திரும்பிப் பார்க்க முடிந்தால்
மக்கள் பட்டம் வாங்குகிறாள்
- Author முனைவர் அ. மரிய தெரசா --
- Wednesday, 17 Jul, 2019
மகள் பட்டம் வாங்குவதைப் பார்க்கும் ஆசையில் ஆறு நாடுகளை சைக்கிளில் கடந்து சென்றார் போலந்து நாட்டைச் சேர்ந்த ஜெர்சாய் ஜாப்லோன்ஸ்கா எனும் தந்தை. இவரது மகள் இங்கிலாந்தில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் படித்து பட்டதாரி ஆனார். சொந்த ஊரில் சிறிய கடை நடத்தி வந்த ஜெர்சாய், மகள் பட்டம் வாங்குவதை நேரில் சென்று பார்க்க விரும்பினார். அதற்காக அவர் சைக்கிளில் கடந்த தூரம்: 2000 கி.மீ. கடந்த நாடுகள்: போலந்து, ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், பிரான்ஸ் வழியாக இங்கிலாந்தைப் பத்து நாட்களில் சென்றடைந்தார். பாஸ்போர்ட், கைச் செலவுக்குப் பணம், செல்போன், பஞ்சர் ஒட்டும் பொருள்கள் என எல்லாவற்றையும் கையோடு எடுத்துச் சென்றாராம்.
இதை வாசிக்கும் நமக்கு இந்தத் தந்தை செய்தது கொஞ்சம் அதிகப்படியானது எனவும் அறிவற்றதாகவும் தெரியலாம். இன்று பட்டங்கள் வழங்கப்படும் முறையும், அதன் மதிப்பும் மாற்றமடைந்து வருவதால் அப்படிப்பட்ட எண்ணங்கள் பலரிடமும் உருவாக வாய்ப்புகள் உள்ளன. டு.மு.ழு. படிக்கும் குழந்தையே பட்டம் வாங்குவதுபோல செய்யும்போது பெரியவர்கள் வாங்குவது பெரிய செய்தியா என்ன?
ஆனால் கடந்து வந்த பாதையை திரும்பிப்பார்க்கிறேன். 40, 50 ஆண்டுகளுக்கு முன்பு நம் நாட்டுப் பெற்றோரும் தம் பிள்ளைகள் படிப்பதையும், அவர்கள் வாங்கும் பட்டத்தையும் பார்க்க நாடுகளைக் கடந்து செல்லாவிட்டாலும், பிள்ளைகள் பெறும் பட்டத்தைப் பார்ப்பது அவர்களுக்கு வாழ்நாள் கனவு. இதை நான் அனுபவப்பூர்வமாகவே எழுதுகிறேன். சில காட்சிகள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நம் கண்களை விட்டும் கருத்தை விட்டும் அகல்வதில்லை. அப்படிப்பட்ட ஒன்றுதான் இது.
ஆம். அன்று பட்டமளிப்பு விழா. பலருக்கு அது கனவு. சிலருக்கு மட்டுமே அது நிகழ்வு. பட்டப்படிப்பு படித்தவர்களே குறைவாக இருந்த காலக்கட்டத்தில் அது ஐஹளு, ஐஞளு தேர்வுகளில் வெற்றி பெற்றதைப் போன்றே மகிழ்ந்தனர். பல ஊர்களுக்குள் ஒருவர் அல்லது இருவரே பட்டப்படிப்பு படித்தவர்களாக இருந்தனர். இவையனைத்தும் உண்மைதானா என இப்போதுள்ள மாணவர்களுக்கு சந்தேகம் கூட வர வாய்ப்பு உண்டு.
முதுகலைப் படிப்பு படித்துக்கொண்டிருந்த காலத்தில், இளங்கலை படிப்பு முடிந்தவர்களுக்கான பட்டமளிப்பு விழா பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. பல்கலைக்கழகம் நாங்கள் படித்த மதுரை பாத்திமா கல்லூரிக்கு அருகில் இருந்ததால், அப்பட்டத்தை நேரில் பெற்றுக்கொள்ள அங்கே படித்துக் கொண்டிருந்த சிலர் திட்டமிட்டோம். அங்கே சென்ற பிறகுதான் பல உண்மைகளை எங்களால் நேரிடையாகப் பார்க்க முடிந்தது.
