No icon

தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு மாநில சிறுபான்மை ஆணையத் தலைவர் அவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள்

தமிழக முதலமைச்சர் அவர்களுக்குமாநில சிறுபான்மை ஆணையத் தலைவர்திரு. பீட்டர் அல்போன்ஸ் அவர்கள்முன்வைத்துள்ள கோரிக்கைகள் 16.08.2021

 

தமிழ்நாடு மாநில சிறுபான்மை ஆணைய சட்டம் 2010 இல் (Act no.. 21 of 2010) ஆணைய உறுப்பினர்களின் எண்ணிக்கையை கூட்டி தர வேண்டுதல் - சார்பு

தமிழ்நாடு சிறுபான்மை ஆணையம் மாண்புமிகு முன்னாள் முதல்வர் டாக்டர். கலைஞர் அவர்களுடைய கருத்தினில் வடிவமைக்கப்பட்டு பின்பு அவர்களாலேயே சட்டபூர்வமாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த சட்டத்தில் முதலில் தலைவர் மற்றும் 6 உறுப்பினர்கள் இருந்ததை, பின்பு தலைவர் மற்றும் 9 உறுப்பினர்கள் என்று உயர்த்தப்பட்டது.

தமிழ்நாட்டில் மத சிறுபான்மையினர் சுமார் 20 விழுக்காடு, மொழி சிறுபான்மையினர் சுமார் 15 விழுக்காடும் ஆக மொத்தம் 35 விழுக்காடு மக்கள் இருக்கின்றார்கள். இவர்கள் அனைவருக்கும் தற்போது ஆணையத்தில் பிரதிநிதித்துவம் கொடுக்க முடியவில்லை. தற்போது மொழி சிறுபான்மையினரும், தமிழ் சமணர்களும் தங்களுக்கு ஆணையத்தில் பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற கோரிக்கையை ஆணையத்திற்கு  தந்துள்ளார்கள். அவர்களின் கோரிக்கை நியாயமானது என்று ஆணையம் கருதுகிறது. எனவே தலைவர் மற்றும் 9 பேர் என்று இருப்பதை, தலைவர் மற்றும் 12 பேர் என்று உறுப்பினர் எண்ணிக்கையினை கூட்டி தர சட்டத்தில் தேவையான திருத்தம் செய்து தர அன்புடன் வேண்டுகிறேன். இதனால் அனைத்து தரப்பினரின் பிரதிநிதித்துவம் பரவலாக்கப்பட்டு எல்லாரையும் ஒருங்கிணைத்து செயல்படக்கூடிய வாய்ப்பு உருவாகும் என்று தெரிவித்துகொள்கிறேன்.

சிறுபான்மை இஸ்லாமியர், கிறிஸ்தவர் வழிபாட்டு கூடங்களை கட்ட அனுமதி மறுப்பு மற்றும் அவர்களின் அடக்கஸ்தலம் அனுமதி மறுக்கப்படுதல் - சம்மந்தமாக.

தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களில் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மக்கள் தொழுகை மற்றும் வழிபாட்டு கூடங்களுக்கான அனுமதிகள் தகுந்த காரணமின்றி மாவட்ட நிர்வாகத்தால் மறுக்கப்படுவதாக தொடர்ந்து பல புகார்கள் இந்த ஆணையத்திற்கு வருகின்றன. அதைபோலவே அவர்கள் சமூகத்தை சார்ந்த இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கான இடங்களுக்கும் தொடர்ந்து தகுந்த காரணமின்றி மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி மறுக்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. அரசு புறம்போக்கு இடங்கள் மற்றும் பொதுமக்களுக்கு பயன்படுகின்ற பொது இடங்களில் இத்தகைய அனுமதிகள் மறுக்கப்படுவதற்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றன. ஆனால், அந்த சமூகத்து மக்கள் சொந்தமாக இடங்களை வாங்கி அதில் வழிபாட்டு கூடங்களை விதிகளின்படி கட்டுவதற்கும், இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கும் அனுமதி மறுக்கப்படுவது வேதனையாகவும், வினோதமாகவும் இருக்கின்றன. பல இடங்களில் வழிபாட்டு கூடங்களுக்கு சமுதாயக் கூடங்கள் என்ற அளவில் உள்ளாட்சி அமைப்புகள் அனுமதி வழங்கிய பின்னர் யாராவது சிலர் ஆட்சேபிக்கிறார்கள் என்ற அடிப்படையில் கொடுக்கப்பட்ட அனுமதிகளும் பல இடங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பல இடங்களில் அனுமதி பெறப்பட்ட கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு அதன் பின்னர் மாவட்ட நிர்வாகங்கள் முகாந்திரமின்றி தடை விதித்தால் பல கட்டிடங்கள் பயன்பாட்டிற்கு வர முடியாமல் இருக்கின்றன. பல மாவட்டங்களில் சிறுபான்மை மக்கள் தங்களது சொந்த செலவில் இறந்தவர்களை அடக்கம் செய்ய ஊருக்கு வெளியே நிலங்களை வாங்கி அதற்கு சுற்றுச்சுவர் கட்டிய பிறகும் கூட பல ஆண்டுகளுக்கும் மேலாக இறந்தவர்களை அடக்கம் செய்ய அனுமதி மறுக்கப்படுகின்றன. இதன் காரணங்களை விசாரிக்கின்ற காரணத்தினால் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் சட்டம் ஒழுங்கு என்ற காரணம் காட்டி அதற்கான அனுமதியை மறுப்பதாக தெரிகிறது. பல இடங்களில் சில சமூக விரோதிகள் ஏதாவது ஒரு அமைப்பின் பெயரை வைத்துக்கொண்டு அதன் பெயரில் எதிர்ப்பு தெரிவிப்பதும் அதன் பின் சம்மந்தப்பட்டவர்களிடம் இந்த ஆட்சேபனைகளை திரும்பப்பெற பணம் கேட்டு மிரட்டுவதாகவும் இந்த ஆணையத்துக்கு புகார்கள் வருகின்றன. குறிப்பாக கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளில் இத்தகைய மிரட்டல்களும் ஆட்சேபனைகளும் மாவட்ட நிர்வாகத்தால் முறையாக கையாளபடாததினால் இந்த தீய சக்திகள் எந்த கூச்சமும், தயக்கமுமின்றி தங்களது மிரட்டல்களை தொடர்ந்து செய்து வருகிறார்கள். பல இடங்களில் ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு மேலாக இருக்கின்ற வழிபாட்டு கூடங்களின் சுற்றுச்சுவர்களை அவர்களே ஆக்கிரமிப்பு இடங்கள் என்று சொல்லி அவைகளை இடிப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தையும், காவல்துறையினையும் நிர்பந்திக்கிறார்கள். பல இடங்களில் காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் இந்த வன்முறையாளர்களுக்கு பயந்து அவர்களது மிரட்டல்களை கண்டும் காணாதது போல் இருந்துவிடுவதால் ஆட்சேபனை செய்கின்றவர்களே அந்த கூடங்களின் சுவர்களையும், கட்டிடங்களையும் இடித்து வருகின்றார்கள்.

மக்கள் தங்கள் மத நம்பிக்கைகளின்படி வழிபாடு செய்வதற்கும், தங்களில் இறந்தவர்களை அடிப்படை மரியாதையுடன் அடக்கம் செய்வதற்குமான உரிமைகள் ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியல் சாசன சட்டத்தினால் உறுதி செய்யப்பட்ட உரிமைகளாகும். இந்த உரிமைகளை பொது அமைதிக்கு பங்கம் வராமல் அனுபவிப்பதற்கு அனைத்து குடிமக்களுக்கும் பாதுகாப்பான வாழ்வினை உறுதிசெய்ய வேண்டியது நம்முடைய அரசின் கடமையாகும். பல இடங்களில் சிறுபான்மை சமூகத்தவரை பாசிச சக்திகள், “நீங்கள் எங்களுக்கு வாக்களிக்காதவர்கள். ஆகவே, நீங்கள் இங்கு நிம்மதியாக இருக்க முடியாது” என்று மிரட்டுவதாகவும் அறிகிறோம். எனவே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சம்மந்தப்பட்ட மாவட்ட நிர்வாகிகளுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் “ஒரு நிரந்தரமான நடைமுறைத் திட்டத்தை” (Standing Operating Procedure) தயாரித்து அதனை அரசாணையாக பிறப்பிக்க உத்தரவிட வேண்டுகிறேன். அந்த அரசாணை, வழிபாட்டு கூடங்கள் மற்றும் அடக்க ஸ்தலங்கள் கட்டப்படுவதற்கு உள்ள விதிகளையும் வழிகாட்டு முறைகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அரசின் விதிகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டு வழிபாட்டுக் கூடங்களோ, அடக்க ஸ்தலங்களோ கட்டப்படுமானால் மாவட்ட நிர்வாகம் கால தாமதமின்றி அவைகளுக்கு அனுமதி வழங்க ஏற்பாடு செய்து தர வேண்டுகிறேன். இத்தகைய முறையான அனுமதிகளைப் பெற்று நிபந்தனைகளுக்கு உட்பட்டு கட்டப்பட்டுள்ள வழிபாட்டு கூடங்களில் வழிபாடு செய்வதற்கும், இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கும் யாராவது இடையூறு செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, சிறுபான்மை மக்களது வாழ்வு உரிமைகளை பாதுகாத்து தர வேண்டுகிறேன். கட்டப்பட்டு பதினைந்து ஆண்டுகளுக்கு மேலான வழிபாட்டு கூடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளது என்ற அடிப்படையில் அகற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுமாயின் அந்த வழிபாட்டு கூடத்திற்கு சம்மந்தப்பட்டவர்களுக்கு விளக்கம் தர வாய்ப்பு கொடுத்தும், மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் அந்த இடத்தினை பார்வையிட்ட பின்னரே அக்கட்டிடத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்ற உத்தரவுப் பிறப்பிக்கப்பட அன்புடன் வேண்டுகிறேன்.

