No icon

13, ஆகஸ்டு, 2023

ஆண்டின் பொதுக்காலம் 19 ஆம் ஞாயிறு (1 அர 19:9அ,11-13அ உரோ 9:1-5; மத் 14: 22-33)

கடவுள் எப்போதும் உடனிருக்கிறார்!

இன்றையச் சூழலில் மணிப்பூர் நம் கண்முன் வரட்டும். 150க்கும் மேலான உயிரிழப்புகள், எரிந்து நாசமான ஆயிரக்கணக்கான வீடுகள், கடைகள், தாக்கப்பட்டுள்ள முந்நூறுக்கும் அதிகமான ஆலயங்கள், உயிருக்கு அஞ்சி ஊர்களிலிருந்து இடம்பெயர்ந்து காடுகளிலும், முகாம்களிலும் தஞ்சம் புகுந்த ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான மக்கள், இவர்கள் எழுப்புகின்ற கேள்வி: ‘கடவுள் எங்கே?’ என்பதுதான்.

இயற்கைப் பேரிடர்களாலோ, மனிதரின் வன்முறைகளாலோ துன்பங்கள் நம்மைத் தாக்கும் போது, ‘கடவுள் எங்கே?’ என்ற கேள்வியை அடிக்கடி நாம் எழுப்புகின்றோம். வாழ்வில் துன்பங்களும், போராட்டங்களும் நம்மைச் சூழும் நேரங்களில், கடவுள் காணாமற் போய்விட்டதைப்போல் உணர்கிறோம். உலகப் புகழ்பெற்ற மனநல மருத்துவர் கார்ல் யுங் (Carl Ung) அவர்களின் அறைக்கு வெளியே, ஒரு கல்லில் பொறிக்கப்பட்டிருந்த சொற்கள் இவை: ‘Called or Not,  God is Present’ - அழைத்தாலும், அழைக்கவில்லையென்றாலும், கடவுள் எப்போதும் உடனிருக்கிறார்! மறுக்க முடியாத இந்த உண்மையை நம் உள்ளத்தில் இன்னும் ஆழமாய்ப் பதிக்க, இன்றைய ஞாயிறு வழிபாடு நமக்கு வாய்ப்பளிக்கின்றது.

நம் வாழ்வில் நாம் சந்திக்கும் இடர்ப்பாடுகளுக்கு மத்தியில், இறைவனை நோக்கி எழுப்புகின்ற அபாயக் குரலில் கடவுள் எவ்வகையில் நம் உடனிருக்கிறார் என்ற உண்மையை இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எலியா வழியாகவும், நற்செய்தி வாசகத்தில் புனித பேதுரு வழியாகவும் கற்றுக்கொள்வோம்.

இஸ்ரயேல் மற்றும் யூதா பகுதிகளுக்கு ஆண்டவரால் அனுப்பப்பட்ட முக்கியமான இறைவாக்கினர் வரிசையில் முதலாவதாக வருபவர் எலியா. இஸ்ரயேல் நாட்டை ஆண்ட அரசர்களுள் ஆண்டவரில் நம்பிக்கை வைத்து வாழ்ந்தவர்கள் மிகவும் குறைவு. ஏறக்குறைய எல்லா அரசர்களுமே தீய வழியில் நடந்தனர். மக்கள் வேற்றுத் தெய்வங்களை வழிபட்டனர். அவ்வாறு வழிபட்ட தெய்வங்களுள் முக்கியமானது பாகால்.

பாகால் ஒரு கானானேயக் கடவுள். இந்தப் பாகால் கடவுளுக்குச் சமாரியாவில் கோவில் கட்டி வழிபட ஆரம்பிக்கிறார் அரசர் ஆகாபு. ‘பாகால் கடவுள் அல்ல; யாவே ஆண்டவரே உண்மையான கடவுள்’ என வாதிடுகிறார் எலியா. பாகால் என்ற தெய்வத்தை வைத்துப் பிழைப்பு நடத்தி வந்த பொய்வாக்கினர்களைக் கீசோன் ஓடைக்குக் கொண்டுபோய் அங்கே அவர்களைக் கொல்கிறார். இதைக் கேள்விப்பட்டதும் அரசி ஈசபேல் எலியாவைக் கொல்லச் சபதமெடுக்கிறார். எனவே, ஈசபேலின் கோபத்திற்கு உள்ளானதால், நாட்டை விட்டு ஓடிப் போகிறார். தான் வாழ்ந்தது போதும் என்று விரக்தி அடைகிறார் எலியா.

ஆண்டவரின் வார்த்தையை அறிவிக்க அனுப்பப்பட்டவர்கள் உண்மையுடன் செயல்படும்போது, அதிகாரத்தில் இருப்பவர்களிடமிருந்து ஆபத்தைச் சந்திக்கிறார்கள் என்பது எலியாவின் வாழ்வில் தெளிவாகிறது. தம் உயிரைக் காக்கத் தப்பியோடுகின்ற எலியாவை, ஆண்டவர் பாலைவனம் வழியாக ஓரேபு என்ற தம் திருமலைக்கு அழைத்து வந்து, ஒரு குகையில் தங்க வைக்கிறார். அவர் தம்மை ‘அடக்கமான மெல்லிய ஒலியில்’ எலியாவுக்கு வெளிப்படுத்துகிறார். இறைவனின் அழைப்பை எலியா கேட்கிறார். ஆண்டவரின் உண்மையான ஊழியர்கள் எப்போதும் தனித்து விடப்படுவதில்லை. மனிதர்கள் அவர்களைக் கைவிட்டாலும், ஆண்டவர் அவர்களோடு இருக்கிறார், அவர்களுக்கு வழித்துணை புரிகிறார் என்ற உண்மையைப் புரிந்துகொள்கிறார்.

