No icon

38. கொடுத்த வாக்கைக் காப்பாற்று

எண்ணம் போல் வாழ்க்கை

முன்னொரு காலத்தில் சரஸ்வானி என்றொரு கிராமத்திற்குப் பெரியவர் ஒருவர் வேலையின் நிமித்தம் சென்றுகொண்டிருந்தார். போகிற வழியெங்கும் தென்னந்தோப்புகள், வயல்வெளிகள், என்று நிலமகள் பச்சைப் பட்டாடை உடுத்தி பார்வைக்கு இதமாய் காட்சியளித்தாள். எல்லாவற்றையும் கண்குளிரப் பார்த்து, இரசித்துக்கொண்டே சென்ற பெரியவருக்கு திடீரென்று தாகம் எடுத்தது. எங்காவது குடிக்கத் தண்ணீர் கிடைக்குமா? என்று அவர் சுற்றுமுற்றும் பார்த்தார். சற்றுத் தொலைவில் இளைஞன் ஒருவன் கிணற்றிலிருந்து தண்ணீரை இறைத்து, அதனை நாற்றுகளுக்கு விட்டுக் கொண்டிருந்தான். அந்த இளைஞனிடத்தில் சென்று தண்ணீர் கேட்போம் என்று பெரியவர் பாதையிலிருந்து இறங்கி, அவன் நின்றுகொண்டிருந்த கிணற்றின் அருகே சென்றார்.
“தம்பி! எனக்கு ரொம்பவும் தாகமாக இருக்கின்றது, நீ தண்ணீர் இறைத்துக்கொண்டிருக்கின்ற வாளியை எனக்குக் கொடுத்தால், நான் தண்ணீர் இறைத்துக் குடித்துவிட்டு, உன்னிடத்தில் வாளியைக் கொடுத்துவிடுவேன்” என்றார் பெரியவர். “நீங்கள் ஏன் தண்ணீர் இறைத்துக் குடிக்கவேண்டும்... நானே உங்களுக்குத் தண்ணீர் இறைத்துத் தருகிறேன். நீங்கள் தாகம் தீரும் மட்டும் தண்ணீர் பருகிவிட்டு, அப்படியே தென்னமரத்து அடியில் படுத்து, ஓய்வெடுத்துவிட்டுப் போங்கள்” என்று வாஞ்சையாகப் பேசினான் அந்த இளைஞன்.
“சரி தம்பி” என்று அந்தப் பெரியவர் சொல்ல, இளைஞன் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து, அந்தப் பெரியவருக்குக் குடிக்கக் கொடுக்க, அவர் தாகம் தீரும் மட்டும் குடித்தார். “தம்பி! இந்தக் கிணற்றை எப்போது வெட்டினீர்கள்... தண்ணீர் இப்படித் தேனாகத் தித்திக்கின்றதே!” என்றார். “அதுவா ஐயா! இந்தக் கிணற்றை கடந்த ஆண்டுதான் வெட்டினேன்... இந்தக் கிணற்றிலிருந்து தண்ணீர் பருகுகின்ற எல்லாரும் நீங்கள் சொல்வதுபோன்று தண்ணீர் தேனாகத் தித்திக்கிறது என்றுதான் சொல்கிறார்கள்” என்றார்.
