No icon

தேடுங்கள் கிடைக்கும்

கணவனே கயவனாய்...

சுந்தர்: விஜய் தெரியும் இல்ல உனக்கு? விஜய் சங்கர்.

சத்யா: ஆமா. விளையாட்டுப் போட்டிகள்ல நிறைய பரிசு வாங்குவானே, அவன் தானே?

சுந்தர்: அவன்தான். போன வாரம் அவங்க வீட்ல பெரிய ரகளை ஆயிடுச்சு.

சத்யா: என்ன நடந்தது?

சுந்தர்: சின்ன வயசுல இருந்தே அவனுடைய அப்பா அவனுடைய அம்மாவ அடிக்கடி அடிக்கிறதைப் பார்த்து வளர்ந்திருக்கான். சின்ன வயசுல அழுவானாம். அம்மாவ கட்டிப் புடிச்சிட்டு ஆறுதல் சொல்வானாம். சில நாள் அவங்க அப்பா அம்மாவை அடிக்க நெருங்கிறப்போ இவன் முன்னே நின்னு கையை விரிச்சுவேணாம்ப்பா. அம்மாவை அடிக்காதீங்கப்பான்னு தடுப்பானாம். ஆனா, அந்த ஆள் பயங்கர குடிகாரன். குடிச்சிட்டு வந்தான்னா அம்மா அடிவாங்குறது நிச்சயம். சில சமயம் இவனையும், இவன் தங்கையையும் கூட அடிப்பானாம். போன வாரம் இதே மாதிரி குடிச்சிட்டு வந்து, இவங்க அம்மாவோட தகராறு பண்ணி, அடிக்க கை ஓங்கி இருக்கான்.

சத்யா: இவன் போய் அவர் கைய புடிச்சானா? வளர்ந்துட்டான் இல்ல? சின்னப் பிள்ளையா இருந்தப்போ செஞ்ச மாதிரி சும்மா பார்த்துட்டு நிக்க முடியுமா?

ஆசான்: என்ன செஞ்சான்?

சுந்தர்: இவன் புடிச்ச புடி எவ்வளவு ஸ்ட்ராங்கா இருந்துச்சுன்னா அந்த ஆள் கையை எடுக்க முடியல. “என்னடா, வளர்ந்துட்டேன்ற திமிரா?”ன்னு கேட்டிருக்கான். விஜய் வலது கைய அந்த ஆள் மூக்குக்கு முன்னாடி குத்தப் போற மாதிரி கொண்டு போய், “அம்மா மேல கைய வெச்ச...”ன்னதும்அடிக்கலைடா. கையை விடுன்னு கெஞ்சி இருக்கான். இவன் விட்டதும் அந்த ஆள் வெளியே போனவன் தானாம். இன்னைக்கு வரையில எங்க இருக்கான்னு தெரியல.

சத்யா: இவங்க நிம்மதியா இருப்பாங்களே.

ஆசான்: ஜெயந்தன் என்று ஒரு எழுத்தாளர் இருக்கிறார். அவரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

சத்யா: இல்லையே.

ஆசான்: ஜெயந்தன் என்பது இவரது புனைப்பெயர். இவரின் இயற்பெயர் பெ. கிருஷ்ணன். திருச்சிக்கு அருகே உள்ள மணப்பாறையில் பிறந்து, வளர்ந்து, ஆசிரியராக, பின் வருவாய்த்துறை அலுவலராக, பின் கால்நடை ஆய்வாளர் பயிற்சி முடித்து, கால்நடை மருத்துவராக பணியாற்றியவர். பிரபல இதழ்களில் வெளிவந்த இவரது கதைகள் பாராட்டுகளையும், பரிசுகளையும் பெற்றன. இவரதுபாஷைஎனும் சிறுகதை இயக்குனர் பாலு மகேந்திராவால் தொலைக்காட்சி குறுந்தொடராக எடுக்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டு, தன் 73 ஆவது வயதில் ஜெயந்தன் காலமானார்.

சுந்தர்: அவரோட கதைகள்ல எதைச் சொல்ல போறீங்க?

ஆசான்: ‘அவள்என்பது இச்சிறுகதையின் பெயர்.

