No icon

ஆண்டவருடைய திருக்காட்சி-07, சனவரி 2024 (இரண்டாம் ஆண்டு)

எசா 60: 1-6; எபே 3:2-3, 5-6 மத் 2: 1-12 - இறைத்தேடலும், இதய அக்களிப்பும்!

ஆண்டின் முதல் ஞாயிறு இன்று! இறைவன் தம்மை உலகு அனைத்திற்கும் வெளிப்படுத்திய திருநாள்! இறைவன் தங்களுக்கு மட்டுமே தோன்றுவார் என்று எண்ணிய யூதக் குலத்தவருக்கு இந்நாள் ஓர் அதிர்ச்சியூட்டும் நாள்! இன்றைய நாள் இயேசுவின் பிறப்பும், அவர் தருகிற மீட்பும் எல்லா மக்களினங்களுக்கும் உரியன என்ற மிகப்பெரிய உண்மையை உலகுக்கு உரக்கச் சொல்லும் நாள்! பெத்லகேமில் பிறந்த குழந்தை இயேசுவைத் தேடி மூன்று ஞானிகள் வந்து தரிசித்த திருக்காட்சித் திருநாள்! இறைவனைத் தேடிக் கண்டடையும் வழிகளை நமக்குச் சொல்லித் தரும் நன்னாள் இந்நாள்! இறைவன் அனைத்து மக்களுக்கும் பொதுவானவர். இந்த இறைவனைப் பங்கு போட்டு, பிரித்து, அதனால் மக்களையும் பிரிக்கும் பல எண்ணங்கள் தவறானவை என்பதைச் சுட்டிக்காட்டும் திருநாள்! இன்றைய நாள் அன்பும், மகிழ்ச்சியும் நிறைந்த கிறிஸ்து பிறப்புப் பெருவிழாக் காலம் ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழாவோடு நிறைவுறும் நாள்.

மூன்று அரசர்கள், மூன்று இராஜாக்கள் அல்லது மூன்று ஞானிகள் என்று பலவாறாக அழைக்கப்படும் இந்த மூவருமே இன்றைய விழாவின் கதாநாயகர்கள். யார் இவர்கள்? மத்தேயு நற்செய்தி 2-ஆம் அதிகாரத்தில் மட்டுமே இம்மூவரைப்பற்றிய சிறு குறிப்புகள் இடம்பெறுகின்றன. இவர்கள் விண் ஆய்வாளரையோ, கிழக்கு நாடுகளின் அறிஞர்களையோ குறிக்கலாம். இவர்கள் எதிர்காலத்தைக் கணிப்பவர்களாகவும் இருந்திருக்கலாம். இம்மூவரைப் பற்றி வரலாற்றுப் பூர்வமான, துல்லியமான விவரங்கள் நற்செய்தியில் அதிகம் இல்லை. இருப்பினும், உண்மையைத் தேடித்தேடி, நிலையற்ற மனங்கொண்ட யூதரல்லாப் புறவினப் பெரியோர் இவர்கள்! இவர்கள் நம்பிக்கையுள்ள தந்தையாகத் தம்மை ஏற்றுக்கொள்ள அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுக்கும் இறைவனின் வாழும் சாட்சிகளாக இருக்கின்றனர். இவ்வுலக முழுமையிலிருந்து இறை வீட்டிற்குள் வரவேற்கப்படும், ஆண்கள் மற்றும் பெண்களின் பிரதிநிதிகளாக இந்த ஞானிகள் உள்ளனர். இவர்கள் மூவரும் வாழும் எடுத்துக்காட்டாக உள்ளனர். இந்த மூவரும் கடந்த 20 நூற்றாண்டுகளாகப் பல கோடி மக்களின் மனங்களில் இறைவனைத் தேடும் தாகத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. இதற்காகவே இவர்களுக்கும் விழா எடுப்பது தகும்!