“என்ன தம்பி... தண்ணீர் தேனாகத் தித்திருக்கிறது என்று எல்லாரும் சொல்கிறார்கள் என்று சொல்கிறாயே, நீ இந்தத் தண்ணீரை இதுவரைக்கும் பருகவில்லையா?” என்று சற்று வியப்போடு கேட்டார் பெரியவர். “ஆம் ஐயா! இந்தக் கிணற்றுத் தண்ணீரை நான் இதுவரைக்கும் பருகியதே இல்லை” என்றான் இளைஞன். “ஏன் தம்பி! இது உன்னுடைய கிணறுதானே... இந்தக் கிணற்றிலிருந்து தண்ணீர் பருக ஏதாவது தடையிருக்கிறதா, என்ன?” என்று கேட்டார் பெரியவர். “ஆம் ஐயா! இந்தக் கிணற்றை வெட்டுவதற்காக ஒருவரிடம் கடன் வாங்கினேன். அப்படிக் கடன்வாங்கும்போது, ‘முழுக் கடனையும் அடைக்கும் மட்டும், நான் இந்த கிணற்றுத் தண்ணீரை துளிகூடப் பருகமாட்டேன்’ என்று வாக்குக் கொடுத்தேன். என்னால் இதுவரைக்கும் முக்கால்வாசிக் கடனைத்தான் அடைக்க முடிந்திருக்கிறது. அதனால்தான் இதுவரைக்கும் இந்தக் கிணற்றிலிருந்து தண்ணீர் பருகாமலே இருக்கிறேன்” என்றான் இளைஞன்.
அவன் பேசியதை ஆச்சரியமாகக் கேட்டுக் கொண்டிருந்த பெரியவர், “கொடுத்த வாக்கைக் காப்பாற்றுகின்ற அளவுக்கு இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு மனிதனா....” என்று இளைஞனை மனதார வாழ்த்திவிட்டுச் சென்றார்.
எழுத்தாளர் வெ.இறையன்பு எழுதிய ‘சிதறு தேங்காய்’ என்ற நூலில் இடம்பெற்றிருக்கும் இந்த உண்மை நிகழ்வு, கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டுத் திரியும் நம்மைப் போன்றவர்களை சட்டையைப் பிடித்துக் கேள்வி கேட்பதாய் இருக்கின்றது.
எப்படியும் வாழலாம் என்று இருப்பவர்களுக்கு மத்தியில் ‘எண்ணம் போல் வாழ்க்கை’ வாழ விரும்புகின்ற ஒருவருக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுகின்ற பண்பு மிகவும் முக்கியமானதொன்றாக இருக்கின்றது? அது எந்தளவுக்கு முக்கியமானதாக இருக்கின்றது, அது அவர்களை எத்தகைய நிலைக்கு உயர்த்துகின்றது? என்று இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.
கிராமப்புறங்களில் ஒரு சொல்வழக்கு உண்டு. “உன் பேச்சை எல்லாம் தண்ணீரில்தான் எழுதி வைக்கவேண்டும்” என்பதுதான் அது. முதலில் தண்ணீரில் நம்மால் எழுத முடியுமா?... அப்படியே நாம் எழுதினாலும் அது எழுதியதுபோன்றே நிலைத்துநிற்குமா?... என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. சொன்ன வார்த்தையை காற்றில் பறக்கவிட்டு வாழும் மனிதர்களை குறிப்பதற்காகவே இத்தகைய ஒரு சொல்வழக்கு வந்திருக்கின்றது போலும்.
ஒருவர் உண்மையானவரா, நேர்மையானவராக என்று பார்ப்பதற்கு நாம் வேறெதுவும் செய்யத் தேவையில்லை. அவர் கொடுத்த வாக்கை காப்பாற்றுகின்றாரா என்று பார்த்தாலே போதும் அவர் எந்தளவுக்கு உண்மையானவர், நேர்மையானவர் என்று நமக்குப் புரிந்துவிடும். இன்றைக்குப் பலருக்கு நேரத்திற்கு ஒரு பேச்சுப் பேசுவதுதான் வாடிக்கையாக இருக்கின்றது. இப்படிப்பட்ட மனிதர்களை நம்பி நாம் எப்படி ஒரு காரியத்தில் இறங்குவது என்பது புரியாத புதிராக இருக்கின்றது. 2018 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள். அவர் தன்னுடைய கேள்விக்குறி என்ற நூலில் குறிப்பிடுகின்ற ஒரு சொற்றொடர் “சொல் என்பது செயலுக்கு விதை” என்பதாகும்.
