 
                     
                அருள்முனைவர் அ. இருதயராஜ் சே.ச.
பன்முனை புறக்கணிப்புக்குள்ளாகும் கிறித்தவ புதிரை வண்ணார்கள்
“இந்த நாட்டில் மரணத்திற்குப் பிறகும் கூட சாதி மனிதனை விடவில்லை” என்ற கவலையை சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். பொதுமயானம் அல்லது கல்லறை என்று அறிவிக்கப்பட்ட இடத்தில் அனைத்து தரப்பினரையும் புதைப்பதற்கு அனுமதிக்க வேண்டும். விளிம்புநிலை மக்களை சாதி அடிப்படையில் பொது கல்லறையில் புதைப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டால் அது தண்டனைக்குரிய குற்றம் என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார். அவர் சொன்னது போலவே கத்தோலிக்க திரு அவையில் விளிம்புநிலை மக்கள் என்று அறியப்படுகின்ற கிறிஸ்தவ புதிரை வண்ணார்களுக்கு இறந்த பின்பு பொதுக் கல்லறையில் அடக்கம் செய்யப்படுவதற்கு இடம் மறுக்கப்படுகின்றது.
வடதமிழகத்தில் கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி போன்ற மாவட்டங்களில் இவர்கள் கிறிஸ்தவர்களாக இருக்கிறார்கள். ஏறக்குறைய 16 ஆம் நூற்றாண்டில் முதல் கிறிஸ்தவர்களாக மாறிய இவர்கள் சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டு, சமய தளங்களில் பன்முனை ஒடுக்குதலுக்கும், புறக்கணிப்புக்கும் ஆளாகிறார்கள். சிதைக்கப்பட்ட தங்களின் மாண்பை எந்த விதத்திலும் தூக்கிப் பிடிக்க முடியாமல் கூனிக்குறுகி வாழ்கிறார்கள். இவர்களை துரும்பர், ஏகாலி, இரவாளி என்றும் அழைக்கின்றனர்.
சமூகத்தின் கடைக்கோடியில் புதிரை வண்ணார்கள் வாழ்கின்றனர். பொது
சமூகத்தின் பார்வையிலும், தலித்துகளின் அணுகுமுறையிலும் இவர்கள் கடைசாதியாக நடத்தப்படுகிறார்கள். பெரும்பாலும் இவர்கள் ஒரு கிராமத்திற்கு ஒரு குடும்பம் அல்லது இரண்டு குடும்பங்கள் என்று வாழ்கிறார்கள். எண்ணிக்கை பலம் இவர்களிடம் இல்லை. அதுதான் இவர்களின் மிகப்பெரிய பலவீனம். அதனால் இவர்களின் குரல் எங்கேயும் எடுபடுவதில்லை. ஊரார் விட்ட வீடு, ஊரார் போட்ட சோறு, ஊரார் கொடுத்த துணி, ஊரார் தந்த வேலை, ஊரார் விதித்த கூலி, கடைசியில் ஊரார் காட்டிய கல்லறை என்று எல்லா அடிப்படை உரிமைகளுக்கும் பிறரைச் சார்ந்தவர்களாகவே வாழ வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
அரசியல் தளத்தில் மிகவும் பலம் இழந்தவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்காகப் பேசவும் இவர்களை ஓரணியில் திரட்டவும் அடையாள குறியீட்டுடன் கூடிய தலைவர்கள் யாரும் இல்லை. உதாரணமாக, அம்பேத்கர், பெரியார், ரெட்டமலை சீனிவாசன், இமானுவேல் சேகரன் போன்ற தலைவர்கள் இவர்களுக்கு இல்லை. அதனால் எந்தத் தலைவரின் வழிகாட்டுதலில் ஒன்றிணைய வேண்டும் என்ற அடையாளச் சிக்கல் இருக்கின்றது. தமிழக அரசு கொண்டுவந்த ‘புதிரை வண்ணார் நல வாரியத்தில்’ இவர்கள் உறுப்பினர்களாக சேர முடியவில்லை. ஏனென்றால், கிறிஸ்தவ புதிரை வண்ணார்கள் பிற்படுத்தப்பட்ட ஜாதி பிரிவின் கீழ் வருகின்றனர். எனவே, இந்து புதிரை வண்ணார்களுக்கு அரசு வழங்கும் எந்த சலுகைகளும் இவர்களுக்குக் கிடைப்பதில்லை. மேலும், அரசு வழங்கும் எந்த ஜாதி சான்றிதழ்கூட இவர்களுக்கு கிடைப்பதில்லை”. கிறிஸ்தவ புதிரை வண்ணார் என்றால் எங்கு இருக்கிறார்கள்” என்ற கேள்வியை எழுப்புகிறார்கள். எனவே, இவர்களுடைய பிள்ளைகள் உயர் கல்விக்குச் செல்ல முடியாமல் தவிக்கிறார்கள்.
