்டவரின் இரண்டாம் வருகைக்காக காத்திருக்கின்ற வேளையில் ஒழுக்கமான, நேர்மையான வாழ்வை வாழவும் வேண்டும் என்றும், கடின உழைப்புடன் வேலை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றார் பவுல்.

ஆக, தங்கள் வாழ்வின் ஒரு பக்கத்தை - அதாவது, உலக அழிவை - மட்டுமே கண்டு, வாழ்வின் மறுபக்கத்தை - உழைப்பை, அன்றாட வாழ்வின் இன்பத்தை - மறந்து போன தெசலோனிக்க நகர மக்களை வாழ்வின் மறுபக்கத்தையும் காண அழைக்கின்றார் பவுல்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 21:5-19) எருசலேம் அழிவைப் பற்றி லூக்கா இரண்டாவது முறை பேசும் பகுதியாக இருக்கிறது (காண். 19:43-44). எருசலேம் ஆலயத்தின் இறுதி அழிவு கி.பி. 70 இல் நடந்தது. இது யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் மிகப்பெரிய எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தப் பேரழிவு இயேசுவை ஏற்றுக்கொள்ளாததால்தான் என்று முந்தைய பகுதியில் மக்களை எச்சரிக்கிறார் லூக்கா. ஆனால், இன்றைய நற்செய்தி வாசகப் பகுதியில், வரப்போகும் தீங்கை முன்னுரைக்கின்ற இயேசு, அதை எதிர்கொள்ளத் தன் சீடர்களைத் தயாரிக்கின்றார். போலி மெசியாக்கள் தோன்றுவார்கள் என்றும், போர்களும், எதிர்ப்புகளும், கொந்தளிப்புகளும், கொள்ளை நோய்களும், பஞ்சமும், துன்புறுத்தல்களும், வருத்தங்களும், மறைசாட்சியப் போராட்டங்களும் வரும் என்றும் எச்சரிக்கின்றார் இயேசு.

இப்படி எச்சரிக்கின்ற இயேசு, ‘நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்என்றும், ‘உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழாதுஎன்றும் நேர்முகமாக நம்பிக்கை தருகின்றார்.

இதுதான் இயேசு காட்டுகின்ற வாழ்வின் மறுபக்கம். வாழ்வின் ஒருபக்கம் துன்பம் என்றால், போராட்டம் என்றால், மறுபக்கம் இன்பம் அல்லது அமைதி உறுதியாக இருக்கும்.

வாழ்வின் மறுபக்கத்தை நாம் கண்டறிய மூன்று தடைகள் உள்ளன:

1. ஒற்றைமயமாக்கல்

வாழ்க்கை என்ற நாணயத்தை நாம் பல நேரங்களில் வலிந்து பிரிக்க முயல்கின்றோம். பிரித்து ஒரு பகுதியை வைத்துக்கொண்டு மற்ற பகுதியைத் தூக்கி எறிய நினைக்கிறோம். நன்மை, ஒளி, நாள் என சிலவற்றை உயர்த்தி, தீமை, இருள், இரவு ஆகியவற்றை அறவே ஒதுக்கிவிடுகின்றோம். ஆனால், இரண்டு பகுதிகளும் இணைந்தே வாழ்வு நகர்ந்துகொண்டிருக்கும். இதையே சபை உரையாளர், “வாழ்க்கை இன்பமாய் இருக்கும்போது மகிழ்ச்சியோடிரு; துன்பம் வரும்போது நீ நினைவில் கொள்ள வேண்டியது: ‘அடுத்து என்ன நடக்கும் என்பதை நீ தெரிந்துகொள்ளா வண்ணம் கடவுள், இன்பத்தையும் துன்பத்தையும் மாறி மாறி வரவிடுகிறார்’ (சஉ 7:14). ஆக, வாழ்வின் இருபக்கங்களும் ஒன்றன் பின் ஒன்றாக வரட்டும். ஒரு பகுதியை மட்டும் பிடித்துக்கொண்டு இன்னொரு பகுதியை விட வேண்டாம். ஏனெனில் சூரியனின் ஒரு பக்கம் ஆணவக்காரரைச் சுட்டெரிக்கிறது என்றால், அதன் மறுபக்கக் கதிர்களில் நேர்மையாளர்களுக்கான நலம் தரும் மருந்து இருக்கும்.

