 
                     
                அருள்பணி. P.B.. மார்ட்டின்- பணி. மாற்கு சே.ச.
சமூகப்பணிக்குச் சான்று
1984 இல் உத்திரமேரூருக்கு அருகிலுள்ள ஓங்கூர் பங்கின் அருள்பணியாளராக நான் பொறுப்பேற்றேன். மார்ட்டின் பக்கத்திலுள்ள பள்ளியகரத்தில் பணியாற்றினார். அப்போது முதல் இருவரும் பணியின் அடித்தளத்தில் நட்புடன் நெருங்கிப் பழகினோம். அது இன்றும் தொடர்கிறது. மதம், சாதி, மொழி, இனம் போன்ற எல்லைகளைக் கடந்தது மார்ட்டினின் பணிகள் சிலவற்றைச் சுருக்கமாகக் காணலாம்.
1985 இல் பள்ளியகரத்தின் அருகிலுள்ள சாலவாக்கத்திலுள்ள இந்து தலித்துகள் அம்மன் விழாவை கொண்டாடினர். அழைப்பிதழில் சாலவாக்கம் கிராமத்தார் என்று குறிப்பிட்டிருந்தனர். இதைக் கண்ட பிற்பட்ட சாதியினர் சேரியில் வாழும் காலனியினர் கிராமத்தினர் என்று எப்படி குறிப்பிடலாம் என்று கோபத்துடன் தலித்துகளை கொடிய ஆயுதங்களால் தாக்கி குடிசைகளையும் எரித்தனர். உடனடியாக அங்கு சென்ற மார்ட்டின் தலித்துகளுக்கு ஆறுதல் அளித்து உதவியதோடு அப்பகுதியிலுள்ள தலித்துகளை ஒன்றிணைத்து நீதிகேட்டு போராட்டங்களை ஆரம்பித்தார். நடுநிலை வகிக்கவில்லை. ஆதிக்கவர்க்கத்திற்குச் சார்பானதே நடுநிலை என்பதை அனுபவத்தில் உணர்ந்தார். பாதிக்கப்பட்ட மக்களோடு இணைந்து போராடினார். நீதியும் கிடைத்தது.
சமூகத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் பல பிரிவுகளாக இருக்கிறார்கள் என்பதை உணர்ந்த மார்ட்டின் இவர்களது நலனுக்காகச் சமூகசெயல்பாட்டு இயக்கம் (SAM) என்ற தொண்டு நிறுவனத்தை மாமண்டூரில் ஆரம்பித்தார். அதன் விளைவாக பல பிரிவினரும் பயனடைந்தனர்.
1984 இல் ஒரு பங்கில் திருப்பலி நிறைவேற்ற சென்றேன். அவ்வூரில் ஆதிக்கச் சாதிக் கிறிஸ்தவர்கள் ஆலயத்திற்கு உள்ளும், வெளியும் தலித் கிறிஸ்தவர்களைத் தீண்டத்தகாதவர்களாக நடத்துவதை அறிந்தேன். எனது அனுபவத்தை மார்ட்டினிடம் பகிர்ந்தேன். இப்பகுதியில் பலபங்குகளில் இதுபோல நடப்பதாகக் கூறினார். திருஅவையில் நிலவும் தீண்டாமையை ஒழிக்க தலித் கிறிஸ்தவர்களை ஒன்றிணைத்து தலித் கிறிஸ்தவ இயக்கத்தை உருவாக்கி சமத்துவத்திற்காகப் போராடினோம். இதனால் திருஅவை இம்மக்களது பிரச்சனைகளை ஓரளவு புரிந்து கொண்டு நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தது.
1988 ஆம் ஆண்டு பள்ளியகரத்தின் கிளையாகிய மூசிவாக்கத்தில் சலவைத் தொழில் செய்யும் குடும்பத்திலிருந்து ஒருவர் குருப்பட்டம் பெற்று முதல் திருப்பலி நிறைவேற்றினார். அதில் தலித் கிறிஸ்தவர்கள் பங்கேற்கும் விருந்தைப் புறக்கணித்தனர். எங்களது அழுக்குத் துணிகளைச் சுத்தம் செய்து நாங்கள் தரும் உணவை உண்ணும் இவர்களது வீட்டில் எப்படி உண்பது என்பதே காரணம். இந்த அனுபவம் மார்ட்டினை அதிகம் பாதித்தது. அவர்களை ஒருங்கிணைத்து சலவைத் தொழிலாளர்கள் சங்கத்தை ஏற்படுத்தினார். மாற்றுத் தொழிலுக்கு ஏற்பாடு செய்ததோடு வீடுகளும் கட்டிக்கொடுத்தார்.
