No icon

தனியே அர்ச்சனை நடத்திய இந்தியப் பிரதமர் மோடி அவர்கள்

‘அடையாளமே’ அரசியல் யுக்தியாய்...

ஒரு நாட்டின் மேன்மை எதில் இருக்கிறது? உலக அளவில் இந்தியக் கொடி பறக்க விடுகையில்தான் இது சாத்தியம். உலகு போற்றும் வகையில் நம் நாடு இத்தகைய பெருமையை எட்டுவதற்கு நம் நாட்டின் கலாச்சார வளத்தை வளர்த்துக் கொள்வதோடு, நமது நாட்டின் தனித்துவ அடையாளத்தில் பூரிப்பும், பெருமையும் கொள்ள வேண்டும்.”

மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனியின் நகரில் பல கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள மகா காளேஸ்வரர் கோயிலில்  தனியே அர்ச்சனை நடத்திய இந்தியப் பிரதமர் மோடி அவர்கள், பூசைக்குப்பின் நிகழ்த்திய உரையில் அருளியவை:

மோடி தன் அருளுரையில், இந்தியப் பெருமையாக இரண்டு அம்சங்களைச் சொல்கிறார்; ஒன்று, இந்தியாவின் கலாச்சார மேன்மை (Cultural excellence) இம்மேன்மையில் நாம் பெருமை கொள்ளும் அடையாளம் (Identity) மோடி அருளிய இம்மறையுரையில் எவ்வித ஒளிவு மறைவும் இல்லை.

இந்துத்துவம் அறிமுகமான காலத்திலிருந்து, இந்துமய நாட்டிற்கு என்ன இலக்கு வகுக்கப்பட்டதோ, அதையே தெளிவாக மீண்டும் மோடி எடுத்து வைக்கிறார். இந்துத்துவத்தின் அடிநாதமாகிய கலாச்சார தேசியம், - இத்தேசியத்தை முன்வைத்து கட்டமைக்கப்படும் இந்திய அடையாளம். தேர்தல், அரசியல் மூலம், நாட்டை தொடர்ந்து ஆள வேண்டும் என்ற எண்ணத்தை உறுதியாகக் கொண்ட மோடி, இந்துத்துவ சித்தாந்தத்தில் எவ்வளவு தெளிவாக இருக்கிறார் என்பதைக் காணுகையில், இந்துத்துவ எதிர்ப்பாளர்களுக்கு கூட இவ்வளவு தெளிவு இல்லையே என்று எண்ணுகையில் கவலை மிஞ்சி நிற்கிறது.

இந்துத்துவ பகை அரசியலை எதிர்கொண்டு வீழ்த்தும் வகையில், மிகப் பெரிய அளவில் பயணத்தை மேற்கொண்டிருக்கும் இளைய தலைவர் இராகுல் காந்தி, இந்துத்துவத்தின் முகமூடியைத் தகர்க்க இச்செய்திகளைச் சொல்லவில்லை.

இந்தியக் கலாச்சாரம் எது? இக்கலாச்சாரத்தின் மேன்மை எங்குள்ளது? எதில் அடக்கம்? மோடி எப்படி எந்த தைரியத்தில் இப்படி பேச முடிகிறது?

இந்து தேசத்தைக் கட்டமைக்க இந்திய தேசியத்தை விலை பேசி விற்றுவிட்டு, பன்மையை ஒதுக்கி, ஒருமையெனும் ஓர்மையை உருவாக்க முயன்று வரும் இந்துத்துவர்களின் வெற்றி எப்படி சாத்தியமாயிற்று?

ஒரு நாட்டின் பிரதமர் சமயசார்பற்ற நாட்டின் பிரதமர் ருத்ராட்சம் அணிந்து, வேத மந்திரங்களை ஓதி, கோயிலை அர்ச்சிப்பதும், இப்போக்கை கேலியாகக்கூட விமர்சிக்க இயலாநிலைக்கு இந்தியக் குடிமக்களாகிய நாம் தள்ளப்பட்டிருக்கும் நிலைக்கும் என்ன காரணம்?

இந்தியா சுதந்திரம் அடைந்த நிலையில், நமக்கென்று ஓர் அடையாளத்தை உருவாக்க, நமக்கென்று ஒரு தேசிய சித்தாந்தத்தை (National philosophy) உருவாக்க, இந்திய அரசியல் நிர்ணய சபை உருவாக்கப்பட்டது. இந்தியச் சமூகத்தின் பன்முகக் குழுக்களின் பிரதிநிதித்துவத்தை பிரதிபலித்த இந்த அவையுள் இந்துத்துவ நாட்டம் கொண்டோரும் இருந்தனர். அவர்களுள் ஒருவர் கே. எம். முன்ஷியும் ஒருவராவார்.

