26, மே 2024 (இரண்டாம் ஆண்டு)
மூவொரு கடவுள் பெருவிழா-இச 4:32-34,39-40, உரோ 8:14-17, மத் 28:16-20
மூவொரு கடவுள் - நம் முதல் உறவினர்!
ஆயர் ஒருவர் மக்களோடு இணைந்து புகழ்பெற்ற ஒரு திருத்தலம் நோக்கி, ஒரு படகில் பயணம் மேற்கொள்கிறார். அப்பயணத்தின்போது ஒரு தீவில் தனியே வாழும் மூன்று துறவிகள் மீட்படையும் நோக்கத்துடன், கடுந்தவம் புரிந்து வருவதைக் கேள்விப்படுகிறார். உடனே அந்த மூவரையும் தான் காண விரும்புவதாகப் படகோட்டியிடம் ஆயர் கூறவே, அவரோ, “அம்மூவரும் படிப்பறிவில்லா மிகச் சாதாரண துறவிகள்; அவர்களைக் காண்பதற்கு ஆயராகிய நீங்கள் செல்வதா?” என்று கூறி, அவரைத் தடுக்கப் பார்க்கிறார். ஆயர் மிகவும் வற்புறுத்தவே, அவர் அத்தீவை நோக்கிப் படகைச் செலுத்துகிறார்.
தீவுக்குச் சென்ற ஆயர் மூன்று துறவியரையும் சந்தித்து, “நீங்கள் மீட்படைய மேற்கொண்டு வரும் முயற்சிகள் என்னென்ன?” என்று கேட்கிறார். அவர்கள் மூவரும், தாங்கள் ஒரு சிறு செபத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லி, மீட்பைத் தேடிக்கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர். அவர்கள் பயன்படுத்தும் செபம் என்ன என்று ஆவலோடு ஆயர் கேட்டதும், மூவரும் சேர்ந்து, “நீங்கள் மூவர், நாங்கள் மூவர், எங்கள் மேல் இரக்கமாயிரும்” என்று கூறினார்கள். அத்துறவிகள் மூவரும் மூவொரு கடவுளைப் பற்றிக் கூறுகின்றனர் என்பதைப் புரிந்துகொண்ட ஆயர், அவர்களிடம், மூவொரு கடவுள், மீட்பின் வரலாறு ஆகிய மறையுண்மைகளைப் பற்றியும், இயேசு கற்றுத் தந்த செபத்தையும் அன்று முழுவதும் பொறுமையாகச் சொல்லிக் கொடுத்தார். மாலையானதும் ஆயர் படகில் அத்தீவை விட்டுக் கிளம்பினார்.
ஆயர் புறப்பட்டுச் சென்றதும், கடல் நீர்ப்பரப்பின்மீது அந்த மூன்று துறவிகளும் ஓடி வருவதைக் கண்டு படகை நிறுத்தச் சொன்னார். அம்மூவரும் படகை நெருங்கியதும், உரத்தக் குரலில், “ஆயர் அவர்களே, எங்களை மன்னியும். நீங்கள் சொல்லித் தந்த செபத்தை அதற்குள் மறந்துவிட்டோம். தயவுசெய்து மீண்டும் ஒருமுறை அதை எங்களுக்குச் சொல்லித் தாரும்” என்று வேண்டினர்.
ஆயர், அவர்கள்முன் தலைபணிந்து, “இதுவரை நீங்கள் சொல்லி வந்த செபமே, உங்களை இறைவனிடம் கொண்டு சேர்க்கும். வேறெதுவும் உங்களுக்குச் சொல்லித்தர எனக்குத் தகுதியில்லை. பாவிகளாகிய எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்” என்று கூறினார். அவர் கூறியதைக் கேட்டு துறவிகள் மூவரும் மகிழ்வுடன் தங்கள் தீவுக்குத் திரும்பினர். இரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் அவர்கள் 1885-ஆம் ஆண்டு ‘மூன்று துறவிகள்’ (The Three Hermits) என்ற தலைப்பில் எழுதிய சிறுகதை இது.
ஒரு சிறப்புக் காலத்தைக் கடந்து, திருவழிபாட்டு ஆண்டின் பொதுக்காலத்தை மீண்டும் நாம் ஆரம்பித்துள்ளோம். கடந்த ஆறு வாரங்களாகப் பல்வேறு பெருவிழாக்களைக் கொண்டாடினோம். இந்த விழாக்களின் சிகரமாக இன்று ‘மூவொரு கடவுள்’ பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். திருவழிபாட்டு ஆண்டின் முதல் பாதிப்பகுதிக்கு முடிவாகவும், மறு பாதிப்பகுதிக்குத் தொடக்கமாகவும் இந்த விழா அமைகிறது. இந்த விழாவை 1334-ஆம் ஆண்டு, திருத்தந்தை 22-ஆம் யோவான் தொடங்கினார்.