சமூகத்தின் விளிம்பில் இருக்கும் அருந்ததியர்களின் நிலை இவரை மிகவும் பாதித்தது. இவர்களது தொழில் செருப்பு தைப்பதும், துப்புரவு செய்வதுமே. இவர்களுக்காக பல நலத்திட்டங்களைத் தொடங்கினார். கிறிஸ்தவ அருந்ததியர்கள் சார்பாக நிலைப்பாடு எடுத்ததைச் சிறப்பாகக் குறிப்பிடலாம்.
மலைவாழ் மக்களாகக் கருதப்பட்ட இருளர் இப்பகுதியில் வாழ்ந்தனர். பாம்பு, தேள், விஷவண்டுக் கடிகளுக்கு மருத்துவம் செய்தனர். பாம்பு பிடிப்பது இவர்களது தொழில். அரசு சாதிச் சான்றிதழ் அளிக்காததால் இவர்களது குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டது. இவர்களை ஒருங்கிணைத்த மார்ட்டின், அரசாங்கம் சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்பதற்காக இவர்களைப் பாம்புகளுடன் செங்கல்பட்டில் ஊர்வலம் மேற்கொள்ளச் செய்தார். அதனால் சிலருக்கு அரசு சாதிச் சான்றிதழ் அளித்தது. மாமண்டூருக்கு அருகில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி ஓர் ஏக்கர் நிலம் வாங்கி அங்கு இம்மக்கள் பாம்பு, தேள், விஷவண்டுக் கடிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மையத்தை உருவாக்கினார். அதோடு பல முக்கியமான மூலிகைகளை உற்பத்தி செய்து விற்கும் நாற்றும் பண்ணையையும் ஏற்படுத்தினார். (இவர்களது பிரச்சனையே ‘ஜெய் பீம்’ திரைப்படத்தின் மையக் கருத்து.)
1985 முதல் தலித்துகளை ஒருங்கிணைத்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளிலுள்ள புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிக்கச் செய்தார் மார்ட்டின். அதனால் பல தலித் கிராமத்தினர் பயனடைந்தனர். ஆனம்பாக்கத்தில் நடந்த நிகழ்வு மிக முக்கியமானது. இவ்வூர் தலித்துகள் 80 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்தனர். ஆதிக்கச் சாதியினர் தலித்துகளின் நிலத்தை அபகரிக்க முயன்றனர். இவர்களை எதிர்க்கத் தலித்துகள் பயந்தனர். தலித்துகளை அவர்களது குலதெய்வக் கோயிலுக்கு முன்பாக ஒன்று கூட்டிய மார்ட்டின் ‘நிலஉரிமைக்காக நீங்கள் துணிவுடன் போராடினால் உங்கள் குலதெய்வம் உங்களுக்கு உதவும். நான் உறுதியாக நம்புகிறேன்’ என்று கூறி குலதெய்வம் முன்பாக முகம் குப்புற விழுந்து வழிபட்டார். இதைப் பார்த்த தலித்துகளுக்குத் தைரியம் வர உயிரே போனாலும் நில உரிமையைக் காப்போம் என குலதெய்வத்தை வணங்கி சத்தியம் செய்து போராடினர். விளைவாக அந்த 80 ஏக்கரையும் அடைந்தனர்.
கிராமத்து மக்களுக்காகத் தனியாக ஒரு நிறுவனத்தை உருவாக்க விரும்பிய பேராயர் கசிமீர் பொறுப்பை மார்ட்டினிடம் கொடுத்தார். 1989 ஆம் ஆண்டு, செங்கை கிராமப்புற மக்கள் மேம்பாட்டு சங்கத்தை செங்கல்பட்டில் உருவாக்கி அதன் முதல் இயக்குநராகத் திறமையுடன் செயல்பட்டார் மார்ட்டின். தலித் கிறிஸ்தவர்கள் அதிகம் பயனடைந்தனர்.
