No icon

இலங்கைத் தலத்திரு அவையின் ஆதங்கம்!

இலங்கையில் 2019-ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 21-ஆம் தேதி உயிர்ப்பு ஞாயிறு அன்று நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 279 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 500-க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். இந்நிகழ்வு நடந்து 5 ஆண்டுகள் நிறைவுற்றுள்ளன. இத்துயர நிகழ்வை நினைவுகூரும் வண்ணமாகக் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோணியார் திருத்தலத்தில் ஏப்ரல் 21-ஆம் தேதி இலங்கைக் கத்தோலிக்கத் தலத் திரு அவைத் தலைவர்கள், கொழும்புப் பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் தலைமையில் நினைவேந்தல் கூட்டம் ஒன்றை நடத்தினர். இந்நிகழ்வில் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், அருள்பணியாளர்கள் மற்றும் இருபால் துறவு சபைகளின்  தலைவர்கள் கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி இறைவேண்டல் செய்தனர். இந்நிகழ்வுக்கு எந்தவோர் அரசியல் தலைவர்களும் அழைக்கப்படவில்லை. இந்நிகழ்வு குறித்துக் கொழும்புப் பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள், “விரல் நீட்டுவதன் வழியாக அல்ல; உண்மையைக் கண்டறிவதன் வழியாக மட்டுமே இந்த நாடு குணமடையத் தொடங்கும்என்றும், “இந்த அரசியல் நாடகத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நேரம் இதுஎன்றும் கூறினார். மேலும், “உண்மையும், நீதியும் தூக்கி எறியப்பட வேண்டிய விளையாட்டுப் பொருள்கள் அல்லஎன்றும், “இரப்பர் பந்தை எப்படி நீருக்கடியில் எப்போதும் அமிழ்த்தி வைக்க முடியாதோ, அவ்வாறே நீதியையும் மறைத்து வைக்க முடியாதுஎன்றும் தெரிவித்தார்.

Comment