No icon

Rise up & Shine

பயம் மறைய விடியல் உதயம்

பயம் மறைய விடியல் உதயம்

இன்றைய காலக்கட்டத்திலே மனிதனை அதிகம் அச்சுறுத்தும் உணர்ச்சிகளில் மேலோங்கி நிற்பது பயம். “அச்சம் தவிர்” என்பது கேட்க நன்றாகத்தான் உள்ளது. ஆனால், எப்படி தவிர்ப்பது. அச்சத்தால் நடுங்கி சாவோர் பலர். அடுத்தப் படுக்கைகளில் தொடர்ந்து இறந்து கொண்டிருப்பவர்களைப் பார்த்த நிலையில் சாவு பற்றி எழுந்த பயம், இரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தி இறப்பைத் தழுவச் செய்கிறது. ஒரே நாளில் நான்கு பேர் நானிருந்த அறையிலே இறந்து கிடந்ததை உடனே அப்புறப்படுத்தாமலும், உறவினர் ஓலமிடுவதைக் கேட்டதும், என்னில் ஆழ்ந்த பயத்தை உருவாக்கியது என்ற ஓர் அருள்தந்தை உடல் நலத்தில் அதிகம் முன்னேறி வந்ததாகச் சொல்லப்பட்ட நிலையில், அந்த சாவின் ஓலம் அவரையும் அழைத்துக் கொண்டதை கேட்டபோது, நமது உள்ளமும் கதறி அழுகிறது. எங்கு பார்த்தாலும் பயம், அச்சம், திகில், மரண ஓலம் இதுவே இன்றைய காலச்சூழ்நிலையில் எதிரொலிக்கும் உணர்வுகள். இதிலே பயம் பற்றிய எண்ணத்தை எதிர்கொள்ளத் துணிச்சல் தேவை என்பது தெரிகிறது. அதைத் தெளிவு படுத்தவும், வெளிவரவும் தேவையான ஞானமான வழிநடத்துதலை வேண்டி தொடர்கிறேன்.

பயம் வந்தால் பத்தும் பறந்து போகும் என்பர். அதுவே ஆற்றலை வற்றச் செய்யும் வலிமை படைத்தது. பயத்திற்கான காரணங்கள் ஏராளம் இருக்கலாம். எல்லாவற்றிலும் சாவு பற்றிய பயத்தைப் போல் கொடியது எதுவுமில்லை.

நிகழ்ச்சி: 1

ஒரு சிறுவன் சாகும் தருவாயில் இருந்தான். பயம் அவனை நடுங்கச் செய்தது. தன்னைச் சுற்றியுள்ள ஒவ்வொருவரையாக அழைத்து “என்னை அன்பு செய்கிறீர்களா?” என்று கேட்பான். பிறகு, என்னோடு நீங்களும் சாவதற்கு உடன் வருவீர்களா? என்று கேட்கும் போது யாருமே தயாராக இல்லை. அப்போது ஓர் அருள்தந்தை வந்தார். அவன் ஏற்கனவே நற்கருணை வாங்கியிருந்த சிறுவன். அவனுக்கு நோயில் பூசுதல் கொடுக்க வந்தபோது, நற்கருணை கொண்டு வந்திருந்தார். அப்போது அவன் நற்கருணை வாங்கும்போது “இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” (மத் 28:20) என்று சொன்ன இயேசு இவர்தான். இறப்பு வரையில் மட்டுமல்ல; உலகம் முடிவு வரை இருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறாரே நம்புகிறாயா? என்று கேட்டபோது முகத்திலே "மலர்ச்சி" ஏற்பட, நற்கருணையைப் பெற்ற நிலையில் அமைதியாய் ஆன்மாவைக் கையளித்தான்.

மானிட மகனின் வருகையை முன்னறிவித்த இயேசு “உலகிற்கு என்ன நேருமோ என எண்ணி மனிதர் அச்சத்தினால் மயக்கமுறுவர்” (லூக் 21:26) என்று சொல்லி சென்றிருக்கிறார். இன்றைய அச்சம் அதைவிடக் கொடியதாக உள்ளது. ஆம், அச்சம் நம் நலத்தை எடுத்துவிடும். உயிரைக் கூட எடுத்துவிடும். அச்சத்தினால் வரும் துன்பங்கள், நடுக்கங்கள் போன்ற பாதிப்பிலிருந்து எப்படி நம்மை காத்துக்கொள்வது?

