கர்தினால் இரஞ்சித் கடும் எதிர்ப்பு
இலங்கையில் 2019-ஆம் ஆண்டு உயிர்ப்பு ஞாயிறு அன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரி தேஷ்பந்து தென்னகோனை அந்நாட்டின் உயர்மட்டக் காவல்துறை அதிகாரியாக நியமித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நீதிமன்றத்தில் மனு ஒன்றைக் கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் தாக்கல் செய்துள்ளார். 2019-ஆம் ஆண்டு நிகழ்ந்த இக்குண்டு வெடிப்புகளை விசாரித்த அரசுத் தலைவரின் விசாரணை ஆணைக்குழு, குண்டுவெடிப்புகளைத் தடுக்கத் தென்னகோன் தவறியதாக அவர்மீது குற்றம்சாட்டியது. இந்நிலையில் 2023-ஆம் ஆண்டு நவம்பர் 29-ஆம் தேதியன்று அரசுத் தலைவர் விக்கிரமசிங், தென்னகோனை பொறுப்புக் காவல்துறைத் தலைவராகப் பதவி உயர்த்தினார். கர்தினால் இரஞ்சித், CPA எனப்படும் ஒரு பொதுக் கொள்கை ஆய்வுக் குழுவுடன் இணைந்து இந்த மனுவை உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில் இந்த நியமனம் சட்டவிரோதமானது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் 2019-ஆம் ஆண்டு மூன்று கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மூன்று சொகுசு உணவு விடுதிகளில் ஒரே நேரத்தில் குண்டு வெடித்ததில் வெளிநாட்டினர் உள்பட 273 பேர் கொல்லப்பட்டனர், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comment