பொருளாதாரத் தளத்தில் இவர்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. அடிப்படையில் இவர்கள் செய்துவந்த சலவைத் தொழிலை இப்போது யாரும் செய்ய முன்வருவதில்லை. எனவே, மாற்றுத் தொழிலைத் தேடிப் பக்கத்து ஊர்களுக்கும், நகரங்களுக்கும் குடிபெயர வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இளைஞர்கள் புதிரை வண்ணார் என்ற இழிவான அடையாளத்தை மாற்றுவதற்காக வெளியூர் சென்று மாற்று வேலைகளில் ஈடுபடுகின்றனர். முன்னொரு காலத்தில் விவசாயம் செய்வதற்காக இலவசமாக கொடுக்கப்பட்ட நிலங்களும் இவர்களிடமிருந்து அபகரிக்கப்பட்டுவிட்டன.
பண்பாட்டுத்தளத்தில் “ஒதுக்குதல் ஒதுங்குதல்” என்ற அடிப்படையில் இவர்களுடைய வாழ்க்கை அமைந்துள்ளது. அன்றாட வாழ்வில் தீட்டு என்ற அடிப்படையில் இவர்களை ஒதுக்கி வைக்கின்றார்கள். இவர்களைப் பகலிலே பார்த்தால் தீட்டு என்ற மோசமான சம்பிரதாயத்தால் இரவில் மட்டுமே இவர்கள் நடமாடுவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் ஏரி, குளம், குட்டை, ஓடை, சாலையோரம், குப்பைகள் கொட்டுகின்ற இடம், கழிவுநீர் தேக்கம், சுடுகாடு அல்லது கல்லறையின் பக்கம் என்று புறம்போக்கு நிலங்களில் வாழ்கின்றார்கள்.
உளவியல் ரீதியாக பெரும்பாலும் இவர்கள் “வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம்” என்று ஒதுங்கி கிடக்கிறார்கள். ஊர் மக்கள் பார்த்து எந்த வேலை கொடுத்தாலும் செய்யத் தயாராக இருக்கின்றோம் என்ற மனநிலையில் தான் வாழ்கிறார்கள். இவர்களுக்கென்று தனிப்பட்ட விழாக்களும், கொண்டாட்டங்களும் இல்லை. ஊரார் நடத்துகிற விழாக்களிலும் பங்கேற்க முடிவதில்லை. எட்ட நின்று வேடிக்கை பார்ப்பவர்களாகவும், வீடுகளில் மிச்ச சோறு வாங்குபவர்களாகவும் இருக்கிறார்கள். மேல்சாதி ஆண்களால் இளம்பெண்கள்மீது எந்த நேரத்திலும் பாலியல் வன்முறை நிகழ்த்தப்படலாம் என்ற பயத்தில் இருக்கின்றனர்.