முதன்முதலில் ‘மூவொரு கடவுள்’ என்ற வார்த்தையைத் தன் எழுத்துகளில் பயன்படுத்தியவர் திரு அவை தந்தையான தெர்த்தூலியன் (கி.பி. 160-240) என்பவர். ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு ஏரியஸ் என்ற ஆயர் (கி.பி. 250-336), ‘இயேசு கடவுள் அல்ல, கடவுளின் முதல் படைப்பு’ என்று சொல்ல, அவரது தவறான போதனையைக் கண்டித்தது திரு அவை. கி.பி. 325-இல் ஆயர் அத்தனாசியுஸ் தலைமையில் கூடிய நைசியா திருச்சங்கம் மூவொரு கடவுள் படிப்பிiனையை வரையறுத்து, ‘நிசேன் நம்பிக்கை’ (The Nicene Creed) அறிக்கையை உருவாக்கியது. இதில், ‘இயேசு எல்லாக் காலங்களுக்கும் முன்பே தந்தையிடமிருந்து பிறந்தார். இவர் உதித்தவர், உண்டாக்கப்பட்டவர் அல்லர்’ என்றும், ‘தந்தையிடமிருந்தும், மகனிடமிருந்தும் புறப்பட்டு வரும் ஆண்டவர் உயிரளிப்பவர்’ என்றும் வரையறுத்தது.
தந்தை, மகன், தூய ஆவி ஆகிய மூவரும் ஆள் தன்மையில் வெவ்வேறாக இருந்தாலும், ஒரே கடவுளாகச் செயல்படுகிறார்கள் என்பதை நம் அறிவுக்கண் கொண்டு புரிந்துவிட முடியாது. இறையியல் மேதையான புனித அகுஸ்தினாரே தன் அறிவு கொண்டு இந்தப் பேருண்மைக்கு விடை காண இயலவில்லை. ஆனால், மூவொரு கடவுளை நம் முதல் உறவினராக, நம் உடன் பயணிக்கும் நண்பராக உணர்ந்துகொள்ள இயலும்.
நாம் குழந்தையாகப் பிறந்ததும் நமக்கு அறிமுகமான முதல் உறவினர் மூவொரு கடவுளே. ‘தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே, ஆமென்’ என்ற எளிமையான செபமே நாம் முதன்முதலில் கற்றுக் கொண்ட மூவொரு கடவுள் செபம். தமிழ் மண்ணில் நற்செய்தி தீபம் ஏற்றிய தூய சவேரியாருக்குப் பிடித்தமான செபமும் இந்த மூவொரு கடவுள் செபமே.
நாம் பிறந்ததும் நம் பெற்றோர் மூவொரு கடவுள் பெயராலே நமது நெற்றியில் சிலுவை வரைந்து, நமக்கு ஆசியளித்தனர். மூவொரு கடவுளின் பெயரால் நாம் திருமுழுக்குப் பெற்றோம். தூய நீர் நம்மீது தெளிக்கப்படும்போது நாம் சிலுவை அடையாளம் வரைகிறோம். மூவொரு கடவுளின் பெயரால் நாம் மன்னிக்கப்படுகிறோம்.
திருமணம், குருத்துவம் என எல்லா அருளடையாளங்களும் மூவொரு கடவுள் பெயரால் நிறைவேற்றப்படுகின்றன. மூவொரு கடவுள் பெயராலே அன்றாடப் பணிகள் பலவற்றையும் தொடங்குகிறோம். ஒவ்வொரு நாளும் ஆலயத்தில் விடியற்காலை, நண்பகல், மாலை என மூன்று முறை ஒலிக்கும் ஆலய மணி ஓசை, ‘மூவொரு கடவுளாகிய தந்தை நம்மை அன்பு செய்து தொடர்ந்து பாதுகாக்கின்றார்; மகனாகிய இயேசு கிறிஸ்து தமது அருளால் நம்மை மீட்டுக்கொண்டிருக்கிறார்; துணையாளரான ஆவியார் நம் உள்ளத்தில் குடியிருந்து நமக்குப் புத்துயிர் அளித்துக்கொண்டிருக்கிறார்’ என்பதை நினைவூட்டி, மூவொரு கடவுளை நோக்கி மன்றாட நம்மைத் தூண்டுகின்றன. இவ்வாறு மூவொரு கடவுள் மீண்டும் மீண்டும் நம் வாழ்வில் அறிமுகமாகிக் கொண்டே இருக்கிறார்.
மிக நெருக்கமாக, நம் வாழ்வில் உடன்வரும் கடவுளை, யூதர்கள் மிகவும் கண்டிப்பானவராகவும், அச்சத்திற்கு உரியவராகவும் கருதி வந்தனர். இவர்கள் கடவுளை அணுக முடியாத தூரத்தில் உள்ளவர் என்றும் கருதினர். இறைவனை ஏறெடுத்துப் பார்க்கவும், ‘கடவுள்’ என்ற பெயரைக்கூட உச்சரிக்கவும் துணியாதவர்கள். கடவுளைப் பார்க்கிறவர்கள் மடிந்துபோவர் என நம்பினர். இந்தச் சூழ்நிலையில் கடவுளை உயிரோட்டமுள்ள நம் ‘முதல் உறவாக’ அறிமுகம் செய்தவர் இயேசு. யூதர்கள் கடவுளை அணுக முடியாத உயரத்தில் உள்ளவர் என்று எண்ணியபோது, இயேசு கடவுளைத் ‘தந்தையாக’ உணர்ந்தார்; தந்தை-மகன் உறவை அவர் ஒவ்வொரு நாளும் அனுபவித்தார்; ‘தந்தை’ என்று கடவுளை உளமாற அழைத்து, தம் பாசப் பிணைப்பை வெளிப்படுத்தினார்.
