No icon

(04, பிப்ரவரி 2024) (இரண்டாம் ஆண்டு)

ஆண்டின் பொதுக்காலம் 5-ஆம் ஞாயிறு (யோபு 7:1-4, 6-7, 1கொரி 9:16-19, 22-23, மாற் 1:29-39)

அடுத்த ஊர்களுக்குச் செல்வோம்அனைவரையும் நலமாக்குவோம்!

மனித வாழ்க்கையின் துன்பங்களை யாராலும் புரிந்துகொள்ள முடியாது. நமது வாழ்க்கையில் ஒரு கணிசமான பகுதியைக் கண்ணீர் வடிப்பதிலேயே செலவழித்து விடுகின்றோம். அழுதுகொண்டே பிறக்கிறோம்; அழுதுகொண்டே வாழ்கிறோம்; அழுதுகொண்டே இறக்கிறோம். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் துன்பமும், இறப்பும் தவிர்க்க முடியாதவை. துன்பத்தைச் சந்திக்காத மனிதர்கள் எவரும் இவ்வுலகில் இல்லை எனலாம். ‘வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்; வாசல் தோறும் வேதனை இருக்கும்என்பார் கவிஞர் கண்ணதாசன். ‘பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும்என்ற பழமொழிக்கு ஏற்ப, நம்முடைய வாழ்விலும் துன்பங்கள் தொடர்கதையாக வருவதை உணரலாம். ‘இனி என் வாழ்வில் நிம்மதி ஏது?’ என அங்கலாய்க்கலாம்.

அமெரிக்க நாட்டைச் சார்ந்த புகழ்பெற்ற கிறிஸ்தவ எழுத்தாளரும், பத்திரிகையாளருமான லீ ஸ்ட்ரோபெல் (Lee Strobel) என்பவர் 2000-ஆம் ஆண்டு வெளியிட்ட நூல்The Case for Faithஎன்பதாகும். இந்நூலை எழுதுவதற்குப் பல ஆய்வுகளை அவர் மேற்கொண்டார். இந்த ஆய்வின் ஒரு பகுதியாகப் பல கிறிஸ்தவர்களிடம் ஒரு கேள்வியைக் கேட்டார். ‘நீங்கள் கடவுளிடம் எந்தக் கேள்வியும் கேட்கலாம் என்ற அனுமதி இருந்தால், கடவுளிடம் என்ன கேள்வி கேட்பீர்கள்?’ என்பதுதான் அந்தக் கேள்வி. இந்த ஆய்வுக் கேள்வியின் அடிப்படையில் ஏராளமானவர்கள் அனுப்பியிருந்த விடைகள்: ‘இந்த உலகில் துன்பம் ஏன் உள்ளது?’, ‘என் வாழ்வில் துன்பம் ஏன்?’ என்பவை.

எனக்கு மட்டும் ஏன் கடவுள் இவ்வளவு துன்பத்தைத் தருகிறார்?’, ‘நான் யாருக்கும் எவ்விதத் தீங்கும் செய்யவில்லையே! அப்படியிருக்க எனக்கு மட்டும் ஏன் இத்தனை துன்பங்கள்? எனக்கு ஏன் இந்த இழப்பு? எனக்கு ஏன் இந்தச் சோதனை? எனக்கு ஏன் நோய்? எனக்கு மட்டும் ஏன் இந்த வலி? நான் வலியில் கதற வேண்டும் என இறைவன் அனுமதிக்கிறாரா? அல்லது விரும்புகிறாரா? கடவுளுக்குக் கண் இல்லையா? காது இல்லையா? நான் படும் துன்பங்களைப் பார்த்தும் பார்க்காததுபோல கடவுள் இருப்பது ஏனோ!’ இவ்வாறான கேள்விகளை நம்மில் எழுப்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது. பெரு நாட்டைச் சார்ந்த இலத்தீன் அமெரிக்க விடுதலை இறையியலாளர் குஸ்தாவோ (Rev. Gustavo Gutierrez Merino), கடவுளின் பிள்ளைகள் இறைவனை நோக்கி அழுது புலம்பிக் கேள்வி கேட்க உரிமை இருக்கிறது. இதை ஒரு தேவையானஇறை புலம்பல்அல்லதுஇறை உரையாடல்என விளக்குகிறார்.

