ஒரு தேசம், ஒரு தேர்தல்
வன்மையாக எதிர்க்கிறோம்
மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான அரசு, முன்வைத் திருக்கும் ’ஒரு தேசம், ஒரு தேர்தல்’ என்ற கொள்கையை தமிழகக் கத்தோலிக்க ஆயர் பேரவை கடுமையாக எதிர்க்கிறது. சனநாயகத்தின் முக்கியக் கூறான பன்முகத் தன்மையையும் பன்முகச் சமூகங்களின் சமபங்கேற்பையும் மறுக்கும் இக்கொள்கையை எவரும் ஏற்க முடியாது. இந்திய நாடு பல்வகை தேசங்களை உள்ளடக்கிய நாடு என்பது உண்மையாயிருக்க, ஒரு தேசம் என்று சுருக்கிப் பார்த்தல் மிகப் பெரிய பிழையல்லவா? இந்தியா ஒற்றைத் தேசமாயிருப்பின் ஒரு தேர்தல் சாத்தியமாகலாமா? புவி சார்ந்த வேற்றுமைகளும் இன்னும் பல கால நிலை மாறுபாடுகளும் நிறைந்த நாட்டில், இவையெல்லாம் மறுக்கப்பட்டு ’ஒரு தேசம்’ என்ற பெயரில் ’ஒரு தேர்தலை’ நடைமுறைப்படுத்துதல் சனநாயகத்தையே முடக்கிவிடாதா? திருவாளர் மோடி அவர்கள் மீண்டும் ஆட்சிக் கட்டிலேறினால் சனநாயகத்துக்கும், சனநாயக நிறுவனங்களுக்கும் ஆபத்துதான் என்ற முன்னெச்சரிக்கை நிஜமாகிவிடுமோ என்ற நிலை கண்டு அஞ்சுகிறோம்.
ஒற்றை எனும் கருத்தியலின் மீது கட்டமைக்கப்பட்டுவரும் மதப் பெரும்பான்மை வாதம் சனநாயகத்துக்கு எதிரானது. ஒரு தேசம், ஒரு மொழி, ஒரு கலாச்சாரம் என்று பேசிவந்த இந்திய மதவாதிகள் ’ஒரு தேர்தல்’ பற்றிப் பேசுவதில் வியப்பு ஒன்றுமில்லை. மக்கள் அளித்த அமோக ஆதரவில் இந்தியாவில் காலங்காலமாய் காக்கப் பெற்று வரும் பன்முகம் என்னும் கருத்து காயப்பட்டுப்போகுமோ என்று அஞ்சுகிறோம்.
இந்தியா ஒரு நாடு என்ற நிலையில், இந்த நாடு பல தேசங்களை உள்ளடக்கியது என்பது உண்மையாயிருக்க, ஒரு தேசம் எனும் கருத்து சனநாயகத்துக்கும் பன்முகச் சமூகங்களுக்கும் எதிரானது என்பதால் நாங்கள் எதிர்க்கிறோம்.
ஒற்றைமயம் பாசிச வடிவிலானது; உரையாடலை மறுப்பது; சமூக நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிப்பது. ஒற்றைமயம் சனநாயகமல்ல என்பதால் இக்கொள்கையைத் தொடர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வெதிர்ப்பில் அனைத்துச் சனநாயக சக்திகளும் இணைய வேண்டுகிறோம்.
Comment