
9, ஜுன் 2024 (இரண்டாம் ஆண்டு)
ஆண்டின் பொதுக்காலம் 10-ஆம் ஞாயிறு தொநூ 3:9-15; 2கொரி 4:13- 5:1; மாற் 3:20-35
கடவுளின் குடும்பமான நாம் யாவரும்...
கடவுளால் முதன்முதலில் ஏற்படுத்தப்பட்டு, ஆசி வழங்கப்பட்ட ஒரு குழுமமே குடும்பம் (தொநூ 2:24). கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்ட குடும்பம் (மானிடர்) கடவுளின் கட்டளைக்கேற்ப, அவரது விருப்பத்திற்கேற்ப வாழ வேண்டும்; உலகப் போக்கிற்கேற்ப வாழக்கூடாது எனக் கடவுள் விரும்பினார்.
கடவுள் உலகில் உள்ள அனைத்தையும் படைத்தாலும், மானிடரை மட்டும் தம் சாயலாகப் படைத்தார். மானிடர் சுய அறிவு உள்ளவர்; கடவுளுடன் உரையாடக்கூடிய ஆற்றல் உள்ளவர்; படைப்பாற்றல் மிக்கவர். எனவே, இவர்கள் கடவுளின் பண்புகளைப் பிரதிபலிக்க வேண்டும். ஆனால், முதல் குடும்பம் (ஆதாம்-ஏவாள்) அவ்வாறு நடந்துகொள்ளவில்லை. கடவுளோடு கொண்ட உறவை முறித்துக்கொண்டது. அந்த உறவு ஏன் முறிவுபட்டது? மீண்டும் கடவுளின் குடும்பத்தில் இணைந்து கொள்ள என்ன செய்ய வேண்டும்? போன்ற கேள்விகளுக்கு விடை தருவதாக அமைகிறது இன்றைய ஞாயிறு வழிபாடு. இன்றைய முதல் வாசகத்திலிருந்து நமது சிந்தனையைத் துவங்குவோம். இன்றைய முதல் வாசகம், முதல் குடும்பம் பாவத்தில் வீழ்ந்த நிகழ்வை எடுத்துரைக்கிறது. நம் முதல் பெற்றோர் கடவுளின் கட்டளையை மீறி, ‘உண்ணக்கூடாது’ என்று கூறிய கனியை உண்டனர். மனிதரின் கீழ்ப்படியாமைதான் பாவத்திற்கான காரணம் என்பதை இந்தப் பகுதி காட்டுகிறது.
“நீ உண்ணக்கூடாது என்று நான் விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டாயோ?” என்று கேட்கும் கடவுளிடம், “என்னுடன் இருக்கும்படி நீர் தந்த அந்தப் பெண், மரத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள்” (தொநூ 3:12) என்று ஆதாம் ஏவாளைக் குறை கூறுகிறார். ஏவாளைக் கடவுள் கேட்கும் போது, “பாம்பு என்னை ஏமாற்றியது” (3:13) என்று பாம்பின் மீது பழி சுமத்துகிறார். கடவுள் ஒருவேளை பாம்பிடம், ‘ஏன் இவ்வாறு செய்தாய்?’ என்று கேட்டிருந்தால், பாம்பு, “நீர் என்னை அவ்விதம் படைத்துவிட்டீர்” என்று கடவுள்மீதே பழியைத் திருப்பியிருக்கும்.
ஆதாம், ஏவாள் காலம் துவங்கி, வரலாற்றில் கோடான கோடி குற்றங்களைத் தவறுகள் என்றுணர்ந்து, பொறுப்பேற்று, அவற்றைத் திருத்தும் வழிகளைத் தேடுவதற்குப் பதில், பொறுப்பைத் தட்டிக் கழித்துத் தப்பிக்கும் வழிகள் அதிகம் பேசப்பட்டன, இன்றும் பேசப்படுகின்றன.