இந்திய அரசியலமைப்பில் இந்தியாவின் சமயங்களின் நிலை என்ன? அரசுக்கும், சமயங்களுக்குமுள்ள தொடர்பு பற்றியெல்லாம் கடுமையான விவாதம் எழுந்தபோது, இந்து தேச ஆதரவாளராக கருதப்பட்ட கே.எம். முன்ஷி முக்கியமான நிலைப்பாட்டை முன்வைக்கிறார். இந்திய அரசியல் நிர்ணயசபையில், சிறுபான்மை கிறிஸ்தவருக்கான தனித் தேர்வை, வேண்டாம் என மறுத்த தந்தை ஜெரோம் சே. அவர்களின் நிலைப்பாட்டை நாம் அறிவோம்.

தனித்தேர்தல் ஒதுக்கீட்டை வழங்கி, கிறிஸ்தவர்களை, நாட்டின் பிற மக்களிடமிருந்து அந்நியப்படுத்திவிட வேண்டாம் என்று உறுதியோடு கேட்ட தந்தையவர்களின் பெருந்தன்மையை, இன்றைய சமயசார்பற்ற சக்திகள் மறந்திருக்கலாம். ஆனால், நாமும் மறந்து போனோமே? எப்படி? முன்ஷி என்ன சொன்னார்?

நம் நாட்டு மக்கள் சமய நம்பிக்கையில் ஊறிப்போனவர்கள். அதேவேளை ஒருவர் சாராத சமயத்தை சகித்துக்கொள்ளும் குணம் கெண்டவர்கள்அனைத்து  சமயங்களும் ஒரே இலக்கைத் தான் நோக்கமாகக் கொண்டவை என்பதை நம்புபவர்கள். இவ்வுண்மையைக் கணக்கில் கொண்டால், அரசுக்கென்று தனி சமயம் இருக்க முடியாது. அதேவேளை அரசுக்கும், சமயத்துக்குமான தொடர்பை அமெரிக்க ஐக்கிய நாடுகள் போல் பிரித்திடவும் முடியாது” (அரசியல் நிர்ணய சபை விவாதம் - 1946).

இன்று முன்ஷியும் இல்லை சாமியார் யோகி  ஆதித்ய நாத்தும், புனிதர் மோடியும் ஆளும் தகைமை பெற்ற நாட்டில் இந்திய அரசியல் சாசனத்தின் உண்மையான உள்ளீடு (Core Value) என்னவானது என்பதை மீண்டும் சொல்வது; சொல்வதை மீண்டும், மீண்டும் சொல்வது பிழையாகாதா?

இந்திய மதச்சார்பின்மை எப்படியெல்லாம் கொச்சைப்படுத்தப்படுகிறது என்பதனை இன்னொரு கட்டுரை மூலம் எழுதித்தருவது இப்போது தேவையில்லா அளவுக்கு வாழ்வாகிப் போய்விட்ட நிலை.

இந்திய நாட்டிற்கான அடையாளத்தை இந்திய நாட்டிற்கான தேசிய தத்துவத்தை திட்டமிட்டுத் மிகத் தெளிவாக உருவாக்கிய பின்பும், இந்தியா எனும் நாட்டின் பன்முகப் பண்பு முழுமையாக அங்கீகரிக்கப்பட்ட பின்பும், இதனை காக்க அரசமைப்பு சட்டமும், அரசமைப்பின் உட்கூறுகளை சேதம் வராமல் காக்கின்ற வகையில் உருவாக்கப்பட்ட நீதித்துறையும், இந்திய அரசு நடைமுறைப்படுத்தி வந்த தாராளமயவாத கொள்கைகளும் ஏன் தோற்றுக்கொண்டே வருகின்றன?

அண்மையில் ஐதராபாத் நகரில் மறைந்த மனித உரிமைப் போராளி பால கோபால் அவர்களின் நினைவுச் சொற்பொழிவில் எழுத்தாளரும், சமூக செயற்பாட்டாளருமான அருந்ததிராய் அவர்களின் உரை நமக்கு பல உண்மைகளை எடுத்தியம்புகின்றன.

