No icon

பாஸ்கா காலம் 5ஆம் ஞாயிறு-திருப்பலி முன்னுரை - 02.05.2021

பாஸ்கா காலம் 5ஆம் ஞாயிறு
(திப 9:26-31, 1 யோவா 3:18-24, யோவா 15:1-8)

திருப்பலி முன்னுரை:
கிறிஸ்து இயேசுவில் பேரன்புக்குரியவர்களே, இணக்கம் இல்லாத எல்லாமே சுணக்கம்தான் (தளர்ச்சி) என்பது பல இடங்களில் நடைமுறையில் இருக்கும் சொலவாடைகளுள் ஒன்றாகும். அது உணர்த்தக்கூடிய பொருள் பரிபூரண இணைப்பு இல்லாமல் பெயரளவுக்கோ, தற்காலிகமாகவோ இணைந்து செயல்படுவது முழுப்பலன் அளிக்காது என்பதும், எல்லாரும் நன்கு அறிந்து கொள்ள வேண்டிய ஒரு வாழ்க்கைப் பாடமாகும். இன்று நிபந்தனைகளின் அடிப்படையில் இணைவதும், நேரம் வரும்போது சொல்லிக்கொள்ளாமல் பெரும்பாலும் சுயநலத்தின் உந்துதலால் புழுதிவாரித் தூற்றிவிட்டு உறவை முறித்துக் கொள்வதும் அரசியல் கலந்த பாடமாக நாம் காண்கிறோம்.
இணைப்பு பல சமயங்களில், பல இடங்களில் அடிமைப்படுத்துதலின் அதிரடி செயல்பாடாகப் புரிந்து கொள்ளப்படுவதால், அதனால் விளையும் பலன்கள் இல்லங்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளில் தொடக்கத்திலேயே முடங்கி விடுகின்றன. ஆனால் நம் ஆண்டவர் இயேசு, திராட்சைக் கொடி உவமையைக் கூறி நாம் நமது செயல்கள் வழியாகக் கனிதரவும், அது என்றும் நிலைத்திருக்கவும் வழிகாட்டுகிறார். நாம் நமது இனம், மொழி, சபை, குடும்பம் ஆகிய குறுகிய அமைப்புகளையும் கடந்து, பொது நலனுக்காக இணைந்து செயல்பட்டு முழு வெற்றி காணவும், அதன் பலனை தேவையில் இருப்போருடன் பகிர்ந்து கொள்ளவும் இத்திருப்பலியில் அருள் வேண்டுவோம்.
முதல் வாசக முன்னுரை: 
இளைஞர் சவுல் தமஸ்குவில் ஆண்டவரைச் சந்தித்தது ஒரு திருப்புமுனை. அது அவரது வாழ்க்கையில் தலைகீழ் மாற்றம் காண பேருதவியாக இருந்தது. பணியாளர் பர்னபாவின் இடைநிலையாளர் பணியால் திருத்தூதர்களுடன் நல்லுறவும், தொடர்பும் கொண்ட பவுல் தனது இலக்கு நோக்கிய பயணத்தில் துணிவோடு செயல்படத் தொடங்கியதை விளக்கும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை:
அன்பைப் பேச்சில் அல்ல, செயல்பாடுகளிலேயே வெளிப்படுத்த வேண்டும். அதன் வழியாக நாம் உண்மையைச் சார்ந்தவர்கள் என்றும், கடவுளின்  கட்டளைகளைக் கடைப்பிடித்து  அவரோடு  இணைந்திருப்பவர் என்றும் உலகினர் அறிந்துகொள்வர். கடவுள் நம்மில் இணைந்திருப்பதைத் தூய ஆவியால் அறியலாம் என விளக்கும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.
மன்றாட்டுக்கள்:
1. நல்லுறவின் ஊற்றே இறைவா! திருச்சபையை வழிநடத்தும் எங்கள் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவிகள் மற்றும் திருநிலையினர் அனைவரும் உம்மில் நல்லுறவு கொண்டு இணைந்திருப்பதன் வழியாகத் தங்கள் செயல்பாடுகளில் மிகுந்த கனி தருபவர்களாக விளங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. நாங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும் என்றுரைத்த இறைவா! எம் நாட்டை ஆளும் தலைவர்களும்,  அதிகாரிகளும் நாங்கள் நியாயத்தின் அடிப்படையில் விரும்பிக் கேட்பனவற்றை உதாசீனம் செய்யாமல், அவற்றை வழங்குவது தங்களது கடமை என உணர்ந்து செயல்படவும், தங்களது செயல்பாடுகளால் அண்டை மாநிலங்கள் மற்றும் நாடுகளில் நன்மதிப்புப் பெறவும், குறைந்த பட்சம் அவமதிப்புக்குள்ளாகாமல் பணியாற்றவும் முன்வர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. தீமைகளை வெல்ல ஞானம் அருளும் இறைவா! தீமை எங்களை அணுகக்கூடாது என விரும்பும் நாங்கள், எங்களது செயல்கள் பிறரைத் தீமைக்கு உள்ளாக்குகின்றன என்பதை மறந்து விடுகிறோம். எனவே, பகிராமை, புறங்கூறுதல், பொய்யுரைத்தல், மன்னிப்பு வழங்குவதில் - கேட்பதில் அலட்சியம், தேவையற்ற ஆடம்பர வாழ்வினில் பிறருக்குச் சவாலாக இருத்தல் போன்றவற்றில் கவனமாக இருக்க எமக்கு ஞானத்தை அருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. கடமையுணர்வைத் தூண்டியெழுப்பும் இறைவா! எங்கள் குடும்பங்களில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் கல்வி தேர்வு, வேலைவாய்ப்பு, தொழில் வளம், சமூக நலம் உடல் - உள்ளம் பேணல், பொறுப்புகளை உரிய நேரத்தில் நிறைவேற்றல் போன்ற துறைகளில் செய்ய வேண்டிய கடமைகளைச் சரியாக நிறைவேற்றி, அனைத்து நிலைகளிலும் வெற்றியைப் பெற வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Comment