
05, நவம்பர் 2023
ஆண்டின் பொதுக்காலம்; 31 ஆம் ஞாயிறு (முதல் ஆண்டு) மலா 1:14-2:1-2,8-10, 1தெச 2:7-9,13, மத் 23:1-12
தகைமையைக் காக்கத் தவறிய தலைமை!
இன்று அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் ஒன்று அறிவுரை. வீட்டில் பெற்றோர் குழந்தைகளுக்குக் கொடுக்கும் அறிவுரை; பள்ளிக் கூடத்தில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அளிக்கும் அறிவுரை; ஆலயத்தில் அருள்பணியாளர்கள் இறை மக்களுக்கு வழங்கும் மறையுரை; நாட்டுத் தலைவர்கள் குடிமக்களுக்கு ஆற்றும் பேருரை... என ஒவ்வொருவரும் அவரவர்களுக்குத் தகுந்தாற்போன்று உரைகளையும், சொற்பொழிவுகளையும் மற்றவருக்கு வழங்குகின்றனர். இங்ஙனம் அறிவுரை கூறுபவர்கள் முதலில் தாங்கள் கூறிய வண்ணம் தம் வாழ்வில் நடக்கின்றனரா? எனில், ‘இல்லை’ எனலாம்.
பலர் சொல்வது ஒன்றும், செய்வது ஒன்றுமாக இருக்கின்றனர் என்பதுதான் உண்மை. அவர்களிடம் சென்று, ‘என்ன நீங்கள் சொன்னதற்கும், செயல்படுவதற்கும் பொருந்தாமல் இருக்கிறதே? நீங்கள் இவ்வாறு நடக்கலாமா?’ என்று கேட்டால், அவர் ‘ஊருக்குத்தான் உபதேசம், உனக்கும் எனக்கும் இல்லை’ என்பார். பலர் மிக இனிமையாகவும், உயர்ந்த கருத்துகளையும் கூறுவர். ஆனால், அதற்கு மாறாக மிகவும் கீழ்த்தரமான செயல்களைச் செய்வர்.
தேர்தல் நேரத்தில், ஓட்டுக் கேட்க வரும் தலைவர்களிடம் எதிரொலிக்கும் முழக்கம் ’நாங்கள் சொல்வதைத்தான் செய்வோம்; செய்வதைத்தான் சொல்வோம்’என்பதாகும். ஆனால், ஆட்சிக் கட்டிலில் ஏறியதும் அவர்கள் சொன்ன சொல்லுக்கும், செய்யும் செயலுக்கும் எவ்விதத் தொடர்பும் இருக்காது.
‘கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு’ (குறள் 819).
அதாவது, செய்யும் செயல் வேறாகவும், சொல்லும் சொல் வேறாகவும் உள்ளவரின் தொடர்பு, ஒருவனுக்குக் கனவிலும் துன்பம் தருவதாகும் என்கிறார் வள்ளுவர்.
ஆண்டின் பொதுக்காலம் 31-ஆம் ஞாயிறு வாசகங்கள் ‘சமயத் தலைவர்களின் தகைமை’ எனும் மையப்புள்ளியில் இணைகின்றன. தமிழ் அகராதியில் ‘தகைமை’ என்ற சொல்லுக்குத் தன்மை, தகுதி, பெருமை, பொறுமை, குணம், மதிப்பு, ஒழுக்கம் எனப் பல பொருள்கள் கூறப்பட்டுள்ளன. மேற்காணும் பொருள்களில் தங்களைத் தகுதி உள்ளவர்களாக ஆக்கிக் கொள்பவர்களே நல்ல தலைவர்கள். ஆனால், இன்று ஆளும் தலைமைப் பொறுப்பில் அமர்ந்திருக்கும் அரசியல் தலைவர்களும், மக்களை நல் வழிக்கு நடத்திச் செல்ல அழைக்கப்பட்டுள்ள சமயத் தலைவர்களும் ‘சொல்வது ஒன்றும், செய்வது ஒன்றுமாக’இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
