No icon

22, அக்டோபர் 2023

ஆண்டின் பொதுக்காலம் 29 ஆம் ஞாயிறு (முதல் ஆண்டு) எசா 45:1, 4-6; 1தெச 1:1-5; மத் 22:15-21

மன்னன் பதினான்காம் லூயி (1638-1715) 72 ஆண்டுகளும், மூன்று மாதங்களும், பதினெட்டு நாள்களும் பிரான்சு நாட்டை ஆட்சி புரிந்தார். தன் அதிகாரத்தை நிலைநிறுத்த இவர் அடிக்கடிக் கூறிய வார்த்தைகள்: ‘நானே அரசு’, ‘நானே கடவுள்’, ‘நானே மன்னன்’, ‘நானே அதிகாரத்தின் உச்சம்’ என்பதாகும். இங்கிலாந்தின் மன்னன் எட்டாம் ஹென்றி (1491-1547), இங்கிலாந்தின் மன்னனாக 37 ஆண்டுகள், 282 நாள்கள் ஆட்சி புரிந்தார். இவரின் வார்த்தைகள்: ‘நான் எங்கும் இருக்கின்றவன்’ என்பதாகும். திருத்தந்தையின் தலைமையில் இங்கிலாந்தில் இயங்கிய கத்தோலிக்கத் திரு அவையை ஹென்றி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, தன்னைத் தானே அதன் தலைவராக அறிவித்தார். கொடுங்கோலன், இரக்கமற்றவன், ஆணவக்காரன் என மக்கள் பலரால் தூற்றப்பட்டவர்கள் இவர்கள்.

‘நானே நிரந்தர முதல்வர்’, ‘நானே நிரந்தரப் பிரதமர்’, ‘நானே கடவுள்’, ‘நான் இயற்றுவதுதான் சட்டம்’ எனத் தன்னைக் கடவுளுக்கும் மேலாக முன்னிறுத்தி, ‘நான்தான்’ எனும் ஆணவப் போக்குகள் நிறைந்த மனித மனங்களில், ‘நீ ஒன்றுமே இல்லை’ எனும் சிந்தனையை நமக்கு ஊட்டுகின்றது இன்றைய வழிபாடு.

பாபிலோனியர்களால் சுமார் 70 ஆண்டுகளாக அடிமைகளாக்கப்பட்டு, நாடு கடத்தப்பட்ட இஸ்ரயேல் மக்கள், அடுத்து பாரசீகர்களுக்கு அடிமைகளானபோது, ‘எல்லாம் முடிந்துவிட்டது; இனி விடுதலைக்கு வாய்ப்பே இல்லை; அடிமைகளாகவே சாக வேண்டியதுதான்’ என்ற மனநிலைக்குத் தள்ளப்பட்டனர். அத்தகைய இடுக்கண் வேளையில், இறைவன் விடுதலைக்கான விதையைப் பாரசீகப் பேரரசன் சைரசின் மனதிலே தூவுகிறார் (எஸ் 1:1-6). ஒரு பிற இனத்து மன்னரான சைரசை ஆண்டவர் தனிப்பட்ட முறையில் பெயர் சொல்லி அழைத்துத் ‘திருப்பொழிவு’ செய்கிறார் (எசா 45:1:4). விவிலியத்தில் ஒரு பிற இனத்தாரின் அரசர் ஒருவருக்குத் ‘திருப்பொழிவு’ செய்யப்படுவதை இங்கேதான் வாசிக்கிறோம். கி.மு. 599 முதல் 529 வரை பாரசீகத்தை ஆட்சி செய்த இவர், கி.மு. 538-இல் பாபிலோனைக் கைப்பற்றினார். நாடு கடத்தப்பட்ட இஸ்ரயேல் மக்கள், தங்கள் நாடு திரும்பி, தாங்கள் நம்பும் கடவுளுக்குக் கோயில் கட்டலாம் என்று சொன்னது மட்டுமல்லாமல், ஏனைய மக்கள் அவர்களுக்குப் பொன்னையும், பொருளையும் கொடுத்து உதவும்படி ஆணையிட்டார் (2குறி 36:22-23). மேலும், அசீரியா, எகிப்து, எத்தியோப்பியா, செபா போன்ற அண்டை நாடுகள் அனைத்திலும் அவர் வெற்றிவாகை சூட ஆண்டவர் உதவுகிறார். இஸ்ர யேல் மக்களை விடுதலை செய்வதற்காக இவை அனைத்தையும் செய்பவர் ஆண்டவர் ஒருவரே. அவரே சைரசுக்கு ஆக்கமும், ஊக்கமும், புகழும், வலிமையும் கொடுக்கிறார் எனும் உண்மையை உரக்கச் சொல்கிறது இன்றைய முதல் வாசகம்.