இன்றைய நற்செய்தி நிகழ்வில், இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவளித்த பிறகு மக்களையும், சீடர்களையும் அனுப்பிவிட்டு, தந்தையோடு உரையாட மலைக்குச் செல்கிறார். அவர் அங்கேயே தங்கிவிடவில்லை. நடுக்கடலில் காற்றோடும், அலைகளோடும் போராடிக் கொண்டிருந்த சீடர்களை நோக்கிச் செல்கிறார்; அவர்களை நோக்கிக் கடலில் நடக்கிறார். அந்தோ! பரிதாபம்! புயல் நடுவே தங்களைத் தேடி வரும் இயேசுவை அவர்கள் அடையாளம் கண்டுகொள்ளவில்லை. இயேசுவைப் ‘பேய்’ என்று எண்ணினர் சீடர்கள். ‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்பார்கள். இங்கே அரண்ட சீடர்களின் கண்களுக்கு ஆண்டவரும் பேயாகத் தெரிகின்றார். சீடர்களின் மனநிலை, மங்கிப்போன பார்வையைக் கண்டு இயேசு உடனே அவர்களைக் கடிந்துகொள்ளவில்லை. மாறாக, “துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்” என்று நம்பிக்கையைக் கொடுக்கிறார். இயேசுவும் படகில் ஏறுகிறார்; காற்றும் அடங்கியது.

மேலும், இயேசு தம் கண்முன் நிற்கிறார் என்பதைக் காணும்போது, பேதுரு எதைப் பற்றியும் சிந்திக்காமல், தன்னைச் சூழ்ந்துள்ள புயலையும், அலையையும் பொருட்படுத்தாமல் இயேசுவை நோக்கி நடந்து செல்கிறார். சற்று நேரத்துக்கு முன்புதான் இயேசுவைப் பேய் என்று கருதியவர், இயேசுவின் குரலைக் கேட்டதும் அவருக்குள் அத்தனை மாற்றங்கள்! தன் கண்முன் தெரிபவர் இயேசுதாம் என்று கண்டுகொண்டதும், தனக்குள் பாதுகாப்பை உணர்கிறார். இயேசு தன் பக்கம் இருக்கிறார் என்ற நம்பிக்கைக் கொண்டார். “ஆண்டவர் என் பக்கம் இருக்க, நான் ஏன் அஞ்ச வேண்டும்?” என்னும் தாவீதின் வரிகள் இங்கு நினைவுக்கு வருகின்றன (திபா 118:6). ஆனால், எப்போது பேதுருவின்  பார்வை இயேசுவிடமிருந்து அகன்று, தன்னைச் சூழ்ந்து காணப்படும் பெரும் ஆபத்தை நோக்கிச் சென்றதோ, அப்போது ‘ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்’ என்று கதறுகிறார்.

யாவே தம் மக்களைத் துன்பங்களின் மத்தியில் எவ்வாறு உடனிருந்து காத்து வந்தாரோ, அதே போல் இயேசுவும் பேதுருவையும், அவரிடம் ஒப்படைக்கப்படும் திரு அவையையும் என்றும் காக்க உறுதியளிப்பதாக மத்தேயு குறிப்பிடுகிறார். உள்ளத்தில் பெருந்துயரமும், இடைவிடாத வேதனையையும் பவுல் கிறிஸ்துவின் பொருட்டு அனுபவிக்க நேரிட்ட போதிலும், துன்பத்தின் நடுவே இயேசுவின் கரங்களைப் பற்றிக்கொண்டு, அவரது வாக்கை இதயத்தில் நிலைத்து நிற்கச் செய்து, இறைப்பணியைத் தொடர்ந்து ஆற்றினார். அவ்வாறே, நமது வாழ்விலும், நாமும் அவரோடு இணைந்தவாறே நம் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்வோம். எனவே,

1. அச்சுறுத்தும் நோய்கள், இயற்கை இடர்கள், எதிர்பாரா விபத்துகள், நிகழும் வன்முறைகள், இழப்புகள், இறப்புகளால் நம் உள்ளங்கள் உடை படும் நேரத்தில் நம் கண்முன், உடனிருக்கும் இறைவனைக் கண்டுகொள்வோம்.

2. நம் வாழ்க்கைப் படகில் இயேசுவை ஏற்றிக் கொண்டு பயணம் மேற்கொள்வோமெனில், புயலையும் பூந்தென்றலாக மாற்றுகின்ற ஆற்றல் இறைவனுக்கு உண்டு என்பதை உணர்ந்து கொள்வோம்.

3. துன்பங்களைத் தூரத்தில் வைத்துவிட்டு, இயேசுவை நம் அருகில் அமர்த்திக்கொள்வோம். வாழ்வில் பதற்றமும், கலக்கமும் நம்மை ஆட்கொள்ளும் போதெல்லாம், இயேசு நமக்கு வழி காட்டுகிறார், உள்ள அமைதி தருகிறார் என்னும் நம்பிக்கையை வளர்த்துக்கொள்வோம்.

நம் கடவுள் ‘எதிர்பாராததின் இறைவன்’ என்று குறிப்பிடுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ். அவ்வாறே, மனித எதிர்பார்ப்புக்கு முற்றிலும் மாறாக எலியாவுக்கு, பேதுருவுக்கு, திருத்தூதர் பவுலுக்குத் தம்மை வெளிப்படுத்திய கடவுள், நாம் எதிர்பாராத வகையிலும் நம்மையும் சந்திக்க வருகிறார்.

“நல்லதையே ஆண்டவர் நமக்கு அருள்வார்!” (திபா 85:12).

Comment