No icon

பழக்கம்

ஃபாதர், அதிகாலை நான்கு மணிக்கு இரண்டு பேரைத் தூக்கிலிட இருக்கிறோம். உங்களுக்கு ஆர்வம் இருந்தால் வரலாம்.”

காவல்துறை டி.எஸ்.பி வேணு எங்கள் பள்ளியின் முன்னாள் மாணவர் அழைத்திருந்தார். நான், தந்தை ரொசாரியோ கிருஷ்ணராஜை அழைத்துச் சொன்னேன்.

இது ஓர் அனுபவம்தான். போகலாமேஎன்றார்.

அவர் எனக்கு ஆசிரியர். எங்கள் பள்ளியில் படித்தவர். அருள்பணியாளர்களின் சேவையும், கண்ணியமும், நடத்தையும் அவரைக் கவர, பின்னாளில் மதம் மாறி குருவாக ஆனவர். என் ஞானத்தந்தை. வசதியான வீட்டிலிருந்து வந்து அந்தப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நான், அவரைப் பின்பற்றி ஒரு குருவானவராக ஆனேன். ரெக்டரிடம் தெரிவித்து அனுமதி வாங்கிக் கொண்டோம்.

காலை மூன்று மணிக்கு எழுந்து காரில் செல்லத் திட்டமிட்டோம். இரவு முழுக்கத் தூக்கமே இல்லை. மாலை முதல் அருள்தந்தை ரொசாரியோ சொன்னவற்றைச் சிந்தித்துக்கொண்டே இருந்தேன்.

இயேசுவையும் ஒருவகையில் இப்படித்தான் கொன்றார்கள்என்று சாந்தமாக அவர் சொன்ன போது, அவர் எதில் ஆர்வமாயிருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டேன். ஆனாலும், “இவங்க கொலைகாரங்க ஃபாதர்என்றேன். அவர் என் கண்களைப் பார்க்காமலே சொன்னார்: “கல்வாரியின் இரண்டு திருடர்கள்னு வச்சுக்கையேன்என்றார். அவர் அப்படித்தான் சிந்திப்பார்.

நான் மரணத்தைக் குறித்துச் சிந்தித்துக் கொண்டிருந்தேன். “இது சரிதானா ஃபாதர்?” என்றேன்.

எது?”

தூக்குத் தண்டனை.”

அவர் மெல்ல புன்னகைத்துச் சொன்னார்: “இல்லை என்றுதான் திரு அவை சொல்லுது. மனிதன் எத்தனை பெரிய பாவியாய் இருந்தாலும், அவனும் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டவன் என்பதை ஆழமாக நம்புபவர்கள் நாம். ஒரு திருடன் கடைசி நேரத்தில் மன்னிப்பைப் பெற்று அன்றே விண்ணுலகம் சென்றானே?”

நான் யோசித்துக் கொண்டிருக்கும்போதே அவர்ஆனால்...” என்று இழுத்தார்.

உலகம் முழுவதும் பழைய கதைகள்ல கெட்டவர்களைக் கொல்வது ஒரு முக்கியக் கருத்தாக வருகிறது. தாவீது-கோலியாத்தின் கதை உலகப் புகழ்பெற்ற கதை இல்லையா? இந்தியக் கதைகளில் பலவும் இப்படிக் கெட்டவர்களைக் கடவுள்கள் வந்து கொல்வதுதான் முக்கியக் கரு. மனித இனம் இப்படிக் கெட்டவர்களை அழிப்பதன் மூலம்தான், நல்லவர்களாக மாறியது என்று ஒரு கருத்து உள்ளது. அதன் பெயர்குட்னெஸ் பாரடாக்ஸ்” (Goodness Paradox).

அதிகாலையில் நாங்கள் காரில் சென்று கொண்டிருக்கும்போது அவர் எதுவும் பேசவில்லை. கண்களை மூடி தியானத்தில் இருந்ததைப்போல இருந்தார். என் மனம் பதைபதைத்துக் கொண்டிருந்தது. கண்முன்னே இரு உயிர்கள் பிரியப் போகின்றன. எந்த மனிதனும் தன் உயிர் பிரியப் போகிறது எனத் தெரிந்தால், ஆன்ம வலியில் துடிப்பான். ஒரு வேளை நாம் இதைப் பார்க்க ஒப்புக்கொண்டிருக்கக்கூடாதோ? என்று நினைத்தேன். குற்ற உணர்வு, பயம், உற்சாகம் எனக் கொந்தளிக்கும் மனநிலையில் நான் தத்தளித்தேன்.