பாரதப் பிரதமரின் சிறுபான்மையினருக்கான புதிய 15 அம்சத் திட்டம் - நிறைவேற்றுவதற்காக அமைக்கப்பட்டுள்ள மாவட்ட அளவிலான குழுவில்     அலுவல் சாரா உறுப்பினர்களை நியமிப்பது - சம்மந்தமாக.

ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறுபான்மை மக்களுக்கான பாரதப் பிரதமரின் 15 அம்சத் திட்டத்தினை நிறைவேற்றுவதற்காக மாவட்ட அளவிலேயே ஒரு குழு நியமிக்கப்படுகிறது. இக்குழுவில் மாவட்ட ஆட்சியர் தலைவராகவும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், நகராட்சி ஆணையர், மாவட்ட வளர்ச்சி முகமை திட்ட அலுவலர், கல்வி அலுவலர், கல்லூரி கல்வி இணை இயக்குநர், மாவட்ட தொழிலாளர் அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலர் ஆகியோர் உறுப்பினர்களாகவும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் உறுப்பினர் மற்றும் செயலராகவும் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவின் கூட்டம் பல மாவட்டங்களில் முறையாக கூட்டப்படவில்லை என்று அறிகிறேன். சிறுபான்மை மக்களுக்கான திட்டங்கள் சில மத்திய அரசாலும், பல திட்டங்கள் மாநில அரசாலும் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே, இக்குழுவினை சிறுபான்மை மக்களுக்கான அனைத்து திட்டங்களின் செயல்பாடுகளையும், மாவட்ட அளவில் மேற்பார்வை செய்கின்ற குழுவாக விரிவாக்கம் செய்யலாம். மேலும் தற்போது இருக்கின்ற இக்குழுவில் அலுவல் சார்ந்த உறுப்பினர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். சிறுபான்மை மக்கள் மத்தியில் களப்பணி செய்கின்ற தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளோ அல்லது அந்த     சமூகத்தை சார்ந்த பிரதிநிதிகளோ இடம் பெறவில்லை. அவர்கள் இடம் பெற்றால்தான் களத்தில் இந்த திட்டங்கள் எப்படி செயல்படுகின்றன என்பது அரசு நிர்வாகத்திற்கு தெரியவரும். எனவே சிறுபான்மை மக்களுக்கான அனைத்து திட்டங்களையும் மாவட்ட அளவில் மேற்பார்வை செய்கின்ற குழுவாக இதனை மாற்றி "அலுவல் சாராத உறுப்பினர்களும் அதில் இடம் பெறுகின்ற வகையில் உத்தரவிட வேண்டுகிறேன்".

பொருள்: ஏழை எளிய மக்களுக்கான அரசு வழங்கும் இலவச தொகுப்பு வீடுகள் -  சிறுபான்மை மக்களுக்கான ஒதுக்கீடு கோருதல் - சார்பு

தமிழக அரசின் ஊரக வளர்ச்சி துறையின் சார்பாகவும், நகர்ப்புற வளர்ச்சித் துறையின் சார்பாகவும், குடிசை மாற்று வாரியம் சார்பாகவும், ஏழை எளிய மற்றும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு இலவச வீடுகளும், குடியிருப்புகளும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பட்டியல் இன மக்களுக்கும், மலைவாழ் மக்களுக்கும், பிற்படுத்தப்பட்டோர் மக்களுக்கும் இந்த வீடுகள் குறிப்பிட்ட சதவிகிதத்தில் ஒதுக்கப்படுகின்றன. இதில் சிறுபான்மை மக்களுக்கான தேவைகள் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு கீழ் தான் பரிசீலிக்கப்படுகின்றது. பல இடங்களில் சிறுபான்மை மக்களில் ஏழை எளியவர்களுக்கு இந்த குடியிருப்பில் ஒதுக்கீடு கிடைப்பதில்லை. எனவே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சிறுபான்மை மக்களுக்கு இந்த குடியிருப்புகளில் 10 விழுக்காடு வீடுகளோ, குடியிருப்புகளோ உள் ஒதுக்கீடு ஏற்பாடு செய்து தர வேண்டும் என அன்புடன் வேண்டுகிறேன். அதன்மூலம் அனைத்து இலவச குடியிருப்பு திட்டங்களிலும் சிறுபான்மை மக்களுக்கு குடியிருக்க வீடுகள் கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.