இரு கரங்களையும் ஏந்தி நின்றுசாமிஎன்று அந்தப் பெண், மேனேஜரை அழைத்தாள். அவள் சொன்னாள்: “சாமி, வீட்டுக்கு இந்த ஆளு ரெண்டு ரூபா குடுத்து மாசம் மூணு ஆகுது, சாமி. இந்த நாலையும் வச்சுக்கிட்டு நான் என்ன செய்ய முடியும் சாமி?” என்றாள்.

சுந்தர்: நாலையும்னா?

ஆசான்: பிள்ளைகள். நால்வரிலே பையன்கள் இருவர். சிறுமிகள் இருவர். கடைசிச் சிறுமி சிறு குழந்தை. நான்கு பிள்ளைகளின் உடலும், உடையும் அவளைப் போன்றே அவர்களின் வறுமையை அறிவித்தன. “இந்த உடம்ப வச்சுக்கிட்டு கூலி நாலில நான் எவ்வளவு சம்பாதிச்சுட முடியும் சாமி?” என்றாள் அவள். “இன்னைக்கு சம்பளத்தை என் கையில கொடுங்க, சாமி. உங்களுக்கு புண்ணியமாப் போகும். இல்லாட்டி இந்த புள்ள குட்டிங்க அநியாயமா செத்துப் போய்டும் சாமி. இந்த ஆளு குடிச்சே அழிக்குது சாமி.”

மேனேஜர் அவளைப் பார்த்து, “இந்தாம்மா, முதல்ல நீ யாருன்னு சொல்லுஎன்றார். அங்கு வந்த சபாபதி, “நம்ம கண்ணுச்சாமியோட சம்சாரங்க,” என்றான் . மேனேஜருக்கு அதிர்ச்சி. எப்போதும் தும்பை நிறத்தில் வேஷ்டியும், ஜிப்பாவுமாக, சட்டமும், சவடாலும் பேசித் திரிகிற கண்ணுச்சாமியின் மனைவியா இவள்?

அவள் சொன்னாள், “நீ இப்படிக் குடிச்சுப் போட்டு கடையில் போய் பிரியாணி, கோழிக் கறியுமா தின்னா பிள்ளைங்க என்ன ஆவுறதுன்னு கேட்டா எல்லாம் போய் சாவுங்கன்னு சொல்லுது சாமி.”

சரிம்மா. எங்கள என்ன செய்யச் சொல்ற?”

இன்னிக்கு சம்பளத்தை என் கையில கொடுங்க சாமி.”

அதெல்லாம் ஆசாமி கையெழுத்துப் போடாம ஒரு பைசா நாங்க கொடுக்க முடியாது. வேண்ணா இரு. அவன் சம்பளம் வாங்குறப்போ சொல்லிப் பாப்போம்என்று சொல்லிவிட்டு, உள்ளே போய்விட்டார் மேனேஜர். அவளுக்குப் பெருத்த ஏமாற்றம். “கவலைப்படாதே. அவர் சொல்றது அப்படித்தான் சொல்லுவாரு. அவன் வந்ததும் மிரட்டி, விரட்டி வாங்கிக் கொடுத்திடுவாரு. நீ கொஞ்சம் அப்படி செவத்தோட நிழல்ல உட்காருஎன்றான் சபாபதி.

அவள் இடுப்புக் குழந்தையை தூக்கிக் கொண்டு போய் உட்கார்ந்தாள். காலையில் நடந்த சண்டை அவளுக்கு நினைவு வந்தது.

இன்னைக்கு உன் ஆபீஸ்க்கே வந்து உன் யோக்கியதை எல்லாத்தையும் எடுத்து விடல, நான் பெரியசாமி மகள் இல்லைஎன்று இவள் சொன்னதும், “நீ வந்து பாரு. வந்தா அந்த இடத்திலேயே உன் மண்டை சூரத் தேங்காய் மாதிரி சிதையல, நான் கண்ணுச்சாமி இல்லஎன்று அவனும் சவால் விட்டான்.