பாம்பும், கீரியும் போல, ஒருவரையொருவர் கடித்துக் குதற ஆசைப்படும் அரசியல்வாதிகள், தேர்தல் நேரங்களில் கரங்கள் கோர்த்து மேடைகளில் தோன்றுவதைப்போல, கருத்தளவில் எதிர் துருவங்களாய் இருக்கும் பரிசேயரும், ஏரோதியரும் கூட்டணி அமைத்து, இயேசுவைப் பேச்சில் சிக்க வைக்க நடத்தும் ஒரு படலம்தான் இன்றைய நற்செய்தியாகும். முதலில் இயேசுவிடம் விவாதத்தில் ஈடுபட வந்த பரிசேயரும், ஏரோதியரும் யார் எனப் புரிந்துகொள்வோம். சுருங்கக்கூறின், ஏரோதியர்கள் முழுமையான அரசியல்வாதிகள். பரிசேயர்கள் தங்களை மதத் தலைவர்கள் எனக் காட்டிக்கொள்பவர்கள். உரோமைக் காலனி ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த யூதர்கள் சீசருக்கு வரி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். உரோமை அரசின் இந்த அநியாயமான வரிகளை எதிர்த்தவர்கள் பரிசேயர்கள். யூதர்கள் நடுவே வாழ்ந்து வந்த ‘செலத்தோயி’ (Zealots)) எனும் தீவிரவாதக் குழுவினர் ‘கடவுளைத் தவிர வேறு அரசர்கள் எங்களுக்கு இல்லை’ என்று சொல்லி அதற்காக இரத்தம் சிந்திப் போராடியவர்கள்! ஏரோதியர் என்போர் உரோமையின் காலனி ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டு, ஏரோதுக்கும், அவன் குடும்பத்துக்கும் ஆதரவாகச் செயல்பட்டு, சீசருக்கு வரி செலுத்துவதை ஆதரித்தனர்.

இயேசுவின் மீது அரசியல் ரீதியாகக் குற்றம் காண முனைந்து, அவரை விழச் செய்யும் நோக்கத்துடன் ஏரோதியர் சிலர் இயேசுவிடம் வந்து, முதலில் நல்லவர்கள்போல நாடகமாடி, பாசாங்கு வார்த்தைகளால் இயேசுவைப் புகழ்கின்றனர். கொடிய விசத்தை உள்ளுக்குள் வைத்துக்கொண்டு  ‘போதகரே’ என்று மதிப்போடு அழைக்கின்றனர். புகழாரத்திற்குப் பின்னர் இயேசுவிடம் “சீசருக்கு வரி செலுத்துவது முறையா? இல்லையா?” என்ற ஒரு சிக்கலான கேள்வியைக் கேட்கின்றனர்.

கி.மு. 66-இல் உரோமை பாலஸ்தீனத்தைக் கைப்பற்றிய பின், ஆண்டுதோறும் உரோமைக்கு வரி செலுத்த வேண்டி வந்தது. நாட்டில் வாழ்வோருள் 13 வயதிலிருந்து 65 வயது வரையுள்ள ஆண்கள் -பெண்கள் என எல்லாரும் உரோமைப் பேரரசுக்கு ஆண்டுதோறும் ஒரு தெனாரியம் தலை வரியாகச் செலுத்த வேண்டும். ஒரு தெனாரியம் என்பது ஒரு மனிதரின் ஒரு நாள் கூலியாகும். மேலும், நில வரியாகப் பத்தில் ஒரு பங்கு தானியத்தையும், ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் - திராட்சை இரசத்தையும், வருமான வரியாக நூற்றில் ஒரு பங்கினைச் செலுத்த வேண்டும். இந்த வரி என்பது யூத மக்களைப் பொறுத்தமட்டில் சுமையானது மட்டுமல்ல; அது அடிமைத்தனத்தின் அடையாளம்! இஸ்ரயேல் உரோமைக்கு அடிமைப்பட்டது என்பதை ஆண்டுதோறும் நினைவூட்டிய இந்த வரி, மக்களிடையே பெரும் கசப்பையும், வெறுப்பையும் வளர்த்தது.

