கல்விப்பணி
கல்வியாளர்களே! செவிசாயுங்கள்!
கத்தோலிக்க திரு அவையின் பல்வேறு பணிகளில் முதன்மையானது கல்விப்பணி. அந்த கல்வியைக் கற்க வரும் குழந்தைகள் தங்கள் குரலை வெளிப்படுத்த உதவும் இடமாக அல்லது அவர்களது குரலுக்கு செவி சாய்க்கும் இடமாக நமது கல்விக் கூடங்கள் இருக்கிறதா என்று இணைந்து பயணிக்க துடிக்கும் திரு அவை சிந்திக்க வேண்டும்.
அதிலும் குறிப்பாக, இணைந்து பயணிப்பதில் “செவிசாய்த்தல்” முதன்மையான செயலாக இருப்பதால் நமது கல்விப்பணியிலும், செவிசாய்க்க வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவையாகிறது.
‘கல்வியாளர்களே! செவிசாயுங்கள்!’ என்கிற இந்த கோரிக்கை குழந்தைகளுக்கானது. இந்த கோரிக்கைக்கு செவிமடுப்பது, இணைந்து பயணிக்கும் இன்றைய திரு அவைக்கு வழிகாட்டும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் விருப்பத்தினை நிறைவேற்றுவது போன்றது.
கல்வியாளர்கள் குழந்தைகளின் குரலுக்கு முழுவதுமாக செவிசாய்க்க முடியாது போனாலும் கீழ்கண்ட மூன்று முதன்மை கோரிக்கைகளுக்கு மட்டுமாவது செவிசாய்க்க வேண்டும்.
1) வகுப்பறை ஜனநாயகம்
தான் நினைக்கும் கருத்தை எவ்வித தடையுமின்றி வெளிப்படுத்தவும், பிறர் கருத்திற்கு கவனமுடன் செவிசாய்க்க வாய்ப்பு பெறுவதுமே ஜனநாயகம்.
ஒரு குழந்தை தன் வகுப்பறையில் அந்த வாய்ப்பை பெறுவதே வகுப்பறை ஜனநாயகம்.
வகுப்பறைக்குள் வந்ததும் ஒரு குழந்தையை வாயை மூடு (Shut up)... பேசாதே (Don’t talk)... என்பது அந்த குழந்தையின் ஜனநாயகத்தை முறிப்பது போன்றது.
ஒழுக்கம் என்கிற பெயரில் இன்று நமது வகுப்பறைகளில் மிக அதிகமாக காணப்படும் இந்த அடக்குமுறை, ஆதிக்கப்போக்கு நிறுத்தப்பட்டு ஆக்கமுறையில் ஒழுக்கத்தை நிலைநாட்ட கல்வியாளர்கள் செவிசாய்க்க வேண்டும்.
கற்கும் இடமான வகுப்பறையில் ஜனநாயகத்தை பார்க்காத, பழகாத, அனுபவிக்காத குழந்தை, பின்பு தன் வாழ்நாளில் அந்த ஜனநாயகத்தை எங்கே அனுபவிக்க முடியும்? பிறருக்கு எப்படி வழங்க முடியும்? கல்வியாளர்கள் இதனை உணர்ந்து இதற்கு வழிகாட்ட வேண்டும்.
2) கல்வி குறித்த பார்வை
பாடப்புத்தகங்களில் இருப்பதை சொல்லித் தருவதே கல்வி என்கிற கல்விப் பற்றிய நமது தவறான புரிதலே குழந்தைகளை வகுப்பறையில் பேசவிடாமல் தடுப்பதற்கு மற்றுமொரு முக்கிய காரணமாக இருக்கிறது.
குழந்தைகள் பேச வாய்ப்பு கொடுத்துக் கொண்டிருந்தால் நாங்கள் சிலபஸ் முடிக்க முடியாது. எனவே, அதற்கு வாய்ப்பு இல்லை என்று காரணம் காட்டப்படுகிறது.
கல்வி என்பது சொல்லித் தருகிறோம் என்கிற பெயரில், ஆசிரியர் பேசிக்கொண்டே இருக்க மாணவர்கள் அதனை கேட்டுக்கொண்டே இருக்கும் ஒரு வழிப் பாதையால் (one way communication) அமைந்தது அல்ல; மாறாக, கல்வி என்பது கற்றல், கற்பித்தல் என்கிற இருவகை செயல்களால் ஆனது. அந்த கற்றல் என்பது “அது என்ன?” என்று எதையும் தெரிந்துகொள்ள துடிக்கும் மனிதனின் இயல்பை அடிப்படையாகக் கொண்டது. கற்பித்தல் என்பது மனிதரின் அந்த இயல்புக்கு உதவி செய்வது அல்லது தூண்டி விடுவது ஆகும்.