முதல் பெற்றோர் செய்த தவற்றுக்கு மிகவும் வருந்தி கடவுளிடம் மன்னிப்புப் பெற எண்ணியிருந்தால் ஒரு வேளை அவர்கள் ஏதேன் தோட்டத்திலே இருந்திருக்கலாம் போலும்! கடவுளின் விருப்பத்திற்குக் கீழ்ப்படியாததால் இறைக்குடும்பத்திலிருந்து முதல் குடும்பம் விலகிச் செல்ல நேரிட்டது. முதல் பெற்றோரின் பிள்ளைகளாகிய நமக்கும் இது விரிசலைக் கொணர்ந்தது. எனவே, இறைக் குடும்பத்தில் நம்மை இணைத்துக் கொள்ள வேண்டுமெனில், இயேசு எனும் புதிய ஆதாம் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து, கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றியதுபோல, கடவுளின் சொந்த மக்களாகிய நாமும் கடவுளின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற அழைப்பை நமக்குத் தருகிறது இன்றைய நற்செய்தி.
இன்றைய நற்செய்தி வாசகம் மாற்கு நற்செய்தி நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இயேசு பன்னிரு திருத்தூதர்களை அழைத்தபின் நிகழ்ந்தவற்றை மாற்கு விவரிக்கிறார். முதலில் இயேசு பன்னிருவரை அழைத்ததன் நோக்கம் என்ன?
1. அவர்கள் தம்மோடு இருக்க வேண்டும். அதாவது, அவர்கள் தம்மோடு நெருக்கமாக வாழ வேண்டும். இந்த நெருக்கமே அவர்களுடைய சீடத்துவத்தின் அடையாளம்.
2. இயேசுவோடு சீடர் கொண்டிருக்கும் நெருக்கத்தின் விளைவாக நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும். அதாவது, இயேசுவின் பாணியில் இறையாட்சி மதிப்பீடுகளை மக்களிடையே எடுத்துச் செல்ல வேண்டும். இதன் தொடர்ச்சியாக, இறையாட்சி மதிப்பீடுகளுக்கு எதிராகச் சமூகத்தில் மலர்ந்திருக்கும் தீய சக்திகளை அகற்ற வேண்டும். இதுவே தந்தையின் திருவுளமும். சுருக்கமாக, கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே இறையாட்சிக் குடும்பத்தின் உறுப்பினர்.
இன்றைய நற்செய்தியின் இரண்டாம் பகுதியில், இயேசு தாம் நிறுவும் இறையாட்சிக் குடும்பத்தின் அளவுகோல் என்ன என்பதைச் சீடர்களுக்குப் புரிய வைக்க, தம் தாயை முன்மாதிரியாகக் காண்பிக்கிறார். இப்பகுதியில் இயேசுவின் உண்மையான உறவினர் யார் என்பது பற்றி விவரிக்கப்படுகிறது. “உம் தாயும், சகோதரர்களும், சகோதரிகளும் வெளியே நின்று கொண்டு உம்மைத் தேடுகிறார்கள்” என்று இயேசுவிடம் சொன்னபோது, “என் தாயும், என் சகோதரர்களும் யார்?” (மாற்கு 3:33) என்று கேட்கிறார். சீடர்கள் தம்மைச் சூழ்ந்திருந்த வேளையில் இயேசுவின் இந்த வார்த்தையை வெளிப்படையாகப் பார்க்கும்போது, இயேசு தம் தாயை அவமானப்படுத்தியதுபோலத் தோன்றலாம். ஆனால், இயேசுவின் கூற்றில் அடங்கியுள்ள ஆழ்ந்த இறையியலைப் புரிந்துகொள்வது அவசியமாகும். இங்கே இயேசு உறவுக்கு ஒரு புதிய பரிணாமம் தருகிறார்.
