ஞாயிறு - 11.12.2022
மகிழ்ச்சி மெசியாவின் செயல் திருவருகைக்காலம் 3 ஆம் ஞாயிறு எசா 35:1-6,10, யாக் 5:7-10, மத் 11:2-11
திருவருகைக்காலத்தின் மூன்றாம் ஞாயிற்றை ‘கௌதேத்தே தொமெனிக்கே’ (‘மகிழ்ச்சி ஞாயிறு’) என அழைக்கின்றோம். இன்றைய திருப்பலியின் வருகைப் பல்லவியும், முதல் வாசகமும் ‘அகமகிழ்தல்’ எனும் சொல்லுடன் தொடங்குகின்றன.
மகிழ்ச்சியின் வரையறை என்ன? ‘சிரிப்பு,’ ‘இன்பம்,’ ‘சந்தோஷம்,’ ‘நிறைவு,’ ‘உடல் நலம்’ என, நாம் பல வார்த்தைகளைச் சொன்னாலும், எந்த வார்த்தையும், மகிழ்ச்சி என்ற உணர்வை முழுமையாகப் பிரதிபலிப்பதில்லை. மகிழ்ச்சி என்பது, ஒரு ‘ரெலடிவ்’ (தனிநபர் சார் உணர்வு) எமோஷன் என்பதில் ஐயமில்லை. அதாவது, அது தனிநபர் சார்ந்தது. எல்லாருக்கும் பொதுவான மகிழ்ச்சி என்று ஒன்றை வரையறுக்க முடியாது. மகிழ்ச்சி உள்ளிருந்து வருகிறதா? அல்லது வெளியிலிருந்து வருகிறதா? ‘உள்ளிருந்து வருகிறது’ என்றால், சில நேரங்களில் நம் மனம் எந்தக் காரணமும் இல்லாமல் சோர்ந்திருக்கக் காரணம் என்ன? ‘வெளியிலிருந்து வருகிறது’ என்றால், மகிழ்ச்சி நிபந்தனைக்கு உட்பட்டதாகி விடுமே!
மகிழ்ச்சியை வரையறை செய்வதில் இவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும், மகிழ்ச்சி என்பது நாம் அனைவரும் அன்றாடம் அனுபவிக்கின்ற ஓர் உன்னத உணர்வு. நாம் உண்பது, உறங்குவது, படிப்பது, பயணம் செய்வது, பணி செய்வது, உறவாடுவது என, எல்லாவற்றின் இலக்கு ஒன்றே ஒன்றுதான்: ‘மகிழ்ச்சியாக இருப்பதற்கு!’ யாரும் துன்பப்பட விரும்புவதில்லை. துன்புற வேண்டும் என்பதற்காக, எதையும் செய்வதில்லை. அலெக்ஸாண்டர் தெ கிரேட் உலகையே தன் கைக்குள் அடக்கிவிடத் துணிந்ததும் மகிழ்ச்சிக்காகவே! புத்தர் அரண்மனையை விட்டு வெளியேறி, போதி மரத்தடியில் அமர்ந்ததும் மகிழ்ச்சிக்காகவே! இவர்களின் மகிழ்ச்சியில் ஒன்று உயர்ந்தது மற்றொன்று தாழ்ந்தது என்று சொல்லிவிட முடியாது. மகிழ்ச்சியும், துன்பமும் மாறிமாறி எழுகின்ற உணர்வுகளாக இருக்கின்றன என்பதே நம் வாழ்வியல் எதார்த்தம்.
மெசியாவின் செயல்களைக் கேள்வியுறுவதும், ஏற்பதும், செய்வதும் மகிழ்ச்சி என்று மகிழ்ச்சிக்கான புதிய வாயில்களைத் திறக்கின்றன இன்றைய வாசகங்கள்.
