தேடுங்கள் கிடைக்கும் – 35
எல்லா உயிர்க்கும்...
சுந்தர்: ஒரு டாக்குமெண்டரியை பார்த்ததிலிருந்து அசைவம் சாப்பிடுறதுக்கே தயக்கமா இருக்கு.
சத்யா: அப்படி என்ன இருந்துச்சு அதுல?
சுந்தர்: மேலை நாடுகள்ல இறைச்சி தயாரிக்கிற பெரிய பெரிய தொழிற்சாலைகளில் என்ன நடக்குதுன்றதைத் தான் காட்டுறாங்க. ஈவு இரக்கம் இல்லாம ஆடு மாடுகளை ட்ரக்ஸ்ல அடைச்சுக் கொண்டு போகும்போதே அதுங்க கண்கள்ல தெரியுற பயம். ‘ஸ்லாட்டர் ஹவுஸ்’ன்னா என்ன தெரியுமா? அதுகளை கொல்ற இடம்.
சத்யா: கொலைக் களம்.
சுந்தர்: ஆமா. அங்க வந்ததும் அதுங்க கத்துற கதறல். ஈவு இரக்கம் இல்லாம அதுகளை வெட்டிக்கொன்னு...ஐயோ.. பார்த்துட்டு சில நாள் தூக்கமே வரல.
சத்யா: சீனாவில கொரோனா தொடங்கின இடம்னு வூகான்ன்ற ஊர்ல ஒரு சந்தையைக் காட்டினாங்க இல்ல? அந்த சந்தையில என்ன நடக்குதுன்னு காட்டுற ஒரு வீடியோ பார்த்தேன். உயிரோடு இருக்கிற அரிதான காட்டு விலங்குகளோட இறைச்சி விக்குற சந்தை அது. கடைக்காரங்க அந்த விலங்குகளைக் காட்ட, வாடிக்கையாளர்கள் ‘எனக்கு அது வேணும், இது வேணும்’னு சொன்ன பிறகு, அவங்க கண் முன்னாடியே அந்த விலங்குகளைக் கொன்னு... ஐயோ பார்க்க முடியல.
சுந்தர்: நமக்கு பார்க்கவே முடியலையே, அவங்க எப்படி இதை எல்லாம்...
ஆசான்: இவை எந்த மனிதனும் சகிக்கக் கூடாத ஈனக் கொடுமைகள்தான். விலங்குகளை இத்தனை கொடூரமாக அழிக்க மனிதனுக்கு உரிமை தந்தது யார்? ஈவிரக்கமின்றி விலங்குகளை அழிக்கத் தயங்காத மனித மனம் போரில் அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கத் தயங்கவா போகிறது? உண்மையான இரக்கத்தோடு சக மனிதர்களை நடத்தும் மனிதம் வாய்க்கப்பெற்ற யாரும் விலங்குகள், பறவைகள் மீதும் பரிவிரக்கம் காட்டுபவர்களாகவே இருப்பார்கள்.
அசோகமித்திரன் பற்றி கேள்விப்பட்டிருக் கிறீர்களா?
சத்யா: தமிழ்ல பெரும் எழுத்தாளர்கள்ல ஒருத்தர்னு கேள்விப்பட்டிருக்கேன்.
ஆசான்: அசோகமித்திரன் என்பது புனைபெயர். அவரது இயற்பெயர் ஜெகதீச தியாகராஜன். ‘கணையாழி’ எனும் இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்தவர். சாகித்ய அகாடமி விருது உட்பட பல பரிசுகள், விருதுகள் பெற்றவர். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 8 நாவல்கள், 15 குறுநாவல்கள், கட்டுரைகள் என்று நிறைய எழுதியவர். இவருடைய பல கதைகள் ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.
சுந்தர்: அவரோட கதைகள்ல எந்த கதையை சொல்லப் போறீங்க?
ஆசான்: ‘விடிவதற்குள்’ என்பதுதான் கதையின் பெயர். சில ஆண்டுகள் சென்னை போன்ற நகரங்களில் வாழும் மக்கள் தண்ணீருக்குப் படும் பாட்டை துல்லியமாகச் சொல்லுகிற கதை. தூங்கிக்கொண்டிருந்த தன் மகன் முத்துவை எழுப்ப பங்கஜத்திற்கு வேதனையாகத்தான் இருந்தது. வேறு வழி இல்லையே! இனியும் தாமதிக்க முடியாது என்று தீர்மானித்து “முத்து” என்று அழைத்தாள். அயர்ந்து தூங்கிய முத்து கண்விழித்து “இதற்குள்ள தண்ணி வந்திருக்காது” என்றான்.
