No icon

ஏன்... ஏன்...

இப்படி?

பெரிய நகரம்; அடுக்குமாடிக் குடியிருப்பு; அதில் எட்டாவது மாடி. அவன் வாழ்வில் காணாத வலியொன்று அவனை ஆட்கொண்டது. பால்கனியில் ராபி நின்றுகொண்டு மாலைப் பொழுதின் மயக்கத்தில் சாலையில் செல்லும் வாகனங்களின் அழகை இரசித்துக் கொண்டிருந்த அந்த அழகிய தருணத்தில்,…அவன் வாழ்வில் இது வரை அவன் காணாத வலியொன்று அவனை ஆட்கொண்டது.

அவன் உடலில் அவன் சந்தித்திராத ஒருவித மாற்றம் தென்படத் தொடங்கி, தலை முதல் கால் வரை அழுத்தம் அதிகரித்தது. நரம்பும், தசையும் வலுவிழந்தது போன்ற உணர்வுசட்டென அதிகரித்து, யாருமே நினைத்துப் பார்க்க முடியாத, மருத்துவ உலகு விடையளிக்க முடியாத அந்த விபரீதம் நடந்தது.

திடீரென்று, எந்திரன் (முதல் பாகம்) திரைப்படத்தில் வசீகரன் என்ற கதாபாத்திரம் மாட்டிக் கொள்ளும்போது எல்லா எந்திர மனிதர்களின் தலைகளும் சுற்றுவதுபோல இவன் தலையும் சுற்ற ஆரம்பித்தது.

ராபி சற்று அதிர்ந்து தடுமாறிப் போனான். திகைப்பும், பயமும் அவனை ஆட்கொள்ளக் காரணம் என்னவாக இருக்கும்? என மனதுக்குள் அத்தனை ஆராய்ச்சி செய்தும், ஆயிரம் வாட்ஸ் அறிவுப் பதில் ஒன்றுமே பிடிபடவில்லை.

ஒருவேளை நேற்று அடிச்ச சரக்கு ஏதும் விபரீத விளையாட்டைக் காட்டுகிறதோ?’ என்று ஐயம் அவனுக்கு! சரக்கு ஓவராப் போனா அடுத்த நாள் தலைதானே சுத்தும். இப்போ கழுத்தே ஒட்டு மொத்தமா 360 டிகிரி ஆங்கிள்ள சுத்துதேங்கிற பயம். மேலும், இதயத்துடிப்பை அதிகப்படுத்த, அவன் பலங்கொண்ட மட்டும் தன் கைகளால் சுற்றுகின்ற தன் தலையை நிறுத்த முயற்சி செய்து பார்த்தான். முயற்சியில் தோற்றும் போனான்.

ஐயய்யோ, நாளைக்குக் காலைல எப்படிப் பல் விளக்குவது? காலை சாப்பாடு எப்படிச் சாப்பிடுறது? ஆபிஸ் போனா எல்லாரும் ஒருமாதிரி பார்ப்பாங்களே? வீதியில விளையாடுற குழந்தைகளெல்லாம்தலை சுத்தி ராபி போறான் பாருன்னு கிண்டல் பண்ணுவாங்களே? செய்தித்தாளில் பெரிய எழுத்துகளில் இதைப் பற்றிய செய்தி வருமே! தொலைக்காட்சி செய்தி, இண்டர்வியூன்னு நிறைய வருமேஎன்ற எண்ணங்களெல்லாம் சுற்றுகின்ற கழுத்தோடு சேர்ந்து தலையையும் சுற்ற வைக்க, அவனது எதிர்கால வாழ்க்கையைக் குறித்த கவலையும் அவனைப் பற்றிப் படர்ந்தது. ஆட்கொண்ட பயத்தினால் உடலும் வியர்வையால் நனைந்து தளர்ந்தது.