இன்றைய நற்செய்தியில் தம் சமக்காலத்துச் சமயத் தலைவர்களான குருக்கள், மறைநூல் அறிஞர்கள் மற்றும் பரிசேயர் ஆகியோரை இயேசு வெகுவாகக் கண்டிக்கிறார். ஏன் இவர்களை இயேசு கடுமையாகச் சாட வேண்டும்? இயேசுவின் இறையாட்சிப் போதனைகளை அதிகமாக எதிர்த்தவர்கள் யூதச் சமுதாயத்தில் செல்வாக்குடன் செயல்பட்டுக் கொண்டிருந்த மறைநூல் அறிஞரும், பரிசேயரும்தாம். தங்களுடைய சுயநலம் தழுவிய போதனைகளால் மக்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த இவர்களுடைய முகத்திரைகளைப் படிப்படியாகக் கிழித்தெறிகிறார் இயேசு. மத்தேயு 21 மற்றும் 22 ஆகிய அதிகாரங்களில் இயேசுவுக்கும், இத்தலைவர்களுக்குமிடையே நீண்ட விவாதங்கள் நடைபெறுவதைக் காண முடியும். இதன் விளைவாகவே ‘இயேசுவை எப்படி ஒழித்துக்கட்டலாம்?’ எனச் சூழ்ச்சி செய்கின்றனர் இந்தப் பரிசேயக் கூட்டத்தினர். இவர்களுடைய தவறான அணுகுமுறைகளிலிருந்து மக்களைக் காப்பாற்றும் நோக்கத்துடன் இயேசு ஒரு நீண்ட படிப்பினையை இங்கு வழங்குகிறார். இத்தலைவர்கள் குறித்து மக்கள் கூட்டத்திற்கும், சீடர்களுக்கும் இயேசு கூறிய அறிவுரையாகவும் அல்லது இத்தலைவர்களுக்கு எதிரான இயேசுவின் எச்சரிக்கையாகவும் அமைகிறது இன்றைய நற்செய்தி வாசகம்.
பரிசேயர், மறைநூல் அறிஞர் அல்லது தொடக்கக் காலத் திரு அவையில் செயல்பட்டுக் கொண்டிருந்த பல சுயநலவாதிகளின் தலையான குற்றம் என்னவெனில் ஒன்று, தாங்கள் கடைப்பிடிக்காத அல்லது கடைப்பிடிக்க இயலாத சில சட்டங்களைப் பிறர் மேல் சுமத்தியது, மற்றொன்று தகுதியின்றி சில பெருமைகளை அனுபவிக்க ஆர்வம் காட்டியது.
மறைநூல் அறிஞரும், பரிசேயரும் தங்களால் பின்பற்ற முடியாத ஒழுங்குமுறைகளை எல்லாம் சாதாரண மக்கள்மீது கடுமையாகத் திணித்தனர். பளுவின் பாரத்தை ஒரு விரலாலும்கூட தொட முன்வருவதில்லை (23:4). இவர்கள் மக்களிடையே தங்கள் சுயநலத்துக்காக மறைநூலை விளக்கிக் கூறினர்; வெளிச்சடங்குகளிலேயே நம்பிக்கை வைத்து, அவற்றின் அடிப்படையிலே பிறரைத் தீர்ப்பிட்டு வாழ்ந்தனர் (லூக் 11:37-41); வெளிப்படையாகச் செபத்தில் ஈடுபட்டு மக்களின் மதிப்பை நாடினர்; இவர்கள் இறையாட்சிப் பணிக்குத் தடையாக இருந்தனர்; அங்கிகளின் குஞ்சங்களைப் பெரிதாக்கினர்; விழாக்களிலும், தொழுகைக் கூடங்களிலும் முதலிடம் பிடித்தனர்; எங்கும் எதிலும் பதவி, பட்டம், அதிகாரத்தையே நாடினர்; ‘ரபி’ எனவும், ‘குரு’ எனவும் எல்லோராலும் அழைக்கப்பட விரும்பினர்.
இறைமதிப்பீடுகளுக்குச் செவிகொடுக்காமல் தங்கள் குறுகிய சட்ட நெறியிலும், மக்களைக் கட்டுப்படுத்தும் அவலப் போக்கிலும் கவனம் செலுத்தியதன் விளைவாகவே இயேசு பரிசேயரையும், மறைநூல் அறிஞரையும் கடுமையாக விமர்சிக்கிறார்.