“வந்துடும் கண்ணா. தெருக்காரா எல்லாம் போய்ட்டா. இப்பவே போனாதான் ரெண்டு மணிக்காவது தண்ணீர் புடிச்சிட்டு வந்து கொஞ்சம் கண் அசரலாம்”.
“நீ போய் பக்கெட்டை வச்சுட்டு வாம்மா. நான் இதோ வந்துடுறேன்” கதவைத் தாளிடாமல் வெறுமனே சாத்திவிட்டு தெருவுக்கு வந்தாள் பங்கஜம். குழாயில் கொஞ்சம் வேகமாகத் தண்ணீர் வந்த அந்த வீட்டு முற்றத்தில் இருந்த குழாய்க்கு முன்னே ஏற்கனவே டஜன் கணக்கில் தவலைகளும் வாளிகளும் இருப்பதைப் பார்த்தாள். அங்கிருந்த நான்கு ஐந்து ஆண்களில் ஒருவர் பங்கஜத்தை பார்த்து, “இனிமே இங்கு வராதீங்கன்னு போன தடவையே சொன்னேனே” என்றார்.
“இன்னிக்கு மட்டும் தயவு பண்ணுங்க. நாளைக்கு வேற இடத்துக்கு போறேன்”.
“இந்த வீட்டில் இருக்கிறவர்களுக்கே தண்ணி பத்தல, சும்மா சும்மா வந்து கூட்டம் கூடினால்?”
பங்கஜம் பதில் சொல்லாமல் நின்றாள்.
“பக்கெட்டை வச்சுட்டு வெளியே நில்லுங்க. தண்ணி வந்தா உள்ள வந்துக்கலாம்.”
பங்கஜம் வாளிகளை ஒரு மூலையில் வைத்துவிட்டு மீண்டும் சாலைக்கு வந்தாள். கிணறுகளில் தண்ணீர் இல்லை. குழாய்த் தண்ணீர் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வருவதாக பேச்சு. ஆனால், வீட்டுக்குழாயில் வராது. அந்த தெருவிலேயே எங்கும் வராது. எங்கே வருகிறது என்று தேடிப்பிடித்து அது வரும் இரண்டு மணி நேரத்தில் பரபரக்க, பலரோடு போட்டி போட்டுக் கொண்டு, தேவையற்ற துவேஷம் வளர்த்து, இரு பாத்திரங்களில் வண்டலும் வடிசலமாக தண்ணீர் பிடித்து எடுத்து வந்தால் இரு நாட்களுக்குச் சமாளிக்கலாம்.
வந்து சேர்ந்த முத்துவைப் பார்த்து, “குழந்தை தூங்கிட்டு இருக்காளா?” என்று கேட்டாள் பங்கஜம்.
“நான் பார்க்கல அம்மா. ஆனால், அவ அழல” என்றான் முத்து.
“கதவை சாத்திட்டுதானே வந்திருக்க?”
“ஆமா”
“நீ இங்கேயே நில்லு. நான் தவலைய எடுத்துண்டு ஐஸ் டிப்போவுல ஒரு தடவை தண்ணி புடிச்சிட்டு வந்துடறேன்”.
ஓட்டமும் நடையுமாக வீட்டிற்கு போனாள் பங்கஜம். குழந்தை சம்பா தரையில் தூங்கிக் கொண்டிருந்தாள். பங்கஜம் அவளை தூக்கவில்லை. படுக்கையில் கிடத்தும்போது குழந்தை விழித்துக்கொண்டால் என்ன செய்வது? தவலையுடன் ஒரு வெண்கலப்பானையும் தூக்கிக்கொண்டு பங்கஜம் மீண்டும் தெருவிற்கு வந்தாள். ‘எதை நம்பி இருட்டில் குழந்தையைத் தனியே விட்டுவிட்டு, வீட்டையும் தாளிடாமல் போகிறோம்?’ என்ற கேள்வி அவளை வதைத்தது.