பல்கலைக் கழக ரேங்க பெற்றவர்களுக்கு மட்டுமே மேடையில் அழைக்கப்பட்டு பட்டம் கொடுக்கப்பட்டது. மற்றவர்களுக்கு, அவரவர் இருந்த இடங்களிலேயே கைகளில் தரப்பட்டன. பெயர்கள் மட்டுமே மேடையில் வாசிக்கப்பட்டன. அவரவர் படித்த கல்லூரிகளில் முதல் மதிப்பெண் பெற்று ரேங்க் வாங்கிய பல மாணவிகள் அங்கு அப்போது படித்து கொண்டிருந்தோம். எங்கள் மதிப்பெண்களைப் பற்றி பேசி நாங்கள் அடிக்கடி பெருமைப்பட்டதுண்டு. ஆனால் அவ்வளவு பெருமைக்குரிய பட்டம் என நாங்கள் எண்ணியதை யாரோ ஒருவர் கையில் தந்தபோதுதான் எங்களது உண்மை நிலை புரிந்தது. பரந்து விரிந்த சமுதாயத்தில் அது சிறியதே என்பதை அப்போது தெரிந்து கொண்டோம். ஆனால் எங்களை இன்னும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற உத்வேகத்தை அது கொடுத்தது. அமர்ந்திருக்கும் இடத்தில் அல்ல, மேடையில் சென்று மதிப்பாக பட்டத்தை கையில் வாங்க வேண்டும் என்ற தீர்மானத்தை நாங்கள் எடுக்க அப்பட்டமளிப்பு நிகழ்வு எங்களுக்கு உணர்த்தியது. இன்னொரு முக்கியமான உண்மையையும் இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். பிள்ளைகள் வாங்கும் பட்டத்தை பார்ப்பதற்கென பல ஊர்களிலிருந்தும் ஊர்திகள் வைத்துப் பெற்றோரும், மற்றோரும் அங்கு வந்திருந்தனர். அரங்கத்துக்கு உள்ளே அவர்
களில் யாருக்கும் இடமளிக்கப்படவில்லை. ஆனால்
வெளியில் நின்றபடியே தம் பிள்ளைகளின் பெயர்களை வாசிக்கக் கேட்டு மெய்மறந்து நின்றனர்.
ஈன்ற பொழுதினில் பெற்ற மகிழ்ச்சியை விட அதிக மாக மகிழ்ந்து போயினர். ஏனெனில் தம் பிள்ளைகள் படிக்க ஆரம்பித்து பல ஆண்டுகள் கழித்து அவர்கள் பார்க்கும் முதல் பட்டமளிப்பு காட்சி அது.
குடும்பத்தில் ஒருவர் சிரமப்பட்டு படித்து பட்டத்தை வாங்கியபோது, அதைப் பார்க்க என்று உறவு கூட்டமே வந்து வாழ்த்திய காட்சிகள் இன்றும் பசுமையாக நினைவலைகளில் நிழலாடுகின்றன. இரவல் அங்கிகளை அணிந்தபடி, வாங்கிய பட்டத்தை கையில் பிடித்துக்கொண்டு எடுத்த புகைப்படங்களை வீட்டு வரவேற்பறைகளில் தொங்கவிட்டு காட்சிப் பொருளாக மாற்றி மகிழ்ச்சியடைவது அன்றைய நாகரீகமாக கருதப்பட்டது. கல்லூரிக்குச் சென்று படிப்பது அரிதாக இருந்த அக்காலத்தில், படிக்காத அல்லது குறைவாகப் படித்த பல பெற்றோருக்குத் தங்களது வரவேற்பறைகளில் மாட்டி வைப்பது பேரானந்தத்தைக் கொடுத்தது. அன்று படித்த மாணவர்களுக்கு, அவர்கள் பெற்ற பட்டம் மதிப்பு, மரியாதை, பெருமை, சிறப்பு, செல்வாக்கு, வேலைவாய்ப்பு, வருமானம் என எல்லாவற்றையும் கொடுத்தது. இன்று டு.மு.ழு. வகுப்பு முடிந்தவுடன் சில பள்ளிகளில் பட்டமளிப்பு விழா. முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என்று தொடர்கிறது. எதற்கு? ஏன்? இதைத் தருகிறார்கள் எனத் தெரியாமலேயே பிள்ளைகள் அதைப் பெற்றுக் கொள்கிறார்கள்.
ஏன் படிக்க வேண்டும்? எதற்காகப் பள்ளிக் கூடம் போகவேண்டும் என்று புரிவதற்கு முன்பே கையில் பட்டமா? இது ஒருபக்கம் என்றால், பலவித கனவு
களோடும், கற்பனைகளோடும், காட்சிகளோடும் பல இலட்சங்களைச் செலவழித்து பெறும் இளங்கலை, முதுகலை, முனைவர், பொறியியல் பட்டங்களை வைத்து அவர்களின் அடிப்படைச் செலவுகளுக்கே வருமானங்களை, பல இளையோரால் ஈட்ட முடியவில்லை. ஷூ, சாக்ஸ், சீருடை அணிந்து பள்ளி, கல்லூரி படிப்புகளைப் படித்தது மாதம் ரூ.5000, 6000க்கு வேலை பார்க்கவா? அந்தக் குறைந்த ஊதியத்தைப் பெற்றுக் கொள்ளவும் அவர்கள் அழகாக உடுத்திக் கொண்டே செல்ல வேண்டியுள்ளது. படிப்புக்கேற்ற வேலைகள் 50 சதவீத இளையோருக்கு இன்னும் கனவாகவே இருக்கின்றது. இச்சூழலில் படித்து வாங்கும் பட்டங்களை அவர்கள் எந்த மனநிலையோடு வாங்குவார்கள்? செய்யும் வேலையில்தான் ஈடுபாடு வந்து விடுமா? குறிப்பிட்ட காலத்துக்குள் வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை இருந்தாலாவது மகிழ்ச்சியோடு வேலை செய்வார்கள்.