திருக்காட்சி என்பது கிரேக்கத்தில்எப்பிபானையா’ (Epiphaneia) என்பது பொருளாகும். இச்சொல்லுக்குவெளிப்படுத்துதல்என்று பொருள். கடவுள் தம்மை மண்ணுலகில் வெளிப்படுத்துவது குறித்தே இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. நம் அன்றாட வாழ்க்கைச் சூழலில், நாம் எதிர்பாராத வேளையில், எண்ணாத நேரத்தில், ஆர்ப்பாட்டமின்றி, ஆரவாரமின்றி, எளிமையின் கோலத்தில், அமைதியின் வடிவில் இறைவன் தம்மை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார். அது நம் வாழ்வின் சாதாரண நிகழ்வுகளில் நடக்கின்றது! எளிமையிலும், ஏழ்மையிலும், ஆடம்பரமற்ற அன்றாட வாழ்க்கைச் சூழலிலும் இறைவன் தம்மை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார். அவரைத் தேடி ஏழு கடல்கள், மலைகள் தாண்டிச் செல்லத் தேவையில்லை. அவர் எப்போதும் எங்கும் நம்மைச் சூழ்ந்தே இருக்கிறார். அவரைக் காண நம் அகக் கண்களைத் திறந்து கொண்டாலே, அவர் அருகில் இருப்பதை உணரலாம்.

இறைவனின் வெளிப்பாடு ஒருசிலருக்கானது அல்ல; மாறாக, அவரது வெளிப்பாடு இனம், மொழி, சமயம், பண்பாடு என அனைத்து வகை எல்லைகளையும் கடந்தது. தம்மைத் தேடும் அனைவருக்கும் தம்மை வெளிப்படுத்தும் இறைவனின் அழகை என்னவென்று சொல்வது! அனைத்து மக்களும் இறைவனின் வெளிப்பாட்டைக் கண்டுணர்ந்து வாழ வேண்டும் என்பதுதான் இறைவனின் விருப்பமும் கூட. எல்லாருக்கும் வெளிப்படுத்தும் இறைவனைத் தொடர் தேடல் வழியாகக் காண இயலும் எனும் நம்பிக்கையை நமக்கு உணர்த்துகின்றனர் இன்றையக் கதாநாயகர்களான இந்த மூன்று ஞானிகள். இவர்கள் நமக்குக் கற்றுத்தரும் இறையனுபவ வாழ்க்கைப் பாடம் என்னவென்று ஆராய்வோம்.

பெத்லகேமை நோக்கி மிகப்பெரிய பயணத்தை மேற்கொள்கின்றனர் இந்த மூன்று ஞானிகள். ‘யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே?’ என்ற ஒரு கேள்விதான் அவர்களின் இறைத் தேடலைத் தெளிவாக்குகிறது. வானத்தில் தோன்றிய விண்மீனைக் கண்டு ஞானிகள் தங்கள் பயணத்தை மேற்கொள்கின்றனர். திரு அவையின் தந்தையருள் ஒருவரான புனித ஜான் கிறிஸ்தோஸ்தோம் மூன்று ஞானிகளைப் பற்றி மிக அழகாக இவ்வாறு கூறுவார்: “ஞானிகள் விண்மீனைக் கண்டதால் தங்கள் பயணத்தைத் துவக்கவில்லை; மாறாக, அவர்கள் ஏற்கெனவே இறைவனை நோக்கித் தங்கள் பயணத்தைத் துவங்கியிருந்ததால், அவர்கள் விண்மீனைக் கண்டனர்என்று.

விண்மீன்கள் பொதுவாக இரவில் மட்டுமே கண்களுக்குத் தெரியும். எனவே, இந்த ஞானிகள் இரவில் தங்கள் பயணத்தை அதிகம் மேற்கொண்டிருக்க வேண்டும். இரவில் மேற்கொள்ளும் பயணங்கள் அவ்வளவு எளிதானதல்ல; அதுவும் பல்லாயிரம் விண்மீன்களுக்கு நடுவே தொலைத்தூரத்தில் கண்சிமிட்டும் ஒரு சிறு விண்மீனை மீண்டும் மீண்டும் அடையாளம் கண்டு அதைப் பின்தொடர்வது என்பது அவ்வளவு எளிதான செயலல்ல; இருப்பினும், அவர்களது தொலைத்தூரப் பயணத்தை, பயணக் களைப்பை, எதிர்கொண்ட பயணப் பிரச்சினைகளை, இடர்ப்பாடுகளை இனிமையாக்கியது எது? பிறந்திருக்கும் மெசியாவைக் காண வேண்டும் என்ற அவர்களதுஉள்ளார்ந்த இதய விருப்பமே’.