இயேசு எந்தப் பதிலைத் தந்தாலும், அது அவருக்கும் பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என ஏரோதியர் எண்ணினர். ‘சீசருக்கு வரி தர வேண்டாம்’ என்று இயேசு சொன்னால், உரோமை அதிகாரத்தை எதிர்க்கிறார்; மக்களை அரசுக்கு எதிராகத் தூண்டி விடுகிறார்’ என்று சொல்லி ஏரோதியர் இயேசுமீது குற்றம் சுமத்தலாம். ஒருவேளை, ‘சீசருக்கு வரி செலுத்தலாம்’ என்று இயேசு சொன்னால், ‘யூத மக்களின் உணர்வுகளுக்கு எதிராகச் செயல்படுகிறார்; எனவே, இவர் மக்களை மீட்க வந்த மெசியாவாக இருக்க முடியாது’ எனக் கூறிப் பரிசேயர்கள் இயே சுவை மக்கள் முன் பழித்துரைக்கலாம். இயேசு அவர்களின் தீய நோக்கத்தை அறிந்தவராய், “வெளி வேடக்காரரே, ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்?” எனக் கேட்டு, “வரி கொடுப்பதற்கான நாணயம் ஒன்றை எனக்குக் காட்டுங்கள்” (22:19) என்கிறார்.

இயேசுவின் காலத்தில் இரண்டு வகையான நாணயங்கள் பயன்பாட்டில் இருந்தன. முதல் வகை நாணயம் ‘செக்கேல்’ எனப்படும் நாணயம். இதில் எவ்விதமான மனித உருவமோ அல்லது விலங்கின் உருவமோ பொறிக்கப்படவில்லை. இவை ஆலயத்திற்குள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. இரண்டாம் வகை நாணயம் உரோமை நாணயம். இந்நாணயத்தில் உரோமைப் பேரரசரின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. இவை உரோமைக்கு வரி கொடுப்பதற்கான நாணயம். ஆலயத்தைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் யூதர்கள் உரோமை நாணயத்தையே பயன்படுத்த வேண்டிய கட்டாயம் இருந்தது. யூதர்களின் சமய நம்பிக்கையின்படி, சீசரின் உருவம் பொறித்த நாணயத்தை அவர்கள் பயன்படுத்துவது சட்ட விரோதச் செயல். எந்த உருவத்தையும் பொறிக்கக்கூடாது; உருவங்களுக்குப் பணிவிடை புரியக்கூடாது என்பது யூதச் சட்டம் (விப 20:3-4). எனவே, உருவம் பதிக்கப்பட்ட இந்த நாணயத்தை யூதர்கள் கையால் தொடுவதற்கே தயங்கினர். எனவேதான், இயேசு அந்த நாணயத்தைக் கையால்கூட தொடவில்லை (மத் 22:19; மாற் 12:15; லூக் 20:24).

இயேசுவிடம் கொண்டு வந்த நாணயத்தின் ஒரு புறம் அரசனின் உருவம் ‘திபேரியுஸ் சீசர் அகுஸ்துஸ், தெய்வீக அகஸ்துஸ் மகன்’ எனவும், அதன் இன்னொருபுறம், திபேரியுஸ் தாய் பேரரசி லிவியாவின் உருவமும், ‘தலைமைக் குரு’ எனும் வார்த்தைகளும் பொறிக்கப்பட்டிருந்தன. இந்த நாணயம் ஒன்றை இயேசுவிடம் கொண்டு வருகின்றார்கள். இயேசு அவர் களிடம், “இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும், எழுத்தும் யாருடையவை?” என்று கேட்க, அவர்கள், “சீசருடையவை” என்கிறார்கள். அதற்கு இயேசு, “சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கே கொடுங்கள்” (மத் 22:21) என்கிறார். இயேசுவின் கூற்று, அவர் சீசருக்கு வரி செலுத்துவதை ஆதரிக்கிறாரோ எனத் தவறாகப் பொருள்கொள்ள வாய்ப்புண்டு. தம்மையே ‘கடவுள்’ என அழைத்துக்கொண்ட சீசருடைய நாணயம் அனைத்தையும் அவனிடமே விட்டெறியுங்கள். தன்னையே தெய்வமாக்கிக்கொள்கிற தெய்வ நிந்தனைப் பழியை ஆதரித்து நீங்களும் அந்தப் பழிக்கு ஆளாகாமல், உங்களையே காத்துக் கொள்ளுங்கள் என்பதுதான் இயேசு சூழ்ந்து நின்ற மக்களுக்கும், பரிசேயருக்கும் கற்றுக் கொடுக்க முன்வந்த பாடமாக இருந்திருக்க முடியும்.