அதாவது “சொல்லித் தருவதல்லக் கல்வி; மாறாக தேடுவதும், கண்டு பிடிப்பதும். கற்றல்; தேடவும், கண்டுபிடிக்கவும் தூண்டுவது கற்பித்தல் ஆகும்” என்கிற புரிதலில் நடப்பதே கல்வியாகும் என்ற உண்மையை உணர்ந்து கொண்ட எவரும் வகுப்பறையில் குழந்தைகள் பேசுவதை தடுக்க முற்படுவதைக் காட்டிலும் அவர்கள் பேச வேண்டும், அதன்மூலம் அவர்கள் கருத்தை அறிய வேண்டும் என்றே விரும்புவர். எனவே, இத்தகைய சூழ்நிலையே ஒவ்வொரு வகுப்பறையிலும் நடைபெற கல்வியாளர்கள் முயற்சி எடுக்க வேண்டும்.
3) எதை தேடுவது? என்பதில் புரிதல்
தேடுவது, கண்டு பிடிப்பது கற்றல் என்பதால் கற்பித்தல் என்கிற பெயரில் எதை எதையோ தேட தூண்டுவது என்றாகிப் போகாமல் ஒரு குழந்தைக்கு உரியதை, உதவுவதை, உகந்ததை தேட தூண்டினால் குழந்தைகள் கவனம் அந்த கற்றலில் முழுமையாக ஈடுபடும்.
அதாவது கல்வியின் நோக்கமான முழு ஆளுமை பெற்ற மனிதனை உருவாக்குவதே கல்வி என்கிற இலக்கின் அடிப்படையில் ஒரு குழந்தை மனிதனாவதற்கு தேவைப்படும் எட்டு வகை வளர்ச்சிக்கு தேவையான விசயத்தை, அறிவை, ஞானத்தை கல்வியாக்கி அவற்றை தேடிக் கண்டுபிடிக்க தூண்டும்போது குழந்தைகளின் கவனம் சிதையாது, சிதறாது. கவனம் முழுவதும் அத்தகைய தேடலில் ஈடுபட்டு கிடக்கிறது. எனவே, இவற்றையே பாடங்களாக கொடுத்து குழந்தைகளை ஈர்க்க கல்வியாளர்கள் முன்முயற்சி எடுக்க வேண்டும்.
இப்படியாக தங்கள் கல்வி குறித்த குழந்தைகளின் குரலுக்கு கல்வியாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஆசிரியர்கள், கல்வி நிறுவன பொறுப்பாளர்கள், பாடநூல் தயாரிப்பாளர்கள் அனைவரும் செவிசாய்ப்பது காலத்தின் கட்டாயம்.
அதிலும் குறிப்பாக, ஏக, பரிசுத்த, அப்போஸ்தலிக்க, கத்தோலிக்க திரு அவையால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களிலாவது குழந்தைகளின் இந்த கோரிக்கைக்கு, குரலுக்கு செவிசாய்க்க வேண்டும்.
இணைந்து பயணிக்கும் திரு அவையின் செவிமடுத்தல் என்பது திரு அவையின் கல்வி நிறுவனங்களிலிருந்து ஆரம்பித்து, பிறருக்கு எடுத்துக்காட்டாக அமைந்து வாழ வேண்டும்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக இன்றைய நமது கல்விப் பணியும் குழந்தைகளை சார்ந்ததாக இல்லாமல் அரசு இயந்திரத்தின் ஏவலாளி செயல்பாடாக மட்டுமே மழுங்கிக் கிடக்கிறது.
ஏறக்குறைய எட்டாயிரத்திற்கும் அதிகமான கல்வி நிறுவனங்களை கொண்டிருக்கும் கத்தோலிக்க திரு அவை தனக்கென தனித்துவ கல்விக் கொள்கை எதுவுமின்றி, பத்தோடு பதினொன்றாக பயணிக்கிறது.
இதனால் “கல்வி வணிகத்தில்” நமது பணியும் கடை சரக்காக கல்லா கட்டுகிறது. இந்த நிலையில் “கல்வியாளர்களே செவிசாயுங்கள்” என்கிற இன்றைய குழந்தைகளின் குரல் இணைந்து பயணிக்கும் திரு அவைக்கு முன்பு உள்ள மற்றும் ஒரு சவால்.
என்ன செய்ய போகிறோம்?
இந்த சின்னஞ்சிறிய குழந்தைகளுக்கு செய்யும் போதெல்லாம் எனக்கே செய்தீர்கள் என்கிற நமது ஆண்டவரின் வழியில் செயல்படப் போகிறோமா? அல்லது ஏழை எளிய மக்களின் கூக்குரல்களையெல்லாம் கண்டுகொள்ளாமல் அம்பானி, அதானி மட்டும் வளர வழி செய்து தம் பதவி சுகத்தை தக்க வைக்கும் மோடி அரசு போல, நாமும் இருக்கப் போகிறோமா?
மக்கள் விழிப்புணர்வு அடைவதற்குள் அவர்களுக்காக செயல்பட வேண்டிய கடமை கத்தோலிக்க திரு அவைக்கும் உண்டு. அது இணைந்து பயணிக்க துடிக்கும் இந்த தருணத்தில் தலை தூக்கட்டும்.
Comment