ஞாயிறு – 05.03.2023
தவக்காலம் இரண்டாம் ஞாயிறு - தொநூ 12:1-4, 2 திமொ 1:8-10, மத் 17:1-9
உள்ஒளி
தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறில் இயேசுவின் உருமாற்ற நிகழ்வை தியானிக்கின்றோம்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள தன் நண்பர் பற்றி என் நண்பர் நேற்று பேசிக்கொண்டிருந்தார். பருமனான உடல் கொண்டிருந்த அவரது நண்பர் புற்றுநோயால் அவதிப்பட்டுக் கிடக்கிறார் எனவும், அவர் மிகவும் மெலிந்து விட்டார் எனவும், அவரது முதுகு தண்டுவடம் கூட வெளியே தெரிகிறது எனவும் சொன்னார். நம் கண்முன்னாலேயே மனிதர்களின் உருவம் மாறுகின்றது.
ரொம்ப ஆண்டுகளாகப் பார்க்காத ஒருவரை திடீரென பார்க்கும்போது, அவரின் தலைமுடி வெள்ளையாகவும், ஆள் ஒல்லியாகவும் அல்லது குண்டாகவும் இருந்தால், அவரை நாம் முன்னால் பார்த்த முகம் உடனே வந்து போகிறது. ‘என்ன அப்படியே மாறிட்டீங்க!’ என ஆச்சர்யப்படுகிறோம்.
இன்னும் சிலர் முன்னால் நமக்கு நெருக்கமாக இருந்தவர்கள். இன்று ஏதோ ஒரு காரணத்தால் நம்மிடமிருந்து விலகி இருப்பார்கள். அவர்களைப் பற்றி யாராவது நம்மிடம் விசாரித்தால், ‘அவர் முன்னால் மாதிரி இல்ல. மாறிட்டார்’ என ஆதங்கப்படுகிறோம்.
ஆக, நாமும் நம் கண்முன் நடக்கும் உடல் மாற்றங்களையும், உணர்வு மாற்றங்களையும், உறவு மாற்றங்களையும் பார்க்கின்றோம்.
மாற்றத்தை திடீரென்று பார்க்கும்போது, நம்மால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
குழந்தைகளாக இருந்த நாமே வளர்ந்தோம், சிறுவர்கள் ஆனோம், இளமை வந்தது, மாறிக்கொண்டேயிருக்கிறோம். நம்மில் நிகழும் இந்த மாற்றம் மெதுவாக நடப்பதால் நாம் அதை அப்படியே ஏற்றுக்கொள்கிறோம்.
தனக்கு மிகவும் நெருக்கமான சீடர்கள் வட்டத்தில் இருந்த பேதுரு, யோவான், யாக்கோபு ஆகியோரைக் கூட்டிக்கொண்டு இயேசு ஓர் உயர்ந்த மலையில் ஏறுகின்றார். இயேசு எல்லாரையும் ஏற்றுக்கொண்டார். ஆனால், ஒவ்வொருவரையும் ஒவ்வொரு வட்டத்தில் வைத்து, அன்பு செய்தார். அந்த வகையில், இந்த மூன்று சீடர்களும் இயேசுவுக்கு மிக நெருக்கமாக இருந்தனர்.
மலையில் ஏறிச்சென்றவர் உருமாறினார் என, மத்தேயு நற்செய்தியாளர் பதிவு செய்கின்றார். மாறிய உருவம் எப்படி இருந்தது என வர்ணிக்காமல், அவரது முகம் கதிரவனைப் போல ஒளிர்ந்தது என்கிறார் மத்தேயு. முகம் மட்டுமல்ல; ஆடையும் வெண்ணிறமாக ஒளிர்கிறது. ஆக, இயேசு ஒளியாக மாறுகின்றார். அந்த ஒளி மாற்றத்தில் மோசே மற்றும் எலியாவையும் கண்டுகொள்கின்றனர் சீடர்கள். அவர்கள் தோன்றியது மட்டுமல்லாமல் இயேசுவோடு உரையாடிக்கொண்டும் இருந்தனர். அந்த உரையாடலும் பதிவு செய்யப்படவில்லை.
இந்த நேரத்தில்தான் இயேசுவைப் பார்த்து பேதுரு உரையாடுகிறார்:
‘ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும், மோசேக்கு ஒன்றும், எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? உமக்கு விருப்பமா?’