ஐஸ் டிப்போவில் தண்ணீர் பிடிக்கச் சென்றபோது, அங்கு நின்ற காவல்காரன், “ஏய் எங்க போற?” என்றான். பங்கஜம் இடுப்பிலிருந்து கால் ரூபாய் சில்லறை எடுத்தாள். அதை கவனிக்காதது போல “அவன் இன்னைக்கு யாரையும் உள்ள விட முடியாது. போ! போ!” என்றான். எல்லா வயதுக்கார பெண்களும் அவனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தனர். பங்கஜமும் “இன்னிக்கு ஒரு நாள் மட்டும் தான்” என்றாள். முத்து அவளைத் தேடி வந்தான். “இன்னும் மூணு பேர் புடிச்சப்புறம் நம்ம தாம்மா” என்றான். “நீ இங்க நில்லு. நான் போய் தண்ணி அடிச்சு வச்சுட்டு உன்னை கூப்பிடுறேன்” என்றாள் பங்கஜம்.
முத்துவிடம் தவலையையும் வெண்கலப் பானையையும் ஒப்படைத்துவிட்டு, பங்கஜம் வாளிகளை வைத்திருந்த வீட்டுக்கு விரைந்தாள். அங்கே இப்போது பெரும் கும்பல் சேர்ந்திருந்தது.
“இப்போ வந்துட்டு எங்க உள்ள போற? நாங்க எல்லாம் உனக்கு மனுஷாள்களா தெரியலையா?” என்று சொல்லி தடுக்கப் பார்த்தாள் ஒரு கிழவி.
“பன்னெண்டு மணிக்கே நான் வந்து பாத்திரம் வச்சிருக்கேன்” என்றாள் பங்கஜம்.
வாளிகளை வைத்திருந்த குழாயடிக்கு வந்து அங்கு நின்றவர்களோடு முந்தி அடித்துக் கொண்டு போய் பங்கஜம் தன் முறைக்காகக் காத்திருந்தாள். அவளுக்கு முந்திய இடத்தில் பெரிய பெரிய பாத்திரங்களை வைத்திருந்த பெண் முன்னேறி, பம்ப் அடிக்கத் தொடங்கினாள். ஆனால், இரண்டாவது பாத்திரம் நிரம்புவதற்குள் அந்தப் பெண்ணுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கத் தொடங்கியது. பம்ப் அடித்த கையும் தடுமாறியது.
“நான் அடிக்கிறேன்” என்று சொல்லி பம்ப் பிடியை வாங்கிக்கொண்டு அந்தப் பெண்ணின் பாத்திரங்கள் அனைத்திற்கும் தண்ணீர் அடித்துத் தந்துவிட்டு, தன் வாளியை நகர்த்தி வைத்தாள் பங்கஜம்.
பம்ப்பை அடிக்கத் தொடங்கிய பங்கஜத்தின் தோளே கழன்று விடும்போல் இருந்தது.
இன்னும் மூன்று வாளிகள் அடித்தாக வேண்டும். கொண்டு வந்த எல்லாப் பாத்திரங்களையும் நிறைத்துக்கொண்டு போனாலும், இரண்டாம் நாள் மாலையில் எல்லாம் காலியாகிவிடும். அரிசியைக் களைய முடியாது. யாராவது விருந்தினர் வந்துவிட்டால் முகம் கழுவ ஒரு செம்புத் தண்ணீர் தர முடியாது. துணி துவைத்து உலர்த்த முடியாது.
அவளுக்குத் தெரிந்த தோத்திரங்களை எல்லாம் சொல்லிக்கொண்டு பங்கஜம் பம்ப்பை அடித்தாள். அம்மா என்று கத்தி அழைக்கக் கூட முடியாது என்று தோன்றும் அளவுக்கு களைப்பு மேலிட்டது. மூன்றாவது வாளி அடிக்கும் போது முத்து வந்துவிட்டான். ஐஸ் டிப்போவில் என்ன ஆயிற்று என்று கேட்கக்கூட முடியாமல், முத்துவிடம் பம்ப் பிடியைக் கொடுத்தாள்.
அவன் ஒரு கையால் அடிக்க முடியாமல், இரு கைகளாலும் பிடித்துக்கொண்டு ஒவ்வொரு முறையும் தன் முழு உடலையும் உயர்த்தி அடித்தான். பங்கஜம் ஒவ்வொரு வாளியாகத் தூக்கிச் சாலை நடைபாதையில் கொண்டு போய் வைத்தாள். அடிவயிற்றில் சுளீர் என்று வலித்தது. முன்பு ஒரு முறை தண்ணீர் பிடிக்க வந்தபோதும் இப்படித்தான் வலி வந்து தெருவிலேயே சுருண்டு விழுந்துவிட்டாள். இரண்டாவது குழந்தை பிறந்தவுடனே அவளுக்குக் கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய அவளது கணவன் மருத்துவமனையில் கையெழுத்து போட்டுக் கொடுத்தான். ஆபரேஷன் செய்தபோது பெரிய தொந்தரவு இருக்கவில்லை. ஆனால், இப்போது இரண்டு வருடங்கள் கழித்து வலி வரத் தொடங்கியுள்ளது. இது பெரிதாகி படுத்த படுக்கையாகத் தள்ளி விடக்கூடாதே என்று கவலைப்பட்டாள் பங்கஜம்.