எனவே, அரசனின் அராஜக ஆட்சிக்கும், மக்களை வதைக்கும் வரிச் சுமைக்கும் மக்கள் கட்டுப்படவேண்டும்; அனைவரும் கட்டாயம் அரசனுக்கு வரி செலுத்த வேண்டும் என்ற புரிதலில், கண்டிப்பாக இயேசு பேசியிருக்க மாட்டார். காரணம், உரோமை ஆட்சியின் ஆதிக்க வெறி, அந்த ஆட்சியில் காணப்பட்ட அதிகார அமைப்புகள், அடக்கு முறைகள், வரி விதிப்பில் காணப்பட்ட அநீதிகள் ஆகியவற்றை இயேசு எதிர்த்தாரே தவிர, ஒரு போதும் அவர்களின் ஆட்சிக்கு அவர் துணை நின்றதில்லை. எனவே, ‘சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கே கொடுங்கள்’ எனும் இயேசுவின் பதிலில் ஓர் அரசியல் எதிர்ப்பு கலந்திருப்பதைத்தான் புரிந்துகொள்ள முடிகிறது.

மேலும், இயேசுவின் பதிலில் தொக்கி நிற்கும் இரு கேள்விகள்: ஒன்று, சீசருக்குரியவை எவை? மற்றொன்று, கடவுளுக்குரியவை எவை? என்ப தாகும். இரு கேள்விகளுக்கும் இயேசு நேரடியாகப் பதில் சொல்லவில்லை. ஆனால், ‘கடவுளுக்குரியவை எவை?’ எனக் கேட்கும்போது, எல்லாமே கடவுளுக்குரியவைதாம்! ‘மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை’ (திபா 24:1). ‘விண்ணகம் என் அரியணை! மண்ணகம் என் கால்மணை’ (எசா 66:1) என்பதும் ஒவ்வொரு யூதரின் நம்பிக்கை. அப்படியெனில், சீசருடையது எவை? ‘ஒன்றுமில்லை’ என்பதுதான் பொருள். சீசர் ஒருபோதும் கடவுள் அல்லர்; ஏனெனில், ‘மாட்சியும் ஆற்றலும் கடவுள் ஒருவருக்கே’ (திபா 96:7).

கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்:

* அதிகாரத்தை, சுயநலத்தைக் காத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் எழும்போது, கொள்கைகளை மூட்டைக் கட்டி வைத்துவிடும் அரசியல் பச்சோந்திகளைப்போல், நாமும் வாழ்வில் அவ்வப்போது நிறம் மாறுகிறோமா என்ற கேள்வியை இன்று எழுப்புவது அவசியம் (பரிசேயர் - எரோதியரைப் போல!).

* பணத்தையும், பதவியையும், புகழையும் ஆராதிக்கப் பழகிவிட்டோமென்றால், அதாவது பணம் நம் வாழ்வில் கடவுளாகி விட்டால், கடவுள் நம் உள்ளத்தையும், இல்லத்தையும் விட்டு வெகு தொலைவுக்குச் சென்றுவிடுவார். நாம் சிறுசிறு ‘சீசர்களாக’ மாறிவிடுவோம் (ஏரோது அரசனைப்போல!).

* நம் திருத்தந்தை பிரான்சிஸ் கூறுவதுபோல, நாம் நம்புகின்ற கடவுள் ‘வியப்புகளின் கடவுள்!’ (God of Surprise!). எதிர்பாராத நேரங்களில், எதிர்பாராத நற்செயல்களைச் செய்து, தம் மக்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துபவர் (ஞாயிறு மூவேளைச் செபவுரை, மார்ச் 19, 2023). ஏனெனில், நாம் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டுள்ளோம் (1 தெச 1:4) (அரசன் சைரசு வழியாகச் செய்ததுபோல!).

Comment