திருத்தந்தை
ஐரோப்பாவின் புதியதொரு முகத்தை உலகிற்கு வழங்குங்கள்
- Author திருத்தந்தை பிரான்சிஸ் --
- Friday, 15 Jul, 2022
அனைத்து மக்களையும் உள்ளடக்கியுள்ள, மற்றும், வன்முறையைக் கொணரும் உலகெங்கும் இடம்பெற்றுவரும் அறிவற்ற போர்களைப் புறக்கணிக்க அஞ்சாத, ஒரு ஐரோப்பாவின் புதிய முகத்தை உலகுக்கு வழங்குங்கள் என்று, ஐரோப்பிய இளையோரிடம் திருத்தந்தை பிரான்சிஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
செக் குடியரசின் பிராக் நகரில், நுரு எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இளையோருக்கு ஜூலை 11, இத்திங்களன்று துவங்கியுள்ள மூன்று நாள் கருத்தரங்கிற்கு அனுப்பியுள்ள செய்தியில், இவ்வாறு இளையோருக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்புவிடுத்துள்ளார்.
சிறந்ததோர் உலகை உருவாக்க இளையோருக்கு கற்றுக்கொடுத்தல் என்ற தலைப்பில் தன் செய்தியை வழங்கியுள்ள திருத்தந்தை, 2019ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்ட கல்வி குறித்த உலகளாவிய ஒப்பந்தம், உடன்பிறந்த உணர்வில், இளைய தலைமுறைகளைப் பயிற்றுவிக்க கல்வியாளர்களை எவ்வாறு ஊக்குவிக்கின்றது என்பதை எடுத்துரைத்துள்ளார்.
ஐரோப்பாவின் புதிய முகம்
சிறந்த ஓர் உலகை உருவாக்குவதற்கு ஒரு வழியாக, உடன்பிறந்த உணர்வு இருக்கின்றது எனவும் கூறியுள்ள திருத்தந்தை, ஐரோப்பிய இளையோர், எப்போதும் மற்றவருக்கு உதவவும், அவர்களை வரவேற்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் சிறப்பாகப் பணியாற்றுமாறும் அழைப்புவிடுத்தார்.
2015ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட, இறைவா உமக்கே புகழ் அதாவது லவுடாட்டோ சி திருமடலை வாசித்து, சுற்றுச்சூழலைப் பாதுகாக்குமாறு வலியுறுத்திக் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆடம்பர வாழ்வு முன்வைக்கும் குரல்களில் மயங்கிவிடாமல் இருக்குமாறும், இளையோரைக் கேட்டுக்கொண்டார்.
ஐரோப்பிய இளையோரின் முன்னோர்கள், கடந்த காலத்தில் மற்ற கண்டங்களுக்குச் சென்றபோது, சிறந்த எண்ணங்களோடு எப்போதும் செல்லவில்லை என்பதால், இப்போது ஐரோப்பிய இளையோர், ஐரோப்பாவின் புதியதொரு முகத்தை உலகிற்கு வழங்கவேண்டிய ஒரு முக்கியமான பணியைக் கொண்டிருக்கின்றனர் எனவும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.
அறிவற்ற போர்களைப் புறக்கணிக்கவேண்டும்
அறிவற்றதனமாக நடத்தப்படும் போர்களை, மனச்சான்றின்படி புறக்கணிக்குமாறும், தற்போது பயங்கரமாக இடம்பெற்றுவரும் போரை முடிவுக்குக்கொணர அனைவரும் அர்ப்பணிக்க வேண்டும் என்றும், வழக்கம்போல, இப்போரையும் சில சக்திமிக்க மனிதர்களே தீர்மானிக்கின்றனர், இப்போருக்கு ஆயிரக்கணக்கான இளையோர் அனுப்பப்படுகின்றனர் மற்றும், இறக்கின்றனர் என்றும் திருத்தந்தை கவலை தெரிவித்துள்ளார்.
இரண்டாம் உலகப் போரின்போது நாத்சி கொள்கைகளுக்கு எதிராகப் போரிட்ட இளைஞர் அருளாளர் பிரான்ஸ் யேகர்ஸ்டேட்டர் அவர்களின் முன்மாதிரிகையைப் பின்பற்றுமாறும், ஐரோப்பிய இளையோரை திருத்தந்தை பிரான்சிஸ் கேட்டுக்கொண்டுள்ளார்,.
Comment