பேதுரு தன் கண் முன்னால் காண்பதை அப்படியே ஃப்ரீஸ் செய்ய விரும்புகிறார்.
அதாவது, ஃபோட்டோ எடுத்துக்கொள்ள விரும்புகிறார். நாம் இன்று நிறைய ஃபோட்டோக்கள் எடுக்கிறோம். நம்மை நாமே செல்ஃபி எடுக்கிறோம் அல்லது பிறரை எடுக்கிறோம். அதை நாம் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளவும் செய்கிறோம். ஃபோட்டோ எடுக்கும்போது, என்ன நடக்கிறது. நாம் இருக்கும் இடத்திலும், நேரத்திலும் நம்மை அப்படியே உறையச் செய்து விடுகிறோம். ஆகையால்தான், ஒரு ஃபோட்டோவைக் காட்டும்போது இது இந்த இடத்தில், இந்த நேரத்தில் எடுக்கப்பட்டது என்கிறோம். ஃபோட்டோக்கள் மாறுவதில்லை. ஃபோட்டோவில் இருப்பது அப்படியே உறைந்து விடுகிறது.
பேதுரு இயேசுவையும், மோசேயையும், எலியாவையும் மூன்று கூடாரங்களுக்குள் வைத்து அப்படியே உறையச் செய்ய விரும்புகின்றார்.
பேதுருவின் கேள்விக்கு இயேசுவோ, மோசேவோ, எலியாவோ பதில் சொல்லவில்லை.
ஆனால், அந்த நேரத்தில் வானத்திலிருந்து ஒரு குரல் கேட்கிறது.
‘என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு பூரிப்படைகிறேன். இவருக்கு செவிசாயுங்கள்’
பேதுரு ஒன்று கேட்க, பதில் குரல் வேறொன்றாக இருக்கிறது.
அவர்கள் அச்சத்தால் முகங்குப்புற விழுகிறார்கள்.
புதிய ஒளி, புதிய நபர்கள், புதிய குரல் - விளைவு அச்சம்.
முகங்குப்புற விழுவதை சரணாகதியின் அடையாளம் என்றும் அல்லது பயத்தின் விளைவு என்றும் சொல்லலாம். எவ்வளவு நேரம் இப்படி விழுந்து கிடந்தார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், கொஞ்ச நேரத்தில் இயேசு அவர்களிடம் வந்து அவர்களைத் தொட்டு, ‘எழுந்திருங்கள். அஞ்சாதீர்கள்!’ என்கிறார்.
அத்தோடு, ‘இங்கே நடந்ததை மானிட மகன் இறந்து உயிர்க்கும்வரை யாரிடமும் சொல்லாதீர்கள்!’ என அவர்களுக்குக் கட்டளையிடுகிறார்.
ஆக, இயேசுவின் உருமாற்ற நிகழ்வு அவருடைய பாடுகள், இறப்பு, உயிர்ப்போடு தொடர்புடையது. எப்படி?
இங்கே தாபோர் மலை. அங்கே கல்வாரி மலை.
இங்கே அவரின் முகம் ஒளிர்கிறது. அங்கே அவரின் முகம் தூசி படிந்து இருக்கிறது.
இங்கே அவரின் ஆடைகள் வெண்ணிறமாக இருக்கின்றன. அங்கே அவரின் உடலில் ஆடைகள் இல்லை.
இங்கே மோசேயும், எலியாவும் உடன் நிற்கின்றனர். அங்கே இரண்டு கள்வர்கள் உடன் நிற்கின்றனர்.
இங்கே பேதுரு இருக்க விரும்புகிறார். அங்கே அவரை விட்டு ஓடிவிடுகின்றார்.
இங்கே வானகத் தந்தையின் குரல் கேட்கிறது. அங்கே மக்கள் மற்றும் படைவீரர்களின் ஏளனம் கேட்கிறது.
இங்கே சீடர்கள் முகத்தை மூடிக்கொள்கின்றனர். அங்கே கதிரவன் தன் முகத்தை மூடிக்கொள்கிறது.
இங்கே வெளிச்சம். அங்கே இருள்.
இங்கே சீடர்களை எழுந்திருக்கச் சொல்கின்றார் இயேசு. அங்கே தானே உயிர்த்து எழுகின்றார்.
ஆனால், இரண்டிற்கும் ஒரே ஒரு முக்கியமான ஒற்றுமை இருக்கிறது.
