No icon

ஞாயிறு – 14.05.2023

உயிர்ப்புக் காலம் 6 ஆம் ஞாயிறு திப 8:5-8,14-17, 1 பேது 3:15-18, யோவா 14:15-21

உள்ளத்தின் உயிர்ப்பு

நாம், நம்முடைய நம்பிக்கை அறிக்கையில், ‘பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு, மரித்து, மூன்றாம் நாள் (இயேசு) உயிர்த்தெழுந்தார்என்றும், ‘உடலின் உயிர்ப்பை நம்புகிறேன்என்றும் அறிக்கையிடுகின்றோம்.

இவை இரண்டுமே உடலின் உயிர்த்தெழுதலையே குறிப்பிடுகின்றன.

உடலின் உயிர்ப்புக்கு முன், உள்ளத்தின் உயிர்ப்பு அல்லது உள்ளத்தால் உயிர்ப்பு அல்லது ஆன்மாவின் உயிர்ப்பின் அவசியத்தை இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு உணர்த்துகிறது.

இயேசுவின் உயிர்ப்பு, நம் வாழ்வின் திசையை மாற்றுகிறது என்பதை கடந்த வாரங்களில் நாம் வெவ்வேறு நிலைகளில் சிந்தித்தோம். இயேசுவின் விண்ணேற்றமும், தூய ஆவியார் பெருவிழாவும் நெருங்கி வருகின்ற வேளையில், இந்த வார வாசகங்கள் அவற்றுக்கு நம்மை தயாரிப்பது போல இருக்கின்றன. இன்றைய முதல் வாசகத்தில் சமாரியர்கள் மேல் தூய ஆவியார் பொழியப்படுவதையும், நற்செய்தி வாசகத்தில், இயேசு தாம் அனுப்பப் போகிற தூய ஆவியார் பற்றி முன்மொழிவதையும் நாம் பார்க்கின்றோம்.

இன்றைய முதல் வாசகம் (காண். திப 8:5-8,14-17), ‘சமாரியர்களின் பெந்தகோஸ்துஎன அழைக்கப்படுகிறது. ஏனெனில், சமாரியாவில் வாழ்ந்த நம்பிக்கையாளர்கள் மேல் தூய ஆவியார் எப்படி பொழியப்பட்டது என்பதை இந்நிகழ்வு நமக்குக் காட்டுகிறது. சமாரியர்கள் முதலில் திருமுழுக்கு பெறுகின்றனர். ஆனால், திருமுழுக்கின்போது அவர்கள் மேல் தூய ஆவியார் பொழியப்படவில்லை. மற்றவர்கள் திருமுழுக்கு பெறும்போது, தூய ஆவியார் இணைந்தே பொழியப்படுகின்றார் (காண். திப 2:38, 9:17-18). தூய ஆவியார் ஆள்பார்த்துச் செயல்பட்டாரா அல்லது தொடக்கத் திருஅவையில் நிலவிய சமய அரசியலையும், இனவெறுப்பையும் காட்டுகிறதா என்று தெரியவில்லை. தொடக்கத் திரு அவையில் இனவெறுப்பு கண்டிப்பாக இருந்திருக்கும். யூதராக இருந்து, புதிய நம்பிக்கையைத் தழுவியவர்கள் கண்டிப்பாக சமாரியர்களாக இருந்து, புதிய நம்பிக்கையைத் தழுவியவர்களை இகழ்ச்சியுடன்தான் பார்த்திருப்பார்கள்.