இவன் பால்கனியில் தலைசுற்ற நின்ற கோலத்தை, விபரீதத்தை எதிர் பால்கனியில் துணி காயப்போட வந்த அம்புஜம் ஆச்சரியம் கலந்த பயத்தோடு பார்க்க, விபரீதத்தின் உச்சக் கட்டத்தைப் புரிந்தவளாய், “ஏங்கஇங்க கொஞ்சம் வர்றீங்களா? எதிர்த்த வீட்டு ராபிக்குத் தலைவிர் விர்னு சுத்தறது. பார்க்கவே படு பயங்கரமா இருக்கு. வேகமா வாங்கஎன்று சொல்லியபடியே பதற்றத்தில் கையில் வைத்திருந்த துணிவாளியைப்பொத்தென்று கீழே போட, எட்டாவது மாடியிலிருந்து விழுந்த அது கீழே வாக்கிங் போய்க் கொண்டிருந்தவரின் தலையில்நச்என்று விழ, எதிர்பாராத இந்த வாளித் தாக்குதலைச் சந்தித்த அவர், நிலைகுலைந்து அப்படியே மயங்கிச் சரிய, எல்லாம் ஏடாகூடமானது.

இந்தக் காட்சியைப் பார்த்த ராபிக்கு அழுவதா? சிரிப்பதா? என்று தெரியவில்லை. எல்லாம் தன்னால் வந்த வினைதானே என்ற மனத்தின் உறுத்தல் அதிகமாக, இன்னும் என்னென்ன கோலங்கள் காட்சியேறப் போகிறதோ என்ற கவலை அவனை மேலும் பயங்கொள்ளச் செய்ய, மேலும் நடுங்கிப் போனான்.

அம்புஜத்தின் குரல் கேட்டுப் பால்கனிக்கு வந்த அவரது கணவர், ராபியின் கோலத்தைப் பார்த்து அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனார். சுதாரித்துக் கொண்டு அந்தக் காட்சியை அவரது கைபேசியில் படம்பிடிக்க, அடுத்த நிமிடத்தில் அந்தக் காணொளி அந்த அபார்ட்மெண்ட் கட்டடம் முழுவதும் வைரலானது. உப்பு சப்பில்லாத, ஒன்றுமில்லாத மேட்டரே ஓராயிரம் பார்வர்டு ஆகும் போது, அல்வா மாதிரியான இந்த மேட்டர சும்மாவா விடுவாங்க நம்ம மக்கள்னு நினைச்சுக்கிட்டான் ராபி.

சற்று நேரத்திற்குள்ளாக அங்கிருந்த அப்பார்ட்மெண்ட்டின் அத்தனை பால்கனி தளங்களிலும் மனிதத் தலைகள் ஆக்கிரமிக்கஇவன் காட்சிப் பொருளாகவும், பேசுபொருளாகவும் ஆகிப் போனான். கேலியும், கிண்டலும், நக்கலும், பயமும் கலந்த உரையாடல்கள் ராபியின் காதுகளுக்குள் விழாமலில்லை. விழுந்த வார்த்தைகளனைத்தும் அவனை நொந்துபோகச் செய்தன.

பக்கத்து மாடியிலிருந்த ஒருத்தர் சொன்னார்: “நான் அப்பவே நினைச்சேன், கொஞ்ச நாளா இந்த ஆளோட நடவடிக்கையே சரியில்லை. இவர்மேல எனக்கு ஒரு சந்தேகம் எப்பவுமே இருந்துகிட்டே இருந்துச்சு. அது இப்போ உண்மையாயிடுச்சு. வீட்டுக்குள்ள காலங்காலமா ஏதோ ரோபோட் பத்தி ஆராய்ச்சி செஞ்சிருப்பாரு போல. இப்பப் பாருங்க, அந்த ரோபோட்டைப் பால்கனியில நிறுத்தி நமக்கெல்லாம் படம் காட்டுறாரு. இந்த மாதிரி மனுசங்களால மனிதகுலத்துக்கே ஆபத்து! இவரோட பேக்ரவுண்ட் என்னன்னு தீவிரமா விசாரிக்கணும்.” பெரிய டிடக்டிவ் ரேஞ்சுக்குப் பேசிக் குவித்தார்.

யோவ், நான் ஆபிஸ்ல அடிக்கிற ஜாவா ப்ரோகிராமையே அரைகுறையா, அலங்கோலமாத்தான் அடிப்பேன். என்கூட என் மேனேஜர் படுற பாடு எனக்கும், என்னோட மேனேஜருக்கும்தான் தெரியும். இதுல ஆராய்ச்சியாம், அக்கப்போராம்யோவ் புண்ணியவானே, சயின்டிஸ்ட் ஆகுற அளவுக் கெல்லாம் நான் ஒர்த் இல்லய்யா.” தனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டான் ராபி.