சமீபத்தில் செய்தித்தாளில் வாசித்த ஓர் உண்மைச் செய்தி இது. ஒரு பிணவறை காவல் காக்கும் பணிக்கு முனைவர் பட்டம் பெற்றவர் உட்பட பல முதுகலை, இளங்கலை பட்டதாரிகளும் விண்ணப்பித்திருந்தனர். இன்று இளங்கலை, முதுகலை பட்டம், பொறியியல் படிப்பு படித்துவிட்டு கூலிவேலை, கொத்தனார் வேலை, முடிதிருத்தும் வேலை, மண்வெட்டும் வேலை, கடைகளில் பணியாளர் வேலை எனப்பலரும் பணிசெய்வதைப் பார்க்கும்போதும், பொறியியல் கல்லூரிகளில் க்ஷ.நு., ஆ.நு., படித்துவிட்டு எந்த வேலையும் கிடைக்காமல் திருட்டுத் தொழில்களிலும், சட்டவிரோத செயல்களி லும் ஈடுபட்டு பிடிபடும் மாணவர்களின் நிலையைப் பார்க்கும்போதும் மகிழ்ச்சியாக இல்லையே! வலிக்கிறதே!
இப்படிப்பட்ட வேலைகளைச் செய்ய இவ்வளவு அதிகமாக படித்தவர்கள் விண்ணப்பிக்கும் நாட்டு நிலையை தலைவர்கள் எனத் தங்களை பிரகடனப்படுத்துபவர்கள் நினைத்துப் பார்ப்பார்களா? இளையோரை அதிகமாகக் கொண்டுள்ள நாடு எனப் பெருமைப்படுகின்றோம்! படித்துமுடித்து வரும் அதிகப்படியான இளையோர் உள்நாட்டிலேயே பணிபுரியும் அளவுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க என்னென்ன செய்துள்ளோம்? அவர்கள் தன்மானத்தோடும், தன்முனைப்போடும் நம்பிக்கை யோடும் மகிழ்ச்சியோடும் பணிபுரிய வேண்டாமா? வேலைவாய்ப்புகளை உருவாக்காத, அதிகப்படியான கல்விநிறுவனங்கள் எதற்காக?
சாதாரண வேலை செய்யும் பெற்றோரின் கனவு, தன்னைப்போல தன் பிள்ளையும் சிரமப்படக் கூடாது என்பதே. எனவே கஷ்டப்பட்டு, கடன்பட்டு பட்டப்படிப்பு படிக்க வைக்கின்றார்கள். ஆனால் இன்றைய எதார்த்த வாழ்க்கையில் நாம் பார்ப்பது முற்றிலும் முரணானது. கையில் பட்டமும், அதிக மதிப்பெண்ணும் இருப்பதால் மட்டும் வேலைகள் கொடுக்கப்படுவதில்லை. பல நிறுவனங்களில் உள்ளே நுழைய அனுமதிச் சீட்டாக கூட பட்டங்கள் பயன்படுவதில்லை. பல அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் துட்டு இருந்தால் தான் மதிப்பும், உள்ளே செல்ல அனுமதியும், அமர இருக்கையும் கிடைக்கும். பல ஆண்டுகளாக சிரமப்பட்டுப் படித்து பெற்ற பட்டம் பலருக்கும் மதிப்பை தேடித்தரவில்லை.
கடின உழைப்புடன் சிரமப்பட்டு படித்து பட்டங்கள் வாங்குவதாக இருக்க வேண்டும். அப்படிப் பெறப்படும் பட்டங்களுக்கு மதிப்பு இருந்தால் அதைப் பெறுவதற்கு மகிழ்ச்சியோடு இளையோர் காத்திருப்பர். அப்படி மதிப்பளிக்கும் பட்டம் தனக்கும் பெருமை சேர்க்கும். சமூகத்திலும் மதிப்பு பெறும். பத்தோடு ஒன்று, அத்தோடி இன்னொன்று என்ற நிலை உயர்கல்விக்கு வரக்கூடாது. பெறும் பட்டங்களை பெருமையோடும் மகிழ்ச்சியோடும் வாங்கும் நிலை மீண்டும் இங்கு உருவாக வேண்டும். ஈடுபாட்டோடு செய்யும்படியாக இளையோரின் வேலைகளும் அமைய வேண்டும். மதிப்புக் கிடைக்காத பட்டங்களை மகிழ்ச்சியோடுதான் வாங்குவார்களா? திருப்தி இல்லாத வேலைகளை, ஈடுபாட்டோடுதான் செய்வார்களா?
Comment