2. அவசரம் அல்லது சோம்பல்

ஒற்றைமயமாக்கலில் நாம் வாழ்வின் மறுபக்கத்தை வெறுத்து ஒதுக்குகின்றோம் என்றால், அவசரத்தில் மறுபக்கத்தை நாம் அப்படியே எடுத்துக்கொள்ள நினைக்கிறோம். இதுவும் தவறு. எல்லாக் குழந்தைகளும் ஒருநாள் இறக்க வேண்டும் என்பதற்காக பிறந்த குழந்தைகளைக் கொல்வது போன்றது அவசரம். எல்லாக் கட்டிடங்களும் ஒருநாள் இடிந்துபோகும் என்பதற்காக எல்லாக் கட்டிடங்களையும் இடிக்க நினைப்பது அவசரம். தெசலோனிக்கத் திரு அவையில் இதே பிரச்சனைதான் இருந்தது. ‘கடவுள் வரப் போகிறார், உலகம் முடியப் போகிறதுஎன்ற அவசரத்தில், ஆடு, கோழிகளை அடித்து சாப்பிட்டுவிட்டு, ஓய்ந்திருந்தனர். அவசரத்துடன் சோம்பலும் வந்துவிடுகிறது. பல நேரங்களில் நாம் வாழ்வின் மறுபக்கத்தை யூகித்துக்கொண்டே விரக்தியும் அடைகிறோம். ‘இது இப்படி ஆகுமோ? அது அப்படி ஆகுமோ?’ என்னும் வீணான குழப்பங்களும் அவசரத்தின் குழந்தைகளே.

3. பயம்

இதைப் பற்றி இயேசு நற்செய்தி வாசகத்தில் அறிவுறுத்துகின்றார். மனித அல்லது இயற்கைப் பேரழிவுகள் பயத்தைக் கொண்டுவரலாம். நம்முடைய உடைமைகள் அல்லது உயிரும் பறிக்கப்படலாம். ஆனால், இந்தப் பயத்தைப் போக்க இயேசு நம்பிக்கையும் எதிர்நோக்கும் தருகின்றார்: ‘உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழாது!’ - ஒருநாள் தைராய்டு மாத்திரை எல்ட்ராக்சினை நிறுத்தினால், ஒருநாள் வேறு தண்ணீரில் குளித்தால், ஒரு நாள் ஷாம்பு மாற்றிப் போட்டால் தலைமுடி கொட்டுகிறது. ஆனால், இயேசு சொல்வது இந்த முடி கொட்டுவதை அல்ல. பயத்தால் ஒரு முடி கூட கொட்டாது. அல்லது பயம் நம் வாழ்வில் ஒரு முடியையும் உதிர்க்க முடியாது.

வாழ்வின் மறுபக்கத்தை நாம் பார்ப்பதற்குத் தடையாக இருக்கின்ற ஒற்றைமயமாக்கல், அவசரம்-சோம்பல், பயம் ஆகியவற்றை விடுத்தல் அவசியம்! இவற்றை விடுத்தலே ஞானத்தின் முதற்படி! இந்த ஞானத்தை அடைந்தனர் இயேசுவும் பட்டினத்தாரும்.

இவற்றை விடுக்கும் எவரும், வாழ்வின் இருபக்கங்களையும் கொண்டாட முடியும். அந்தக் கொண்டாட்டத்தில் திருப்பாடல் ஆசிரியரோடு இணைந்து, ‘யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள். யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள்’ (திபா 98:5) என்று பாட முடியும்.

Comment