இங்கேயும், அங்கேயும் மாட்சி பெறுகின்றார் இயேசு.
ஆக, இயேசு தன் பாடுகள், இறப்பு, உயிர்ப்பு வழியாக இறைமகன் என்னும் மாட்சி பெறுகின்றார். அந்த இறை மகனுக்குச் செவி கொடுங்கள் என்ற செய்திதான் இங்கே சீடர்களுக்குத் தரப்படுகிறது.
இயேசுவின் உருமாற்ற நிகழ்வை சீடர்கள் எப்படி புரிந்திருப்பார்கள்?
மாற்கு நற்செய்தியாளர் சீடர்களின் புரியாத தன்மையை அடிக்கடி பதிவு செய்கிறார். இயேசுவும், அவருடைய மெசியா அடையாளமும் சீடர்களுக்கு இறுதிவரை மறைபொருளாகவே இருக்கின்றது.
இன்றைய நற்செய்தியில் உள்ள முரண் என்னவென்றால், கதிரவன்போல வந்த வெளிச்சம்கூட, சீடர்களின் அறியாமை என்னும் இருளைப் போக்கவில்லை.
நம் நம்பிக்கை வாழ்விலும் இதுபோல நடக்க வாய்ப்பு இருக்கிறது.
நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் கதிரவன் போல ஒளிர்ந்தாலும், நம் உள்ளத்தில் இருக்கும் தயக்கம் அல்லது சந்தேகம் என்னும் இருள் களைவதில்லை. மற்றவர்கள் கடவுளைப் பற்றிச் சொல்வதெல்லாம் நமக்குப் புரிந்தாலும், அவரை ஏற்றுக்கொள்ள நம் மனம் தயக்கம் காட்டுகிறது.
சீடர்களின் தயக்கம் இயேசுவின் உயிர்ப்பில்தான் மாறுகிறது. அதுவரை அவர்கள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்கின்றனர். ஆக, நம்பிக்கை வருவதற்கும், வளர்வதற்கும் வெளி ஒளி தேவை அல்ல; மாறாக, உள்ஒளியே தேவை.
இதைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 2 திமொ 1:8-10), ‘அழியா வாழ்வை நற்செய்தி வழியாக ஒளிரச் செய்தார்’ என திமொத்தேயுவுக்கு எழுதுகிறார் தூய பவுல். நற்செய்தி என்பது நாம் வெளியே இருந்து வாசிக்கக் கேட்பது அல்ல; மாறாக, இயேசுவே நற்செய்தி. அந்த நற்செய்தியை நாம் நம் உள்ளத்தில் உணர்தலே ஒளி.
இன்றைய முதல் வாசகத்தில் (தொடக்கநூல் 12:1-4) நம் முதுபெரும் தந்தை ஆபிராம் இறைவனால் அழைக்கப்படுகின்றார். ‘உன் நாட்டிலிருந்தும், உன் இனத்திலிருந்தும், உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் காட்டும் நாட்டிற்குச் செல்’ என்று கட்டளை இடுகின்றார் கடவுள். ஆபிராமும் அவ்வாறே புறப்பட்டுச் செல்கின்றார். இந்த நிகழ்வையே எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர், ‘தாம் எங்கே போக வேண்டும் என்று தெரியாதிருந்தும் அவர் புறப்பட்டுச் சென்றார்’ (எபி 11:8) என எழுதுகின்றார். வெளியே இருளாக இருந்தாலும், தன் உள்ளத்தில் ஒளி இருந்ததால் புறப்பட்டுச் செல்கின்றார் ஆபிராம்.
இவ்வாறாக, இன்றைய இறைவாக்கு வழிபாடு முன்வைக்கும் கருத்து ‘உள்ஒளி.’ இந்த உள்ஒளியைக் கண்டுகொள்வதே உருமாற்றம். உள்ஒளி நம்மில் எப்போதும் இருக்கிறது. இந்த உள்ஒளியை நாம் எப்படிக் கண்டுகொள்வது?