நிகழ்ச்சி: 2

பேசிலியா ஷிலிங் என்பவர் தனது பயந்த நிலையிலிருந்து எப்படி வெளிவந்தார் என்பதை பகிர்கிறார். இரண்டாம் உலகப் போரின்போது பணி செய்து வந்த நிலையில், ஜெர்மனி முழுவதும் பயணம் செய்ய வேண்டியிருந்தது. பயணம் செய்த விமானம் தாக்கப்படுவதுபோல உணர்வு ஏற்பட்டு, நடுக்கம் ஏற்படும். இதயத்தில் பயம் நிரம்பும்போது, “இயேசுவே! உமக்காக, உமக்காக மட்டுமே இத்தனை அபாயம் நிறைந்த பணியை நான் செய்கிறேன்” என்று சொல்லுவேன். இந்த இறைவேண்டலை சமர்ப்பித்த உடனே, இறைவனின் பிரசன்னம் என்னை சூழ்ந்தது போலிருக்கும். என் பயம் முழுவதும் மறைந்து விடும் என்கிறார். தொடர்ந்து 1962 ஆம் ஆண்டு சடயூபா நெருக்கடி நிலை வந்தது. மக்கள் பயத்தினால் பாதுகாப்பு தேடி அலைந்தனர். அந்த காலக் கட்டத்தில், “இன்னுமொரு உலகப்போர் இப்போது ஏற்பட்டால் எப்படியிருக்கும்? முந்தினதைவிட அது அதிபயங்கரமாய் இருக்கும்!” எனும் பயம் எழுந்தது. உடனே நமது பொறுப்பில் இருப்பவர்களைப்பற்றிய, பாதுகாப்பு பற்றிய பயமும் சேர்ந்துகொள்கிறது. ஆனால், உடனே பயத்தை உதறித்தள்ளக்கூடிய ஆற்றல் இயேசுவின் அருகாமையை உணரும்போதும், அவரது வார்த்தையை நினைக்கும்போதும் கிடைத்தது. “உம் பக்கம் ஆயிரம் பேர் வீழ்ந்தாலும், உன் வலப்புறம் பதினாயிரம் பேர் தாக்கினாலும், எதுவும் உம்மை அணுகாது” (திபா 91:7) எனும் வார்த்தை உடனே என் பயத்தை அகற்றியது என்கிறார் அவர்.

உடனிருப்பை உணர்வோம்

பயத்தின் ஆதிக்கம் நம் எண்ணத்திலிருந்தும், நமது நம்பிக்கையிலிருந்தும், இயேசுவையும் அவரது வார்த்தையையும் அகற்றும்போது தான் ஏற்படுகிறது என்பது தெளிவானது. ஒளியாம் இறைவனை இருளின் சூழ்நிலையில் ஏற்றுக்கொண்டால் பயம் அகன்றுவிடும் என்பது உண்மை. இயேசு உடனிருக்கும்போது அவர் உறங்குவதைக் கண்ட சீடர்கள் பயத்தினால், “போதகரே சாகப்போகிறோமே! உமக்கு கவலையில்லையா?” (மாற் 4:38) என்று சொல்லி அவரை எழுப்பினர். அவரோ “இரையாதே, அமைதியாயிரு” என்று அதட்டி கடலை அமைதிப்படுத்தினார். நாமும் இன்றும் உடனிருக்கும் இயேசு உறங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தான் காண்கிறோம். நம் நம்பிக்கை உயரவும், அவரைக் கூவி அழைக்கவும் செய்வோம். திருப்பாடல் ஆசிரியர் சொல்லும் “நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும், என் உயிரைக் காக்கின்றீர்; என் எதிரிகளின் சினத்துக்கு எதிராக உமது கையை நீட்டுகின்றீர்; உமது வலக்கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர்” (திபா 138:7) எனும் வார்த்தைகள் உண்மையிலே நமக்கு பாதுகாப்பு உணர்வைத் தரும்.

