No icon

திருந்த வேண்டியது யார்? திருத்த வேண்டியது யார்?

தவறு நடக்கின்ற சூழல்களில் எல்லாம் பிறப்பெடுக்கும் கேள்வி
‘திருந்த வேண்டியவர் யார்? திருத்த வேண்டியவர் யார்?’
‘அடுத்தவர்’ என்பதே பலரது பதிலாகும் என்பதே உண்மை.
அடுத்தவர் என்பது அண்டை வீட்டுக்காரராக, அரசுத் துறையாக
பணிபுரியும் நிறுவனமாக, ஊடகமாக என பல விலாசம் விரிக்கும்!
        குற்றவாளி அடுத்தவர் என்பதாலே நம்மில் அதிர்ச்சி ஆத்திரம் கோபம்
        விமர்சனம், வியாக்கியானம், தீர்ப்பு, முணுமுணுப்பு படையெடுத்து வரும்.
        மனித வாழ்வில் அவ்வப்போது தோன்றி மறையும் இவ்வுணர்வு காட்சிகளின்
        உண்மை கண்டறியப்பட ‘நானும் குற்றவாளி’ என்கிற உணர்வு எழ வேண்டும்.
தீவினையும் அநீதியும் கொடுஞ்செயல்களும்  நிகழ்கையில் ஏற்படும் கொதிப்பு
காற்றடைத்த பலூன் போல் சில நாட்களுக்குள் தணிந்து விடுவது நலமல்ல.
பணமும், அதிகாரமும் கைகோர்த்து சமரசம் பேசும் இந்தியாவில் பொள்ளாச்சி 
விவகாரமும் விரைவில் சூடு தணியும் என்பதில் ஐயமில்லை!
        ஓர் அறை, அதனுள், ‘டேய், உன்னை நம்பித்தானே வந்தேன்…
        இவங்கக்கூட இருக்கவா வந்தேன்… என அரைநிர்வாண கோலத்தில்
        கட்டிலில் உட்கார வைக்கப்பட்டிருக்கும் பெண்ணின் கதறல்…
        பெல்ட்டால் அடிக்காதீங்க அண்ணா, நான் கழத்துறேன்… எனும் அழுகுரல்
        தமிழகத்தை உலுக்கிப்போட்ட கொடுமை எத்தனை மனசாட்சிகளை உசுப்பியிருக்கும்? 
    கொஞ்ச நாளைக்கு ஊடகப் பேசுபொருளாகி விவாதங்கள் நடக்கும்
ஊரறிய விசயத்தைச் சொல்லி கட்சிகள் அரசியல் நடத்தும்
ஈடுபட்ட கயவர்களை காப்பாற்றிட ஆதிக்க முயற்சிகள் தொடரும்!
நாமோ அடுத்த அரசியல் அரசல்களுக்குள் மௌனியாகிடுவோம்!
        நிகழ்வு வெளிச்சத்திற்கு வந்த சில நாட்களிலே வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில்
        பலவித வசனங்கள் ட்ரெண்டாகியது.…அவற்றுள் சில…
        அப்பாவி பொண்ணுங்கள ரேப் பண்ணி அத வீடியோ எடுத்து ரசிக்கிற கிரிமினல்ஸ
        என் கையால அடிச்சிக் கொல்ல முடியலேங்கிற ஒரே ஒரு வருத்தம்தான் சார்…
ஆனா, உன் வீட்டுல உன் பொண்ணு பாதுகாப்பா இருக்காளான்னு தெரியுமா?
உன் பொண்ணுனா உனக்கு உயிரு, மத்தவங்க பொண்ணுனா உனக்கு...…
உங்க புள்ளைங்கிட்ட டெய்லி உக்காந்து  ஓர் அஞ்சு நிமிசம் பேசுங்க
விருப்பம் இல்லாம பொண்ணத் தொடுறது உங்க அம்மாவ தொடுறது மாதிரினு
எல்லா தாய்மாரும் சொல்லிப் பாருங்க ஒருத்தன் தொடுறானான்னு பாப்போம்.…
        இதுபோன்ற வசனங்களைப் பகிர்ந்து ஆத்திரத்தை எதிர்ப்பை வெளிப்படுத்திய
        இளைஞர்;கள் பலருள் நானும் ஒருவனாய்…ஆனால் குற்றவுணர்ச்சியோடு!
        என்னுள் எழுந்த குற்றவுணர்ச்சி எழுப்பிய கேள்விகள் பல…
        திருந்த வேண்டியது யார்? திருத்த வேண்டியது யார்?
அவசர உலகில் பணம் சம்பாதிக்க வேண்டும்; பதவி வேண்டும்
என்பதற்கான வேட்டையிலே பெற்றோர் பிள்ளைகள் இடையிலே மிகப்பெரிய
இடைவெளியை உருவாக்கிய குற்றம் நெஞ்சை வருடுகிறதா?
திருந்த வேண்டியது யார்? திருத்த வேண்டியது யார்?
        உறவு இடைவெளியை காசாக்க நினைத்து புதுப்புது தளங்களில்
        முன்பின் தெரியாத ஊடக உறவுகளில் குளிர்காய பாதையமைக்கும்
        இணையத்தின் இதயமற்ற இயக்கம் நம் உள்ளங்களை நெருடுகிறதா?
        திருந்த வேண்டியது யார்? திருத்த வேண்டியது யார்?
    சத்தமாகப் பேசாதே, வெளியில் தனியே செல்லாதே, அடக்கமாய் நடந்திடு…என
    பெண் பிள்ளைகளுக்கு இரவல் வாங்கி கற்பிதம் சொன்ன நாம் ஆண்மக்களிடம்,
    “பெண்ணை இச்சையோடு பார்க்காதே, சீண்டிட நினைக்காதே, மாண்போடு நடத்திட கற்றுக்கொள்” என்று கற்பிக்காதது தவறென்று பொதுபுத்தி உணர்த்துகிறதா?
