No icon

மன்றாடி மகிழ்ந்திடுவோம்-51

ஆகூர் - வாழ்வில் சமநிலை வேண்டும்

“வரம் இரண்டு உம்மிடம் கேட்கிறேன், மறுக்காதீர்; நான் சாவதற்குள் அவற்றை எனக்கு அளித்தருளும்.

வஞ்சனையும் பொய்யும் என்னைவிட்டு அகலச் செய்யும்; எனக்கு செல்வம் வேண்டாம், வறுமையும் வேண்டாம்; எனக்குத் தேவையான உணவை மட்டும் தந்தருளும்.

எனக்கு எல்லாம் இருந்தால், நான் “உம்மை எனக்குத் தெரியாது” என்று மறுதலித்து, “ஆண்டவரைக் கண்டது யார்?” என்று கேட்க நேரிடும். நான் வறுமையுற்றால் திருடனாகி, என் கடவுளின் திருப்பெயருக்கு இழிவு வருவிக்க நேரிடும் - ஆகூர் (நீமொ 30:7,8,9).

கல்லூரி படித்த ஷீன் வால் ஷீன் என்பவரைப் பற்றிய ஆங்கில கதை ஞாபகம் வருகிறது.

ஆயரது இல்லத்தில் உள்ள தட்டு முட்டு சாமான்களை சாக்கில் நிரப்பி தப்பி ஓடும்போது, காவல்துறையால் பிடிபடுகிறான். ஆயரிடம் அழைத்து வரப்படுகிறான்.

தன் வாழ்க்கை இனி சிறைவாசம்தான் என்று ஷீன் வால் ஷீன்; தவித்துக் கொண்டிருந்தபோது, ஷீன், இந்த குத்துவிளக்கையும் எடுத்துக் கொள்ள சொன்னேன். மறந்துவிட்டாயே, என்றாராம்.

காவல்துறையினர் சென்றுவிட்டனர். ஷீன் வால் ஷீன் ஆயரின் பாதம் விழுந்து புது மனிதனானான்.

வறுமை, ஒரு மனிதனைத் திருடனாக மாற்றிவிடும் கொடியது என்பதும் உண்மைதான்.

சிலர், தங்களது வறுமை, நோய், கஷ்டம் தீரும்வரை, ஆண்டவரையே நாடி வருவார்கள்; ஆலயத்தையே தேடித் திரிவார்கள். ஆனால், வசதி வாய்ப்புகள் சொத்து, சுகம் பெருகியவுடனே இனி என்ன கடவுள் கோவில், என மறந்து, மறுத்துவிடும் மனிதர்களையும் சமுதாயத்தில் காண்கிறோம்.

ஆனால், பவுல் சொல்லும் சத்தியமே உண்மையானது; “எந்நிலையிலும் மனநிறைவோடு இருக்கக் கற்றுக் கொண்டுள்ளேன். எனக்கு வறுமையிலும் வாழத் தெரியும்; வளமையிலும் வாழத் தெரியும்; வயிறார உண்ணவோ, பட்டினி கிடக்கவோ, நிறைவோ, குறைவோ எதிலும் எந்தச் சூழலிலும் வாழப் பயிற்சி பெற்றிருக்கிறேன். எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு, எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு” (பிலி4:11-13).

பயிற்சி என்றால் சைக்கிள் ஓட்டப் பயிற்சி எடுக்கும்போது, விழுந்து எழுவதைப் போல்.

பயிற்சியில் வெற்றி என்றால், சோதனைகளை வென்றவர் என்று அர்த்தமாகும்.

ஏற்றத்தாழ்வுகளை சந்திக்காத மனிதர் எவருமில்லை. வெற்றி தோல்விகளைக் காணாதவர் எவருமில்லை. ஆனால், அனைத்தையும் அறிபவரும் அனுமதிப்பவரும் என் ஆண்டவரே, அவரே அனைத்தையும் ஆசீர்வாதமாக மாற்றுவார் என்று நம்புபவரே, கடவுளின் பிள்ளைகள்.

ஆகவே, வறுமையைத் தராதீர்; செல்வம் மிகுதியாகத் தராதீர் என்று கேட்பது நல்ல மன்றாட்டல்ல.

யோபு - பெரிய செல்வந்தர், பல்லாயிரம் கழுதைகள், மாடுகள் அப்படியானால் எத்தனையோ ஆயிரம் ஏக்கர் நிலங்கள், வேலையாட்கள் என்று கற்பனை செய்யலாம். ஒரே நாளில் அனைத்தையும் இழந்துவிட்டபோதும், துவண்டு விடவில்லை. கடவுளைப் பழிக்கவில்லை, கடவுள் தந்தார்; அவரே எடுத்துக் கொண்டார். அவரது திருப்பெயர் போற்றப் பெறுக’ என்று புகழ்பாடினார் (யோபு 1:21).

வறுமையிலும், அவமானத்திலும் வாடிய யோசேப்பு ஒருநாள் பதவி உயர்வு வந்தது. ஆனாலும், அதே தாழ்மை, எளிமை, கடவுளுக்கு உகந்தவராக சாட்சியாக விளங்கினார்.

தன்னைப் பழிவாங்கியவர்களையெல்லாம் மனதார மன்னித்து, புதுவாழ்வு கொடுத்தார்.

ஏழை லாசர், அவரது புண்களை நாய்கள் வந்து நக்குமாம். நாய்களை விரட்டுவதற்குக் கூட சக்தி இல்லை. பசியாற்ற போதிய உணவு இல்லை, தங்க சரியான இடமில்லை. ஆனாலும், வானதூதர்கள் வந்து அவரை வானகம் அழைத்துச் செல்ல வரும் அளவுக்கு, அவர் தன் வறுமையிலும் மனநிறைவோடு வாழ்ந்தார்.

கடவுளைப் பழிக்கவில்லை; பணக்காரரை சபிக்கவில்லை; திருடவில்லை. உள்ளத்துள் இறைபிரசன்னத்தை சுமந்தவராக, முகமலர்ச்சியுடன் வாழ்ந்தார்.

பவுல், பெரிய செல்வந்தர்தான். ஆனால், இயேசுவால் ஆட்கொள்ளப்பட்ட பிறகே, இயேசுவே ஒப்பற்ற செல்வம். அவர் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன்.

கிறிஸ்துவை ஆதாயமாக்கிக் கொள்ள, எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன்.

“சகோதர, சகோதரிகளே, நீங்கள் அனைவரும் என்னைப் போல் வாழுங்கள்” (பிலி 3: 8,17) ஆண்டவரே, உம்மைவிட்டு யாரும் எதுவும் பிரிக்காதிருக்கட்டும். இன்றும் என்றும் உம்மோடு ஒன்றித்திருக்க வரம் தாரும் என்பதே நம் மன்றாட்டாக இருக்கட்டும்.

Comment