இந்தியாவில் பாசிசம் இந்திய படிநிலை அமைப்பை நோக்கி எழும் சவால்களின் வெளியை ஆதாயமாக்கிக் கொண்டு வளர்ந்து வருகிறது. இந்தியாவின் சாதியம் இதனோடு தொடர்புடையது.

கற்பனையான புராணகால வரலாற்றை மீட்டெடுப்பது. ஆளும் வர்க்க துணையோடு மக்கள் அமைப்பை கட்டுவது. அந்நிய நாட்டு அச்சுறுத்தல் இருப்பதாக பூச்சாண்டி காட்டுவது, தனித்த பெரும்பான்மையுடன் கூடிய ஆட்சி, அடிமைத்தனம் நிறைந்த ஊடகங்கள், தெருச்சண்டையிடும் குற்றவாளிக் கும்பல்கள், பெண்களை பாகுபடுத்தும் இயல்பு, ஆணாதிக்கம், சாதியத்தை காக்கும் உள்ளார்ந்த இந்துத்துவ பண்பு என்பனவெல்லாம் பாசிசத்தின் இயல்புகள் என்றால் இவையனைத்தும் இன்றும் நடைமுறையில் உள்ளன.

இன்றைய அரசு முன்னெடுக்கும் அக்னிபாத், இவற்றிலெல்லாம் உச்சம்; இந்த நடவடிக்கை கண்டு கொள்ளாமல் விடப்படுமாயின் எதிர்காலம் இந்துத்துவ மதவாதிகளின் கைகளில் சிக்குவதை தடுக்க முடியாது. இன்றைய ஆட்சியாளர்களின் இப்பாசிசப்போக்கு, கார்ப்பரேட் நிறுவனங்களின் கூட்டில் அரங்கேருகின்றன” (இந்து, அக்டோபர் 10,2022).

அருந்ததிராயின் அண்மைப்பார்வை இந்தியா பாசிச வளர்ச்சியின் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், 1925 இல் உருவான ஆர்.எஸ்.எஸ் அமைப்பும், அதன் கிளை அமைப்புகளும் தாம் மக்கள் விரோதப் பணிகளைச் செய்து வருகின்றன.

இந்துத்துவமும் வகுப்புவாத நச்சும்

இந்துத்துவம் எனும் சித்தாந்தம் வெறுமையில் உருவானதல்ல; இந்துத்துவம் ஒரு சித்தாந்தம் அல்லது கருத்தியல் என்றால் வகுப்புவாதமும் ஒரு கருத்தியலே.

இக்கருத்தியலின் உள்ளடக்கம் அரசியலே. அரசியல் விளையாட்டுதான் வகுப்புவாதம் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வைப்பதுதான் நம்முடைய நோக்கமாக இருத்தல் வேண்டும்.

இந்த அரசியலில் வகுப்புவாத கருத்தியல் இருப்பதால் கருத்தியல் ரீதியாக எதிர்க்காவரை வகுப்புவாத எதிர்ப்பு சாத்தியமாகாது.

இந்தியாவில் அது தோன்றி வளர்ந்து வருகின்ற காலத்திலேயே, இதன் வளர்ச்சியை, வளர்ச்சிக்கான சமூக அரசியல் கலாச்சார காரணங்களை ஆய்வு செய்து வந்த பேராசிரியர் பிபன் சந்திரா அவர்கள், வகுப்புவாத அரசியலை மிகத் தெளிவாகக் கண்காணித்து, மக்களுக்கு சொன்ன விஷயம்தான் நமக்கெல்லாம் தரப்பட்ட பெரிய பாடமாகும்.

வகுப்புவாதக் கருத்தியலை, கருத்தியல் ரீதியாக எதிர்க்காவரை, வகுப்புவாதத்தை முடிவுக்கு கொணரமுடியாது. வகுப்புவாதம் வளர்க்கும் மதவாதத்திற்கு மதவாதம் மருந்தாகாது.

இன்றைய பெரும்பான்மை மதவாதம் மதச் சிறுபான்மையினரை பகை சக்திகளாக கட்டமைத்து அரசியல் செய்து வருகிறது. பெரும்பான்மை மதவாத அரசியலுக்கு மதச் சிறுபான்மையினரின் மதவாதம் மாற்றாகுமா? மதச்சிறுபான்மையினர் வகுப்புவாதிகளின் அரசியலுக்கு, மதவாத அரசியலே மாற்று என வாதிடுவோர் நம்மிடையே நிறைய உண்டு. இப்பொய்மையை உணரவேண்டிய காலமிது.