இத்தகைய தந்தை-மகன் உறவின் வெளிப்பாடாகிய ‘அப்பா’ அனுபவத்தில் தந்தையில் மகன் தம்மையே இழந்தார்; மகனில் தந்தை தம்மை இழந்தார். இந்த அன்பின் ஆழத்தில் இயேசு தம் தந்தையை அடையாளம் கண்டுகொண்டார். தந்தையும் தம் மகனை ஏற்றுக்கொண்டார். இந்த ‘அப்பா’ அனுபவத்தின் காரணமாகவே, “என்னைக் காண்பது, தந்தையைக் காண்பது ஆகும்” (யோவா 14:9) என்றும், “என்னுடையதெல்லாம் உம்முடையதே; உம்முடையதும் என்னுடையதே” (யோவா 17:10) என்றும் இயேசுவால் கூற முடிந்தது. இந்தத் தந்தை-மகன் உறவு இயேசுவின் வாழ்வு முழுவதும் இழையோடுவதைக் காண்கிறோம். அதேவேளை தூய ஆவியாரும் இயேசுவோடு மிக நெருக்கமாக இருந்து, அவரை வழி நடத்தியதை இயேசுவின் வாழ்வு முழுவதிலும் காண இயலும்.
அன்னை மரியா தூய ஆவியாரால் கருவுற்று இயேசுவைப் பெற்றெடுக்கிறார் (லூக் 1:35). இயேசுவின் திருமுழுக்கின்போது தூய ஆவி புறா வடிவில் இறங்கி வந்தார் (மாற் 1:10). அதே ஆவியார் இயேசுவைப் பாலைநிலத்துக்கு அழைத்துச் சென்றார் (மாற் 1:12). உயிர்ப்பிற்குப் பிறகு தம் சீடர்கள்மேல் ஊதி தூய ஆவியை வழங்கினார் (யோவா 20:22). இவ்வாறு, இயேசுவில் செயல்பட்ட தூய ஆவியார் நம்மிலும் செயல்படுகிறார். தூய பவுல் கூறுவதுபோல, தூய ஆவியே, இறைத்தந்தையை நாம் “அப்பா, தந்தையே” என அழைக்கும் உரிமையைத் தருகின்றார் (உரோ 8:15).
இயேசு அறிமுகம் செய்து வைத்த மூவொரு கடவுளின் இலக்கணம் நமக்குச் சொல்லித் தரும் பாடம் என்ன?
இந்த உலகம் என்பது ஓர் அழகான குடும்பம். உலகம் என்ற குடும்பம் உறுதியாக அமைய வேண்டும் என்றால், நமது ஒவ்வொரு குடும்பத்திலும் பாசமும், பரிவும், மன்னிக்கும் தன்மையும் மேலோங்கியிருக்க வேண்டும். கடவுள் தன்மை கொண்ட மூன்று ஆள்கள் ஒரே கடவுளாக அன்புற்று வாழ்வது போன்று, நாமும் நம் குடும்பங்களில் அன்புடன் வாழ வேண்டும்.
மூவொரு கடவுள் நம் குடும்ப வாழ்வின் ஒற்றுமைக்கு மாதிரி. தந்தை, மகன், தூய ஆவி என மூன்று வெவ்வேறு ஆள்களாக இருந்தாலும், ‘மூவொரு கடவுள்’ என்ற குழுமத்தில் எப்படி ஒன்றாகச் செயல்படுகிறார்களோ அதேபோல நாமும் திரு அவை எனும் குழுமத்தில் ‘கிறிஸ்துவின் ஒரே மறையுடலாக’ ஒன்றாக இணைந்து செயல்பட அழைக்கப்படுகின்றோம்.
நிறைவாக, நம் கடவுள் தனிமையில் தனித்திருக்கும் அல்லது தனித்து இயங்கும் கடவுள் அல்லர்; மாறாக, கடவுள் ஒரு கூட்டு உறவாய், குடும்பமாய் நமக்கு அறிமுகமானார். உறவே இறைவனின் உயிர்நாடி! கடவுள் என்னும் அச்சில் உருவாக்கப்பட்ட நாம், நம்முடைய உறவுகளில் ‘நாமும்-கடவுளும்-பிறரும்’ இணைந்த குடும்பமாக வாழ்வோம். மோசே கூறியதுபோல, நம் அனைவருக்கும் முதல் உறவினராக அறிமுகமான மூவொரு கடவுள் காட்டும் வழியில் நடந்து, அவரது ஆசியால் நம்மை நிறைப்போம்!
Comment