இதை எப்படிப் புரிந்துகொள்வது? எடுத்துக்காட்டாக ஒருவன் ‘இதைச் செய்கிறேன்” என்று சொன்னால், அதில் அந்த செயலைச் செய்து முடிப்பதற்கான கூறானது அல்லது விதையானது ஒளிந்திருக்கின்றது. சொன்னதை நிறைவேற்றாமல் போகிறபோது அவன் மற்றவரை ஏமாற்றுவதோடு மட்டுமல்லாமல், தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கிறான் என்பதுதான் அர்த்தமாக இருக்கின்றது.
அடுத்ததாக, ஒருவர் மற்றவருக்குக் கொடுத்த வாக்கினைக் கடைப்பிடித்து நடக்கின்றது. என்ன நடக்கின்றது என்றால், அவர்மீது மற்றவருக்கு மதிப்பும் மரியாதையும் நம்பிக்கையும் உண்டாகின்றது. அதுவே அவரை உயர்ந்த நிலைக்குக் கொண்டுபோய் விடுகின்றது. ‘இவர் சொன்னால் செய்திடுவார். ஆகவே, இவரை நம்பி எந்தவொரு காரியத்திலும் நாம் இறங்கலாம்” என்று என்றைக்கு மற்றவர் நம்மைப் பார்த்துச் சொல்கின்ற நிலை வருகின்றதோ, அன்றைக்கு நாம் உயர்ந்த நிலையை அடைந்துவிட்டோம் என்று நினைத்துக்கொள்ளலாம்.
செவ்விந்தியர்களிடம் இருக்கின்ற ஒரு வழக்கம். அவர்கள் வேட்டைக்குச் செல்கின்றபோது தங்களோடு எடுத்துச் செல்கின்ற அம்புகளை எக்காரணத்தைக் கொண்டும் கீழே தவறவிட்டுவிட மாட்டார்கள். அப்படியே அவர்கள் தவறவிட்டுவிட்டால், அவற்றை எடுக்கும் வரை அவர்கள் வீடு திரும்ப மாட்டார்கள். அதற்குக் காரணம் தவறவிடப்பட்ட அம்புகள் யாருடைய கையிலாவது மாட்டி, பின்னர் அந்த அம்புகளைத் தவறவிட்ட மனிதருக்கு ஆபத்தாய் அமைந்துவிடும் என்பதால், அப்படியொரு வழக்கம் அந்த மக்களிடத்தில் இருக்கின்றது.
ஆனால், அம்புகளை விடவும் பேசிய வார்த்தைகள் மிகவும் வல்லமை வாய்ந்தவை. அப்படிப்பட்ட வார்த்தைகளை நாம் கவனமில்லாமல் உபயோகித்தாலோ அல்லது அவற்றைக் கடைப்பிடிக்காது போனாலோ அது நமக்குப் பேரிழப்பை ஏற்படுத்தும் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது.