‘யார் என் தாய்?’ என்பது மரியாவுக்குச் சொல்லப்பட்ட வார்த்தைகள் அல்ல; மாறாக, அவரது சீடர்களுக்குக் கூறிய வார்த்தைகள். அதாவது, சீடர்களை அழைத்த இயேசு, அவரோடு எப்படிப்பட்ட உறவு நிலையைப் பெற்றிருக்க வேண்டும்? யார் இயேசுவுக்கு நெருக்கமான உறவாக முடியும்? அவர்களது உறவு எந்த நிலையில் அமைய வேண்டும்? என்று சீடர்களுக்கு விளங்க வைக்கிறார். குடும்பத்தால் ஏற்படும் இரத்த உறவுகளைவிட (Physical Family), இறைத்திருவுளத்தை நிறைவேற்றுவதன் அடிப்படையில் ஏற்படும் உறவுகளே (Eschatological Family) சிறந்தவை என இயேசு கூறுகிறார். தம்மைப் பின்செல்வோர்க்கும், தமக்கும் உள்ள உறவுகளைக் கோடிட்டுக் காட்டுகிறார். இறைவார்த்தையைக் கேட்டு, இறைவிருப்பத்தை நிறைவேற்றும் சீடர்களின் புதிய குடும்ப உறவை இயேசு வெளிப்படுத்துகிறார். ஆகவே, இறைவார்த்தையைக் கேட்டு, கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றுவதன் வழியாக இயேசுவின் தாயாக, சகோதர, சகோதரிகளாகப் புதிய உறவுக்குள், அதாவது, ஒரு புதிய ஆன்மிகச் சமூகத்துக்குள் (Spiritual Community) நாம் நுழைய முடியும் என அழுத்தமாகக் கூறுகிறார்.
இன்றைய நற்செய்தியின் கடைசி வரியில், இயேசு தம்மைச் சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களைப் பார்த்து, “இதோ! என் தாயும்...” (மாற் 3:34) எனத் தம் தாயைச் சுட்டிக்காட்டுகிறார். ‘இதோ’ (Behold) என்றால் ‘ஒன்றைக் கூர்ந்து கவனி’ (to gaze upon) என்று பொருள். அதாவது “என் தாயை உங்கள் புறக்கண் கொண்டு அல்ல; அகக்கண் கொண்டு பாருங்கள். இதோ! இங்கே நின்றுகொண்டிருக்கும் என் தாய் இறைவார்த்தையைக் கருவிலே தாங்கியவர் (யோவா 1:14); ‘உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்’ (லூக் 1:38) என்று வாழ்ந்து காட்டியவர்; ஆண்டவரின் திருவுளத்தை நிறைவேற்ற தன்னை முற்றிலும் அர்ப்பணித்தவர். எனவே, இவர் உடல் ரீதியாக மட்டுமல்ல, கடவுளின் சீடத்துவக் குடும்பத்திலும் இவரே உயரிய தாய்” எனத் தம் தாயைப் போற்றுகிறார். கடவுளின் விருப்பத்திற்குத் தன்னையே முழுமையாக அர்ப்பணித்து, சிலுவையடியில் தம்மோடு கூட இருந்த தம் தாயை இயேசு அவமரியாதை செய்திருக்க முடியுமோ? எனவே, மரியாவை இயேசு இப்படிச் சொல்லிக் கேவலப்படுத்தி விட்டாரே எனச் சிலர் தவறாகப் போதிப்பது, அவர்கள் முறையாகத் திருவிவிலியத்தை அறியாததினால் வரும் பிழை எனலாம்.
கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றி, அவரது மீட்படைந்தோரின் குடும்பத்தில் இணைவது என்பது எளிதல்ல. அதாவது, மானிட நேயத்தைக் குலைக்கும் தீயசக்திகளை எதிர்த்து, இயேசுவின் புதிய இறையாட்சிக் குடும்பத்தில் இணையும்போது பல நெருக்கடிகளையும், விமர்சனங்களையும் சந்திக்க நேரிடும். நற்செய்தியின் முதல் பகுதியில், இயேசுவின் உறவினர்கள் இயேசுவை ‘மதிமயங்கி இருக்கிறார்’ (3:21) என விமர்சிக்கின்றனர். மறைநூல் அறிஞர், ‘இவனைப் பெயல்செபூல் பிடித்திருக்கிறது’ என்றும், ‘பேய்களின் தலைவனைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்’ என்றும் பழிசுமத்துகின்றனர் (3:22). வீண் விமர்சனங்களையும், பழிகளையும் இயேசுவின்மேல் தொடுக்கின்றபொழுது, இயேசு அமைதியாக இருக்கவில்லை. தம்மீது பாய்ந்த குற்றச்சாட்டுகளுக்கு இரு உவமைகளைப் பயன்படுத்தி மறுமொழி கூறுகின்றார்.