இன்றைய முதல் வாசகத்தின் (காண். எசா 35:1-6,10) பின்புலம் மிகவும் சோகமானது. கி.மு 7 ஆம் நூற்றாண்டின் இறுதியில், இஸ்ரயேலும், எருசலேமும் அசீரியாவால் மிகுந்த அச்சுறுத்தலுக்கு ஆளாகின. மக்கள் அடிமைப்படுத்தப்பட்டார்கள். கோயில் தீட்டாக்கப்பட்டது. ‘எல்லாம் முடிந்தது’ என்று நினைத்த மக்களுக்கு, ‘முடியவில்லை; விடிகிறது’ என்று இறைவாக்குரைக்கின்றார் எசாயா. முதலில், ஒட்டுமொத்த படைப்பும், புத்துணர்ச்சி பெறுகிறது - ‘பாலை நிலமும் பாழ்வெளியும் அகமகிழ்கிறது,’ ‘பொட்டல் நிலம் அக்களிக்கிறது,’ ‘லீலி போல் பூத்துக்குலுங்கி மகிழ்ந்து பாடிக் களிப்படைகிறது’ - படைத்தவரின் அரவணைப்பை படைப்பு பெற்றுக்கொள்கிறது. தொடர்ந்து, ‘அஞ்சாதீர்கள்’ என்ற செய்தி அனைத்து மக்களுக்கும் வழங்கப்படுகிறது. மூன்றாவதாக, நான்கு வகை நோய்களிலிருந்து மக்கள் விடுபடுகிறார்கள் - கண்பார்வையற்ற நிலை, காதுகேளாத நிலை, கால்கள் முடமான நிலை மற்றும் பேச்சற்ற நிலை. அக்காலத்தில் இந்நோய்களுக்குக் காரணம் ஒருவர் செய்த பாவம் என்று கருதப்பட்டது. ஆனால், அவர்களை நோய்களிலிருந்து விடுவிப்பதன் வழியாக, கடவுள் அவர்களின் பாவங்களை எல்லாம் மன்னிக்கிறவராக முன்வைக்கப்படுகிறார்.
பகைவரின் படையெடுப்பால் படைப்பும், மக்களும் அனுபவித்த துன்பங்கள் மறைந்து, மகிழ்ச்சி பிறக்கிறது. கிறிஸ்தவ வாசிப்பில் இப்பகுதி மெசியாவின் செயல்கள் முன்னறிவிப்பு பகுதி என அழைக்கப்படுகின்றது.
இன்றைய இரண்டாம் வாசகம் (காண். யாக் 5:7-10) யாக்கோபின் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. யாக்கோபு இத்திருமடலை எழுதுகின்ற நேரத்தில் உலகின் முடிவு மற்றும் இரண்டாம் வருகையை மையமாகக் கொண்டு ‘நிறைவு காலம்’ (‘பரூசியா’) பற்றிய எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்தது. மக்கள் பொறுமையின்றி இருந்தனர். அதாவது, ஒருவகையான அவசரம், அனைவரையும் பற்றிக்கொண்டது. எல்லாம் அழியப் போகிறது என்னும் அச்சம், அந்த அச்சத்தோடு இணைந்த பதற்றம் மற்றும் கவலையினால் ஒருவர் மற்றவரிடம் கொண்டுள்ள உறவும் பாதிப்புக்குள்ளாகிறது. போட்டி மனப்பான்மையும், முணுமுணுத்தலும் எழுகின்றது. இதன் பின்புலத்தில்தான், அவரின் அறிவுரை அமைகின்றது. இவர்களுக்கு அறிவுறுத்துகின்ற யாக்கோபு, ‘பயிரிடுபவரைப் போல பொறுமையாகவும்,’ ‘ஒருவர் மற்றவரிடம் முறையீடு இன்றியும்’ இருக்குமாறு அறிவுறுத்துகின்றார்.