திருத்தொண்டர் பிலிப்பு சமாரியாவில் பணி செய்கின்றார். அவருடைய போதனை மற்றும் வல்ல செயல்களைப் பார்த்து  நிறையப் பேர்  கிறிஸ்துவில்  நம்பிக்கை  கொள்கின்றனர். அவர்களுக்கு பிலிப்பு திருமுழுக்கு கொடுக்கின்றார். ஆனால், பேதுருவும், யோவானும் வந்து அவர்கள்மேல் கைகளை வைத்தபின்தான், அவர்கள்மேல் தூய ஆவியார் பொழியப்படுகிறார். ஒருவர் திருமுழுக்கு கொடுக்க, இன்னொருவருவர் தூய ஆவியாரைக் கொடுப்பது ஏன்? அல்லது திருமுழுக்கிற்கும்தூய ஆவியார் வருகைக்கும் ஏன் இந்த இடைவெளி? ஒன்று, திருத்தூதர் பணிகள் நூல் எழுதப்பட்ட காலத்தில், திருஅவையில் படிநிலை அல்லது பணி வரையறை வளர்ந்திருக்கலாம். திருத்தொண்டரின் பணி திருமுழுக்கு கொடுப்பது என்றும், தூய ஆவியாரைக் கொடுப்பது திருத்தூதர்களின் பணி என்றும் வரையறை வளர்ந்திருக்கலாம். இதே வரையறைதான் இன்று வரை நம் திருஅவையில் இருக்கிறது. திருத்தொண்டர் யாருக்கும் திருமுழுக்கு கொடுக்கலாம். ஆனால், திருத்தூதர்களின் வழிமரபினர் என்று சொல்லப்படுகின்ற ஆயர்கள் மட்டுமே உறுதிப்பூசுதல் (தூய ஆவியாரின் நிரப்புதல்) அருளடையாளம் கொடுக்க முடியும். இரண்டு, திருமுழுக்கு மற்றும் உறுதிப்பூசுதல் என்ற அருளடையாள வரையறை தொடங்கியிருக்கலாம். அதாவது, திருமுழுக்கு பெறுபவரின் திடம், உறுதியான மனநிலை, தன்னுடைய பழைய வாழ்வுக்குத் திரும்பாமை ஆகியவை கண்காணிக்கப்பட்டு, பின்னர் அவர்களுக்கு தூய ஆவியார் கொடுக்கப்பட்டிருக்கலாம். மூன்று, இனவெறுப்பால் வரும் வேற்றுமை. யூதர்களுக்கு என்றால் ஒரு சட்டம், சமாரியர்கள் அல்லது புறவினத்தார் என்றால் வேறு சட்டம் என்ற சமயச் சூழல் இருந்திருக்கலாம்.

இந்த மூன்று காரணங்களில் எதுவாக இருந்தாலும், பேதுருவும், யோவானும் இங்கே உள்ளார்ந்த உயிர்ப்பு அடைகின்றனர். அதாவது, தூய ஆவியார் என்பவர் தங்களுக்கோ அல்லது யூதர்களுக்கோ உரித்தானவர் அல்ல; மாறாக, அவர் அனைவருக்கும் பொதுவானவர் என்ற விழிப்பு நிலையை அடைகின்றனர். அவர்களோடு சேர்ந்து, தொடக்கத் திருஅவையும் விழிப்பு நிலையை அடைகின்றது.

ஆக, உள்ளார்ந்த உயிர்ப்பு என்பது, ஒருவரின் இனவெறுப்பு அல்லது பகைமை உணர்வைத் தூண்டுவது.