முதலாவது, சாத்தானைச் சாத்தானே விரட்ட முடியாது. அப்படிச் செய்தால் சாத்தானின் அரசுதான் வீழும், பிளவுபட்டு அழியும். இரண்டாவது, ஒருவனுடைய வீட்டில் அவன் வலியவனாகவே இருந்தாலும், பொருள் கொள்ளையிடப்படுகின்றது என்றால், கொள்ளையிட்டவன் கொள்ளையிடப்பட்டவனைவிட வலிமையானவன் என்றுதான் பொருள். இந்த இரு உவமைகள் வழியாக, இயேசு சாத்தானின் அரசு விரட்டப்பட்டு இறையாட்சி நிறுவப்படுகிறது என்றும், சாத்தானை விரட்டிய இயேசு அலகையைவிட வலிமையானவர் என்றும் இங்கே தமது வாதத்தை விளக்குகிறார். விமர்சனங்கள் மற்றும் பழிப்புரைகளுக்கு மத்தியிலும் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றி, இறையாட்சியைக் கட்டியெழுப்புவதுதான் இறையாட்சிக் குடும்பத்தில் உறுப்பினர் ஆவதற்கான அளவுகோல் என வலியுறுத்துகிறார்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்தில் நான்காவது அதிகாரம் மிக அழகான உருவகங்களைக் கொண்டுள்ளது. ‘மண்பாண்டத்தில் செல்வம்’ என்ற இந்தப் பகுதி மிக ஆழமான இறையியலைக் கொண்டுள்ளது. நற்செய்தி சொல்பவர்களின் பணிவாழ்வும், அவர்களின் செய்தியும் இங்கே விவரிக்கப்படுகின்றன. திருத்தூதர் பவுல், இன்னல்களுக்கு மத்தியிலும் தனது மேய்ப்புப் பணியின் வேகத்தையும், அதனால் வரும் கைம்மாறு பற்றியும் குறிப்பிடுகிறார். இந்த உலகின் துன்பங்கள் எவ்வளவு கொடுமையாக இருந்தாலும், நற்செய்திப் பணிக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை என்கிறார். இந்த மண்ணகக் கூடாரம் (Physical Family) தற்காலிகமானது; எளிதில் அழிந்துவிடுவது. மனம் தளரா ஆர்வத்தோடு இறைத்திருவுளத்தை நிறைவேற்றும்போது, கடவுளிடமிருந்து கிடைக்கும் வீடு (Eschatological Family) ஒன்று விண்ணுலகில் நமக்கு உண்டு (2கொரி 5:1) என விளக்குகிறார்.
எனவே, இயேசுவும், அவர்தம் சீடர்களும் இணைந்து கட்டியெழுப்பும் இறையாட்சிக் குடும்பத்தில் இறைவார்த்தையைக் கடைப்பிடித்து, கடவுளின் விருப்பத்தை நிறைவேற்ற முன்வருவோம். உலகில் பரவி வரும் தீய சக்திகளுடன் சமரசம் செய்யாமல், அவற்றை எதிர்த்து நிற்கும் துணிவையும், இறைவனின் திருவுளத்தைப் புரிந்து நிறைவேற்றும் தெளிவையும் நாம் பெற மன்றாடுவோம். அவ்விதம் செயல்படும் யாவரும் இயேசுவின் இறையாட்சிக் குடும்பத்தின் உறுப்பினர்; அவரின் சகோதரர், சகோதரிகள், தாயும் ஆவர்.
Comment