நற்செய்தி வாசகம் (காண். மத் 11:2-11) இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதியில், சிறையிடப்பட்டுள்ள திருமுழுக்கு யோவான், மெசியாவின் செயல்களைப் பற்றிக் கேள்வியுற்று, ‘வரவிருப்பவர் நீர்தாமோ?’ என்று இயேசுவிடம் கேட்குமாறு தம் சீடர்களை அனுப்புகிறார். இரண்டாம் பகுதியில், திருமுழுக்கு யோவானுக்குப் புகழாரம் சூட்டுகிறார் இயேசு. இயேசுவின் சமகாலத்தில் மெசியா பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. மெசியா என்றால் அரசராக அல்லது அருள்பணியாளராக வந்து தங்களை எதிரிகளின் கைகளிலிருந்து விடுவிப்பார் என்று மக்கள் நம்பினர். இந்த நம்பிக்கை யோவானுக்கும் இருந்தது. ஆனால், இயேசு அப்படி எந்த ஒரு முயற்சியையும் எடுக்காமல் இருப்பதைப் பார்த்து, சற்றே குழப்பத்துடன் தன; சீடர்களை அனுப்புகிறார் யோவான். இயேசுவின் மெசியா புரிதல் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. இயேசுவைப் பொருத்தவரையில் மெசியாவின் செயல்கள் என்பவை தனிநபர் வாழ்வில் நடந்தேறுபவை: ‘பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர், கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர், தொழுநோயாளர் நல மடைகின்றனர், காதுகேளாதோர் கேட்கின்றனர், இறந்தோர் உயிர்பெற்று எழுகின்றனர், ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது’ என்று மெசியாவின் வருகையின் மாற்று அடையாளங்களைச் சொல்லி அனுப்புகின்றார்.
மூன்று வாசகங்களிலும் துன்பம் பின்புலமாக நிற்கிறது: (அ) முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்கள் அசீரியாவின் அடிமைத்தனத்தில் இருக்கிறார்கள் (ஆ) இரண்டாம் வாசகத்தில், எதிர்காலம் பற்றியஅச்சம் யாக்கோபின் திரு அவைக்குத் துன்பம் தருகிறது (இ) நற்செய்தி வாசகத்தில், திருமுழுக்கு யோவான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இருந்தாலும், அடிமைத்தனம், அச்சம், சிறையடைப்பு என்னும் மூன்று துன்பநிலையில் இருந்தவர்களும் மெசியாவின் செயல்களைக் கேள்வியுறுகிறார்கள், காண்கிறார்கள், அனுபவிக்கிறார்கள்.
இன்று நம் வாழ்வில் நாம் அனுபவிக்கும் துன்பங்களையும், மேற்காணும் துன்ப நிலைகளோடு பொருத்திப் பார்க்க இயலும். பழக்கங்கள் மற்றும் மனிதர்களுக்கு அடிமையாக இருக்கின்ற நிலையில் நாம் துன்பம் அனுபவிக்கின்றோம். எதிர்காலம் பற்றிய அதீத அச்சமும் மற்ற பயங்களும் நமக்குத் துன்பம் தருகின்றன. நம் குறுகிய எண்ணங்களில் நாம் சிறைப்பட்டுக் கிடக்கும்போதும் துன்பப்படுகின்றோம்.
விளைவு, மெசியா நம் வாழ்வில் ஆற்றும் செயல்களைக் காண இயலாததோடு, அவற்றைச் செய்யவும் நாம் துணிவதில்லை. துன்பம் நீக்குதலே மெசியாவின் செயல்.
மெசியாவின் செயல்களை நாம் காணவும், அனுபவிக்கவும், செய்யவும், இவ்வாறாக, மகிழ்ச்சியைக் கண்டுகொள்ளவும் நாம் செய்ய வேண்டியது என்ன?