ஒரு பழங்குடி இனத்தைச் சார்ந்த இளைஞனுக்கு மலையேறுவதில் அவ்வளவு ஈடுபாடு. எவ்வளவு பெரிய செங்குத்துப் பாறையிலும் அவன் மிக எளிதாக ஏறிவிடுவான். ஒருநாள் அவன் ஒரு செங்குத்துப் பாறையில் ஏறத் தொடங்கினான். அப்பாறை ஏறுவதற்கு மிகக் கடினமாகவும் சரியான பிடிமானங்கள் இல்லாமல் இருந்தது. அப்படியிருந்தும் அவன் மிகவும் கஷ்டப்பட்டு பாறையின்மீது ஏறி உச்சியை அடைந்தான். அங்கிருந்து அவன் கீழே பார்த்தபோது அது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
ஒருசில மணிநேரங்கள் மேலிருந்து இயற்கையின் அழகைக் கண்டு இரசித்துவிட்டு, நேரமானதும் கீழே இறங்கிவரத் தொடங்கினான். அப்போது அவனுடைய காதுகளுக்கு வித்தியாசமான ஒரு சத்தம் கேட்டது. என்ன சத்தம், அது எங்கிருந்து வருகிறது என்று அவன் திரும்பிப் பார்த்தான். அவனுக்குப் பின்னால் இருந்த புதரில் நல்ல பாம்பொன்று மிகவும் வாடி வதங்கிப் போயிருந்தது. அது அவனிடம், “எனக்கு ஓர் உதவி செய்வாயா... என்னால் இங்கே உயிர்வாழ முடியாது... அதனால் நீ என்னைத் தயவுசெய்து கீழே விட்டுவிட முடியுமா?... நான் உனக்கு எந்தவொரு தீங்கும் செய்யமாட்டேன்” என்று கெஞ்சிக் கேட்டது. அவனோ, “உன்னை நம்ப முடியாது... ஏனென்றால் நீ அவ்வளவு பொல்லாதவன். என் இனத்தைச் சார்ந்த பலரையும் நீ கடித்து கொன்றிருக்கிறாய். அப்படியிருக்கும் உனக்கு நான் எப்படி உதவி செய்வது?” என்று அதனை விட்டு கொஞ்சம் தள்ளிவந்தான்.
பாம்போ விடாமல் அவனிடம் “அப்படியெல்லாம் செய்யமாட்டேன். என்னை நம்பு” என்று அவனைக் கெஞ்சியது. இதனால் இளைஞன் அந்தப் பாம்பின்மீது மீது பரிவுகொண்டு, அதனைத் தன்னுடைய கழுத்தின்மீது தொங்கப் போட்டுக்கொண்டு மிகப் பத்திரமாகக் கீழே இறங்கினான். அவன் கீழே இறங்கி பாம்பைத் தரையில் விட்டதுதான் தாமதம், அது அவனுடைய பின்னங்காலைக் கடித்து விட்டுப் புதருக்குள் ஓடியது. அவன் வலிதாங்கமுடியால், “அட அற்பப் பதரே! கடிக்க மாட்டேன் என்று வாக்குறுதி தந்துவிட்டு, இப்போது எதற்கு என்னைக் கடித்துவிட்டு ஓடுகிறாய்?” என்று கத்தினான். “ஆங்... சொன்ன வார்த்தையைக் கடைபிடிப்பதற்கு நான் என்ன கடவுளா” என்று சொல்லிக்கொண்டு ஓடி ஒழிந்தது. இளைஞனோ சிறுதுநேரத்தில் விஷம் தலைக்கேறி இறந்துபோனான்.
விஷயம் அறிந்த அந்தப் பழங்குடி மக்கள் பாம்பை எங்கே கண்டாலும் அடிக்கத் தொடங்கினார்கள். அது மட்டுமல்லாமல், தங்களுடைய பிள்ளைகளிடமும் பாம்பைக் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று சொல்லி வருகிறார்கள்.
சொன்ன வாக்கைக் கடைப்பிடிக்காமல், அதற்கு எதிராகச் செயல்பட்டதால் பாம்பைக் குறித்து பல்வேறு இனக்குழுக்களிடமும் ஒருவிதமான அச்ச உணர்வு இருக்கின்றது.
நம்மைக் குறித்து அச்ச உணர்வு வரக்கூடாது, மாறாக மதிப்பும் மரியாதையும் நம்பிக்கையும் வரவேண்டும். அதற்கு நாம் சொன்ன வாக்கைக் கடைப்பிடித்து வாழவேண்டும். ஆகவே, நம்முடைய வாழ்வில் நாம் பிறருக்குக் கொடுத்த வாக்கினைக் கடைப்பிடித்து வாழக் கற்றுக்கொள்வோம். அதன்வழியாக வையத்துள் வாழ்வாங்கு வாழ்வோம்.

Comment