அந்தப் பஞ்சாயத்து யூனியனில் அன்று சம்பள நாள் ஆனதால் பலர் வருவதும் போவதுமாக இருந்தனர். வாயிலில் வந்த கண்ணுச்சாமி முதலில் இவளைக் கவனிக்கவில்லை. அவனது தோழன் மூக்கையா ஜாடை காட்டிய பிறகு திரும்பிப் பார்த்த கண்ணுச்சாமி இவளுக்குப் பின்னால் வந்து நின்று சொன்னான், “ஓஹோ, சபதம் போட்ட மாதிரியே வந்துட்டீகளோ?”

ஆமா.”

தணிந்த குரலில் அவன் சொன்னான், “மரியாதையா போயிடு. இல்ல, உனக்கு இங்கேயே சமாதி கட்டிப்புடுவேன்.”

பாப்போம்.”

சபாபதி வந்து மேனேஜர் அழைப்பதாக கண்ணுச்சாமியிடம் சொல்ல, அலுத்துக் கொண்டே அவரின் அலுவலகத்திற்குச் சென்றான்.

உன் சம்சாரம் வந்திருக்கே, பாத்தியா?” என்று சிரித்தபடியே கேட்டார் மேனேஜர். இவன் முகம் சுருங்கியது. தன்னைப் பற்றிய உண்மையைச் சொல்லி, தான் இதுவரை நிலைநாட்டியிருந்த பிம்பத்தை மனைவி உடைத்து விட்டாள் என்று புரிந்ததும், உடனே வெளியே போய் அவளை உதைக்க வேண்டும் போல் இருந்தது அவனுக்கு.

அது என்னமோ சொல்லுது?” என்றார் மேனேஜர்.

என்ன சொல்றா?”

நீ வீட்டுக்கு ரெண்டு ரூபா கொடுத்து மூணு மாசம் ஆச்சாமில்ல?”

குரலை உயர்த்தி கண்ணுச்சாமி சொன்னான், “நான் மூணு மாசமா காசு கொடுக்கலன்னா இவள் மண்ணைத் தின்னுட்டு உசுரோட இருந்தாளா?”

அது ஏதோ கூலி நாலிக்கு போய் சம்பாதிக்கிறேன்னு சொல்லுதே?”

ஏன் கூலி நாலிக்கு மூணு மாசம் போனவ இப்பவும் போக வேண்டியது தானே?”

அவள் போனா என்ன, போகாட்டி என்ன? நீ குடும்பத்துக்கு கொடுக்க வேண்டியது உன் கடமை இல்லையா?”

கொடுக்காமலா சார் இருக்கேன்? இந்த ஊதாரி கழுத கண்டபடி செலவு செய்றது, கண்டபடி திங்கிறது. இவளுக்கு கொட்டிக்கிட்டே இருக்க நான் என்ன ஐயாயிரம் ரூபாயா சம்பளம் வாங்குறேன்?”

சபாபதி சொன்னான், “கண்டபடி திங்குற பொம்பள தான் இப்படி இருக்காக்கும்?”

கண்ணுச்சாமி சபாபதி பக்கம் திரும்பி, “டேய் நீ பேசுனே, பல்ல ஒடச்சு போடுவேன்.”

சபாபதியை அதட்டிய மேனேஜர், “நீ பணம் கொடுக்கத்தானே செய்ற? சரி. இன்னைக்கு பணத்தை என் முன்னால கொடுஎன்றார்.

அப்படி ஒன்னும் என் குடும்பத்துக்கு நான் கொடுக்கிறதுக்கு இன்னொருத்தர சாட்சி வச்சுக்கணும்னு தேவையில்லை, சார்.”

என்ன சொல்வதென்று தெரியாமல்சரி, போஎன்றார் மேனேஜர்.

அங்கு நடந்ததை எல்லாம் ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டு நின்ற அவள் வெளியே வந்த கண்ணுச்சாமியின் முன்னால் நின்று, இரு கைகளையும் விரித்துபணம் கொடுஎன்றாள்.

வீட்டுக்குப் போ. கொண்டு வரேன்என்றான் கண்ணுச்சாமி.

இல்ல. நீ வர மாட்டே. தீத்துட்டு தான் வருவே.”

இல்ல, வரேன். போ!”

