
21, சனவரி 2024 (இரண்டாம் ஆண்டு)
ஆண்டின் பொதுக்காலம் 3-ஆம் ஞாயிறு - யோனா 3:1-5, 10; 1கொரி 7:29-31; மாற் 1: 14-20
இறைவார்த்தை ஞாயிறு: அறிவிப்பும் அழைப்பும்!
‘மறைநூலை அறியாதவர், கிறிஸ்துவை அறியாதவர்’ எனக் கூறி நம்மைத் திருவிவிலிய நூலைப் படிக்கத் தூண்டியவர் மறைவல்லுநர்களில் தலைசிறந்தவராகக் கருதப்படும் புனித எரோணிமுஸ் என்பவர். அவர் திரு அவைக்குப் புரிந்த மிகப்பெரிய பணி மறைநூலைக் கிரேக்கம், எபிரேயம் ஆகிய மொழிகளிலிருந்து சாதாரண மக்கள் பேசி வந்த இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்து எழுதியதாகும். திருவிவிலியத்தின் பெரும் பகுதியை (41 நூல்கள்) இலத்தீனில் மொழிபெயர்த்தார். இது அவரின் 18 ஆண்டு கால உழைப்பின் பயன். அவர் இறைபதம் அடைந்ததன் 1600-வது ஆண்டு, 2019, செப்டம்பர், 30 அன்று நினைவு கூரப்பட்டது. இத்தினத்தன்று இறைவார்த்தையை மையப்படுத்தி, ‘Aperuit illis’ என்ற தலைப்பில், திருத்தந்தை பிரான்சிஸ் வெளியிட்டுள்ள திருத்தூது மடலின் வழியாக ‘இறைவார்த்தை ஞாயிறை’ அறிமுகப்படுத்தினார்.
அனைத்துக் கத்தோலிக்கரும் தங்களின் திருவிவிலிய அறிவை அதிகமதிகமாய் வளர்த்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளனர் என்பதை உணர்த்தும் நோக்கத்தில், ஒவ்வோர் ஆண்டும் திருவழிபாட்டு ஆண்டின் பொதுக் காலம் 3-ஆம் ஞாயிறை ‘இறைவார்த்தை ஞாயிறு’ என்று கொண்டாடுவதற்கு அழைப்பு விடுத்தார். இன்று 5-ஆம் ஆண்டு இறைவார்த்தை ஞாயிறை ‘என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால்...’ (யோவா 8:31) எனும் தலைப்பில் கொண்டாடுகின்றோம். இறைவார்த்தை ஞாயிறைப் பெருவிழாவிற்குரிய தன்மையோடு சிறப்பிக்க பங்குத்தளங்களுக்குத் திருத்தந்தை அழைப்பு விடுத்துள்ளது இந்நாளின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகின்றது.
இன்று சிறப்பிக்கப்படும் இறைவார்த்தை ஞாயிறு, யோனாவின் இறைவார்த்தை அறிவிப்பு, இயேசுவின் இறைவார்த்தை அறிவிப்பு, முதல் சீடர்களின் அழைப்புப் பற்றி நம் சிந்தனைகளை மேற்கொள்ள அழைக்கின்றது. இறைவார்த்தை, அனைவருக்கும் உரியது, இது நம்மை மனமாற்றத்திற்கு இட்டுச் செல்கிறது. இது கடவுளின் எல்லையற்ற அன்பின் நற்செய்தியை அறிவிப்பவர்களாக நம்மை ஆக்குகிறது. இந்தச் சிந்தனையை இன்றைய முதல் வாசகத்தில் புரிந்து கொள்கிறோம்.
கடவுள் யோனாவை நினிவே நகருக்குச் சென்று போதிக்குமாறு கட்டளையிடுகிறார். ஆனால், யோனா நினிவே மாநகரின் நிலையை அறிந்து, அவர்களின் பாவ வாழ்வைப் பற்றித் தெரிந்து, அந்த மக்களின் முரட்டுக் குணத்தை அறிந்து, அங்கே போக மனமில்லாமல் தன் பாதையை அவரே மாற்றி அமைத்துக்கொள்கிறார். இருப்பினும், கடவுளின் கட்டளைக்கு ஒத்துழைக்காத தன்னுடைய தவறான வழிக்காக மனம் வருந்தி, இறைவன் கொடுத்த பணியை முழுமையாக நிறைவேற்றிட நினிவே மாநகருக்குப் புறப்பட்டுச் செல்கிறார். ஆண்டவரையே அறியாத நினிவே நகர மக்களுக்கு யோனா வழியாக இறைவார்த்தை அறிவிக்கப்படுகிறது.