நிகழ்ச்சி: 3

முனிபா மசாரி (ஆரniயெ ஆயணயசi) என்ற பெண்மணி பாகிஸ்தானின் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்படுகிறார். “இவர் மார்ச் 3, 1987 இல் பாகிஸ்தானில் பிறந்தவர். இவர் ஆர்டிஸ்ட்டாக ஆசைப்பட்ட நிலையில் இவரது 18 வது வயதில் தந்தையின் வேண்டுகோளுக்கிணங்க திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி இரண்டாவது ஆண்டில் நடந்த விபத்தில் கணவர் காரிலிருந்து உருண்டு வெளியே விழுந்து தப்பித்துக் கொண்டார். காரிலிருந்த முனிபா நொறுங்கிப் போனார். கை உடைந்தது, மருத்துவ சிகிச்சையால் சரியானது. அதனால் நங்கூர கலைஞர் (ஓவியர்) ஆனார். முதுகு தண்டில் ஏற்பட்ட பாதிப்பால் இரண்டு தீமைகள் ஏற்பட்டன. சக்கர நாற்காலியில் தான் நகர முடியும் என்பது ஒன்று. தன்னால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்பது மற்றொன்று. அந்த விபத்து ஏற்படுத்திய மிகப்பெரிய அச்சம் தரும் காரியம் அவளது இத்தகைய நிலைமைக்கு காரணமானது என்னவென்றால், அவள் கணவன் விவாகரத்து கேட்டது தான். முதலில் அச்சத்தால் உடைந்து போனார். ஆனால், அவரது தாய் கூறிய இரண்டு வாக்கியங்கள் வாழ்வின் திருப்புமுனைக்குக் காரணமானது. “இதுவும் கடந்து போகும்”, “கடவுள் இதைவிட மேலான திட்டம் ஒன்றை வைத்திருக்கிறார்” ஆம், உறுதியாக இறைவன் தனக்கும் திட்டம் வைத்திருக்கிறார் என்று நம்ப முயன்றார். அதிக ஆற்றல் உள்ள மந்திர சக்திவாய்ந்த சொற்களாக அன்னையின் சொற்கள் அவரது வாழ்விலே செயல்பட்டன. அவை அவரது வாழ்வை இயக்க ஆரம்பித்தன. சிரிக்க முயன்றாலும் முடியாத நிலையில் அந்த சாவு படுக்கையிலிருந்து வர்ண நிறங்களில் ஓவியங்களை வரைய ஆரம்பித்து வாழ்க்கையை சுவையூட்டமுள்ளதாக மாற்றினார். கணவரது விவாகரத்து நடுக்கத்தை ஏற்படுத்தினாலும், அவரது மறுமணத்திற்கு வாழ்த்து அனுப்பும் அளவு துணிச்சல் வந்தது. “என் வாழ்க்கையை எனக்காக வாழ்வேன்” என்று துணிச்சலுடன் ஒரு குழந்தையை தத்து எடுத்து தாயானாள். இப்போது குழந்தைக்கு ஆறுவயது இன்று ஒரு மாடல், பாடகர் மற்றும் ஊக்கமளிக்கும் பேச்சாளர், தேசிய தூதுவரானார். ஐ.நா. சபையின் பெண்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2015 இல் 100 இன்ஸ்பிரேஷனல் பெண்களுள் ஒருவரானார். விபத்தினால் ஏற்பட்ட சாவு பயத்தை வீசி எறிந்து உலக மேடையில் வெற்றி நங்கையாக வலம் வருகிறார்.

எனவே, ஊக்கமூட்டும் சொற்களை (i) நாமாகவே நமக்குள் ஏற்படுத்திக்கொள்ளலாம். (ii) பிறர் வழியாக நம்பிக்கை சொற்களைப் பெற்று பயத்தை வீசி எறியலாம். (iii) இறைவன் தரும் உறுதியூட்டும் சொற்கள் வரும் உலகிற்கும் உரியவராகும் அளவு உற்சாகம் தரும், வாழ்வும் தரும்.

சாவு பற்றிய பயம் மறுஉலக வாழ்வைப் பற்றிய நம்பிக்கை உள்ளவர்களை அதிகம் பாதிக்காது. நாளை என்னவாகும் என்று அஞ்சி நடுங்குவதை விட்டுவிட்டு “இன்று மட்டும்” என்று அந்தந்த நிமிடத்தை அன்றன்றைய நாளில் வாழ்ந்தால் போதும். “நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில், நாளையக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும்; அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்” (மத் 6:34) என்ற இயேசுவின் பொன் எழுத்து போதனை”, பயத்தின் உணர்வை தளர்த்திவிடும். “மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும்” (திபா 23:4) இது இன்னுமொரு சொத்து, அழியா முத்து.

எனவே, இந்த ஒரு நிமிடம் மட்டும் வாழுங்கள், கடந்த நிமிடம் சென்றுவிட்டது. நாளை நம்மிடம் வரும்போது இன்றாகிவிடும். இறைவனின் உடனிருப்பை உணருங்கள். பயம் மறையும், கவலை கலைந்து போகும், வாழ்வு மலரும்

(கதிர் இன்னும் வீசும்)

Comment