‘மறைநூல் அறிஞரும், பரிசேயரும் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ, அவற்றையெல்லாம் கடைபிடித்து நடந்து வாருங்கள். ஆனால், அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யா தீர்கள். ஏனெனில், அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்ட மாட்டார்கள்’ (23:3); ‘தாங்கள் செய்வதையெல்லாம் மக்கள் பார்க்க வேண்டும் என்றே அவர்கள் செய்கிறார்கள்; ...விருந்துகளில் முதன்மையான இடங்களையும், தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விரும்புகின்றார்கள்; சந்தைவெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும், ‘ரபி’ என அழைப்பதையும் விரும்புகிறார்கள்’ (23:5-7) என வெளிப்படையாகவே விமர்சிக்கிறார்.
‘போதனை என்பது பிறருக்குத்தான், தமக்கு இல்லை’ என்பதுபோல் பரிசேயரும், மறைநூல் அறிஞரும் நடந்துகொண்டனர். தாழ்ச்சியையும், அன்பையும், நேரிய வாழ்வையும் கடைபிடிக்காமல் விட்டுவிட்டனர். இது அவர்களின் கயமைத்தனமாகும். இத்தகைய கயமைத்தனமுள்ளவர்களின் உளக் கீழ்மையை இயேசு கடுமையான விமர்சனத்துக்கு உட்படுத்துகிறார்; வாழ்ந்து காட்டும் துணிவின்றி, வார்த்தைகளால் விளையாடும் இப்படிப்பட்ட தலைவர்களிடமிருந்து மக்கள் தங்களை எப்படிக் காத்துக்கொள்ள வேண்டும் என்று இயேசு மக்களுக்கு அறிவுரை வழங்குகிறார்.
தனது எழுத்துகளால் மிகவும் அறியப்பட்ட திருத்தந்தையும், மறைவல்லுநருமான புனித முதலாம் கிரகோரி (கி.பி. 540) ஆயர்களுக்கும், குருக்களுக்கும் எழுதிய அறிவுரையில், ‘இறையருள் இல்லாதோர் இறைமக்கள் பணியை எந்த ஒரு துணிவோடு ஏற்பர்? ஆன்மிக அருள்வாழ்வு பற்றிய அறிவில்லாதோர், மக்களின் வாழ்வில் குணம் தருபவராக நடிப்பது எப்படி? திரு அவையில் சிலர் வெளி அதிகாரத்தை வைத்து, அதன் மகிமையைப் பெற முடியும் என நினைக்கிறார்கள். ஆசிரியர்களாகத் தங்களையே பாவித்து, பிறருக்கு உயர்ந்தவராகக் காட்டிக்கொள்கிறார்கள். நற்செய்தி கூறுவதுபோல, தெருக்களில் முதல் மரியாதையையும், விழாக்களில் முதலிடங்களையும், மன்றங்களில் முதல் இருக்கைகளையும் நாடுகிறார்கள். இவ்வளவுக்கும் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணியைச் செய்ய அருகதையற்றவராய் இருக்கிறார்கள்’ என இன்றைய நற்செய்தியின் பின்னணியில் எடுத்துரைக்கிறார் (Gregory the Great, Pastoral Rule Book 1Ch. 1). திருத்தந்தையின் இவ்வார்த்தைகள் இன்றும் நம் ஒவ்வொருவரின் உள்ளத்தையும் ஊடுருவிப் பெரும் தாக்கத்தையும், வெப்பத்தையும் ஏற்படுத்துகின்றன என்பதில் ஐயமில்லை.
இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் மலாக்கி ‘குருக்கள் என்போர் யார்?’ எனும் கேள்விக்கு, படைகளின் ஆண்டவர் வாயிலாக மிக அழகான சிந்தனைகளை முன்வைக்கிறார். குருக்கள் என்போர் நன்மாதிரி காட்டுமாறு அழைக்கப்படுபவர்கள்; அவர்கள் கடவுளின் பெயருக்கு அஞ்சி நடப்பவர்கள்; உண்மையோடும், நேர்மையோடும் பணிபுரிபவர்கள்; மெய்ப்போதனைகளைப் போதிப்பவர்கள்; திருச்சட்டத்தைக் கேட்க மக்களை அழைப்பவர்கள்; அமைதியோடு நடந்துகொள்பவர்கள்; படைகளின் ஆண்டவருடைய தூதுவர்கள்; மக்களின் மனச்சான்றைத் தீயவழியில் செல்லவிடாமல் கட்டிக் காப்பவர்கள் (மலா 2:4-7) என்கிறார். ஆனால், இறை வாக்கினர் காலக் குருக்கள் நெறிதவறி நடந்ததையும், தங்கள் போதனைகளால் பலரை இடறிவிழச் செய்ததையும் (வ. 8), குற்றங்களைப் பார்த்தும் பாரா முகமாய் இருந்ததையும் (வ. 9), வருவாய் ஈட்டுவதற்காகக் குற்றங்களை மூடி மறைக்கும் குருக்களும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்ற எச்சரிக்கையையும் தருகிறார் கடவுள்.
இறைவாக்கினர் மலாக்கி நூல் மற்றும் நற்செய்தி ஆகிய இரு வாசகங்களில் சமயத் தலைவர்களுக்கு எதிராக ஒலித்த கண்டனக் குரலுக்கு ஒரு மாற்றாக, இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் இறைப்பணியாளர்களின் மேன்மையை எடுத்துக் கூறுகிறார். ‘மனிதர் தரும் பெருமையை உங்களிடமிருந்தோ, மற்றவர்களிடமிருந்தோ நாங்கள் தேடவில்லை; மாறாக, நாங்கள் உங்களிடையே இருந்த பொழுது, தாய் தன் குழந்தைகளைப் பேணி வளர்ப்பதுபோல், கனிவுடன் நடந்து கொண்டோம்... நம்பிக்கை கொண்டுள்ள உங்கள் முன்பாக நாங்கள் மிகவும் தூய்மையோடும், நேர்மையோடும், குற்றமின்றியும் ஒழுகினோம். உங்களுள் எவருக்கும் சுமையாய் இராதபடி, எங்கள் பிழைப்புக்காக இராப்பகலாய் வேலை செய்துகொண்டே, கடவுளுடைய நற்செய்தியை உங்களுக்குப் பறைசாற்றினோம்’ எனச் சொல்கிறார். அவர் தமது சொல்லிலும், செயலிலும் உறுதியாய் இருந்ததால்தான் ‘நீங்களும் என்னைப்போல் நடங்கள்’ (1கொரி 11:1) என்று அழுத்தமாக அவரால் கூற முடிந்தது.
கற்றுக்கொள்வோம்!
* செயல் வேறு, சொல் வேறு என்றிருந்தால், பிறர் நம்மீது வைத்துள்ள நம்பகத்தன்மை குறைந்து, நம்மை மதிக்காத நிலைமை ஏற்படும். நமது தன் மதிப்பும், தரமும் குறைந்து நாளடைவில் சமுதாயத்தில் மதிப்பிழந்து விடுவோம் என்பதை உணர்ந்துகொள்வோம்.
* செபம், பக்தி என்ற கவசங்களைப் பயன்படுத்திச் சில ஏமாற்று வித்தைகளில் ஈடுபட்டு வரும் சுயநலமிக்க சமயத் தலைவர்களைக் குறித்து மிக எச்சரிக்கையாக மக்கள் இருக்க வேண்டும். ஏனெனில், அவர்களுடைய பேராசைக்கு அதிகமாக இரையாகுபவர்கள் ஏழைகளும், பெண்களுமே என்பதைப் புரிந்துகொள்வோம்.
* ‘சொல்வது ஒன்று, செய்வது ஒன்று’ என்ற இரட்டை வேடம் இல்லாமல், சொல்வதைச் செயலில் வாழ்ந்து காட்டும் மன உறுதியையும், செல்லும் இடங்களில் எல்லாம் முதன்மை இடங்களை, பெருமைகளைத் தேடாமல், பணியாளனாக மாறும் பணிவையும் இறைவன் நமக்குத் தரவேண்டும் என மன்றாடுவோம்.
Comment