1. இறைவனின் குரலைக் கேட்பது
காரானில் வாழ்ந்து வந்த ஆபிரகாமை ஆண்டவர் அழைக்கின்றார். ஆண்டவரின் குரலை அவர் எப்படி கண்டுகொண்டார்? என்று நினைத்துப்பார்ப்பது மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது. உள்ளத்தின் குரல் என்பது, நாம் அனுபவிக்கும் ஒன்று. ‘இதைச் செய்! இதைச் செய்யாதே! இதைப் பார்! அதைப் பார்க்காதே!’ என்று ஏதோ ஒரு குரல் நம்மை வழிநடத்திக்கொண்டே இருக்கிறது. இதை நாம் மனம், மனச்சான்று என்றழைக்கின்றோம். சில நேரங்களில் இந்தக் குரல் - மூளையிலிருந்து எழும் இந்தக் குரல் - நம்மை ஏமாற்றியும்விடுகிறது. சில நேரங்களில் நாம் இக்குரலை வெளியிலிருந்து கேட்கின்றோம் - நண்பர்கள் வழியாக, பெற்றோர்கள் வழியாக, முன்பின் தெரியாதவர்கள் வழியாக. ஆனால், இந்த எல்லாச் சப்தங்களிலிருந்தும் இறைவனின் சப்தத்தை, குரலை எப்படி உணர்ந்துகொள்வது? உருமாற்றத்தில் சீடர்கள் கேட்கின்ற குரலில், ‘இவருக்குச் செவிகொடுங்கள்’ என்று சொல்லப்படுகிறது. ஆக, அவருக்குச் செவிகொடுப்பதே, அவரின் குரலைக் கேட்பதே நம் உள் ஒளியைக் கண்டுகொள்ள முடியும் என்றால், அவரோடு நாம் ஏற்படுத்தும் நெருக்கமே அவரின் குரலுக்கு அருகில் நம்மைக் கொண்டுசெல்லும்.
2. நற்செய்தியின் பொருட்டு துன்புறுவது
உள்ஒளியைக் காணுதல் என்பது, துன்பத்தின் வழி. துன்பம் நம்முடைய வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்று. நாம் எடுக்கின்ற முடிவுகள் சில நேரங்களில் நமக்குத் துன்பத்தைத் தரலாம். நம்மைத் தழுவிக்கொள்கின்ற நோய்கள், வறுமை, முதுமை துன்பத்தைத் தரலாம். ஆனால், நற்செயல் செய்ய அல்லது நற்செய்தி கேட்க என்று நாம் ஒரு தெரிவை மேற்கொள்ளும்போதும் அது நமக்குத் துன்பத்தைத் தருகிறது. அத்துன்பத்தை உவந்து ஏற்றுக்கொள்ளுமாறு தன் அன்பார்ந்த பிள்ளை திமொத்தேயுவுக்கு எழுதுகிறார் பவுல்.
3. எழு - அஞ்சாதே - பொறுமையாய் இரு
தன்னுடைய உருமாற்றத்தைக் கண்ட சீடர்களுக்கு இயேசு அடுத்தடுத்து மூன்று கட்டளைகளை இடுகின்றார்: ‘எழு,’ ‘அச்சம் தவிர்,’ ‘பொறுiமாய் இரு’. ‘எழுவது’ என்பது நாம் இன்னும் முன்னேறிச் செல்ல வேண்டும் என்பதையும், ‘அஞ்சாதே’ என்பது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதையும், ‘சொல்லாதே’ என்பது பொறுமை காத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது. வேகமான இந்த உலகத்தில் நாம் இந்த மூன்றையும் செய்யத் தவறிவிடுகின்றோம். எனது வீடு, எனது குடும்பம், எனது வேலை, எனது படிப்பு என அப்படியே அமர்ந்துவிடுகிறோம். அவற்றிலேயே அமிழ்ந்து விடுகிறோம் அல்லது இவற்றைக் குறித்து கலக்கம் கொள்கிறோம் அல்லது பொறுமையற்று அனைத்தையும் அனைவரிடமும் புலம்பித் தள்ளிவிடுகிறோம். ‘ஒவ்வொன்றிற்கும் ஒரு நேரம் உண்டு’ என்பதை மறக்காமல் இருப்பதே உள்ஒளி. தாபோருக்கு ஒரு நேரம், கல்வாரிக்கு ஒரு நேரம்.
இறுதியாக, ‘உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால் உமது பேரன்பு எங்கள்மேல் இருப்பதாக’ என்கிறார் திருப்பாடல் ஆசிரியர் (காண். திபா 33:22). அவர்மேல் நம்மேல் காட்டும் பேரன்பே உள்ஒளி. அதை அடைவதே நம்முடைய நம்பிக்கைப் பயணம்.
Comment