மற்றொரு பக்கத்து வீட்டுக்காரர் சொன்னதும் இவன் காதில் விழாமலில்லை: “இந்த ராபி போகும்போதும், வரும்போதும் எப்பப் பார்த்தாலும் போன்லகுசுகுசுன்னு பேசிக்கிட்டேதான் இருப்பார். அப்பவே நினைச்சேன், இந்த ஆளு வில்லங்கமானவர்னு. நான் நினைச்சது ஒண்ணும் தப்பில்ல போல. இப்ப பாருங்க, வீட்டுக்குள்ள இவரு மாதிரியே ஒரு ரோபோட் செஞ்சு உலாவ விட்டிருக்கார். இந்த மாதிரி ஆளுங்க நாட்டுக்கே டேஞ்சர். நம்ம அபார்ட்மெண்ட் கேம்பஸ்ல இந்த ரோபோட்னால என்னென்ன விபரீதங்களெல்லாம் வரப் போகுதுங்கிறத நினைக்கும் போது, உடலெல்லாம்பக் பக்குனு அடிக்குது. இந்த மாதிரி ரோபோட் என்னவெல்லாம் செய்யும்னுஎந்திரன்படத்துலதான் பார்த்தோமே! நமக்குக் கஷ்ட காலம் ஆரம்பிச்சிடுச்சு. இனிமே எல்லாமே ஆண்டவனுக்கே வெளிச்சம்.”

எந்திரன்படம் பார்த்த எஃபக்ட்ல  வார்த்தை வசையா வந்து விழுந்தது அவரிடமிருந்து.

அடப் போயா, மொபைல் போன்ல மெதுவாப் பேசாம, உன்னை மாதிரி ஊருக்கே கேட்கிற மாதிரியா பேசுவாங்க? நீ செய்யுற தில்லாலங்கடி வேலைலாம் எனக்குத் தெரியாதுன்னு நினைக்கிற போல. இப்போ நீ பெரிய இவன் மாதிரி என்னப் பத்திக் குறை சொல்லிப் பேச வந்துட்டஎன்று  மனசுக்குள்ளே பெரிய பெரிய கெட்ட வார்த்தையெல்லாம் சொல்லித் திட்டித் தீர்த்தான் ராபி.

கீழேயிருந்து ஒரு பெண்மணி  “நான் அவங்க மனைவிக்கிட்ட பேசிக்கிட்டிருக்கலாம்னு  போகும்போதெல்லாம் நானும் பார்த்திருக்கேன். எப்பப் பார்த்தாலும் இவரோட பையன்கூட இவரு ரோபோட் கேம்தான் விளையாடிட்டிருப்பார். போன வாரம் கூட, அவர் விளையாடிக்கிட்டிருந்த ஒரு கேம்ல ரோபோட்டோட தலை சுத்துற மாதிரி இருந்துச்சு. அப்பவே நினைச்சேன், இந்த ஆளுக்கும், ரோபோட்டுக்கும் ஏதோ லிங்க்  இருக்கும் போலவேன்னு. இப்போ நான் நினைச்சது 100% சரிதான். புரிஞ்சுபோச்சுஎன அவர் அள்ளிவிட்டார்.

அடிப்பாவி மனுஷி, பெத்த புள்ளையோட  கேம் விளையாடுறது அவ்ளோ பெரிய குத்தமா? மொட்டத் தலைக்கும், முழங்காலுக்குமில்ல முடிச்சுப் போடுற?”  நடிகர் வடிவேலு பாணியில் அவ னுக்குள்ளே புலம்பிக் கொண்டான் ராபி.

இது போதாதென்று ராபியோட இதுவரைக்கும் ஒருமுறை கூட பேசாத மற்றோர் ஆள் சத்தமாக, “ஆமாங்க, இவரு எப்போ வாக்கிங் போனாலும் ரோபோட் மாதிரியேத்தான் நடப்பார். இப்போதான் புரியுது, அது அவரில்ல, அவரு உருவாக்குன ரோபோட்டைக் காலைல வாக்கிங் போக விட்டு டெஸ்ட் பண்ணியிருக்கார். இவங்கள மாதிரி ஆள்களை இந்த அபார்ட்மெண்ட்ல இருக்கவே விடக் கூடாது. இவங்க எல்லாம் நம்ம கம்யூனிட்டிக்கே பெரிய ஆபத்து. இப்போவே அசோசியேசன் பிரசிடெண்ட்கிட்ட சொல்லி இதுக்கு ஒரு முடிவு பண்றேன்.” தன்னைப் பெரிய புரட்சியாளராகக் காட்டிக் கொண்டார் அவர்.