ஏன், கொடுத்துட்டு அப்புறம் வாயேன்.”

மூர்க்கனான கண்ணுச்சாமி, “விலகுடி!” என்று கத்தினான்.

மாட்டேன்.”

அவன் அவளது முகவாயில் உள்ளங்கையை வைத்துத் தள்ள, அவள் தடுமாற, இரவுக் காவலுக்கு வந்து விட்ட வாட்ச்மேன் வீராசாமி, “ஏய், ஏம்ப்பா?” என்றார். தடுமாறிய அவள் முன்னால் வந்து அவனது சட்டையை பிடித்துக் கொண்டாள். “இன்னிக்கு நீ என்ன வெட்டினாலும் சரி, பணம் வாங்காம போக மாட்டேன்.” அவன் மீண்டும் குத்த முயன்ற போது அவனுக்கு பின்னால் போய் நின்று கொண்டு அவனது இடுப்பை வளைத்துப் பிடித்துக் கொண்டாள் அவள்.

அலுவலகத்தில் இருந்த எல்லாரும் வராண்டாவிற்கு வந்து விட்டனர். நரம்பி என்றாலும் உடும்புப் பிடியாக அவள் பிடித்திருந்ததால், இறங்கி வந்து சாதிக்க முடிவு செய்த கண்ணுச்சாமிசரி, விடு. தரேன்என்றான். அவள் விடாததால், “விடு, தரேன்என்றான் மறுபடியும். அவள் பிடியை விட்டாள். விட்டதும் அவன் திரும்பி ஆத்திரத்தோடு முழு பலத்தையும் திரட்டி அவள் மூக்கில் குத்தினான். கதி கலங்கிப் போன அவளின் மூக்கிலிருந்து ரத்தம் கொட்டியது. குழந்தைகள் அலறின. “ஏய் கண்ணுச்சாமி!” என்று சொல்லிக் கொண்டு சபாபதி வர, ‘தூரப் போடா, நாயே. வந்தீனா செருப்பால அடிப்பேன்என்றான்.

வாட்ச்மேன் வீராச்சாமி, “நீ ஒரு மனுஷனா? நல்லது சொல்ல வர்றவனையும் திட்றியே! பெரிய மிருக ஜென்மமா இருக்கியே!” என்றார். “போயா உன் பொழப்ப பார்த்துட்டு. உனக்கு என்னா அவ்வளவு ரோஷம் வருது? நான் என்ன உன் பொஞ்சாதியவாப் போட்டு அடிக்கிறேன்?” என்றான் கண்ணுச்சாமி. மேனேஜர், “இந்தா கண்ணுச்சாமி, இங்க வா!” என்று கூப்பிட்டார். “மேனேஜர்னா அது ஆபீஸ்க்கு மட்டும்தான்என்று முறைத்தான் கண்ணுச்சாமி. மூக்கில் ரத்தம் ஒழுக நின்று கொண்டிருந்த மனைவியை பார்த்து, “தெரியுதா? ஜாக்கிரதையா இரு!” என்று சொல்லிவிட்டு நடந்தான்.

ஆனாலும் அவள் அவன் பின்னால் பாய்ந்து அவனது ஜிப்பாவை பிடித்துக் கொண்டு, “என்னையும் என் பிள்ளைகளையும் கொன்னு போட்டுட்டு போயிடுஎன்றாள். “சாவுங்க!” என்று சொல்லி அவளது வயிற்றில் குத்தினான். அவள் ஜிப்பாவை விடாததால் மறுபடியும் குத்த கையை பின்னுக்கு இழுத்த போது அவன் பிடரியில் வந்து விழுந்தது ஒரு பலமான அடி! அடித்தது யார் என்று அவன் திரும்பிப் பார்க்க, அவன் முகத்தில் இன்னொரு அடி! “ராஸ்கல், தாலி கட்டிட்டா கொன்னுடலாம்னு நினைப்பா? நல்ல வார்த்தை சொல்ல வர்றவங்க மேல எல்லாம் எகிர்ற? அவ்வளவு பெரிய ரவுடி நீ, இல்ல?”