பொருள்: அனைத்து மாவட்டங்களிலும், “மாவட்ட ஆட்சித் தலைவரின்” தலைமையில் குடிமை சமூகங்களின் (ஊiஎடை ளுடிஉநைவநைள), பிரதிநிதி அடங்கிய ஒரு “சமூக நல்லிணக்க குழுவை” அமைப்பது தொடர்பாக..

2030 ஆம் ஆண்டு தமிழகத்தின் ஒட்டு மொத்த தொழில் உற்பத்தியை ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலராக உயர்த்துவது என்ற தங்களது தொலைநோக்குப் பார்வையும், நோக்கமும், அதனை செயல்படுத்த தங்களது நிர்வாக பயணமும் அனைத்து தரப்பு மக்களாலும் பெரிதும் பாராட்டப்படுகிறது. இத்தகைய மாபெரும் லட்சியம் “சமூக அமைதி” இல்லாமல் சாத்தியமில்லை. தமிழகத்தில் தங்களது ஆட்சியினுடைய முனைப்பையும், சிறப்பையும், மக்கள் மத்தியில் அதற்கு இருக்கின்ற நல்ல பெயரையும் கெடுப்பதற்கு சில சக்திகள் சமூகத்தில் தேவையற்ற பதற்றத்தையும் மோதல்களையும் உருவாக்க முயற்சி செய்கின்றன. சில நேரங்களில் இந்த மோதல்கள் பெரும் கலவரங்களாக மாறி அப்பகுதியில் இருக்கின்ற தொழிற்சாலைகளையும், வியாபாரிகளையும் வெகுவாக பாதிக்கிறது. தமிழகத்தில் இன்று தொழிலும் வியாபாரமும் நன்கு வளர்ந்து இருக்கின்ற மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் போன்ற மாவட்டங்களில் இப்படிப்பட்ட சமூக பதற்றங்களை பெரும் அளவில் உருவாக்க வலது சாதி பாசிச சக்திகள் சதித் திட்டம்போட்டு செயலாற்றி வருகின்றன. வட மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் சாதி மோதல்களை உருவாக்குவதற்கான சூழ்நிலைகளை உருவாக்கி வருகின்றன.

இத்தகைய சமூக பதற்றங்களையும் மோதல்களையும் ஆரம்பத்திலேயே அறிந்து தடுத்து நிறுத்திடவும், சமூகங்களிடையே நல்லிணக்கத்தையும், நல்லுறவையும் வளர்ப்பதற்காகவும் அனைத்து மாவட்டங்களிலும், “மாவட்ட ஆட்சித் தலைவரின்” தலைமையில் குடிமை சமூகங்களின் (Civil Societies), பிரதிநிதி அடங்கிய ஒரு “சமூக நல்லிணக்க குழுவை” அமைப்பது நலம் என்று எண்ணுகிறேன். அந்தந்த மாவட்டங்களில் இருக்கின்ற சமூகங்களின் பிரதிநிதி, இடம் பெறுகின்ற அக்குழுவில் அரசியல் கட்சிகளை சாராத உறுப்பினர்களை நியமிக்கலாம். இந்த உறுப்பினர்கள் குறைந்தது இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் கூடி சமூக அமைதியைப் பற்றியும், சமூக நல்லிணக்கத்தைப் பற்றியும், களநிலவரங்களைப் பற்றியும் கருத்து பரிமாற்றம் செய்துகொள்ளலாம். தேவையெனில் அக்குழுவின் உறுப்பினர்கள் பிரச்சனைகள் இருக்கின்ற பகுதிகளுக்கு நேரில் சென்று அரசு அதிகாரிகளுக்கு உதவியாக இருந்து சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தலாம். இக்குழு (முதலமைச்சரின் சமூக நல்லிணக்க குழு என்று அழைக்கப்படலாம்). இக்குழுவில் 21 பேர் இடம் பெறலாம். பெண்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்.

தங்களின் மேலான பரிசீலனைக்காக,  நன்றி!

தங்கள் அன்புள்ள

  திரு. சா. பீட்டர் அல்போன்ஸ்

மாநில சிறுபான்மை ஆணையத் தலைவர்

 

Comment