கடைசி வாளி அடித்துவிட்டு தூக்க மாட்டாமல் அதைச் சிறிது சிறிதாக நகர்த்திக் கொண்டு முத்துவும் நடைபாதைக்கு வந்தான். அவனுக்கும் வயிற்று வலி அவ்வப்போது வரும் என்பதை பங்கஜம் அறிந்திருந்தாள். ‘ஹெர்னியா’ என்று போன வருடமே சொன்ன டாக்டர், ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றும் சொல்லி யிருந்தார். அது நினைவுக்கு வந்ததும் மகனை அணைத்துக்கொண்டு பங்கஜம் சொன்னாள். “நீ போடா வீட்டுக்கு. நான் ஒவ்வொன்னா கொண்டு வந்திடுறேன்".
“அதையும் அடிச்சுட்டுப் போறேன்” என்றான் முத்து.
“வேண்டாம்டா கண்ணா. இதுபோதும். எப்படியாவது பாத்துக்கலாம்.”
“அப்போ அங்க போயி காலி பாத்திரத்தை எடுத்துட்டுப் போகட்டுமா?”
“இல்ல. நீ வீட்டுக்கு போ. நான் எடுத்துண்டு வரேன்” என்று அவனை அனுப்பி விட்டு ஒவ்வொரு வாளியாய் சாலையைக் கடந்து மறுபுறம் இருந்த நடைபாதையில் கொண்டு போய் வைத்தபோது ஒரு கன்றுக்குட்டி அவள் அருகே வந்தது. “போ! போ!” என்று விரட்டியும் அது நகராமல் அங்கேயே நின்றது.
அடுத்த வாளியை எடுத்து வர அவள் நகர்ந்ததும் அது நிச்சயம் தண்ணீரில் வாயை வைத்துவிடும். மறுபடியும் விரட்டியும் நகராமல் அது சொரிந்து கொடுக்க வாகாக தலையை உயர்த்தியது. “சரி. குடி” என்று சொன்ன பங்கஜம் மற்ற வாளிகளை எடுத்து வர விரைந்தாள். “இன்றைய பொழுது இத்துடன் முடிந்துவிட்டது விடிய இன்னும் வெகுநேரம் இருந்தும்கூட” என்று கதை முடிகிறது.
சத்யா: ‘விடிவதற்குள்’ என்பது தானே கதையின் பெயர்?
ஆசான்: ஆமாம்.
சுந்தர்: குடிக்கவும் குளிக்கவும் துவைக்கவும் வேண்டிய தண்ணீருக்கு ஜனங்கள் இவ்வளவு கஷ்டப்படனும்னா அந்த சமுதாயத்தில் இன்னும் விடியலன்னு தானே அர்த்தம்?
ஆசான்: அது சரி. இந்தக் கதையை இன்று சொல்லணும்னு எனக்கு ஏன் தோணுச்சு? விலங்குகளுக்கு மனுஷன் பண்ற கொடுமையைப் பற்றி நீங்க பேசிட்டு இருந்தது ஞாபகம் இருக்கா?
சத்யா: ஆமா.
ஆசான்: இரண்டு நாட்களுக்கு வேண்டிய தண்ணீரைப் பிடிக்க பங்கஜமும் அவள் மகனும் இவ்வளவு சிரமப்பட்டாலும் கடைசியில் தண்ணீரை தேடி வரும் கன்றுக்குட்டியிடம் அவள் என்ன சொல்லுகிறாள்?
சுந்தர்: “சரி. குடி”
ஆசான்: இதுதான் கதையின் உச்சம். இதுதான் தாய்மை. இதுதான் மனிதம். காரணமே இல்லாமல் வேண்டுமென்றே விலங்குகள், பறவைகள் போன்ற மற்ற உயிர்களுக்குத் துன்பம் இழைப்பவன் ‘மனிதன்’ என்ற அடைமொழிக்கே அருகதை அற்றவன். எனவே, கொடிய செயல்களில் ஒரு நாளும் ஈடுபடாதீர்கள். அவற்றைச் செய்பவர்களுக்கு நட்பையும் மரியாதையும் மறுத்துவிடுங்கள்.
Comment