நாங்கள் சென்று சேர சற்றுத் தாமதமாகி விட்டதால் நேரடியாகத் தூக்கிடும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். வேணு எங்களைப் பார்த்துக் கண்ணசைத்தார். மாஜிஸ்ட்ரேட், காவல் துறையினர், சில வெளியாள்கள் என அங்கே பத்துப் பன்னிரண்டு பேர்கள் இருந்தனர். காலடிச் சத்தங்கள் கேட்டதும், நான் திரும்பிப் பார்த்தேன். காவலர்கள் இருவரை அழைத்து வந்து கொண்டிருந்தனர். வெள்ளைச் சீருடையில், மங்கலான வெளிச்சத்திலும் அவர்கள் இருவரையும் என்னால் நன்கு காண முடிந்தது. உங்களைப்போல, என்னைப்போல சாதாரண மனிதர்களாகத்தான் தெரிந்தனர். ஒருவன் விம்மி விம்மி அழுது கொண்டிருந்தான். மற்றவன் அவனைசூ...சூ...’ என்று கடிந்துகொண்டே வந்தான். அவர்களைப் பார்த்ததும் அறையின் வேறொரு மூலையிலிருந்து ஒரு விசும்பல் சத்தம் கேட்டது.

எல்லாம் ஒரு சடங்கைப்போல நடந்தது. இருவரின் கால்களும் அசைவை நிறுத்தியபோது, நின்றுவிட்டக் கடிகாரத்தைப் போல இருந்தது. காலம் முடிந்துவிட்டது. துடிப்பு நின்றுவிட்டது. நானும், ஃபாதர் ரொசாரியோவும் அதிர்ச்சியில் நின்று கொண்டிருந்தோம். அவர் கைகளை இறுக்கிக் கொண்டிருந்தார். செபமாலையின் குருசு வெளியில் தொங்கிக் கொண்டிருந்தது. நாங்கள் பேசிக்கொள்ளவே இல்லை.

டி.எஸ்.பி வேணு வந்தார். “ஃபாதர், காபி சாப்பிடப் போகலாமா?” என்றார். ஒரு வேலையை முடித்த மகிழ்ச்சி அவர் முகத்தில் தெரிந்தது.

காரில் திரும்பும்போது நான் தந்தை ரொசாரியோ கிருஷ்ணராஜிடம் கேட்டேன்: “நாம ரெண்டு பேரும் அவ்வளவு அதிர்ச்சியில இருந்தோம். கண்ணுக்கு முன்னால துடிக்கத் துடிக்க ரெண்டு மரணங்கள். ஆனா, வேணு நம்மகிட்ட வந்து எவ்வளவு சாதாரணமாகாபி சாப்பிடுறீங்களா?’ன்னு கேட்டாரு பாத்தீங்களா?”

சிறிய மௌனத்துக்குப் பின் நிதானமாகச் சொன்னார்: “காவல் உயர் அதிகாரியாகக் கொடூரக் குற்றவாளி ஒருவரையாவது அவர் தினமும் பார்த்துவிடுவார் இல்லையா? காவல் நிலையங்களில் எழுதப்படுவது சாத்தானின் டைரிக் குறிப்புகள்தான். நம்மைவிட அதிகமான, உண்மையான பாவ அறிக்கைகளை அவர் கேட்டிருக்கக்கூடும்.”

மீண்டும் மௌனம். பின்னர்வேணு மரணத்துக்குப் பழகிவிட்டதைப்போல, மனிதன் எந்தக் கொடுமையான விசயத்துக்கும் எளிதாகப் பழகிவிடுவான். பெரும் பாவங்களுக்குக்கூட அவன் எளிதில் பழகிவிடுவான்பெரும் பாவம் செய்துவிட்டுகாபி சாப்பிடலாமா?’ என்று கேட்பவனை வேணு பலமுறை பார்த்திருப்பார்”  என்றார்.

அந்த உண்மை என்னுள் ஆழமாய் இறங்கியது. சிறிய சிறிய செயல்கள் வழியாக, பெரிய பெரிய பாவங்களுக்கு நாம் எளிதில் பழகிவிட முடியும். வேணு மட்டுமல்ல, அருள்தந்தை ரொசாரியோ கிருஷ்ணராஜும் அப்படிப் பலரைப் பார்த்திருப்பார் இல்லையா?

(அருள்தந்தை ரொசாரியோ கிருஷ்ணராஜ் . அவர்களின் மறையுரை ஒன்றின் சிறுகதை வடிவம் இது)

Comment