No icon

எண்ணம் போல் வாழ்க்கை

மனவலிமை கொள்

உங்களுக்கு முன்பாக ஒரு பிரச்சினை இருக்கின்றது. அப்பிரச்சினையைக் கண்டு நீங்கள் ஓடி ஒளிவீர்களா? இல்லை ‘நடப்பது நடக்கட்டும் ஒரு கை பார்த்துவிடுவோம்’ என்று அதை எதிர்கொண்டு நிற்பீர்களா?... பிரச்சினையைக் கண்டு ஓடி ஒளிவீர்கள் என்றால், நீங்கள் கோழை; இந்த உலகம் உங்களை ‘ஒன்றுக்கும் உதவாதவன்’ என்று முத்திரை குத்தும். மாறாக, நீங்கள் உங்களுக்கு முன்பாக இருக்கும் பிரச்சினையை என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று எதிர்கொண்டு நிற்பீர்கள் என்றால், நீங்கள் வெற்றியாளராகத் திகழ்வீர்கள்; இந்த உலகம் உங்களை உச்சி முகர்ந்து கொண்டாடும். 
இப்படித் தனக்கு முன்பாக இருந்த பிரச்சினையைக் கண்டு ஓடி ஒளிந்துகொள்ளாமல், அதை மனவுறுதியோடும் மனவலிமையோடும் எதிர்கொண்ட ஒருவரைக் குறித்து தான் இப்போது நாம் தெரிந்து கொள்ளப்போகிறோம்.
ஒருகாலத்தில் நாடோடிகளாக, மேய்ச்சல் நிலம் எங்கெல்லாம் இருக்கின்றதோ, அங்கெல்லாம் தங்களுடைய குடிகளை அமர்த்தி வாழ்ந்து வந்தவர்கள் மங்கோலியர்கள். இவர்களுக்குள் பல இனக்குழுக்கள் உண்டு. இவற்றுக்குள் ஓயாமல் சண்டை நடந்துகொண்டே இருக்கும். இந்தக் குழுக்களில் இருந்த ஒரு குழுவிற்குத் தலைவனாக இருந்தவர் டெமுஜினின் தந்தை. இந்த டெமுஜின் யார் என்று உங்களுக்கு போகப் போகத் தெரியும். டெமுஜினின் தந்தைக்கு ஒருசிலர் விஷம் வைத்துக் கொன்றுவிட, அடுத்து அந்த இனத்திற்கு யார் தலைவனாவது என்ற ஒருவிதமான குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது. ஏனென்றால், டெமுஜினுக்கு அப்போது வயது வெறும் 13 தான்.
‘பதிமூன்று வயதே நிரம்பிய ஒருவரை ஓர் இனத்திற்குத் தலைவனாக எப்படி நியமிப்பது?’ என்று எல்லாரும் பேசிக்கொண்டிருந்த   தருணத் தில், டெமுஜின், “என்னுடைய வயதைக் குறித்து ஏன் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? என் இனத்தை நான் முன்னின்று வழி நடத்துகிறேன்” என்று தீர்க்கமாகச் சொன்னான். அவனுடைய பேச்சைக் கேட்டு எல்லாரும் மிரண்டு போய் நின்றார்கள்.
டெமுஜின் இப்படிப் பேசியதற்கு அவனுடைய தாய் ஹோலுன்தான் காரணமாக இருந்தார். ஏனென்றால், அவர்தான் டெமுஜினிடம், “எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் யாருக்கும் அஞ்சாதே. மனவலிமையோடு செயல்படு” என்று அவனை உற்சாகப்படுத்தி வளர்த்தெடுத்து வந்தார். டெமுஜினின் தந்தையோ, எப்போதும் தன் இனத்தை எப்படியெல்லாம் வழிநடத்துவது என்பது பற்றி நினைத்துக்கொண்டிருக்கும்போது, டெமுஜினின் தாயார்தான் தன் மகனை எப்படியெல்லாம் (மன) வலிமைமிக்க வீரனாக, தலைவனாக உருவாக்குவது என்பது பற்றி நினைத்துக்கொண்டிருந்தார். அதனால் அவர் தன் மகனுக்கு நான்கு வயதிலிருந்தே குதிரைச் சவாரி செய்தல், அம்பு எய்தல், வாள் சண்டை போடுதல் போன்ற பலவற்றைக் கற்றுக்கொடுத்தார். இதனால் டெமுஜின் நாளொரு மேனியாய், பொழுதொரு வண்ணமாய் வலிமைமிக்க ஒரு வீரனாய் உருவாகி வந்தான்.