சமயத் தளத்திலும் இவர்கள் பலம் இல்லா தவர்களாக இருக்கிறார்கள். வடதமிழகத்தில் முதன் முதலில் கிறிஸ்தவர்களாக மாறியவர்கள் இவர்கள்தான் என்பதை வாய்மொழி வரலாறு பதிவு செய்கிறது. அடிப்படை யில் சமத்துவத்தைப் போதிக்கின்ற கிறிஸ்தவ மதத்தை பின்பற்றினாலும், சாதிய படிக்கட்டுகளில் இவர்கள் கடைசி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால், நிறுவனப்படுத்தப்பட்ட கிறிஸ்தவ அமைப்புகள் இவர்களின் மீது அதிக கவனம் செலுத்துவதில்லை. மேல்சாதியினர் வீட்டில் இறப்பு நிகழ்கின்றபோது சாவுச்சடங்குகளான நடை பாவாடை விரித்தல், அரிச்சந்திர கோடு, நடுக்கட்டான் சடங்கு அனைத்தையும் இவர்கள்தான் செய்கிறார்கள். அவற்றைச் சரியாக செய்யவில்லை என்றால், அவர்களைக் காலால் உதைத்து அடிப்பதையும், துன்புறுத்துவதையும் நாம் காணமுடிகின்றது. ஆனால், இவர்களுடைய வீட்டில் சாவு நிகழ்கின்ற பொழுது அந்த பிணத்தை எங்கு புதைப்பது என்ற கவலையில் தவிக்கின்றனர். எனவே, அந்த நேரத்தில் புறம்போக்கு இடத்தில் ஊரார் பார்த்து எங்கு புதைக்க சொல்கிறார்களோ அங்கு சென்று புதைக்க வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.
ஒவ்வொரு மனிதரும் இந்த மண்ணில் பிறப்பதற்கு உரிமை இருப்பது போல இறக்கும்போதும் மாண்புடன் புதைக்கப்படுவதற்கும் உரிமை இருக்கின்றது இந்த உரிமை பல இடங்களில் சுட்டிக் காட்டப்பட்டு இருக்கின்றது. இந்திய அரசியல் சாசனம் (Article 15,16,17) இதை அடிப்படை உரிமைகளாகக் கோடிட்டுக்காட்டியுள்ளது. தமிழக கத்தோலிக்க ஆயர் பேரவை மற்றும் தமிழ்நாடு-புதுச்சேரி துறவியர் பேரவை 1990 ஆம் ஆண்டு வெளியிட்ட 10 செயல்திட்டத்தில் வழிபாட்டுத்தளங்களில் அட்டவணை ஜாதி கிறிஸ்தவர்கள் சமமாக நடத்தப்பட வேண்டும் என்றும், பொதுக்கல்லறையில் சமமாகப் புதைக்கப்பட வேண்டும் என்பதோடு எந்தவிதமான வேற்றுமையும் காட்டக்கூடாது என்பதைச் சுட்டிக் காட்டியிருக்கிறது. அதேபோல 2004 ஆம் ஆண்டு, வெளியிட்ட எட்டு அம்ச செயல் திட்டத்தில் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளது. அப்படி இருந்தால் அது களையப்பட வேண்டும் என்பதையும் சுட்டிக் காட்டியது.
இறந்துபோன கிறிஸ்தவர்கள் எப்படி மாண்புடன் புதைக்கப்பட வேண்டும் என்கின்ற வழிகாட்டு நெறிமுறைகளை வத்திக்கான் வகுத்துக்கொடுத்துள்ளது. அதாவது, இறந்த பின்பு ஒருநாள் உயிர்ப்போம் என்ற நம்பிக்கையை கிறிஸ்தவம் போதிக்கிறது. இறந்த பின்பு அவன் சவமாக மாறினாலும், அந்த உடல் அவனுடைய அடையாளமாக இருக்கின்றது. எனவே, இறந்த உடலை மதிப்புடனும் மாண்புடனும் அர்ச்சிக்கப்பட்ட இடத்தில் புதைக்கப்பட வேண்டும் என்று வத்திக்கான் வலியுறுத்தியுள்ளது.
இந்த மண்ணிலே வாழும்போது சாதியின் இழிவையும், தீண்டாமைக் கொடுமையையும் புதைக்க முடியவில்லை. இறந்த பின்பு பொதுக் கல்லறையில் பிணங்களைப் புதைக்கவும் முடியாமல் தவிக்கும் கிறித்தவ புதிரை வண்ணார்களின் பக்கம் தமிழக அரசும், கத்தோலிக்க நிறுவனத் திரு அவையும் கவனத்தைத் திருப்பவேண்டும். இது காலத்தின் கட்டாயம்.
 
                    

 
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        
Comment