இரண்டாம் வாசகம் (காண். 1 பேது 3:15-18) பேதுருவின் அறிவுரைப் பகுதியாக இருக்கிறது. ‘கிறிஸ்துவை ஆண்டவராகக் கொண்டு, அவரைத் தூயவரெனப் போற்றுங்கள்என தன் திருஅவைக்கு அழைப்பு விடுக்கின்றார் பேதுரு. இயேசுவை ஒரு மனிதர் என்ற நிலையிலிருந்து, கடவுள் என்ற நிலைக்கு உயர்த்த விழைகிறார் பேதுரு. ஏனெனில், ‘ஆண்டவராகிய இறைவன் ஒருவரே தூயவர்என்பது யூதர்களின் நம்பிக்கையாக இருந்தது. இப்போது தன்னுடைய உயிர்ப்பின் வழியாக இயேசுவும், இதே நிலையை அடைகின்றார். ஆக, தொடக்கத் திருஅவையில், யாவே இறைவனின் இடத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிடிக்கின்றார் இயேசு அல்லது யாவே இறைவனை, ‘தூயவர்என வழிபட்டு வந்த மக்கள், கொஞ்சம் கொஞ்சமாக இயேசுவைதூயவர்என அழைக்கத் தொடங்குகின்றனர். இயேசுவின் போதனைக்கு இது கொஞ்சம் முரணானதாக இருக்கிறது. ஏனெனில், இயேசு தன்னை ஒரு புதிய மதத்தின் நிறுவுனராகத் தன்னை ஒருபோதும் முன்வைத்ததே இல்லை. தான் தூயவர் என்று அழைக்கப்படுவதையும் அவர் விரும்பவில்லை. ஆனால், பேதுரு, இன்னும் குறிப்பாக பவுல்தான், இயேசுவை கிறிஸ்து என்று மாற்றியவர். மேலும், உள்ளார்ந்த நிலையில் இயேசுவை ஆண்டவர் என ஏற்றுக்கொண்ட ஒருவர், அதைத் தன் நன்னடத்தையான வாழ்வால் அறிக்கையிட வேண்டும் என்றும் பேதுரு அறிவுறுத்துகின்றார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் ஏற்படும் உள்ளார்ந்த உயிர்ப்பு இதுதான். அதாவது, நம்பிக்கையாளர்கள் தங்களுடைய பழைய தெய்வங்களை விலக்கி விட்டு, இயேசுவை ஆண்டவராகவும், கடவுளாகவும், தூயவராகவும் உள்ளத்தில் போற்ற வேண்டும். இது ஏன்? நம் உள்ளத்தில் ஒருவரை ஏற்றிப் போற்றும்போது, அவருக்கு முரணாக நாம் எதையும் செய்வதில்லை. அவர் நம்மோடு இருக்கிறார் என்ற உணர்வு நம்மை உந்தித் தள்ளுகிறது.

ஆக, பிற தெய்வங்களை விலக்கிவிட்டு, ஆண்டவராகிய இயேசுவை மனதில் ஏற்றுக்கொள்வதும், அந்த ஏற்றுக்கொள்தலை வெளிப்படையான நன்னடத்தையான வாழ்வால் பிரதிபலிப்பதும் உள்ளார்ந்த உயிர்ப்பு.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 14:15-21), இயேசு, துணையாளராம் தூய ஆவியாரின் வருகையைப் பற்றிப் பேசுகின்றார். தொடர்ந்து, ‘நான் உங்களைத் திக்கற்றவர்களாக (அநாதைகளாக) விட்டுவிட மாட்டேன்என்று சொல்கின்ற இயேசு, ‘அன்பு கொள்தலைப் பற்றிஅறிவுறுத்துகின்றார். ஆக, இயேசுவைப் பொறுத்தவரையில், அன்பு செய்தலே உள்ளார்ந்த உயிர்த்தெழுதல். ஏனெனில், தந்தை-மகன்-தூய ஆவியார் என்னும் மூவொரு இறைவனை ஒன்றாய்ப் பிணைப்பது அன்பு. இதே அன்புதான் தந்தை-இயேசு-சீடர் என்னும் உறவின் பிணைப்பாகவும் இருக்கிறது.

ஆக, அன்பு செய்யும் ஒருவர், இயல்பாகவே உள்ளார்ந்த உயிர்த்தெழுதலை அடைகிறார்.

இவ்வாறாக,

முதல் வாசகத்தில், உள்ளார்ந்த உயிர்த்தல் என்பது இனவெறுப்பு அல்லது பகைமையைத் தாண்டுவதாகவும், இரண்டாம் வாசகத்தில், இயேசுவின்மேல் நம்பிக்கை கொண்டு, நன்னடத்தையுடன் வாழ்வதையும், நற்செய்தி வாசகத்தில் அன்பு செய்தலையும் குறிக்கிறது.

உள்ளார்ந்த உயிர்த்தல் அல்லது உள்ளம் உயிர்த்தலே நம் உடல் உயிர்ப்பின் முன்னோடி.

Comment