நீ யார்யா?” என்று இவன் முடிப்பதற்குள் காதோடு விழுந்தது இன்னொரு அடி! கதி கலங்கிப் போன கண்ணுச்சாமி தடுமாறி முன்னால் விழப் போனான். “அப்படி போடுங்க, சாமி. மகராசன் நீங்க நல்லா இருப்பீங்க. சாவட்டும் கொலைகாரப் பாவி!” என்றாள் அவள். அடித்தது கிராம சேவகர் சிதம்பரம். அவ்வளவு நேரமும் பொறுமையாக இருந்தவர் இவன் செய்ததை எல்லாம் பார்த்து இனியும் இந்த பெண்ணைச் சாக விட்டு பார்த்துக் கொண்டிருந்தால் தான் மனிதனாக இருக்க முடியாது என்று சைக்கிளை ஸ்டாண்ட் போட்டுவிட்டு வந்துவிட்டார்.

இன்னொரு கல்தாவில் கண்ணுச்சாமி வாசற்படியைத் தொட்டான். “மேல ஏறுஎன்றார் சிதம்பரம். கண்ணுச்சாமி மேலே ஏறினான். அவனை மேனேஜரின் மேஜை அருகில் கொண்டு வந்து அதன் அடியில் ஓர் இடத்தைக் காட்டி, “உட்காரு!” என்றார். பெட்டிப் பாம்பாகி விட்ட கண்ணுச்சாமி உட்கார்ந்தான். சிதம்பரம் அந்த மேஜையில் இருந்த டெலிபோனில் எண்களைச் சுழற்றினார். “எங்கே?” என்று கேட்டார் மேனேஜர். ‘போலீஸ் ஸ்டேஷனுக்குஎன்றார் சிதம்பரம்.

கூட்டம் எல்லாம் அங்கே வந்துவிட இவள் எல்லாருக்கும் பின்னால் நின்றாள். “போலீஸ் ஸ்டேஷனுக்குஎன்று சிதம்பரம் சொன்னதைக் கேட்ட ஒருவர், “ஆமா. அதுதான் சரி. ரெண்டு மாசம் சோளக்களி தின்னாத் தான் புத்தி வரும்என்றார். அது இவள் காதில் விழுந்தது.

தொடர்பு கிடைக்க, சிதம்பரம், “ஹலோ, போலீஸ் ஸ்டேஷனா? நாங்க இங்க பஞ்சாயத்து யூனியன்ல இருந்து பேசுறோம்என்றார்.

பின்னால் நின்று கொண்டிருந்த கண்ணுச்சாமியின் மனைவி கூட்டத்தை விலக்கி, இரு கைகளையும் விரித்து, “ஐயோ, சாமி!” என்று ஓடிவந்து சிதம்பரத்தின் முன் நின்று, “வேணாம் சாமி. சொல்லிடாதீங்க!” என்று அவர் காலில் விழுந்தாள். “இந்த ஆளை அடிச்சுக் கொன்னுடுவாங்க சாமி. இந்த ஆளு குடிச்சு போட்டு ஏற்கனவே அவங்க கூட வம்பு இழுத்திருக்கு சாமி. இந்த ஆபீஸ்ல இருக்குறதனாலதான் விட்டு வச்சிருக்காங்க. இப்ப நீங்களே புடிச்சு கொடுத்தா கட்டி வச்சு தோலை உரிச்சிடுவாங்க சாமிஎன்று கெஞ்சினாள்.

அடிக்கட்டுமே. அப்பனாலும் புத்தி வரும் இல்ல?” என்றார் சிதம்பரம். “உசுரு இருந்தா தானே சாமி புத்தி வரும்?” என்றாள் அவள். இரண்டு மனசாக சிதம்பரம் நிற்க, மேனேஜர்தொலையுது சிதம்பரம். விடுங்க.” என்றார். “அப்புறம் உங்க இஷ்டம்என்று சிதம்பரம் வெளியே செல்ல, “நீ போப்பாஎன்றார் மேனேஜர். தடுமாறியபடி எழுந்து நின்ற கண்ணுச்சாமி அவளை முறைத்து, “ஆளு வச்சா அடிக்கிறே? இரு, வீட்டுக்கு தானேடி வருவ? வா. அங்க வந்து இந்த கண்ணுச்சாமி யாருன்னு பாருஎன்று சொல்லிவிட்டு நடந்தான். தன் பிள்ளைகளைப் பார்த்தபடி தோல்வியும், ஏமாற்றமும், விரக்தியும் கலந்த குரலில்ம். நடங்கஎன்று அவள் சொல்ல அவர்கள் நடந்தார்கள் என கதை முடிகிறது.