‘இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும்’ என்று நினிவே மாநகர மக்களுக்கு இறைவாக்கினர் யோனா அறிவிக்கிறார். நினிவே மாநகர மக்கள் நெறிகெட்டவர்களாய் வாழ்ந்து, பாவச் சேற்றில் உழன்றாலும், கடவுள் வார்த்தைக்குச் செவி சாய்க்கும் நிலையில் இருந்தனர். எனவேதான் ‘நினிவே அழியப்போகிறது’ என்று யோனா குரல் எழுப்பிக் கூறியதும், அந்நகர மக்கள் விழித்தெழுந்தனர். யோனா அறிவித்த வார்த்தையைக் கேட்டவுடன் கடவுளின் வார்த்தையை நம்பி, மனம் வருந்தி, நோன்பிருந்து, தீய வழிகளிலிருந்து விலகினர்; தங்களின் மனமாற்றத்திற்கான செயல்பாடுகளின் மூலமாக கடவுளின் மன்னிப்பையும் பெற்றனர். தீயவர்களான நினிவே மக்கள் மத்தியிலும் இறைவார்த்தை சிறப்பான முறையில் செயல்பட்டது. இறைவார்த்தை இதயத்தை, எண்ணங்களை, மனத்தைக் கிழித்து நன்மையைத் தீமையிலிருந்து பிரித்தெடுக்கிறது அன்றோ! (எபி 4:12).
இன்றைய நற்செய்தியில் இயேசுவின் இறைவார்த்தை அறிவிப்பைக் காண்கிறோம். ‘இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்’ (மாற் 1:15) என்ற செய்தியை இயேசு கலிலேய நகர மக்களுக்கு அறிவிக்கிறார். மாற்கு நற்செய்தியின் கண்ணோட்டத்தில், இயேசு என்ற மாபெரும் தலைவர், தம் பணி வாழ்வின் ஆரம்பத்தில், மக்கள் முன் சொன்ன முதல் இறைவார்த்தை இது. ஒவ்வொரு தலைவனும் தன் பணியைத் துவக்கும் வேளையில், மக்கள் முன்னிலையில் சொல்லும் முதல் சொற்கள், செய்யும் முதல் பணி ஆகியவை அத்தலைவன் எப்படிப்பட்டவர் என்பதை மக்களுக்குக் காட்டும் அடையாளங்கள். ‘இன்று நாம் ஓர் அரசியல் கட்சியின் வெற்றியைக் கொண்டாடவில்லை; மாறாக, நமது விடுதலையைக் கொண்டாடுகிறோம்’ என்பவை 1961-ஆம் ஆண்டு சனவரி 20-ஆம் நாள் அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தலைவராகப் பொறுப்பேற்ற ஜான் கென்னடி, தன் பதவியேற்பு விழாவில் கூறிய முதல் வார்த்தைகள். அந்த உரையின் இறுதியில், ‘நாடு உனக்கு என்ன செய்ததென்று கேட்காதே; மாறாக, நீ நாட்டுக்கு என்ன செய்தாய் என்று கேள்’ என்ற புகழ்பெற்ற வார்த்தைகளை அவர் கூறி முடித்தார். ஒவ்வொரு தலைவனும் முதல் முதலாக மக்கள் முன் அறிக்கையிட்டுச் சொல்லும் வார்த்தைகளில், அவர்களது எண்ணங்கள், அவர்களது தீர்மானம் ஆகியவை கணிக்கப்படும்.
இயேசு எனும் மாபெரும் மனிதர் பணி வாழ்வைத் தொடங்கியபொழுது, ‘இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்’ என்று தம் பணிவாழ்வின் முதல் அறிவிப்பாக முழக்கமிடுகின்றார். இயேசுவின் இந்தக் கொள்கை அறிவிப்பு நான்கு கூறுகளைக் கொண்டது: 1) மக்கள் பல்லாண்டுகளாக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மெசியாவாகத் தாம் வந்துள்ளது; 2) மெசியா பணி இறையாட்சி மதிப்பீடுகளான அன்பு, அமைதி, நீதி, இரக்கம், சமத்து வம், அனைவரும் கடவுளின் பிள்ளைகள், நலிவுற்றோருக்கு நலம், விளிம்புநிலையில் உள்ளோருக்கு உரிமைகள் போன்ற விழுமியங்களைச் சமுதாயத்தில் நிலைநாட்டுவது; 3) இறையாட்சி என்ற இந்தப் புதிய சமூகத்தில் ஒரு வேரோட்டமான மனமாற்றத்தை ஏற்படுத்துவது; 4) நற்செய்தியை அதாவது இயேசுவின் போதனைகளையும், மதிப்பீடுகளையும் மக்கள் ஏற்கச் செய்வது.