உள்ளார்ந்த இதய விருப்பத்தோடு இறைவனைத் தேடிய ஞானிகள் மெசியா அரச மாளிகையில் பிறந்திருக்கிறார் என்றெண்ணி ஏரோதின் அரண்மனைக்குச் சென்றனர். அரண்மனையில் மெசியாவின் பிறப்பிடம் இல்லை என்பதை அறிந்ததும், விண்மீன் காட்டிய பாதையில் பயணப்பட்டு இயேசு பிறந்த இடத்தை அடைகின்றனர். ‘கடவுளின் வாழிடம் கோபுரத்தில் அல்ல; மாறாக, குடிசையில்என்பதை உலகுக்கு உரைக்கின்றனர். பிறந்திருப்பவர் சாதாரண மனிதர் அல்லர்; அவர் வணங்கப்பட வேண்டியவர்; மதிப்பிற்குரியவர்; வணக்கத்திற்குரியவர் என்பது ஞானிகளின் செயல்களிலிருந்து வெளிப்படுகின்றன. ‘நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்குகின்றார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும், சாம்பிராணியும், வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுக்கின்றனர்’.

கடவுளை நாம் எங்குத் தேடுகின்றோம்? ஆடம்பரத்திலும், ஆர்ப்பாட்டத்திலுமா? அல்லது எளிமையிலும், எளிமையான நிகழ்விலுமா? என்பதை இன்றைய நாளில் சிந்தித்துப் பார்ப்பது அவசியம்!

இந்த மூன்று அரசர்களோடு நான்காவது ஓர் அரசனும் இறைவனைத் தேடினான். அவன்தான் ஏரோது. அவன் இயேசுவைத் தேடியதற்கு ஒரே காரணம்... அக்குழந்தையைக் கொல்ல வேண்டும் என்பதே. அவனது தேடுதல் வேட்கையில் பல நூறு குழந்தைகள் கொல்லப்படுகின்றனர்! அவனைப் பொருத்தவரை, அவனது அரியணையே அவன் வணங்கிய கடவுள். தன் அரியணைக்கு, அதிகாரத்திற்கு ஆபத்து வரக்கூடும் என்று நினைத்ததால், தன் மனைவியையும், இரு மகன்களையும் கொன்றவன் இவன். இயேசுவை விட்டு வைக்காமல் இருப்பானோ? அவனுடைய எண்ணங்கள் வெறுப்பும், பொறாமையுமாகும். அவன் தன் பதவியைத்தான் தேடிக் கொண்டிருந்தான். ‘யூதர்களின் அரசராகப் பிறந்திருப்பவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம்; வணங்க வந்திருக்கிறோம்என்று மூன்று ஞானிகள் ஏரோதிடம் சொன்னபோது, ஏரோது கலக்கமுற்றான்; அச்சமுற்றான். அவன் அறிவு மழுங்கி, குழப்பத்துடனும், அச்சத்துடனும் இருந்தான். எல்லாவற்றையும், எல்லாரையும் அடக்கி ஆள நினைப்பவர்களின் இதயங்களில், கலக்கமும், குழப்பமும் இருக்கத்தானே செய்யும்! ‘நானும் சென்று வணங்குவேன்என்ற ஏரோதுவின் வார்த்தையில் உண்மை இல்லை; வெளிவேடமே தெரிந்தது. எனவே, அவனால் இறைவனைக் கண்டு தரிசிக்க இயலாமற்போனது.

இறைவனைத் தேடுவதைப் பற்றி சிந்திக்கும் போது பிலைசு பாஸ்கல் (Blaise Pascal 1623 -1662) என்பவர் கூறிய கருத்து நினைவுக்கு வருகின்றது. பிலைசு பாஸ்கல் ஒரு பிரெஞ்சு கணிதவியலாளர், இயற்பியலாளர் மற்றும் மெய்யியலாளர் ஆவார். நாம் இப்போது பயன்படுத்தும் கணினியின் முன்னோடியான கணக்கு இயந்திரத்தின் உருவாக்கத்தில் இவரது பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். இவர் கடவுளைத் தேடும் மூன்று வகையான மனிதர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார். முதல் வகையினர், இறைவனைத் தேடிக் கண்டுபிடித்து அவருக்குப் பணிவிடை செய்பவர்கள். இவர்கள் அறிவாளிகள்; மகிழ்வுடன் வாழ்பவர்கள். இரண்டாம் வகையினர், இறைவனைக் காணாது தேடிக் கொண்டிருப்பவர்கள். இவர்களும் அறிவாளிகள்; ஆனால், மகிழ்வின்றி வாழ்பவர்கள். மூன்றாம் வகையினர், இறைவனைத் தேடாமல், காணாமல் இருப்பவர்கள். இவர்கள் மதி இழந்தவர்கள்; மகிழ்வையும் இழந்தவர்கள்.