இப்படிப்பட்ட ஓர் இறை புலம்பலை இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கின்றோம். திருவிவிலியத்தில் நீதிமானாக வாழ்ந்தவர் யோபு. இவர் கடவுளுக்கு அஞ்சி நடந்தார்; உடலளவிலும், உள்ளத்தளவிலும் தாங்க இயலாத துன்பத்திற்கு ஆளானார்; தன் உடைமைகளை இழந்தார்; சொந்தப் பிள்ளைகளை இழந்தார்; உடல் முழுவதும் உள்ள எரியும் புண்களால் மிகவும் வேதனைப்பட்டார்; இந்த வேதனைகளைத் தாங்க முடியாத அவர் கருப்பையிலேயே இறந்திருக்க விரும்புகிறார். அவரது அளவு கடந்த வேதனை, அவரது இறை நம்பிக்கையை மிகவும் சோதிக்கிறது. துயரத்தில் மூழ்கிப்போன யோபு சாக விரும்புகிறார். தன் நண்பர்களின் பழிச்சொற்களைத் தாங்க முடியாதவராய்க் கதறுகிறார்; தனது அவல நிலையை, வேதனையை எண்ணி நொந்து அழுகிறார்; தனது உணர்வுகளை, உணர்ச்சிகளை இறைவனிடம் வெளிப்படுத்துகிறார். ‘மண்ணில் வாழ்வது மனிதருக்குப் போராட்டந்தானே?’ (யோபு 7:1) என்ற வலி மிகுந்த கதறலை, கேள்வியை, புலம்பலை இறைவன் முன் வைக்கிறார். யோபுவின் இந்தப் புலம்பலைத்தான்இறை புலம்பல்என்கின்றனர் விவிலிய அறிஞர்கள் பலர்.

யோபுவைப்போல நம் வாழ்விலும் பிரச்சினைகள் நம்மை நெருங்(க்)கும்போது அவற்றைச் சவாலாக எண்ணிச் சந்திப்பதை விட்டுவிட்டு, அவற்றுக்கு அடிமையாகிக் கோழைகளாகச் செத்துவிட பல நேரங்களில் நாம் எண்ணியதுண்டு. துன்பங்கள் நம் வாழ்வை நிரப்பும்போது, நம்மிடமிருந்து முதலில் விடைபெறுவன உணவும், உறக்கமும்தான். இரவுகள் இன்னல்மிகு இரவுகளாக இருக்கும்; படுக்கும்போது எப்போது எழலாம் என மனம் சொல்லும்; ஆனால், இரவோ நீண்டிருக்கும்; விடியும் வரை புரண்டு உழல வேண்டியுள்ளது (யோபு 7:4). இந்த வலி மிகுந்த உணர்வுகள் சில நேரங்களில் இறைவனைப் பற்றிய தவறான எண்ணங்களை நம்மில் விதைத்துவிடும்.

1961-ஆம் ஆண்டு சி.எஸ். லூயிஸ் என்ற புகழ்பெற்ற இறையியலாளர்சிந்திக்கப்பட்ட ஒரு துயரம்’ (A Grief Observed) என்ற தலைப்பில் வெளியிட்ட தனது நூலில்இறைவனை நம்புவதை நான் நிறுத்திக்கொள்வேன் என்றால், அது எனக்கு ஆபத்தாக இருப்பதில்லை; ஆனால், இறைவன் இரக்கமற்றுப் போனார் என்ற சிந்தனையை நான் வளர்த்துக்கொள்வேன் என்றால், அதுவே இறைவனைப் பற்றிய மிகக் கொடூரமான எண்ணங்களை வளர்த்துக் கொள்வதாகவும், மிக ஆபத்தானதாகவும் அமைந்து விடும்என்கிறார். ‘இறைவன் இல்லைஎன்று சொல்வதைவிட, ‘இறைவன் இரக்கமற்றுப் போனார்என்ற முடிவுக்கு வருகின்றபோது, இறைவனைப் பற்றிய தவறான முடிவுகளுக்கு வந்து விடுகிறோம். என் வாழ்வில் நடந்த எல்லாத் துயரங்களுக்கும் இறைவன்தான் காரணம் என இறைவன்மேல் பழிபோட ஆரம்பித்துவிடுவோம்.

