மன்றாடி மகிழ்ந்திடுவோம் - 49
சாலமோன்
“ஆலயம் அவசியமா?” (சாலமோன்)
கடவுள் உண்மையாகவே மனிதரோடு மண்ணில் வாழ்வது நம்பக்கூடியதா? விண்ணும் விண்விரிவும் உம்மைக் கொள்ளாதிருக்க, நான் கட்டியுள்ள இந்தக் கோவில் உம்மை எவ்வாறு கொள்ளக் கூடும்?... என் பெயர் விளங்கும் என்று நீர் வாக்களித்திருந்த இந்த இடத்தின்மேல், கோவில்மேல் இரவும் பகலும் உமது அருட்பார்வை இருப்பதாக! உம் அடியானும், உம் மக்களாகிய இஸ்ரயேலரும் இவ்விடம் நோக்கிச் செய்யும் வேண்டுதலைக் கேட்டருளும் (2 குறி 6 : 18-21) என்பது சாலமோனின் மன்றாட்டு.
கோவில் என்பது, கடவுளின் உறைவிடம். அவர் அங்கிருந்து, மன்றாட்டுக்குப் பதில் தருகிறார். எங்கிருந்தாலும், ஆலயம் இருக்கும் திசை நோக்கி மன்றாடினால், கடவுளை நோக்கி மன்றாடுவதற்கு சமமாகக் கருதியது பழைய ஏற்பாடு.
தானியேலைப் பழிவாங்க வேண்டும், கொல்ல வெண்டும் என்று துடித்த அதிகாரிகள், தண்டல்காரர்கள், அமைச்சர்கள், ஆளுநர்கள் சேர்ந்து, அடுத்து வரும் 30 நாட்களுக்கு யாரும் எந்தத் தேவைக்கும் உங்களிடம் தவிர, தங்கள் தெய்வங்களிடம் வேண்டுதல் செய்யக்கூடாது என்று அரசனிடம் கபடமாகப் பேசி, சட்டம் இயற்றச் செய்துவிட்டார்கள்.
தானியேல், இந்தச் சட்டம் கையொப்பமிடப்பட்டதை அறிந்தபின், தம் வீட்டிற்குச் சென்றார். தமது வழக்கப்படி, நாள்தோறும் மூன்று வேளையும் தம் கடவுளுக்கு முன்பாக முழந்தாளிலிருந்து மன்றாடி அவருக்கு நன்றி செலுத்தினார். (தானி 6:6-10)
வருடம் ஒருமுறை எருசலேம் ஆலயத் திருவிழாவிற்கு, பல நாடுகளிலிருந்து போதகர்கள் வந்து விடுவார்கள்.
“கவின்மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப் பட்டிருக்கிறது” என்று பெருமை பேசுவது யூதர்களின் வழக்கம்.
இப்படிப் பாராட்டும்போது இயேசு சொன்னதென்ன? “ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும்” என்றார் (லூக் 21: 5-6).
“இக்கோவிலை இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்” என்றார்.
இயேசு, தம் உடலாகிய கோவிலைப் பற்றியே பேசுகிறார் என்பதை, சீடர்கள் பிறகே புரிந்து கொண்டனர் (யோவா 2:19,21).
நம் இயேசு, தம் ஆவியைக் கையளித்தபொழுது, திருக்கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்ததோ, அப்பொழுதே பழைய ஏற்பாட்டு கோவில், கோவில் வழிபாடுகள் எல்லாம் முற்றுப்பெற்றன.
மனிதன் கைகளால் கட்டப்பட்ட ஆலயத்தில் கடவுள் தங்குவதில்லை என்ற உண்மை வலியுறுத்தப்பட்டது. (திப 7:48, 17:24)
இன்று நம் உடல்தான், இயேசுவின் ஆலயம். நம் சொல்லும் செயலும் வாழ்க்கை முறையும்தான் உண்மையான வழிபாடு.
வயதான தந்தையை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு, அப்பா நீங்கள் என்னோடு வந்து தங்க வேண்டாம். நீங்கள் இங்கேயே இருங்கள். நான் அவ்வப்பொழுது உங்களைப் பார்க்க வருவேன் என்பதை போல, கடவுள் என்னவோ கோவிலில் மட்டும்தான் இருக்கிறார் என்பதை போல் சந்திக்க வருகிறான் மனிதன்.
சபைக் கூட்டங்கள் தேவை. திருத்தூதர் கற்பிப்பதிலும், நட்புறவிலும், அப்பம் பிட்குதலிலும், இறைவேண்டலிலும், உறுதியாய் நிலைத்திருக்கவும், ஊக்கமூட்டவும் தேவைதான் (எபி 10:25, திப 2:42).
மக்கள் சபையாகக் கூடிவர, காற்றோட்டமான கட்டிடம் தேவை, கம்பீரமான கோவில்கள் தேவையேயில்லை.
சபை என்றால் என்ன என்பதைப் பற்றி புரிந்திருப்பது நல்லது. “ஆண்டவரும் தாம் மீட்டுக் கொண்டவர்களை நாள்தோறும் அவர்களோடு சேர்ந்துக் கொண்டேயிருந்தார்” (திப 2:47). சபையின் உறுப்பினர்கள் என்றால், மீட்பு பெற்றவர்கள். இயேசுவின் உடலின் உறுப்புகளுக்கு இங்கே முக்கிய பகிர்வு உண்டு.
கோவில் என்பது ஒரு கட்டிடம். அங்கே பக்தியுள்ள நல்லவர்களும் வருவார்கள். கெட்டவர்களும் வருவார்கள். ஒருவர் மற்றவரோடு ஐக்கியம் வைத்திருக்கத் தேவையில்லை. இது பழைய ஏற்பாட்டு சித்தாந்தம்.
நாமோ, கோவில், திருத்தலம், பேராலயம், உயர் பேராலயம் என்று கட்டிடங்களை எழுப்பி, அர்ச்சித்து பெருமைப்படுகிறோம். இது புதிய ஏற்பாட்டு சிந்தனைக்கு எதிரானது.
ஆவியிலும் உண்மையிலும் தொழுது கொள்ள வேண்டும். எங்கும் தொழுது கொள்ளலாம். (யோவா 4:23,24) என்பதுவே இயேசுவின் போதனை.
ஆலயத்தில் மட்டும்தான் ஆண்டவர் இருக்கிறார் என்ற சிந்தனை வலுத்திருப்பதால், இங்கு வந்ததும் எவ்வளவு பக்தி வெளிப்பாடுகள்! ஆனால், நம் உடல்தான் அவரது கோவில். காரணம், அவரது இரத்தத்தால் கழுவப்பட்டுள்ளோம்; அவரது தூய ஆவியால் இயக்கப்படுகிறோம். ஆகவே, நம் வாழ்வே கடவுள் விரும்பும் வாழ்க்கைபாடமாகும்.
எங்கிருந்து மன்றாடினாலும், கேட்கும் நல்ல தகப்பன் நம் ஆண்டவரல்லவா!.
Comment