டெமுஜின் வளர்ந்து வரும்போது ஜமுக்கா என்றொரு ‘நல்ல நண்பன்’ கிடைத்தான். இந்த ஜமுக்காவும் டெமுஜினும் பல விஷயங்களைக் குறித்துப் பேசினார்கள். குறிப்பாக ‘பல்வேறு இனக்குழுக்களாகப் பிரித்து கிடக்கின்ற மங்கோலியர் களை ‘மங்கோலியர்கள்’ என்ற ஒரே குடைக்குள் கொண்டுவந்தால் எப்படி இருக்கும்? அப்படி மங்கோலியர்கள் இனம் உருவானால், அது இந்த உலகத்தில் வலிமைமிக்க ஓர் இனமாக இருக்கும்’ என்றெல்லாம் பேசினார்கள். இவ்வாறு அவர்கள் பேசியதோடு மட்டுமல்லாமல், எல்லா இனக் குழுக்களையும் ஒரே குடைக்குள் கொண்டுவர கடுமையாக உழைத்தார்கள்.  
எல்லாம் கனிந்து வந்த நேரத்தில் டெமுஜினுக்கு உயிருக்கு உயிரான நண்பனாக இருந்த ஜமுக்கா ‘எல்லாரையும் உள்ளடக்கிய மங்கோலிய இனம் உருவானால், அதற்கு நான்தான் தலைவனாக இருப்பேன்’ என்று டெமுஜினுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினான். இதனால் இருவருக்குள்ளும் விரிசல் ஏற்பட்டது. விரிசல் பெரிதாகி மங்கோலியர்களின் தலைவர் பொறுப்புக்குப் போர் மூளும் அபாயம் ஏற்பட்டது.
1204 ஆம் ஆண்டு, ஜமுக்கா தன்னோடு பெரும்படையைத் திரட்டிக்கொண்டு டெமுஜினுக்கு எதிராகப் போர்த் தொடுக்கக் கிளம்பி வந்தான். டெமுஜினும் தன்னோடு ஒரு படையைத் திரட்டிக் கொண்டு போருக்குத் தயாரானான். அது அமாவாசை இரவு. டெமுஜினின் படையும் ஜமுக்காவின் படையும் எதிரெதிர் மலையில் நெருப்பு மூட்டி குளிர்காய்ந்து கொண்டிருந்தன. இதற்கிடையில் டெமுஜின் அனுப்பி வைத்த ஒற்றர்கள் ஜமுக்காவின் படையைப் பார்த்துவிட்டு, “தலைவரே! ஜமுக்காவின் படை, நம்முடைய படையை விட நான்கு மடங்கு பெரிதாக இருக் கின்றது. ஆகவே, அவனோடு போர்த் தொடுப் பதை விட்டுவிட்டு ஊருக்குக் கிளம்பிப் போவது நல்லது” என்றார்கள்.