இந்திய பட்டியலின மக்களின் (தலித்துகளின்) நலனுக்காகப் பஞ்சமி நிலம் என்ற திட்டத்தில் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை பிரிட்டிஷ் அரசு வழங்கியது. நிலத்தைப் பெற்றவர்கள் அதை விற்கவோ அடமானம் வைக்கவோ கூடாது. ஆனால், தங்களுக்குள் விற்கலாம், அடமானம் வைக்கலாம் என்பது நிபந்தனை. ஆனால், சுதந்திரத்திற்குப்பின் ஆதிக்கச் சாதியினர் தலித்துகளை ஏமாற்றி பஞ்சமி நிலங்களைஅபகரித்தனர்.
செங்கல்பட்டுக்கு அருகிலுள்ள காரணையிலும் பஞ்சமி நில அபகரிப்பு நிகழ்ந்ததை உணர்ந்த மார்ட்டின் பஞ்சமிநிலம் பற்றிய தகவல்களைச் சேகரித்தார். நிலத்தை இழந்த தலித்துகளை ஒருங்கிணைத்து நிலத்தை மீட்கப் பல போராட்டங்களை நடத்தினார். செங்கல்பட்டில் உதவி ஆட்சியர் அலுவலகம் முன்பாக தலித் மக்களுடன் 10-10-1994 இல் மிகப் பெரிய போராட்டத்தை நடத்தினார். போராடிய மக்கள்மீது காவலர்கள் துப்பாக்கியால் சுட்டு ஜான் தாமஸ், ஏழுமலை என்ற இருவரைக் கொன்றனர். பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோரைக் கைது செய்தனர். மார்ட்டினும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். விளைவாக பஞ்சமி நிலம் பற்றிய விழிப்புணர்வு தலித்துகளிடம் ஏற்பட்டது. ‘தலித் போராட்ட கூட்டுக் குழு - பஞ்சமி நில மீட்பு இயக்கம்’ உருவானது. பல இடங்களில் நிலங்கள் மீட்கப்பட்டன. நில மீட்பு இன்றும் நாடு முழுவதும் தொடர்கிறது.
கிராமப் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காகச் சுயஉதவிக் குழுக்களை மார்ட்டின் ஏற்படுத்தினார். கடன் பெற்றோர் தவறாது திருப்பிச் செலுத்தினர். தற்போது ஐந்து கோடி சேமிப்புடன் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது.
மேலே குறிப்பிட்ட அனைத்துப் பணிகளையும் பங்கில் இருந்தபடியே மார்ட்டின் செய்தார். பங்கில் வழிபாடுகளை அர்த்தமுள்ள விதத்தில் நடத்தினார். பங்குப் பேரவை மூலம் மக்களின் பங்கேற்பை உறுதிசெய்தார். பொருளாதாரத்தில் வெளிப்படைத் தன்மையுண்டு. பிரச்சனைகளுடன் வருபவர்களுக்கு ஏற்ற தீர்வை வழங்கினார். பங்கில் அனைவரும் படிக்க ஊக்குவித்தவர். உயர்கல்விக்கும் ஏற்பாடு செய்து ஏழைகளுக்கு உதவித் தொகையை வழங்கியவர். சென்னை-மயிலை உயர்மறை மாவட்டத்திற்காக கீழச்சேரியில் கிறிஸ்து அரசர் கல்லூரியை நிறுவி அதன் செயலாளராகச் சிறப்புடன் செயல்பட்டவர். கொள்கைப் பிடிப்புள்ளவர். தனது வாழ்வில் இவர் எங்கும் கோயிலைக் கட்டவில்லை. மாறாக, அடித்தட்டு மக்களைக் கட்டியெழுப்பி அவர்களை விளிம்பிலிருந்து மையம் நோக்கிக் கொண்டு வருவதையே இலக்காகக் கொண்டுவாழ்ந்தவர்.
இவரது பணிகள் எண்ணற்றவை. சிலவற்றையே இங்கு பதிவு செய்துள்ளேன். இவர் பணியாளர்களுக்கு முன்னோடி. அர்த்தமுள்ள விதத்தில் எப்படி பங்குப்பணி ஆற்றலாம் என்பதற்கு இவரது பணிவாழ்வு ஓர் எடுத்துக்காட்டு. இவர் தமிழகத்தின், ஏன் இந்தியாவின் தலைசிறந்த பணியாளர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இவர் எதிர் பாராதவிதமாக 09-10-2021 இல் மறைந்தது இந்தியத் திருச்சபைக்கு மிகப் பெரிய இழப்பு.
 
                    

 
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        
Comment