இந்தக் கொள்கை அறிவிப்பைத் தொடர்ந்து தாம் ஆற்றவிருந்த இறையாட்சியை உலகில் கொணர தாம் ஒருவராய் உழைத்தால் போதாது என்று தம் பணிக்குத் துணையாகவும், தமக்குப் பிறகு இப்பணி தொடரவும் முதல் கட்டமாக, “என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்” (1:11) என்று சொல்லி மீனவர்கள் சிலரை அழைக்கிறார் இயேசு. ஆர்ப்பாட்டமில்லாத, அடக்கமான, ஆழமான அழைப்பு இது! உடனே சீமோனும், அவரின் சகோதரரான அந்திரேயாவும், அதுபோல செபதேயுவின் மகன் யாக்கோபுவும் அவர் சகோதரரான யோவானும் இயேசுவையும், இயேசுவின் வார்த்தைகளையும் ஏற்றுக்கொள்ள முன்வருகிறார்கள். சீமோனும், அந்திரேயாவும் தங்கள் வலைகளை விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்ற, யாக்கோபும், யோவானும் படகையும், வலையையும், தங்கள் தந்தை மற்றும் கூலியாள்களையும் விட்டுவிட்டு இயேசுவின் பின்னால் செல்கிறார்கள்.
இயேசுவைத் தீவிரமாகப் பின்பற்றுதல் என்பது அனைத்தையும்விட இயேசுவை அதிகமாக, முழுமையாக, முழு இதயத்தோடு அன்பு செய்வதும், அவர்தம் மதிப்பீடுகளுக்காக அன்றாடச் சிலுவைகளைச் சுமப்பதும் ஆகும். உறவுகளையும், உடைமைகளையும் கடந்து இயேசுவைச் ‘சிக்’ கெனப் பற்றிக்கொள்வதே உண்மையான சீடத்துவம். இவ்வாறு இயேசுவைப் பின்பற்றுபவர்கள்தாம் இயேசுவின் சீடர்களாக மாறமுடியும். இறையாட்சி என்பது இழக்க வேண்டியதை இழப்பதற்கு முன்வரக் கூடிய ஒரு மனம். ‘இந்த உலகமே போதும்; இந்த உலகத்தின் பொருள்களும், செல்வங்களும் போதும்’ என்ற மனநிலையோடு வாழ்பவர்கள் இயேசுவைப் பின்பற்றுவதற்குத் தகுதியற்றுப் போய்விடுகிறார்கள். இயேசுவைப் பின்பற்ற விரும்புபவர்கள் இறையாட்சியின் மதிப்பீடுகளுக்காகச் சிலுவைகளைச் சுமந்துகொண்டு அவரைப் பின்பற்ற வேண்டும்.
இயேசுவை உண்மையாகப் பின்பற்றுவோரின் வாழ்வு நிச்சயம் துன்பம் நிறைந்த வாழ்வு. திருத் தூதர்கள், தூயவர்கள், இறையடியார்கள், மாபெரும் மனிதர்கள் இயேசுவின் மதிப்பீடுகளுக்காக வாழ்ந்த போது உயிரை இழந்திருக்கிறார்கள். அண்மைக்கால மாமனிதர் அருள்பணி. ஸ்டேன் லூர்துசாமி இயேசுவைத் தீவிரமாகப் பின்பற்றியதன் காரணமாகச் சித்திரவதை அனுபவித்துக் கொல்லப்பட்டார் என்பது நாம் அறிந்ததே. இயேசுவைத் தீவிரமாகப் பின்பற்றும்போது துன்புறும் ஊழியனாம் இயேசுவின் காயங்களையும், சிலுவைகளையும் இதயத்திலும், உடலிலும் சுமத்தல் அவசியமாகிறது. இயேசுவுக்காகப் படும் துன்பங்கள் அனைத்துமே மீட்பளிக்கும் கருவிகள்தாம். ‘இறையாட்சி எனும் புதிய வரலாற்றை உருவாக்க ஒவ்வொரு கிறிஸ்தவரும் போராட வேண்டும் என்பது நற்செய்தியின் எதிர்பார்ப்பாகும்’ என்பார் ஆஸ்கர் ரொமேரோ.