(அ) உள்ளத்தில் உறுதி
‘தளர்ந்து போன கைகளைத் திடப்படுத்துங்கள். தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள்’ என அழைப்பு விடுக்கின்றார் எசாயா. உள்ளத்தில் உறுதி குலையும்போது, நம் உடலின் உறுதியும் குலைந்து போகிறது. நம் தனிநபர் வாழ்வில், குடும்பத்தில், நட்பு வட்டத்தில், சமூகத்தில் உள்ளத்தில் உறுதியற்று வாழ்பவர்கள் ஏராளம். தவறான முடிவுகளாலும், கோபம், குற்றவுணர்வு, பயம், தாழ்வு மனப்பான்மை, ஒப்பீடு, பொறாமை போன்ற காரணங்களால் உள்ளம் உறுதியற்றுக் கிடக்கும் நபர்களுக்கு ஊக்கம் தருவது மெசியாவின் செயல்.
(ஆ) பொறுமை
நம் வாழ்வில் நம்மை அறியாமல் ஏதோ ஓர் அவசரம் நம்மைப் பற்றிக்கொள்ள அனுமதிக்கிறோம். எதையாவது செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற நிர்பந்தமும் நம்மை அழுத்துகிறது. இந்த இடத்தில் யாக்கோபு தருகின்ற உருவகத்தின் பொருளை உணர்ந்து கொள்வோம். பயிரிடுபவர் கொண்டிருக்கும் பொறுமையை நாம் கொண்டிருக்க வேண்டும். நிலத்தில் விதைகளை இட்ட விவசாயி விதை தானாக வளரும் வரை பொறுமையுடன் இருக்க வேண்டும். நிலத்தின் ஈரப்பதம், சத்து, வெளிப்புற காரணிகள் ஆகியவற்றைப் பொருத்து வளர்ச்சி வேகமாகவோ, தாமதமாகவோ அமையும். விதை முளையிடும்வரை பொறுமை காப்பதை விடுத்து, எதையாவது செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக, நிலத்தைத் தோண்டித் தோண்டி விதையைப் பார்த்துக் கொண்டிருந்தால் விதை முளைக்காது. அவசரம் குறைத்து பொறுமை ஏற்றால்தான் நம் வாழ்வில் மெசியாவின் செயல் நடந்தேறுதலைக் காண முடியும். நாமும் அச்செயலைச் செய்ய முடியும்.
(இ) சிறைப்படாத உள்ளம்
யோவானின் உடல் சிறைப்பட்டிருந்தாலும் அவருடைய உள்ளம் என்னவோ கட்டின்மையோடே இருக்கிறது. தன்னைச் சுற்றி நடக்கும் செயல்கள் பற்றிய அவருடைய அறிவு நமக்கு வியப்பளிக்கிறது. மெசியாவின் செயல்கள் ஆலயங்களில் அல்ல; சிறைக்கூடங்களின் தனிமையில் விரக்தியில் கண்டுகொள்ளப்படுகின்றன. மெசியாவின் செயல்களைக் கேள்வியுற்ற யோவான் உடனடியாகச் செயலாற்றுகின்றார். இவ்வாறாக, மெசியாவின் செயல்கள் தொடர்ந்து நடந்தேறுவதற்கான தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கின்றார். யோவானின் பரந்த உள்ளம் மகிழ்ச்சிக்கான முக்கியக் கூறு.
இன்றைய பதிலுரைப் பாடலில், திருப்பாடல் ஆசிரியர், ‘சீயோனே! உன் கடவுள் என்றென்றும் எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சிசெய்கின்றார்’ (146:10) என்று பாடுகின்றார். மெசியாவின் செயல்கள் இஸ்ரயேல் மக்களுக்கும் இயேசுவின் சமகாலத்தவருக்கும் மட்டும் உரியவை அல்ல; மாறாக அவை இன்றும் நம்மில் நம் வழியாக நடந்தேறுகின்றன.
அவரின் செயல்கள் நம் வாழ்வில் மகிழ்ச்சி தருகின்றன.
Comment