ஒற்றர்கள் சொன்னதைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட டெமுஜின் படைவீரர்களிடம், “வீரர்களே! இப்போது நான் உங்களுக்குச் சொல்வதை நீங்கள் அப்படியே செய்தால், நம்முடைய எதிரியை நாம் ஓட ஓட விரட்டியடிக்கலாம்” என்றார். படை வீரர்களும், “சொல்லுங்கள் தலைவா” என்று அவர் சொல்வதைக் கேட்கத் தயாரானார்கள். டெமுஜின் அந்த அமாவாசை இரவில், கடுங்குளிர் வேளையில் படைவீரர்களிடத்தில் நம்பிக்கை நிறைந்த வார்த்தை களோடு பேசத் தொடங்கினார். “வீரர்களே! கடுமையாகக் குளிரடித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், நீங்கள் அனைவரும் நெருப்பு மூட்டி ஐவர் ஐவராகக் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறீர்கள்... இப்போது நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ஓர் ஆள்  ஐந்து இடங்களில் நெருப்பு மூட்டிக் குளிர் காயவேண்டும்... இதைத் தவிர வேறெதுவும் செய்யவேண்டாம்” என்றார். 
டெமுஜின் தங்களுக்கு இட்ட கட்டளைக்கு இணங்கி அவர்கள் இருந்த கென்டீ என்ற மலையில், ஒருவர் ஐந்து இடங்களில் நெருப்பு மூட்டி குளிர்காயத் தொடங்கினார்கள். இதனால் கென்டீ மலையே நெருப்புச் சூழ்ந்திருப்பது போன்று இருந்தது. இதை அடுத்த மலையிலிருந்து பார்த்த ஜமுக்காவின் படையினருக்கு ‘அல்லு’விடத் தொடங்கியது. ‘நம்முடைய படையைவிட டெமுஜினின் படை மிகப் பெரியதாக இருக்கிறதே... இப்படையோடு நாம் போரிட்டால் அவ்வளவுதான், நாம் இருந்த இடம் தெரியாமல் போய்விடுவோம்’ என்று ஜமுக்காவின் படை ‘துண்டக் காணோம், துணியக் காணோம்’ என ஓடத் தொடங்கியது. இதனால் டெமுஜின் ஒருங்கிணைந்த மங்கோலிய இனத்திற்குத் தலைவரானார். 
தனக்கு முன்பாக இருந்த மிகப் பெரிய சவாலை, பிரச்சினையைக் கண்டு டெமுஜின் பயந்து ஓடவில்லை. மாறாக தன்னுடைய தாய் தனக்குக் கற்றுக்கொடுத்த தாரக மந்திரமான, “எப்போதும் எதற்கும் பயப்படாதே, மனவலிமையோடு செயல்படு" என்பதைச் செயல்படுத்தினார். அதனால்
மிகப்பெரிய வெற்றியும் பெற்றான். இப்படித் தனக்கு முன்பாக இருந்த பிரச்சினையை மனவலிமையோடு எதிர்கொண்டு, எதிரிகளை ஓட ஓட விரட்டிய அந்த டெமுஜின் யாரென்று நினைக்கிறீர்கள்? வேறு யாருமல்ல, செங்கிஸ்கான் என்ற மாபெரும் வீரர்தான். 
செங்கிஸ்கானைப் பற்றி வரலாறு நெடுகிலும்
அவன் இரத்த வெறிபிடித்த காட்டேரி, போர்ப் பித்தன், கொடுங்கோலன், இரக்கமில்லாதவன் என்று
சொல்லப்பட்டிருக்கும். நாமும்கூட கேள்விப் பட்டிருப்போம். ஆனால்,
அவனிடத் தில் இருந்த மனவலிமையோடு செயல்படக் கூடிய ஒரு பண்பு, நாம் நமது வாழ்விற்கு கற்றுக்கொள்ள வேண்டிய
ஒரு பாடமாகவும் இருக்கின்றது.
‘மனவலிமை கொள்’ இது எண்ணம் போல் வாழ்க்கை வாழ விரும்பும் ஒவ்வொருவருக்கும் தேவை யான ஒரு பண்பாக இருக்கின்றது. இன்றைய சூழலில், பலருக்குத்
தங்களுடைய வாழ்வில் வரக்கூடிய
பிரச்சினைகளை எதிர்கொள்வதற் கான திராணியோ, தைரியமோ, மனவலிமையோ இல்லை. ‘இவ்வளவு
பெரிய பிரச்சினையை நான் எப்படி எதிர்கொள்வது?’