இன்று இறைவனிடமிருந்து வரும் அழைப்பை ஏற்கிறோமா? அல்லது மறுக்கிறோமா? நம்மை ‘மீன்களைப் பிடிப்பவர்களாக’ என்ற அழைப்பை ஏற்கத் தயக்கம் காட்டுவதற்கு, எதையும் விட்டுவிட விரும்பாத நிலையே ஒரு முக்கியக் காரணமாக இருக்கிறது. இன்றைய சீடத்துவ வாழ்வில் இழக்க வேண்டியவை எவையோ அவற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கிறோம். பற்றிப் பிடிக்க வேண்டியவற்றை இழந்துகொண்டிருக்கிறோம். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள, அவரது நற்செய்தியை அறிவிக்க இழக்கத் துணிந்தால்தான் சீடத்துவ வாழ்வு வாழ முடியும். அன்று பிரான்சிஸ் சவேரியார் தன் படிப்பபையும், பட்டத்தையும், பணியையும் இழந்ததாலே பல கோடி மக்களை இறை உறவில் இணைத்திட அவரால் முடிந்தது. அன்று தெரேசா தன் குடும்பத்தையும், செல்வச் செழிப்பையும், தன் நாட்டையும் இழந்ததினால்தான் சமூகம், சமயம், மொழி, கலாச்சாரம் போன்ற வேறுபாடுகள் அனைத்தையும் கடந்து, பல கோடி மக்களின் இதயங்களில் இன்று ஓர் அன்னையாக இடம்பிடிக்க முடிகிறது. செல்வத்தைத் துறக்க மனமில்லாமல் போன இளைஞரால் இயேசுவைப் பின்பற்ற இயலாமல் போனது! (லூக் 18:18-22).
ஆண்டவரைச் ‘சிக்’கென பற்றும் உள்ளம் அவராகவே உருமாறுகிறது. கடவுளோடு ஒன்றித்திருத்தலில் எத்தனை அற்புதமான மாற்றங்கள் நிகழ்கின்றன! இறைவார்த்தைக்கு மாபெரும் சக்தி உண்டு. மெல்ல மெல்ல மனநிலைகள் மாறுகின் றன; எண்ணங்கள் ஏற்றமடைகின்றன; செயல்பாடுகள் புனிதமடைகின்றன; வார்த்தைகள் வாழ்வளிக்கின்றன.
இறைவார்த்தை ஞாயிறு இன்று நமக்குக் கற்றுத்தருவன:
● முதலாவது, யூத மக்களால் ஒதுக்கப்பட்ட நினிவே நகர் மற்றும் கலிலேயா நகர்களுக்கு இறைவார்த்தை அறிவிக்கப்படுகிறது. இயேசுவின் இறைவார்த்தை அறிவிப்புப் பணி என்பது இறைவார்த்தை சலுகை பெற்ற சிலருக்கு மட்டும் உரியது அல்ல; மாறாக, அதன் திருச்சொற்களைக் கேட்பவர்கள், அவற்றில் தங்களைப் புரிந்துகொள்பவர்கள் அனைவருக்கும் உரியது (இறைவார்த்தை அனைவருக்கும் உரியது!).
● இரண்டாவது, இறையாட்சி பற்றிய நற்செய்தி அறிவிப்பு, தொடர் மனமாற்றத்திற்கான ஓர் அழைப்பு. இறையாட்சியில் பங்கேற்க அனைவரும் மனம்மாறி நற்செய்தியை நம்புவது அடிப்படைத் தேவை. இயேசுவின்மீது கொண்டுள்ள ஆழமான அன்பு, பாசம், நட்பு, ஈடுபாடு மாற்றங்களுக்கு வழி வகுக்கும். இயேசுவின் செய்தியைக் கேட்ட பின்னர், முந்தைய நிலையிலேயே நாம் இருக்க இயலாது. மனம் மாறவும், வாழ்வியலை மாற்றவும் இறைவார்த்தை அனைவரையும் தூண்டும் (மனம் மாறுங்கள் என்பது அனைவருக்குமான அழைப்பு!).
● அழைப்பு என்பது கேட்டுப் பெறுவது அல்ல; அது இறைவன் தருவது. இறைவன் தாம் விரும்பியதைச் செய்து முடிக்க நம்மை அழைக்கிறார். அதை நிறை வேற்றுவதற்கான ஆற்றலையும் அவரே தருகிறார். இறைவனின் உடனிருப்புதான் அழைக்கப்பட்டவர்களின் ஒரே கையிருப்பு. நமது வாழ்வு இயேசுவின் மீது கொண்ட ஈடுபாட்டால் முற்றிலும் மாற வேண்டும் என்ற ஆவலுடன், அவரைப் பின்தொடர முயல்வோம் (மனிதர்களைப் பிடிக்க ஆள்கள் தேவை!).
Comment