திருந்த வேண்டியது யார்? திருத்த வேண்டியது யார்?
        தன் உடன்பிறந்த சகோதரி சுத்த பத்தினியாக எந்த ஆண்களிடமும் பேசாமல்
        கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்கும் ஆண்மகன்
        மணிக்கணக்கில் அடுத்த பெண்களிடம் கடலைபோடுவது தவறு என்பதை உணர்த்தி
        மகன்களை ஆண்மை தவறாமல் வளர்க்கத் தவறியது தவறெனப் புரிகிறதா?
        திருந்த வேண்டியது யார்? திருத்த வேண்டியது யார்?
        பெப்பர் ஸ்ப்ரே வைத்துக் கொள், ஜிபிஎஸ் வாட்ச் கட்டிக் கொள், 
        தற்காப்புக் கலை கற்றுக் கொள்… பாதுகாப்பாக வாழலாம் என்று
        அறிவுரைகளை குறைவில்லாமல் கொடுத்து பெண்களைத் தற்காத்துக் கொள்ளச் 
        சொல்லிடும் போக்கு ஆணாதிக்க மனநிலையின் தாக்கம் என்கிற தெளிவிருக்கிறதா?
        திருந்த வேண்டியது யார்? திருத்த வேண்டியது யார்?
உடைமாற்றும் இடம், கழிப்பிடம், போன்றவற்றில் ரகசிய கேமிரா வைத்திருப்பது
பொதுவெளிகளில் பெண்களை காமப் பார்வையோடு உற்று நோக்குவது
பெண்களை வெறும் சதைப்பிண்டங்களாகக் கருதி செக்ஸ் படங்களைப் பார்ப்பது
பெண்ணின் உடல்பாகங்களைக் கற்பனை செய்து காமத்தை கிளர்ந்தெழச் செய்வது
மறைவாய் நிகழும் இவையாவும் வக்கிரத்தன்மையின் வடிவங்கள் என்பது புரிகிறதா?
        திருந்த வேண்டியது யார்? திருத்த வேண்டியது யார்?
        பாலின சமத்துவம் பேசிக்கொண்டு வீட்டிற்குள் மனைவியை, சகோதரியை,
        அண்டை வீட்டு பெண்களை இரண்டாம் பட்சமாகப் பாவிக்கும் போக்கு
        பேதமையின் உச்சம்; என்கிற உணர்வு நம் உணர்வுகளை உசுப்புகிறதா?
        திருந்த வேண்டியது யார்? திருத்த வேண்டியது யார்?
பாதிக்கப்பட்ட நபர் பாதிப்பை பொதுவெளியில் சொல்ல முன்வந்தால்
பாதுகாப்பு கொடுப்பதை விட்டுவிட்டு, அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும்
கொடுத்து எதுவுமே நடக்காததுபோல பாதிக்கப்பட்டவரை நடிக்க வைக்கும்போக்கு
நாடறிய கீழ்த்தரமான அரசின் அயோக்கியத்தனம் என்பது தெரிகிறதா?
திருந்த வேண்டியது யார்? திருத்த வேண்டியது யார்?
        உண்மை தெரிந்தும் ஊனமாகும் நீதிமன்றங்களின் போக்கும் தீர்ப்பும் இந்தியா
        ‘ஒரு பாதுகாப்பற்ற தேசம்’ என்பதன் உத்தரவாதம் என்கிற உண்மை புலப்படுகிறதா? 
        திருந்த வேண்டியது யார்? திருத்த வேண்டியது யார்?
இன்றும் எங்கும் எப்பொழுதும் இந்தியா முழுவதும்
‘உன்னை நம்பித்தானே வந்தேன்.’ என்ற குரல் தொடர்ந்து ஒலிக்கிறது
நான் எனது என்கிற சுயநல வட்டத்திற்கு இவ்வழுகுரல் சத்தம் கேட்கிறதா? 
மனிதருக்கு மட்டுமே சொந்தமான உணர்வுகளில் ஒன்று ‘நம்பிக்கை’
இனியும் நம்பிக்கைத் துரோகம் வேண்டாம்
        புதுநம்பிக்கைகளோடு தொடரட்டும் நல்லவைகள் நம்மிடமிருந்து.
        ஆண்பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்த்துவிட்டால் 
        பெண்பிள்ளைகள் பத்திரமாக வளர்ந்து வருவார்கள் தானே!
        சட்டம் தன் புறவழி வாசல்களை அடைத்துக்கொண்டால்
        நீதி நிலைநாட்டப்படும் என்பது உண்மை தானே!
        தண்டனைகள் உறுதி செய்யப்பட்டு விட்டால் தரணியில்
        தவறுகள் குறைந்திடும் என்பது சாத்தியம் தானே!
மனசாட்சி எழுப்பும் அத்தனை கேள்விகளுக்கும் பதில் நம்மிடமே!
இன்றைய அவசரத் தேவை நம் மனசாட்சியை உசுப்புவதே!
குற்றமுள்ள நம் நெஞ்சங்களைப் பதற வைத்து பக்குவப்படுத்தவும்
மனசாட்சியின் உந்துதலுக்கு செவிமடுத்து செயல்படவும்
மாற்றம் வீட்டிலிருந்து, தன்னிலிருந்து, தனிநபரிடமிருந்து ஏற்படட்டும்!

Comment