யோபு தன் வாழ்வில் பிணியின் உச்சத்தையும், உக்கிரத்தையும் அனுபவித்தபோதும், அவர் இறைவனைத் தூற்றவில்லை; அவரைப் பழித்துப் பேசவில்லை. மாறாக, இறைவனைப் பற்றிய சரியான பார்வை, ‘ஆண்டவர் அளித்தார், ஆண்டவர் எடுத்துக் கொண்டார்; ஆண்டவரது பெயர் போற்றப் பெறுக!’ (1:21) எனக் கடுமையான துன்பத்தின் நடுவிலும் கூறச் செய்தது. தீர்ந்துபோகாத இறைவனின் இரக்கத்தை (புல 3:22) வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் யோபு அனுபவித்தார். மனிதர் என்ற முறையில் பல நேரங்களில் தன் உணர்ச்சிகளை யோபு வெளிப்படுத்தினாலும், தன் துன்பங்களைப் பொறுமையோடும், இறை நம்பிக்கையோடும், பெருந்தன்மையோடும் ஏற்றுக்கொண்டார். எனவே, இறைவன் அவருக்குப் பன்மடங்காக எல்லாவற்றையும் திருப்பிக் கொடுக்கிறார் (யோபு 42:10). இறைவனின் இந்தச் செயல், ‘உடைந்த உள்ளத்தோரை இறைவன் குணப்படுத்துகின்றார்; அவர்களின் காயங்களைக் கட்டுகின்றார்’ (திபா 147:3) என்ற ஓர் அழகான நம்பிக்கை உணர்வுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. இந்தத் திருப்பாடலின் கூற்றை அனுபவப்பூர்வமாக இன்றைய நற்செய்தியில் அறிய வருகிறோம்.

இன்றைய மாற்கு நற்செய்தியை நாம் மூன்று பகுதிகளாக வகைப்படுத்தலாம்: 1. பேதுருவின் மாமியார் காய்ச்சல் நீங்குதல் (வச. 29-31); 2. நோயாளர்கள், பேய் பிடித்தவர்கள் பலரை நலமாக்குதல் (வச. 32-34); 3. அடுத்த ஊர்களுக்கு நற்செய்தியைப் பறைசாற்றப் புறப்படுதல் (வச. 35-39).

முதல் பகுதியில், சீமோனின் மாமியார் காய்ச்சலாய் இருந்தார் என்று மாற்கு மற்றும் மத்தேயு குறிப்பிடுகின்றபோது, லூக்கா மட்டும் கடுங்காய்ச்சல் என்று குறிப்பிடுகிறார். லூக்கா ஒரு மருத்துவர் (கொலோ 4:14, பில 23-24) என்று நம்பப்படுவதால் அந்நோயின் தீவிரத்தைக் கோடிட்டுக் காட்டுகிறார் என்று எண்ணிப் பார்க்கலாம். இயேசு சீமோனின் மாமியாரை எவ்வாறு நலமாக்கினார் என்பதைப் பற்றிக் கூறும்போது மூன்று நற்செய்தியாளர்களும் வெவ்வேறு சொற்களைப் பயன்படுத்துகின்றனர். ‘இயேசு அவர் அருகில் சென்று, கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று’ (மாற் 1:31) என்று மாற்குவும், ‘இயேசு அவரது கையைத் தொட்டதும் காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று’ (மத் 8:15) என்று மத்தேயுவும், ‘இயேசு அவரருகில் நின்று காய்ச்சலைக் கடிந்துகொள்ள அது அவரை விட்டு நீங்கிற்று’ (லூக் 4:9) என்று மருத்துவரான லூக்காவும் பதிவு செய்கின்றனர்.

மூன்று நற்செய்தியாளர்களும் பேதுருவின் மாமியாரை நலப்படுத்திய நிகழ்வை வெவ்வேறு வார்த்தைகளில் விளக்கினாலும், மூன்றிலும் இருக்கின்ற ஒற்றுமைஅவர் உடனடியாக நலம் பெற்றார்என்பதுதான். இயேசுவிடமிருந்து ஒரு வல்லமை வெளிப்பட்டு, அந்த வல்லமையால் தொடப்பட்ட அவர், முழுமையாக நலம்பெற்று, உடனே அவர் இயேசுவுக்குப் பணிவிடை செய்கிறார் (மாற் 1:31). இந்நிகழ்வில் நம் கூடுதல் கவனத்தை ஈர்ப்பது, மாற்கு நற்செய்தியில் பதிவு செய்யப்பட்டதின்படி, இயேசு செய்த முதல் இரண்டு வல்ல செயல்களுமே ஓய்வுநாளில் நடக்கின்றன (மாற் 1:21) என்பதாகும். இயேசுவின் குணப்படுத்தும் பணிக்கென ஒரு குறிப்பிட்ட நேரம், காலமில்லை என்பதை நாம் புரிந்துகொள்கிறோம்.