அடப்பாவி, வாக்கிங் போகும்போது கையை மேலே தூக்கி, சைடுல விரிச்சு எக்சர்சைஸ் பண்ணுனதப்  போயி ரோபோட் கூட முடிச்சுப் போடுறானே? இது பெரிய அக்கிரமமாவுல இருக்குதுனு ராபியோட மைன்ட் வாய்ஸ் புலம்பிக் கொண்டது. சுற்றி இருந்த எல்லாரும் கை, காது, வாய், மூக்குனு வச்சு ஆளுக்காளு ஒரு கதையைக் கிளப்பிவிட்டது ராபியை நிலைகுலையச் செய்தது. இந்த அபார்ட்மெண்ட்ட விட்டு இன்னிக்கே காலி பண்ணிட்டுப் போயிடணும் என்ற முடிவுக்கும் வந்தான்.

அடச்சே, என்ன உலகம்டா இது? ஒரு விபரீதப் பிரச்சினையில மாட்டிக்கிட்டு விழிபிதுங்குற ஒரு மனுசனுக்கு உதவி செய்ய வரலைன்னாலும், பரிவா ஒரு வார்த்தை பேசலாமே? அத விட்டுட்டு இப்படியாப் பேசுவாங்க? இதுவே நம்ம கிராமமா இருந்திருந்தா, அத்தனை பேரும் ஓடி வந்து போட்டி போட்டிட்டு உதவி செஞ்சிருப்பாங்களேனு அவன் தன் சொந்தக் கிராமத்தைப் பற்றி நினைத்துக் கொண்டான்.

இந்தப் பிரச்சினையிலிருந்து எப்படி வெளியே வருவது? எந்த டாக்டர் இதுக்கு ட்ரீட்மண்ட் தருவாங்க? என்ற சிந்தனையில் ஆழ்ந்து கொண்டிருக்கும் போதே, இவன் வீட்டுக் கதவை யாரோதடதடவென்று தட்டும் சத்தம் கேட்டுத் திரும்பி, கதவை நோக்கி நடக்க, கதவுடமால்என்ற சத்தத்துடன் அதுவே திறந்துகொள்ள, கையில் இயந்திரத் துப்பாக்கிகளுடன், கவச உடை அணிந்த காவலர்கள். துப்பாக்கி முனைகள் இவனை நோக்கிக் குறி வைக்க, அதைப் பார்த்துப் பதறினான் ராபி.

பிரியா, என்னைக் காப்பாத்துஎன்ற கூக்குரலுடன் தாவி ஓட முற்பட்ட அவன் படுக்கையிலிருந்துபொத்தென சரிந்து விழுந்தான், தான் கண்ட காட்சியெல்லாம் கனவென்று அறியாமலே. சில கனவுக் காட்சிகள் நம்மை நிகழ்கால நடப்பாகவே நம்மை அழைத்துச் செல்லும் அனுபவம் போலவே அவனுக்கு அப்போது நிகழ்ந்தது.

ஆழ்ந்த தூக்கத்திலிருந்து பதறி எழுந்த பிரியா, அவனைக் கோபக்கனலோடு முறைக்க, அவன் சுய நினைவுக்குத் திரும்பி, மனைவியிடம் மன்றாடி மன்னிப்புக் கேட்கத் தொடங்கினான். அவளோ மீண்டும் நித்திரையின் நீட்சிக்குத் திரும்ப ஆரம்பித்தாள்.

அவன் கண்டது கனவென்றாலும், அவனைச் சுற்றி வாழும் மனிதர்களின் மனநிலை அவன் கண்ட கனவுக் காட்சி போலவே இருக்குமோ என்ற கவலை அவனை ஆட்கொள்ள, அன்றைய இரவுத் தூக்கம் முற்றிலும் கலைந்து போக, கலங்கிய முகத்துடன் பிரியாவைப் பார்த்தான். அவள் எந்தக் கவலையுமில்லாமல் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தாள்.

Comment