அடையாள வழி (Symbols)

இவ்வகுப்புவாதம் வெறும் பாடவழி (academic) மட்டுமே மக்களிடம் கொண்டு செல்வதில்லை. இந்துத்துவம் ஒரு அரசியல் கருத்தியலாக வளர்வதற்கு பல்வேறு உத்திகள் கையாளப் பெறுகின்றன. ஏற்கனவே மேலே குறிப்பிட்ட பேராசிரியர் பிபன் சந்திரா, வகுப்புவாத கருத்தியல் பரவலுக்குஅடையாளம் முதன்மையான வழியாகப் பயன்படுத்தப்படுகிறது என்பார்.

மராட்டியத்தில் இந்துக்களை அரசியல் ரீதியாக ஒருங்கிணைக்க விநாயகர் ஊர்வலங்கள் முன்னெடுக்கப்பட்டன. விநாயகர் எனும் அடையாளம் மூலம், சாதாரண மக்கள் அணிதிரட்டப்பட்டனர். இங்கு விநாயகர் அல்லது கணேஷ் சதுர்த்தி வெறும் அடையாளமே.

மிகப்பெரிய தேசியவாதியான திலகர் அவர்கள் இதன் மூலகாரணராக இருந்தார் என்பதுதான் உண்மை. தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பகுதி சார் பிரிவான இந்து முன்னணி, இராம கோபாலன் தலைமையில் அடையாள அரசியலை முன்னெடுத்தது,

வழக்கில் இல்லாதஇந்துஎன்ற சொல்லைக் கூட மிகப்பெரிய அளவில் அடையாளப்படுத்தியதால் சிறு தெய்வ வழிபாட்டையும், நாட்டுப்புற நம்பிக்கைகளையும் மட்டுமே கொண்டிருந்த மக்கள், குறிப்பாக, மக்கள் தங்களையும் இந்துவாக அறிமுகப்படுத்தி வருகின்றனர். ‘இந்துஎன்ற சொல்லை பெருங்கோஷமாக, தவிர்க்க இயலா அடையாளமாகக் கொண்டு வெற்றி பெற்று வரும் காட்சியை நிதர்சனமாக பார்த்து வருகிறோம்.

இந்தியா என்ற ஒரு நிலபரப்பை, பாரத மாதாவாக்கியதும் இந்த அடையாள அரசியல்தான்.

பாரதமாதாவை விமர்சிப்போர் தேசத்துரோகிகள் ஆவதும் இதன் காரணமாகத்தான்.

இந்திய தேசியம் கலாச்சார தேசியமாகவும், இக்கலாச்சார தேசியத்தின் மைய அடையாளமாக இந்து மதமாகக் காட்டப் பெறுதலும் அடையாளமே.

இந்து மதவாதம் தன் உச்ச ஸ்தாதியில் நிகழ்த்திக் காட்டிய மிகப்பெரிய வன்முறையான மசூதி இடிப்புக்கு காரணராக காட்டப்பட்ட இராமன் ஓர் அடையாளம் மட்டுமே!

இராமன் பிறந்த இடம், அதுவும் குறிப்பிட்ட இந்த இடம்தான் என்ற ஐதீகத்தை நம்பவைத்து, மக்களை மலடாக்கிய இராம சென்மபூமியும் அடையாளமே.

இராமருக்கான பிரம்மாண்ட ஆலயமும் அடையாளமே. அவ்வாலயத்துக்கு மட்டுமின்றி, இந்தியா முழுவதும் எழுப்பப்பெற்று வரும் ஆலய குடமுழுக்கை மோடியே முன்னின்று நடத்தி வருவதும் அடையாளமே. தேசம் என்பதும், தேசபக்தி என்பதும், ஒருமை என்பதும் அடையாள அரசியல் மீது கட்டமைக்க பெறும் ஒரு கருவி.

இந்துத்துவ அரசியல், கருத்தியல் இத்தகைய அடையாள அரசியலில் நடைபோடுவதை உன்னிப்பாக கவனிப்போர் அறிவர். திலகர் தோற்றுவித்த கணேஷ் சதுர்த்தி இன்று, சென்னையின் அனைத்து சேரிகளிலும் பரவியுள்ளது. இவ்வடையாளங்கள் அனைத்தும் ஒடுக்கப்பட்ட மக்களின் இதயங்களிலும் அழிக்க இயலா அடையாளமாய் குத்திப் பரவியுள்ளதே யதார்த்தம்.

(தெடாரும்)

Comment