மரியா, யோசேப்பு மற்றும் இடையர்கள் இவர்கள் அனைவரும் முதல் குழுவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இறைவனைக் கண்டனர்; அறிந்தனர்; மகிழ்ந்தனர். உலகத்தில் தன்னையே கடவுள் நிலைக்கு உயர்த்திக்கொண்டு வாழ்ந்த ஏரோது, அவனுக்குத் துதிபாடிக் கொண்டிருந்த குருக்கள், மறைநூல் வல்லுநர், விடுதியில் தங்குவதற்கு இடம் தர மறுத்தவர்கள் ஆகியோர் மூன்றாம் குழுவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் கடவுளைத் தேடவும் இல்லை; அறியவும் இல்லை; உண்மையை ஏற்றுக் கொள்ளவும் இல்லை. எனவே, இவர்கள் அறிவற்றவர்கள்; மகிழ்வின்றி வாழ்ந்தவர்கள். விண்மீன் காட்டும் வழியில் கடவுளைத் தேடிய மூன்று ஞானிகள் இரண்டாம் குழுவைச் சார்ந்தவர்கள். இவர்களி டத்தில் இருந்த உள்ளார்ந்த இதய விருப்பமும், திறந்த மனநிலையும் இறைவனைக் காணச் செய்தது. எவ்வித உள்நோக்கமும் இல்லாமல் இயேசுவை உண்மையிலேயே தேடிய இவர்கள், இயேசுவைக் கண்டதும் தங்களையே அர்ப்பணம் செய்தனர். அதன்பின், வேறு வழியில் தங்கள் நாடுகளுக்குத் திரும்பினர்.

இவர்களைப் போலவே இறைவனைத் தேடி, கண்டுபிடித்து, அவரைக் கண்டதும் மகிழ்வுடன் இவ்வுலகிலிருந்து விடைபெற்ற அல்லது மறைந்துபோன விவிலிய மாந்தர்கள் பலரைக் காண்கின்றோம். ஞானிகளின் வரிசையில், குழந்தை இயேசுவைக் கையிலேந்திய சிமியோன் (லூக் 2:25-32), இயேசுவின் முன்னோடியான திருமுழுக்கு யோவான் (யோவா 3:30),  திருத்தூதர் புனித பவுல் ஆகியோர் அனைவரும் இறைவனை உண்மையிலேயே கண்டு, நிறைவடைந்தவர்கள். உறுதியான உள்ளத்துடன் விண்மீன்களைத் தொடர்ந்து, இறைவனைக் கண்ட ஞானிகளைப் போல், நாமும் இறைவனைக் காணவும், அவரிடம் மற்றவர்களை அழைத்து வரும் விண்மீன்களாய் மாறவும், தேவையான இறையருளை வேண்டுவோம்.

நாம் வாழும் இன்றைய உலகில், கடவுளின் பெயரால் பிரிவினைகளையும், பிளவுகளையும் உருவாக்கி, வன்முறைகளை வளர்க்கும் பல அடிப்படைவாதக் குழுக்கள், தங்கள் தவறுகளை உணர்ந்து, மனமாற்றம் பெற வேண்டுமெனவும், மதங்களையும், இனங்களையும், சாதிகளையும் மூலதனமாக்கி, மக்களைப் பிரித்து, ஆதாயம் தேடி வரும் அரசியல் தலைவர்களின் சுயநலப் போக்கை மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும் எனவும் செபிப்போம்.

இந்தியாவில், குறிப்பாக, தமிழ்நாட்டில் திரை உலகில் பலஸ்டார்களை உருவாக்கி, கடவுளுக்கு இணையான ஓர் இடத்தை அவர்களுக்குக் கொடுத்து, அவர்களை நம்பிவிட்டில் பூச்சிகளாகவாழும் இரசிகர்கள், குறிப்பாக, இளையோர், தங்கள் மயக்கத்திலிருந்து விழித்தெழ வேண்டும் என்று மன்றாடுவோம்.

Comment