இரண்டாம் பகுதியில், நம் கவனத்தை மிகவும் ஈர்த்தவை, மாலை வேளையில், கதிரவன் மறையும் நேரத்தில் நோயாளர்கள், பேய் பிடித்தவர்கள் அனைவரையும் இயேசுவிடம் கொண்டு வந்த கப்பர்நாகும் கிராம மக்கள். கப்பர்நாகும் ஊரில், தொழுகைக்கூடத்தில் தீய ஆவி பிடித்திருந்த ஒருவரை இயேசு நலமாக்கிய செய்தியும், இயேசு தொழுகைக்கூடத்திலிருந்து வெளியே வந்து, பேதுருவின் இல்லத்தில் அவரின் மாமியாரின் காய்ச்சலை நலமாக்கிய செய்தியும் காட்டுத் தீயைப் போலச் சுற்றுப்புறமெங்கும் பரவியது. எனவே, ஒரு குறிப்பிட்ட மணி நேரத்திற்குள் கப்பர்நாகும் கிராம மக்கள் தங்கள் வீட்டில், ஊரில், சுற்றுப்புறத்தில் இருக்கின்ற நோயாளிகள் பலரையும் இயேசுவிடம் கொண்டு வருகின்றனர். ‘கொண்டு வருகின்றனர்எனும் வார்த்தையைச்சுமந்து வருகின்றனர்என்றும் பொருள் கொள்ளலாம் (மாற் 2:3).  இவ்வாறானஒரு நம்பிக்கையின் கூட்டத்தைஇயேசு முதன் முறையாகச் சந்திக்கின்றார்.

மூன்றாம் பகுதியில், எந்த நேரமென்றும் பாராமல் மக்கள் பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட இயேசு, தனிமையாக, வெவ்வேறு நேரங்களில், வெவ்வேறு இடங்களில் இறைவனிடம் வேண்டுதல் செய்யவும் தவறவில்லை! சேவையோடு செபமும் இன்றியமையாதது. பணிக்கு முன்பிரார்த்தனைஅவசியம் என்பதை இயேசு இங்கே சுட்டுகிறார். அவரது பணிக்கான ஆற்றலை இறைவனோடு கொண்டிருந்த நெருங்கிய உறவிலே பெற்றுக்கொள்கிறார். எனவே, அந்த ஆற்றலைப் பெற்று, தீரத்துடன்நாம் அடுத்த  ஊர்களுக்குப் போவோம், வாருங்கள். அங்கும் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும்என்று சொல்லி, சீடர்களை அழைத்துச் செல்கிறார். தம்முடைய பணி மக்கள் எல்லாரையும் சென்றடைய வேண்டும் என்பது இயேசுவின் பரிவுமிக்க மனநிலை!

இன்று சுமந்து செல்ல வேண்டிய சிந்தனைகள்:

 பல வேளைகளில் துன்புறும்போது நாம் தனித்து விடப்படுகிறோம் என்ற உணர்வுதான் நம்மில் மேலோங்கி இருக்கும். துன்பத்தில் என்னோடு யாரும் இல்லை என்ற உணர்வு ஆழ்ந்த துயரத்திற்கு நம்மை இழுத்துச் செல்கிறது. ஆனால், என்னோடு இணைந்து கடவுளும் துன்புறுகிறார் என்ற சிந்தனை துன்பத்தைச் சரியாக நாம் புரிந்துகொள்ள உதவுகிறது. துன்புறும் மக்களோடு தம்மை எப்போதும் இணைத்துக்கொண்டு அவர்களின் பாடுகளை ஏற்பவர்தான் நம் இம்மானுவேல்!

 துன்பக் காலங்களில் இறைவனைக் குறை கூறுவதைவிட, அவரது அன்பை எண்ணி ஆறுதல் அடைய வேண்டும். இறைவன் நம்மை அன்பு செய்கிறார்; துன்ப வேளைகளில் நம்மை அரவணைக்கிறார். ஏனெனில், அவர் இரக்கமும், அருளும் கொண்டவர். நம் பலவீனத்தை, நோய்களை, துயரங்களை அறிந்து, தாமாகவே முன்வந்து நலமளிக்கக்கூடியவர்தான் நம் மெசியா!

 நாகரிகம், கல்வி, செல்வம் இவற்றின் வளர்ச்சியால் நாமும் வளர்ச்சி அடைகிறோம். ஆனால், அதற்கேற்ப மனிதக் கரிசனையும், மனிதநேயமும், நட்புறவும் வளர்ந்துள்ளனவா? என்பது நாம் ஒவ்வொருவருமே கேட்டுப்பார்க்க வேண் டிய கேள்வி. ஒருவர் மற்றவருடைய சுமைகளைத் தாங்கிக்கொள்ளவும், உதவிக்கரம் நீட்டவும் முன்வர வேண்டும். ஏனெனில், நாம் அன்போடு சுமக்கின்ற சுமை ஒருபோதும் சுமையாவதில்லை!

Comment