என்று அதைக்கண்டு ஓடி ஒளிந்துகொள்கின்ற மனிதர்களைத்தான்பார்க்க முடிகின்றது. ஆனால்,
யார்யாரெல்லாம் பிரச்சினைகளை  மனவலிமை யோடு எதிர் கொள்கின்றார்களோ, அவர்களெல்லாம் வரலாற்றில் நிலைத்திருக்கிறார்கள். இது யாராலும் மறுக்கமுடியாத உண்மை. 
சிட்னி ஸ்மித் என்ற எழுத்தாளர் சொல்வார், “சிறிதளவு மன தைரியம், மனவலிமை இல்லாத காரணத்தால் பெரிய அளவு திறமைகள் வீணா கின்றன. கோழைத்தனம் என்பது ஒருவருடைய எல்லா முயற்சிகளையும் முறியடித்து அவருடைய அனைத்துத்  திறமைகளையும் குழி தோண்டிப் புதைத்துவிடும்”. எவ்வளவு அர்த்தம் நிறைந்த வார்த்தைகள் இவை. மனவலிமை நம்மை மகுடம் சூட்ட வைக்கும் என்றால், கோழைத்தனம் நம்மை மண்ணுக்குள் புதைத்துவிடும். ஆகையால், கோழைத்தனத்தை அகற்றிவிட்டு, மனவலிமை யோடு வாழ்வது சிறப்பானது.
இறுதியாக ஒரு சிறு நிகழ்வு. நகர்புறத்தில் ஓர் உயர்நிலைப்பள்ளியில் அன்பு, செல்வன் என்ற நண்பர்கள் இருவர் முறையே எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு ஆசிரியர்களாகப் பணியாற்றி வந்தார்கள். இதில் செல்வனுக்கு ஒவ்வோர் ஆண்டும் பள்ளிக்கூடம் தொடங்கிய ஒருசில மாதங்கள் மிகவும் பயமாக இருக்கும். ‘புதிதாக வந்திருக்கின்ற மாணவர்களை எப்படி எதிர்கொள்வது? அவர்களுக்கு எப்படிப் பாடம் சொல்லிக்கொடுப்பது?’ என்று பயந்து நடுங்கினார்.
ஆனால், ஆசிரியர் அன்பு அப்படியில்லை. அவர் மாணவர்களை மிகத் தைரியமாக எதிர் கொண்டார்; அவர்களுக்கு நம்பிக்கையோடு பாடம்
எடுத்தார். இப்படியே ஒரு சில ஆண்டுகள் ஓடின. ஒரு கட்டத்தில் ஆசிரியர் செல்வன் மாணவர்களை எதிர்கொள்ளத் திராணியில்லாமல் பள்ளியிலிருந்தே விலகிவிட்டார். ஆனால், ஆசிரியர் அன்போ
நம்பிக்கையோடும் மனவலிமையோடும் மாணவர் களையும் பாடத்தையும் கையாண்டதால், அவர் அந்தப் பள்ளியிலே சிறந்ததோர் ஆசிரியராக உருவெடுத்தார். 
நமக்கு வரும் பிரச்சினைகளை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே நம்முடைய வாழ்வும் தாழ்வும் இருக்கின்றது.
பிரச்சினைகளை மனவலிமை யோடு எதிர்கொண்டால் செங்கிஸ் கான் போன்று, ஆசிரியர் அன்பு போன்று, வாழ்வில் உயர்ந்த இடத்தை அடைவோம் என்பது உறுதி. ஆகவே, எண்ணம் போல் வாழ்க்கை வாழ விரும்பும் நாம், மன வலிமையோடு வாழ்க்கையை எதிர்கொள்வோம். அதன்வழியாக வையத்துள் வாழ்வாங்கு வாழ்வோம்.

Comment