சத்யா: முடிவு இவ்வளவு சோகமா இருக்கே? அப்போ அந்த பொண்ணோட துயரத்துக்கு முடிவே இல்லையா?

ஆசான்: அதற்குக் காரணம் சுந்தரின் நண்பனின் வீட்டில் இருந்த ஒன்று இந்தப் பெண்ணின் வீட்டில் இல்லை. வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்து கொண்ட பெண்ணை கொடூரமாக அடித்து, துன்புறுத்தும் கயவனாக கணவன் ஆகின்ற போது, அவனுக்கு எதிரே நின்றுஇன்னொரு தடவை கையை வச்சே...” என்று எச்சரிக்கும் துணிவு கொண்ட ஆண்கள் இல்லாததுதான் காரணம்.

சுந்தர்: இந்தக் கதையில வர்ற கிராம சேவகர் சிதம்பரம் மாதிரி. என் ஃபிரண்டு விஜய் மாதிரி.

ஆசான்: சில கணவர்கள் இத்தகைய கயவர்களாய் ஆவது எப்படி? இதற்கு மூன்று முக்கிய காரணங்களைச் சொல்லலாம். முதலாவது சில உளவியல் சார்ந்த மனக் கோளாறுகள். தீவிரமான தாழ்வு மனப்பான்மை. அதனால் ஏற்படும் பாதுகாப்பற்ற உணர்வு. அதனால் விளையும் வீண் சந்தேகம். அதை மறைக்க வன்முறையைக் கையில் எடுக்கும் வன்மம். தாழ்வு மனப்பான்மையால் விளையும் சுய வெறுப்பு. தன்னை அடிக்க முடியாததால் தனக்கு மிக அருகில் இருக்கும் நபரை அடிக்கிற விநோதம்.

இரண்டாவது காரணம் குழந்தைப் பருவத்து அனுபவங்கள். தன் தந்தை, தன் தாயை இப்படித் தொடர்ந்து துன்புறுத்துவதைப் பார்த்து வளர்ந்தவன் மணம் முடித்ததும் தன்னையும், அறியாமல் தன் தந்தையைப் போன்று நடந்து கொள்ளும் விபரீதம்.

சுந்தர்: என்ன காரணமாக இருக்கலாம்?

ஆசான்: ஆண் பிள்ளைக்கு எல்லா உரிமைகளும், சலுகைகளும் வழங்கப்பட்டு, தன் சகோதரிக்கு அவை மறுக்கப்பட்டதால்ஆண் உயர்ந்தவன் பெண் தாழ்ந்தவள்எனும் ஆழமான நம்பிக்கை இவர்கள் மனதில் வேரூன்றியது காரணமாக இருக்கலாம்.

சத்யா: மூன்றாவது?

ஆசான்: மூன்றாவது காரணம் மது அல்லது போதைப் பொருட்களுக்கு அடிமையாகி அதன் பாதிப்பால் தங்கள் செயல்களின் விளைவுகளை உணர இயலாமை. இளையோர் நீங்கள் இவற்றில் எதற்கும் பலியாகாமல் மிகக் கவனமாக இருக்க வேண்டும். இத்தகைய ஆண்களை மற்ற ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் அனைவரும் சேர்ந்து நின்று கண்டிக்கவும், தண்டிக்கவும் வேண்டும். கணவனின் வன்முறைக்கு இலக்காகும் பெண் உடனடியாக தனக்கும், தன் பிள்ளைகளுக்கும் பாதுகாப்பு வேண்டி வேறு இடம் தேட வேண்டும். தனது நிலையை மூடி மறைக்காமல், உதவ முடிந்த அனைவரின் உதவியையும் கேட்டுப் பெற வேண்டும்.

Comment